குஜராத் ரயில் நிலையத்தில் 'திடீரென' கூடிய தொழிலாளர்கள் – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பிபிசி குஜராத்தி | சூரத் | உத்னா ரயில் நிலையம் | காவல்துறை தடியடி | யுபி, பீகார் தொழிலாளர்கள் | புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், UCC

    • எழுதியவர், அஜித் காத்வி
    • பதவி, பிபிசி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சூரத்தின் உத்னா ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறுவதற்காக ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் 'லேசான' தடியடியைப் பிரயோகிக்கும் சூழல் உருவானது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

உத்னா ரயில் நிலையத்தில் ஒரு பெரும் விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது அந்த காணொளியில் தெரிந்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சூரத்தின் பல தொழில்துறைகள் நலிவடைந்துள்ளதாகவும், இதனால் தங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சில பயணிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சூரத்தை விட்டு வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

உத்னா ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் இத்தகைய கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதும், பயணிகள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்தன.

பிபிசி குஜராத்தி | சூரத் | உத்னா ரயில் நிலையம் | காவல்துறை தடியடி | யுபி, பீகார் தொழிலாளர்கள் | புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Rupesh Sonwane

படக்குறிப்பு, உத்னா ரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் காவல்துறையினர்

நடந்தது என்ன?

ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் பிகார் செல்லும் சிறப்பு ரயிலுக்காக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தபோது, திடீரென அங்கு பெரும் குழப்பமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கடும் வெயில் மற்றும் புழுக்கம் காரணமாகச் சிலர் மயக்கமடைந்ததாகவும் தெரிகிறது. குறிப்பாகப் பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது. ரயில் நிலையத்தில் போதிய குடிநீர் வசதி இல்லை என்ற புகாரும் எழுந்தது.

ஒருபுறம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, மறுபுறம் சில தொழிற்சாலைகளில் வேலை குறைந்துள்ளதால் தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர்.

இது குறித்துப் பேசிய முகேஷ் குமார் என்ற தொழிலாளி, "நான் சூரத்தில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். ஆனால் இப்போது வேலை கிடைப்பது நின்றுவிட்டது.எங்களுக்கு கிடைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையோ உயர்ந்துவிட்டது. அதனால் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன்," என்றார்.

வேலையில்லாமல் சூரத்தில் தங்கியிருப்பதை விட, சொந்த ஊரில் கூலி வேலை செய்வது எவ்வளவோ மேலானது என்றும் அவர் தெரிவித்தார்.

பிபிசி குஜராத்தி | சூரத் | உத்னா ரயில் நிலையம் | காவல்துறை தடியடி | யுபி, பீகார் தொழிலாளர்கள் | புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Rupesh Sonwane

படக்குறிப்பு, ரயில் நிலையத்தில் கூடிய கூட்டம்

நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. சிலர் தடுப்புகளை தாண்டி ரயிலை நோக்கி ஓடியதால், அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் சூரத் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் ஜே.பி. மிதாபாரா, "ஞாயிற்றுக்கிழமை சுமார் 20,000 முதல் 22,000 பயணிகள் ரயில்களில் ஏறினர். இருப்பினும், சுமார் 5,000 முதல் 7,000 பேர் வரை ரயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர்.

கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், கடைசி ரயிலிலும் இடம் கிடைக்காததால் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களிலேயே நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டது," என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி குஜராத்தி | சூரத் | உத்னா ரயில் நிலையம் | காவல்துறை தடியடி | யுபி, பீகார் தொழிலாளர்கள் | புலம்பெயர் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Rupesh Sonwane

படக்குறிப்பு, உத்னா ரயில் நிலையம்

புலம்பெயர் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

வைர மற்றும் ஜவுளித் தொழிலுக்குப் பெயர்பெற்ற சூரத் நகரம், புலம்பெயர் தொழிலாளர்களின் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது கடும் இன்னல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, இங்கு 42 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இது நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 58 சதவீதமாகும்.

