தாயை கொன்றவரை கண்டறிய நாடு விட்டு நாடு சென்று 3 மகன்கள் 17 ஆண்டு நடத்திய போராட்டம்

ஜீன் ஹான்லனின் மூன்று மகன்களான ராபர்ட், மைக்கேல் மற்றும் டேவிட் போர்ட்டர்
படக்குறிப்பு, ஜீன் ஹான்லனின் மூன்று மகன்களான ராபர்ட், மைக்கேல் மற்றும் டேவிட் போர்ட்டர் (இடமிருந்து) அவர்களது தாயின் மரணம் ஒரு விபத்து என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
    • எழுதியவர், கேட்டி ஹண்டர்
    • பதவி, பிபிசி நியூஸ், கிரீட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

2009-இல் இன்டர்போலில் இருந்து வந்த ஒரு அழைப்பில்தான் இந்தப் போராட்டம் தொடங்கியது.

கிரீட் தீவில் அவர்களது 53 வயது மகள் காணாமல் போய்விட்டதாக ஜீன் ஹான்லனின் பெற்றோருக்குத் தெரிவிப்பதற்காக அவர்களை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர்.

ஜீனின் இளைய மகன் மைக்கேல் போர்டருக்கு, அவரது மூத்த சகோதரர் ராபர்ட் அழைத்து இந்தச் செய்தியை கூறினார்.

"என்ன சொல்கிறாய்? அவர் காணாமல் போய்விட்டாரா?" என்று முதலில் நினைத்ததாக மைக்கேல் கூறினார்.

அதன் பிறகு, மூன்று சகோதரர்களின் வாழ்க்கையும் அவர்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத வழிகளில் மாறவிருந்தது.

"என்னுடைய அம்மாவுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், நான் உடனடியாக மிக மோசமான ஒன்றையே நினைத்தேன்" என்று மைக்கேல் கூறினார்.

கிரீட் தீவில் கற்றல் குறைபாடுள்ள ஒரு குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு ஜீன் ஹான்லனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் அங்கு வராதபோது, ​​அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது.

"எங்கள் அம்மாவின் மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று அவருடைய விசுவாசம். அவர் எப்போதும் மற்றவர்களுக்காகத் தன் முழு பங்களிப்பைக் கொடுப்பார் மற்றும் தனது வார்த்தையைக் காப்பாற்றுவார்" என்று மைக்கேல் நினைவு கூர்ந்தார்.

கிரீட் தீவில் கற்றல் குறைபாடுள்ள ஒரு குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு ஜீன் ஹான்லனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் அங்கு வராதபோது, ​​அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜீனுக்குச் சூரிய ஒளி மிகவும் பிடித்திருந்தது. அவர் கிரீட்டில் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முடிவை எடுத்திருந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அப்போது, மைக்கேல் தனது இரு சகோதரர்கள் வசித்த நகரத்திலிருந்து வேறு ஒரு நகரத்தில் வசித்து வந்தார். அவர்கள் மூன்று பேரும் கிரீட் தீவுக்கு ஒரு விமானத்தில் சென்றனர்.

"நாங்கள் குறிப்பாக உணர்ச்சிவசப்படும் நபர்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் அது வார்த்தைகள் வெளிவராத அளவு ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான தருணம். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம். அது வரலாற்றிலேயே மிகவும் அமைதியான ஒரு விமானப் பயணமாக இருந்தது, ஏனென்றால் எங்களால் அப்போது வேறு என்ன பேசமுடியும்?"

கிரீட் தீவின் தலைநகரான ஹெராக்லியனில், முப்பது வயதுகளில் இருந்த ஒரு பெண்ணின் சடலம் நீரிலிருந்து மீட்கப்பட்டதாக அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களுடைய தாய்க்கு ஐம்பது வயதுக்கு மேல் இருந்ததால், மற்றொரு குடும்பத்திற்காக அவர்கள் வருந்தினாலும், அவர்களுக்குள் சிறிதளவு நம்பிக்கை இருந்தது.

இருந்தபோதிலும், அந்த உடல் ஜீனுடையதுதானா என்று பார்ப்பதற்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கே குவியலாக வைக்கப்பட்டிருந்த தன் தாயின் ஆடைகளைப் பார்த்த மைக்கேல், அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதாக கூறினார்.

மருத்துவமனைகளில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அவருடைய சகோதரர்கள் ராபர்ட்டும் டேவிட்டும், அவர் காணவிருந்த காட்சிக்கு அவரைத் தயார்படுத்த முயன்றனர்.

"அவர்களுடைய அந்த முயற்சியை நான் பாராட்டினாலும், அந்த உடல் என் அம்மாவினுடையதாக இருந்தால், நான் அவரைப் பார்க்கும் கடைசித் தருணமாக அதுதான் இருக்கப் போகிறது என்று நினைத்தேன்"என்கிறார் மைக்கேல்.

சந்தேகத்திற்குரிய காயங்கள்

தாங்கள் கண்ட காட்சிக்கு அந்த மூன்று சகோதரர்களும் தங்களை எவ்வகையிலும் தயார்படுத்தியிருக்கவில்லை.

"அவரைத் தொடுவதோ, கட்டிப்பிடிப்பதோ அல்லது அதுபோன்ற எதையும் செய்வதோ சாத்தியமற்றதாக இருந்தது, அதுதான் மிகக் கடினமான பகுதி என்று நான் நினைக்கிறேன்."

அந்த சகோதரர்களுக்கு உடனடியாக சந்தேகம் எழுந்தது.

அவர்களின் தாய் காணாமல் போன அன்று இரவு, ஹெராக்ளியனுக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தில் ஓர் ஆணுடன் அவர் காணப்பட்டதாக தகவல்கள் இருந்தன.

அவரது தலையின் பின்புறத்தில் ஏற்பட்ட காயம் உட்பட அவருக்கு ஏற்பட்ட காயங்கள் விபத்தினால் ஏற்பட்டவை என்பதை அவர்கள் நம்பவில்லை.

ஆரம்பத்தில், கிரேக்க அதிகாரிகள் அவரது மரணத்தை ஒரு விபத்து என்று முடிவு செய்தனர், ஆனால் அவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இந்த செயல்முறைக்கு நேரம் எடுத்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அது ஒரு போராட்டத்தின்போது ஏற்படக்கூடிய காயங்களை வெளிப்படுத்தியது.

"நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தாமல் இருந்திருந்தால், அந்த மற்ற காயங்களைப் பற்றி நாங்கள் ஒருபோதும் அறிந்திருக்க மாட்டோம் என்று நினைக்கும் போது எனக்கு கோபம் வருகிறது" என்று மைக்கேல் கூறினார்.

அதன் பிறகு சகோதரர்கள் நீதிக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.

 ஜீனும் அவரது மூன்று குழந்தைகளும்.
படக்குறிப்பு, ஸ்காட்லாந்தில் மைக்கேல் பிறந்த சிறிது காலத்திற்குப் பிறகு, ஜீனும் அவரது மூன்று குழந்தைகளும்.

ஜீன் ஸ்காட்லாந்தில் பிரிட்டனின் பொது சுகாதார சேவையான என்.எச்.எஸ்-இல் பணிபுரிந்திருந்தார், ஆனால் அவரது 40வது வயதில் கிரீட் தீவுக்கு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு விடுமுறைப் பயணம், வித்தியாசமான ஒன்றை முயற்சி செய்ய அவரைத் தூண்டியது.

அவர் கிரீஸுக்குச் செல்வதற்கு முன்பு சிறிது காலம் சுற்றுலாத் துறையில் பணியாற்றினார், அங்கு அவர் உணவகங்களில் பணிபுரிந்தார்.

அது "அவருக்கான இடம்".

அவர் கிரீட் தீவையும் அதன் மக்களையும் மிகவும் நேசித்தார். இது, அங்கு அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டதை மேலும் அதிர்ச்சியூட்டுவதாக ஆக்கியது.

"இறந்தவர்களுக்காகக் குரல் எழுப்புவது வாழ்பவர்களின் கடமை" என்கிறார் மைக்கேல்.

2009-ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான ஊடகப் பேட்டிகளில் அவர் இந்த வாக்கியத்தைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், கிரேக்க அதிகாரிகள் இந்த வழக்கை நான்கு முறை மூடி மீண்டும் திறந்தனர். ஜீன் ஹான்லனின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக இரண்டு பேர் மீது பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கிரீஸின் "க்ரைம்வாட்ச்" -க்கு இணையான நிகழ்ச்சியில் தோன்றியது, ஆனால் ஒவ்வொரு முறையும் விசாரணை வேகம் பெறுவது போல் தோன்றும் போதெல்லாம், அது ஒரு தடையைச் சந்தித்தது.

ஒரு புதிய கண்ணோட்டம்

2019-இல், மைக்கேலும் ராபர்ட்டின் மகளான ரெபெக்காவும், ஜீனின் வழக்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களுக்குத் தெரியப்படுத்தவும் மீண்டும் கிரீட் தீவுக்குப் பயணம் செய்தனர்.

பல பிரிட்டிஷ் மற்றும் கிரேக்க பத்திரிகையாளர்கள் இந்தப் பயணத்தைப் பற்றிச் செய்தி வெளியிட்டனர், ஆனால் அது எந்தவொரு உறுதியான முடிவையும் தரவில்லை.

மைக்கேல் இந்த போராட்டத்தை முடிவில்லாத ஒன்று என விவரித்தார்.

"அது உங்களுக்குள் என்ன செய்கிறது என்பதை விவரிக்க முடியாது... [என் அம்மாவின்] கதையை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும், நிதி திரட்டுவதற்கான புதிய வழிகளைக் கண்டறியவும் தினமும் ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை யோசிப்பதே எனது அன்றாட உந்துதலாக இருந்தது"என்று மைக்கேல் பகிர்ந்து கொண்டார்.

2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது, அப்போது அந்த சகோதரர்கள் ஹாரிஸ் வெராமன் என்ற தனியார் புலனாய்வாளரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்தனர், அவர் தனது சக ஊழியரான நிகோஸ் அர்கௌலிஸ் என்பவருடன் இணைந்து பணியாற்றினார்.

வெராமன் இந்த வழக்கை ஒரு புதிய கோணத்தில் அணுகி, ஜீன் ஹான்லனின் நாட்குறிப்பின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார்.

அதில், 2009-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் குறுகிய காலம் பழகிய, ஆனால் பின்னர் உறவை முறித்துக் கொண்ட ஒரு நபரைப் பற்றி ஜீன் குறிப்பிட்டிருந்தார்.

ஜீனின் டைரியையும், மற்ற ஆதாரங்களையும் சேர்ந்து பார்க்கும்போது, சந்தேகிக்கப்பட்ட அந்த நபர், "நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து பின்தொடர்ந்தவர்" என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

உறவு முடிந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜீன் வேறொரு நபருடன் உறவில் இருப்பதாக அந்த நபர் தவறாக நம்பியிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஜீன் ஹான்லன்

பட மூலாதாரம், Justice for Jean

படக்குறிப்பு, ஜீன் ஹான்லன், கிரீட் தீவையும் அதன் மக்களையும் நேசித்ததால் அங்கு குடிபெயர்ந்தார்.

வெரமோன் சாட்சிகளிடம் பேசினார் மற்றும் பழைய வாக்குமூலங்களை ஆய்வு செய்தார்.

ஜீன் ஹான்லன் காணாமல் போன அன்று இரவு கஃபே மரினாவில் யாருடன் இருந்தார் என்பது இந்த வழக்கின் முக்கிய கேள்விகளில் ஒன்றாக இருந்தது.

அங்கு பாதுகாப்பு கேமரா பதிவுகளோ அல்லது டி.என்.ஏ ஆதாரங்களோ இல்லை, ஆனால் அந்தத் தனியார் புலனாய்வாளரின் அறிக்கை, சந்தேகிக்கப்பட்ட அந்த நபருடன் ஜீன் பழகியதாக முடிவு செய்தது.

வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர வெராமனின் அறிக்கை போதுமானதாக இருந்தது.

தங்கள் தாயின் உடலை அடையாளம் கண்டு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு, மைக்கேல், ராபர்ட் மற்றும் டேவிட் ஆகியோர் அவரது கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரை எதிர்கொள்ள மீண்டும் கிரீட் தீவுக்குத் திரும்பினர்.

விசாரணையின் தொடக்கத்தில் மூவரும் வாக்குமூலம் அளித்தனர்.

தங்கள் தாய் சந்தேகிக்கப்பட்ட அந்த நபருடன் சுமுகமாக உறவை முறித்துக் கொண்டார் என்றும், ஆனால் அவர் தொடர்ந்து அவரைத் தொந்தரவு செய்து வந்தார் என்றும் அவர்கள் நம்பினர்.

ஒரு முரண்பாடான சாட்சியம்

விசாரணையின் இரண்டாம் நாளில், சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் சகோதரி சாட்சியம் அளித்தபோது ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டது.

தனது சகோதரருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் தனது மருந்துகளை உட்கொள்ளாவிட்டால் ஆக்ரோஷமாக மாறிவிடுவார் என்றும் அவர் கூறினார்.

அவர் ஜீன் ஹான்லனுடன் இருந்த காலத்தில் தனது மருந்துகளை உட்கொள்ளவில்லை என்பதுதான் அரசுத் தரப்பின் வாதமாக இருந்தது.

சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வாக்குமூலம் முரண்பட்டதாக இருந்தது.

ஒரு கட்டத்தில், ஜீனின் நாட்குறிப்பு அந்த காலம் நீண்டதாக இருந்தது என்று உணர்த்திய போதிலும், அவர்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்ததாக அவர் கூறினார்.

சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் வாக்குமூலம் முரண்பட்டதாக இருந்தது. ஒரு கட்டத்தில், ஜீனின் நாட்குறிப்பு அந்த காலம் நீண்டதாக இருந்தது என்று உணர்த்திய போதிலும், அவர்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்ததாக அவர் கூறினார்.
படக்குறிப்பு, தன் தாய் இறப்பதற்கு முந்தைய ஆண்டுகளில் மகிழ்ச்சியாக இருந்ததாக மைக்கேல் நினைவு கூர்கிறார்.

மைக்கேல், ராபர்ட் மற்றும் டேவிட் ஆகியோர் கேட்பதற்கு மிகவும் கடினமாக இருந்த சான்றுகளில் ஒன்று, ஒரு தடயவியல் நோயியல் நிபுணருடையது.

விசாரணையின் போது அவர் கூறுகையில், மரணத்திற்கான மிகச் சாத்தியமான காரணம் தலையின் பின்புறத்தில் ஏற்பட்ட ஒரு அடி என்றும், அவரது கருத்துப்படி, ஜீன் ஹான்லன் தண்ணீரில் வீசப்பட்டபோது உயிரோடு தான் இருந்தார் என்றும் கூறினார்.

இறுதியில், ஜீன் ஹான்லனின் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்ட அந்த நபரை ஒருமனதாகக் குற்றவாளி என்று தீர்மானிக்க நடுவர் மன்றம் சுமார் மூன்று மணி நேரம் எடுத்துக் கொண்டது. இருப்பினும் அவரது மனநலக் குறைபாடு காரணமாக அவரது பொறுப்பு குறைவு என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மைக்கேல், ராபர்ட் மற்றும் டேவிட் ஆகியோர் அழுது கொண்டிருந்தனர், விசாரணையின் போது அவர்கள் அவ்வாறு அழுவது அது முதல் முறை அல்ல.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வழியாக அவர்களின் தாயின் கொலையில் ஒரு நபர் குற்றவாளி என்றுதீர்ப்பளிக்கப்பட்டது.

அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவரது மேல்முறையீடு முடியும் வரை அவர் சிறைக்குச் செல்ல மாட்டார்.

கிரேக்க சட்டத்தின்படி, மேல்முறையீட்டு நிலை உட்பட நீதித்துறை செயல்முறைகள் முடிவடையும் வரை, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒரு நபரின் அடையாளம் பொதுவாக வெளிப்படுத்தப்படுவதில்லை.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதும், சகோதரர்கள் செய்தியாளர்களிடம் பேசினர்.

மைக்கேல் தனது தாயார் இறுதியாக விடுதலையடைந்தது போல் உணர்ந்ததில் தனது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்தினார்.

"இந்த நாளை அடைவதற்காக நாங்கள் அனைவரும் கடுமையாகப் போராடியுள்ளோம்"என்றார் மைக்கேல்.

இருப்பினும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் நேரடியாகச் சிறைக்கு அனுப்பப்படாதது குறித்து இந்த மூன்று சகோதரர்களும் கவலை அடைந்தனர். "

மேல்முறையீடு முடியும் வரை அவர் சுதந்திரமாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. அனைவருக்கும் உரிமைகள் உள்ளன, ஆனால் எங்களைப் பொறுத்தவரை இது வருத்தமளிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது" என்றும் மைக்கேல் கூறினார்.

ஜீனின் மூத்த மகன் ராபர்ட் போர்ட்டர் கூறுகையில், "முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு குழுவினர் என் அம்மாவின் குரலுக்குச் செவிசாய்த்து சரியான முடிவை எடுத்ததற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். இறுதியில் இது ஒரு வெற்றி, அவரது குரல் கேட்கப்பட்டதற்காக நான் நன்றியோடு இருக்கிறேன்"என்றார்.

ஜீனின் இரண்டாவது மகன் டேவிட் போர்ட்டர் அதுகுறித்து தெரிவிக்கையில், "இது ஒரு முடிவுக்கு வருவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இருப்பினும் அந்த நபர் சிறையில் இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்பியிருப்பேன்"என தெரிவித்தார்.

2012 முதல் இந்தக் குடும்பத்துடன் இணைந்து பணியாற்றி வரும் அவர்களின் வழக்கறிஞர் அபோஸ்டோலோஸ் க்ஸிரிடாகிஸ் கூறுகையில், "என் தொழில் வாழ்க்கையிலேயே நான் மிக நீண்ட காலம் பணியாற்றிய வழக்கு இதுதான். இது ஒரு பெரிய வெற்றி, ஏனென்றால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நீதி கிடைத்துள்ளதாகக் குடும்பத்தினர் உணர்கிறார்கள்"எனக் குறிப்பிட்டார்.

"இதில் ஒரு இனிப்பும் கசப்பும் கலந்த உணர்வு இருக்கிறது என்று நாம் சொல்லலாம். ஒருபுறம், தண்டனை கிடைத்துவிட்டது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலக் குறைபாடு இருப்பது அங்கீகரிக்கப்பட்டதால் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை"என்றும் அவர் கூறினார்.

இந்த 17 ஆண்டுகளில், எதிர்பாராததை எதிர்பார்க்கும் பண்பை இந்தச் சகோதரர்கள் கற்றுக்கொண்டனர்.

எண்ணற்ற ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளனர்.

மேலும் ஒரு மேல்முறையீட்டுச் செயல்முறை இன்னும் நிலுவையில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

இருப்பினும், தற்போதைக்கு, பல வருடத் துயரங்களுக்குப் பிறகு, இறுதியாகத் தங்கள் தாய்க்கு நீதி கிடைத்துவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு