'பேனரால் ஏற்பட்ட தகராறு'; நெட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handout
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது நெட்டூர் கிராமம். இக்கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
கடந்த மே 29ஆம் தேதி மாலை, இக்கிராமத்தின் தெற்கு தெரு பகுதியில் வசிக்கும் இடைநிலை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாதா கோவில் தெரு பகுதியில் வசிக்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில், மூன்று பேர் பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் ஒருவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஒரு திருமண நிகழ்வுக்காக பட்டியல் சமூக மக்கள் சார்பாக வைக்கப்பட்ட பேனர் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக 12 பேரை நெல்லை போலீசார் கைது செய்துள்ளனர்.
என்ன நடந்தது?

பட மூலாதாரம், Handout
நெட்டூர் கிராமத்தில், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் மாதா கோவில் தெரு பகுதிக்கு பிபிசி தமிழ் சென்றபோது அங்கு இருந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அச்சத்துடன் இருந்ததை காண முடிந்தது. பலரும் வீட்டை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் இருந்தனர். மாதா கோவிலில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் குழந்தை தெரசாள் என்பவரிடம் மே 29ஆம் தேதி மாலை என்ன நடந்தது என கேட்டபோது, "வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் திடீரென மூன்று இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் சிலர் முகத்தை மூடிக்கொண்டு வேகமாக எங்கள் தெருவுக்கு வந்தனர். அதில் ஒருவர் மட்டும் முகத்தை மூடாமல் வந்தார். அந்த இளைஞர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் முகத்தை மறைத்து இருந்ததால் அவர்கள் யார் எந்த பகுதி என தெரியவில்லை." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் என் கடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கார் கண்ணாடியை அடித்து உடைத்ததுடன் அந்த இடத்தில் திருமண நிகழ்ச்சிக்காக திருமண தம்பதிகள் மற்றும் இளைஞர்கள் புகைப்படத்துடன் வைக்கப்பட்டிருந்த பேனரை ஒன்றை பட்டா கத்தியால் சரமாரியாக கிழித்தனர்" என்றார்.
"பின்னர் என்னுடைய கடைக்கு வந்து கடையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை அரிவாளால் கொத்தினார்கள். டிஜிட்டல் தராசு உள்ளிட்டவற்றை உடைத்ததுடன் கடையில் இருந்த மிட்டாய் டப்பாக்களை தட்டிவிட்டு உடைத்தனர்.
கடைக்கு பொருட்கள் வாங்க வந்த சிறுவர்கள் சிலரை நான் கடைக்குள் பாதுகாப்பாக பிடித்து வைத்துக்கொண்டேன். அந்த இளைஞர்கள் கடைக்கு முன் நின்று எங்கள் சமூகத்தின் பெயரை சொல்லி தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். பின் மீண்டும் எங்கள் தெருவுக்குள் சென்றனர்" என்றார்.
"என் கடைக்கு அருகே நடந்து வந்துகொண்டிருந்த மாதா கோவில் அருகே வசித்து வரும் ஒரு இளைஞரின் காலில் பலமாக வெட்டிய முகமூடி அணிந்திருந்த இளைஞர்கள் திருமண நிகழ்வில் பேண்ட் வாத்தியம் வாசிக்க வந்த ஒருவரையும் அவருக்கு பின்னால் நடந்து வந்த ஒருவரையும் அடுத்தடுத்து வெட்டிவிட்டுச் சென்றனர்" என்றும் குழந்தை தெரசாள் கூறினார்.
"எங்களுக்கும் அவர்களுக்கும் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. தெற்கு தெரு இளைஞர்கள் என் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவார்கள். எங்களுடன் சகஜமாக பழகக்கூடியவர்கள். சம்பவம் நடந்த அன்று அவர்கள் அதிக போதையில் இருந்தார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
'ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய இளைஞர்'

பட மூலாதாரம், Handout
பிபிசி தமிழிடம் பேசிய அதே பகுதியில் வசித்து வரும் செல்லம்மா, "அன்றைய தினம் மாலை நேரம் என்பதால் என் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன். என் பக்கத்து வீட்டு பையனை மூன்று இருசக்கர வாகனங்களில் முகத்தை மூடிக்கொண்டு வந்த சிலர் வெட்டினார்கள். அந்த பையன் அவரது வீட்டுக்கு ஓடி வரும்போது 'எல்லாரும் வீட்டுக்குள்ள போங்க வெட்ட வராங்க வெட்ட வராங்கன்னு' சத்தம் போட்டுக் கொண்டே வந்ததால், நான் வீட்டுக்குள் சென்றுவிட்டேன்" என்று கூறினார்.
இப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான இசக்கி என்பவர் தானும் அன்று ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.
"நான் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவன். அன்று மாலை திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு எங்கள் தெருவின் மேற்குப் பகுதியில் இருந்து எனது வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு வந்தவர்கள் என்னை வெட்டினார்கள்.
நான் தடுத்தபோது எனது இடது கையில் வெட்டு விழுந்தது. எதற்காக இப்படிச் செய்தீர்கள் என அழுதுகொண்டே கேட்டதற்கு அப்படித்தான் வெட்டுவோம் என சொல்லிச் சென்றார்கள்" என்கிறார் இசக்கி.
"எனக்கு முன் எங்கள் தெருவை சேர்ந்த இருவரை வெட்டிவிட்டு சாலையில் நடந்து வந்த என்னை வெட்டினார்கள். என்னை வெட்டியவர் மூகமூடி அணிந்திருந்ததால் அவர் யார் என தெரியவில்லை. ஆனால் அதில் முகத்தை மறைக்காமல் இருந்த தெற்கு தெரு நபரை எனக்கு தெரியும் இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்துள்ளேன்" என இசக்கி தெரிவித்தார்.
'இதுவரை சாதி பிரச்னை நடந்ததில்லை'

பட மூலாதாரம், Handout
இந்தச் சம்பவம் குறித்து மாதா கோவில் தெரு நாட்டாமை அந்தோணி பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இதுவரை எந்த சாதி பிரச்னையும் நடந்ததில்லை. எங்கள் ஊரில் அனைத்து சமூக மக்களுக்கு சொந்தமான வயல்கள் அருகருகே தான் உள்ளது. அனைவரும் ஒற்றுமையுடன் விவசாயம் செய்து வருகிறோம். பிரச்னைக்கு காரணமான அந்த பேனரில் சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் இல்லை. இப்போது எங்கள் ஊரில் அமைதி இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. இனி இது போன்று நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்தோணி கேட்டுக்கொண்டார்.
பட்டியல் இன மக்கள் முன் வைக்கும் புகார்கள் தொடர்பாக தெற்கு தெருவில் வசிக்கும் இடைநிலைச் சமூகத்தைச் சேர்ந்த 68 வயதுடைய சுப்பையா பாண்டியன் என்பவரிடம் பேசுகையில், "மாதா கோவில் தெருவில் பட்டியலின மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த சம்பவத்துக்கு காரணமாக சொல்லப்படும் பேனர் கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை அவர்கள் தெருவில் இருந்து வெளியில், அதாவது மாதா கோவில் எதிர்புறம் இடைநிலைச் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் வைக்கப்பட்டது. அதில் பட்டியலின சமூக தலைவர்கள் புகைப்படங்கள் இருந்தன. உடனடியாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து அதனை உங்கள் தெருவுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறினோம்."
"ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பேனரை அகற்ற முடியாது 'என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்' என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த எங்கள் தெருவைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த பேனரை கிழித்து சேதப்படுத்தியதுடன், மறுநாள் மாலை அவர்கள் தெருவுக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்று கூறினார்.
"எங்கள் சமூக இளைஞர்கள் பட்டியலின மக்களை தாக்கியது ஏற்புடையது அல்ல, கண்டிக்கத்தக்கது, இத்தகைய செயலை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஒருபோதும் நியாயப்படுத்த எங்கள் சமூக மக்கள் தயாராக இல்லை. அதே சமயம், அவர்கள் அந்த பேனரை எடுத்து இருந்தால் இவ்வளவு பெரிய பிரச்னை வந்திருக்காது. இப்போதும் நாங்கள் நட்புடன் இருந்து வருகிறோம்." என சுப்பையா பாண்டியன் தெரிவித்தார்.
காவல்துறையின் கட்டுப்பாட்டில் நெட்டூர் கிராமம்

பட மூலாதாரம், Handout
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம், உள்ளிட்ட அமைப்புகள் நெட்டூர் கிராமத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிவதற்காக பட்டியலின மக்கள், இடைநிலை சாதி மக்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த அந்தோணி சாமி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த பிரச்னை பேனர் வைத்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளது. ஆனால் அந்த பேனரில் எந்த சர்ச்சைக்குரிய வார்த்தைகளும் இடம்பெறவில்லை. இத்தனை ஆண்டுகளாக மாதா கோவில் தெருவுக்குள் பேனர் வைத்திருந்தபோது ஏற்படாத பிரச்னை தெருவை விட்டு வெளியே சாலையில் வைத்ததால் ஏற்பட்டுள்ளது" என்றார்.
"இரு தரப்புக்கும் இடையே மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எந்தவித அமைதி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. எனவே, விரைந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி இரு சமூகத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களை அழைத்து பேசி அமைதியான சூழ்நிலையை இங்கு ஏற்படுத்த வேண்டும். அதுவரை இங்கு பதற்றமான நிலைமை தான் தொடரும்." என்று அவர் கூறுகிறார்.
மேலும், "இனி இவ்வாறு ஒரு சாதிய மோதல் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு குழு அமைத்து மாதத்துக்கு இருமுறை நட்பு சந்திப்பு கூட்டம் நடத்தி நட்புறவை உருவாக்க வேண்டும்" என்றார்.
அமைச்சர் நேரில் ஆய்வு

பட மூலாதாரம், Handout
நெட்டூர் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு பிபிசி தமிழிடம் பேசுகையில், "நெட்டூர் சம்பவம் மது போதையில் நடந்ததாக போலீசார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நெட்டூர் சம்பவத்தில் 'திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வெளியூரில் இருந்து வந்துள்ளேன். என்னை வெட்டிடாதீங்க' என பட்டியலின இளைஞர் கெஞ்சி கேட்டபோதும் சாதிப் பெயரைச் சொல்லி வெட்டியுள்ளனர். எனவே இது நீண்ட கால சாதி பிரச்னை" என்கிறார்.
"10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலர்கள், சார்பு ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்டவர்களால் சாதி பிரச்னைகள் தென் மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இவர்கள் உயர் அதிகாரிகளிடம் பட்டியலின மக்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள் என தவறான தகவல்களை அளிக்கின்றனர். அதை கள ஆய்வு செய்யாமல் அப்படியே உயர் அதிகாரி நம்புவதால் சாதி பிரச்னை தொடர்ந்து நடந்து வருகிறது. நீதிபதி சந்துரு பரிந்துரையின் அடிப்படையில் நீண்ட நாள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும்" எனக் கூறினார் அமைச்சர் வன்னியரசு.
"பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களில் ஒருவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மட்டும் வன்கொடுமை தடுப்பு சட்டம் மூலம் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் நிதி உதவி கிடைத்துள்ளது. மற்றவர்கள் கிறிஸ்தவ மதத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. எனவே, மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளேன்." என்றார் அமைச்சர் வன்னியரசு.
"தென் மாவட்டங்களில் சாதி பிரச்சனைகள் நடைபெறாமல் இருக்க இளைஞர்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக தொழிற்சாலைகள் அதிக அளவில் மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல் சாதி அடையாள கயிறுகள் கட்டுவது, மின் கம்பங்களில் சாதி அடையாள வண்ணங்கள் பூசுவது உள்ளிட்டவற்றை கண்காணித்து நீக்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும், இதில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் முழு கவனம் செலுத்த வேண்டும்" என சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு கேட்டுக்கொண்டார்.
சாதி பிரச்னையை தடுக்க காவல்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டபோது, "தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இளைஞர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவர்" என தெரிவிக்கப்பட்டது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