இது குறித்து சூரத்தில் உள்ள பிகார் விகாஸ் பரிஷத்தின் தலைவர் தர்மேஷ் சிங் பிபிசியிடம், "பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடிக்கிறது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்திற்கு நாங்கள் பலமுறை கடிதங்களை எழுதியுள்ளோம். சிறப்பு ரயில்கள் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடுதான், ஆனால் எங்களுக்குத் தேவை நிரந்தர ரயில்கள். அவர்களைத் தொழிலாளர்கள் என்பதைத் தாண்டி மனிதர்களாக எவரும் மதிக்கவில்லை," என்றார்.

ரயில்வே அமைச்சகம் வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களின் எண்ணிக்கையை எந்த வேகத்தில் அதிகரிக்கிறதோ, அந்த வேகத்தில் பொதுப் பெட்டிகள் கொண்ட சாதாரண ரயில்களின் வசதிகளை அதிகரிப்பதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

ஒரு செய்தியின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் 800 வந்தே பாரத் ரயில்களை இயக்கவும், 2047-ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை 4,500 ஆக உயர்த்தவும் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் நாரண் ரத்வா பிபிசியிடம், "விடுமுறைக்காலம், சத் பூஜா, ஹோலி போன்ற பண்டிகைகளுக்காக ரயில்வே தனித் திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் சிறப்பு ரயில்கள் இல்லாதபோதுதான் இத்தகைய சூழல் உருவாகிறது," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்போது ரயில்வே சொகுசு ரயில்களில் அதிக கவனம் செலுத்துகிறது, அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சாதாரண ரயில்களில்தான் பயணம் செய்கிறார்கள். எனவே அவர்கள் மீதே அதிக கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேருவதாக தர்மேஷ் சிங் கூறுகிறார்.

மேலும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தொழிலாளர்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு அமர வைக்கப்படுவதாகவும், அங்கு சுகாதாரம் உள்ளிட்ட பிற வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

"உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாருக்கு தினசரி ஐந்து முதல் ஆறு நிரந்தர ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஒன்று அல்லது இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. சூரத், நவ்சாரி மற்றும் பர்டோலி ஆகிய பகுதிகளில் மட்டும் 7 லட்சம் பிகார் மக்களும், சுமார் 10 லட்சம் உத்தரப் பிரதேச மக்களும் வசிக்கின்றனர். இந்த இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்காக ரயில் வசதிகள் கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கடினம்?

ரயில் நிலையங்களில் ஒரே நேரத்தில் பெருமளவிலான பயணிகள் திரளும்போது, அவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்து, மேற்கு ரயில்வேயின் காவல்துறை கண்காணிப்பாளர் (வதோதரா) அபய் சோனியுடன் பிபிசி பேசியது.

அவர் கூறுகையில், "உத்னா ரயில் நிலையம் தெற்கு குஜராத்தின் ஒரு முக்கியப் போக்குவரத்து மையமாக இருப்பதால், அங்கிருந்து அதிகளவிலான புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்களில் ஏறுகின்றனர். பயணிகளை வரிசைப்படுத்தி, அவர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக ரயிலில் ஏற்றும் முறையை நாங்கள் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறோம். தீபாவளி, ஹோலி, சத் பூஜா போன்ற பண்டிகைக் காலங்களில் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன," என்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் குறித்துப் பேசிய அவர், "இந்த ரயிலுக்குப் பிறகு வேறு ரயில்கள் இல்லை என்று யாரோ வதந்தியைப் பரப்பியதால், சில பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு அவசரப்பட்டனர்," என்று விளக்கினார்.

சிறப்பு ரயில்களில் மக்கள் பொதுவான பயணச்சீட்டு பெற்றுப் பயணம் செய்வதால், எத்தனை பயணிகள் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கணிப்பது ஒரு சவாலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று மேற்கு ரயில்வே எஸ்பி அபய் சோனி ஒப்புக்கொண்டார்.

"உத்னா ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான காத்திருப்புப் பகுதியை அதிகரிக்கவும், முறையான தடுப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும்," என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு