தமிழ்நாட்டில் மின்வெட்டு திடீரென அதிகரிக்க என்ன காரணம்? அமைச்சர் பேச்சும் கள நிலவரமும்

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"கடந்த இரண்டு வாரங்களாக தினசரி மின்வெட்டை எதிர்கொண்டு வருகிறோம். இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ளவே முடிவதில்லை" என்கிறார், சென்னை பெரம்பூரில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன்.

தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் வேலை பார்த்து வருகிறார். இரவுநேர மின்வெட்டு காரணமாக தங்கள் பகுதியில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இது பெரம்பூர் பகுதிக்கான பிரச்னை மட்டுமல்ல, சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்துள்ளன.

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உபகரணங்கள் திருடு போவதை பிரதான குற்றச்சாட்டாக அரசு முன்வைப்பதாக, மின் ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

15 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற உள்ளதாக, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு த.வெ.க ஆட்சி சந்திக்கும் பிரச்னைகளில் மிக முக்கியமானதாக மின்வெட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன.

சென்னையில் சில இடங்களில் பல மணிநேரம் நீடிக்கும் மின் தடையால் குழந்தைகளும் முதியோரும் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

'தினசரி 2 மணிநேர மின்வெட்டு'

"கடந்த இரண்டு வாரங்களாக இப்படியொரு துயரத்தை எதிர்கொண்டு வருகிறோம். தற்போது தினசரி இரவு 10 மணி முதல் 12 மணி வரை மின்வெட்டு ஏற்படுகிறது" என்கிறார், பெரம்பூர் கண்ணதாசன் நகரில் வசிக்கும் ஹரிகிருஷ்ணன்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " மின்வாரிய ஊழியர்களுடன் தினசரி சண்டை போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிக மின் அழுத்தம் (Over Load) காரணமாக மின் தடை ஏற்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்" என அவர் தெரிவித்தார்.

"தேர்தலுக்கு முன்பு எப்போதாவது ஒருமுறை மின் தடை ஏற்படும். இப்போது மின் தடை ஏற்படும் நேரங்களில் மின்வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை" எனவும் அவர் விமர்சித்தார்.

இவரது மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். "மகனுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. மனைவிக்கு சர்க்கரை குறைபாடு உள்ளது. மின்வெட்டு காரணமாக அவர்கள் உடல்நலனில் பாதிப்பு ஏற்படுகிறது" என்கிறார்.

பெரம்பூரில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "பெரம்பூரில் இரண்டு தெருக்களில் டிரான்ஸ்ஃபார்மர் பிரச்னை வந்தது. அவை சரிசெய்யப்பட்டுவிட்டன" எனக் கூறினார்.

மாநிலம் முழுவதும் சுமார் நான்கரை லட்சம் டிரான்ஸ்ஃபார்மர்கள் உள்ளதாகக் கூறிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "இவை இருபது ஆண்டுகள் பழைமையானவை. இதனை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன" எனத தெரிவித்தார்.

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

தொடரும் மறியல் போராட்டம்

பெரம்பூர் பகுதி மட்டுமல்லாமல் அம்பத்தூர், அரும்பாக்கம், விருகம்பாக்கம் உள்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பத்தூரில் கடந்த 5 ஆம் தேதி மின் தடையைக் கண்டித்து கள்ளிக்குப்பம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

அரும்பாக்கம், குன்றத்தூர், ராமாபுரம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருநின்றவூர், கோமதிபுரத்தில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அங்கு சுமார் 3 மணிநேரத்துக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது.

கடந்த ஜூன் 6 ஆம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் சுமார் ஐந்து மணிநேரம் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-புதுச்சேரி பிரதான சாலை மற்றும் சென்னை-புதுச்சேரி பிரதான சாலைகளில் வாகனங்கள் நீண்டநேரம் அணிவகுத்து நின்ற காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

இந்தப் போராட்டம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. திருப்போரூர் த.வெ.க எம்.எல்.ஏ விஜயராஜ் , மின்வாரிய ஊழியர்களைத் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் இரவு சுமார் 1 மணியளவில் மின்விநியோகம் சீர்செய்யப்பட்டது.

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

படக்குறிப்பு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர்

'18 மாவட்டங்களில் மின்வெட்டு'

சென்னை மட்டுமல்லாமல், விருதுநகர், திருச்சி, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருச்சி, நீலகிரி உள்பட 18 மாவட்டங்களில் மின்வெட்டுக்கான காரணங்களை மின்வாரியம் பட்டியலிட்டுள்ளது.

மரம் விழுந்தது, உயர்மின் அழுத்தத்தில் ஏற்பட்ட பழுது, மின் விநியோகத்தில் (Line fault) பழுது, துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி, கேபிள் பழுது உள்பட பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை சரிசெய்யப்பட்ட காலஅளவையும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆவடி பியூஸ் கேரியர் திருட்டு - 2 பேர் கைது

மின் தடையால் மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பு குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "மக்களை எந்தவகையிலும் பாதிக்காமல் சரிசெய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சில நபர்கள் பியூஸ் கேரியரை (fuse carrier) திருடும் சம்பவங்கள் நடந்துள்ளன" எனக் கூறினார்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளதாகவும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார். ஆவடி பகுதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

ஆவடி காவல் நிலையத்தில் ஜூன் 8 ஆம் தேதி பட்டாபிராம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திக் கணேஷ் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், காமராஜ் நகர் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் மின் விநியோக பெட்டிகளில் இருந்து அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் 18 என்ற எண்ணிக்கையில் பியூஸ் கேரியர்களை திருடிச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனால் பொதுமக்களுக்கான மின் விநியோக சேவைகள் பாதிப்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மின்சார விபத்துகள் மற்றும் பிற அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறி மனுவுடன் சிசிடிவி காட்சிகளை இணைத்திருந்தார்.

இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில், மின் இணைப்பு பெட்டியில் பியூஸ் கேரியர்களை திருடியதாக தினேஷ்குமார், வினித்ராஜ் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஆவடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/CTR_Nirmalkumar

'எந்த எல்லைக்கும் செல்வார்கள்' - அமைச்சர் நிர்மல்குமார்

"அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதைத் தாண்டி மக்களுக்குத் தேவையானதை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். காலப்போக்கில் தானாக மறையும்" என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறினார்.

இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், "பியூஸ் கேரியரில் (Fuse carrier) தாமிரம் இருக்கும். இதைத் திருடும் நபர்கள் அதனை விற்று மதுபானம் வாங்குவார்கள். இதில் சிலர் சதிவேலை செய்வதாகக் கூறுவது தவறானது" என்கிறார்.

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்பது இல்லை. தி.மு.க ஆட்சியில் இருந்தபோது 29.4.2026 அன்று அதிகபட்ச மின் நுகர்வு என்பது 21,307 மெகாவாட்டாக இருந்தது. அடுத்த ஒரே மாதத்தில் அதிகபட்ச மின்நுகர்வு என்பது 20,109 மெகாவாட் மின்சாரமாக குறைந்துள்ளது" என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

'மின் தடைக்கு காரணம் இதுதான்'

"கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது ஒரு மாதத்தில் மின்நுகர்வு குறைந்திருந்தாலும் மின்தடை அதிகரிப்பதற்கு பணியாளர் பற்றாக்குறை பிரதான காரணமாக உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக இதே நிலைமையில் மின்வாரியம் உள்ளது" என்கிறார் அவர்.

மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கட்டமைப்பில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரிப்புப் பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசும் ஜெய்சங்கர், "காலாண்டு, அரையாண்டு எனத் திட்டமிட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை" எனக் கூறுகிறார்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக மின் நுகர்வு வரும்போது கூடுதல் அழுத்தம் காரணமாக மின் தடை ஏற்படுவதாகக் கூறும் அவர், "துணை மின் நிலையங்களில் டிரிப் ஆகும்போது டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுது ஏற்படும். ஆனால், பழுதை சரிசெய்வதற்கு போதிய பணியாளர்கள் இல்லை" என்கிறார்.

"மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு பராமரிப்பு பணிகளை அவ்வப்போது மேற்கொள்வது அவசியம். அவற்றை முறையாக செய்யாததால் ஏற்படும் விளைவுகளைத் தான் மக்கள் அனுபவித்து வருகின்றனர்" என அவர் தெரிவித்தார்.

அனைத்து துணை மின் நிலையங்களிலும் இதே பிரச்னை நீடிப்பதாகக் கூறும் ஜெய்சங்கர், "நடுத்தர மக்கள் சுமார் இரண்டு மணிநேரம் குளிர்சாதனத்தைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது அதீத வெப்பம் காரணமாக அதிகாலை மூன்று மணி வரை பயன்படுத்துகின்றனர். இதனால் கூடுதல் மின் அழுத்தம் ஏற்படுகிறது" என்கிறார்.

மின்வாரிய பணியிடங்கள், மின்வெட்டு பிரச்னை, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மறியல் போராட்டம், மின்வாரியம்

பட மூலாதாரம், https://x.com/TANGEDCO_Offcl

'பாசிட்டிவான விஷயம்.. ஆனால்?'

மின்துறையில் விரைவில் 15 ஆயிரம் பேர் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார். வரும் ஐந்தாண்டுகளில் அனைத்துக் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

"இது பாசிட்டிவ்வான விஷயம்" எனக் கூறும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், "குறைந்தபட்சம் 25 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டும். காரணம், ஒவ்வொரு மாதமும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் ஓய்வு பெறுகின்றனர்" என்கிறார்.

"திறன் வாய்ந்த ஊழியர்கள் பணியில் இருக்கும்போதே புதிதாக வேலைக்கு வருகிறவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறு பயிற்சி கொடுக்காமல் ஓய்வு பெற்றுவிட்டால் யாரை வைத்து வேலை வாங்க முடியும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மின்வாரிய பணியிடங்களை நிரப்புவது தொடர்பான மனு ஒன்றையும் கடந்த வாரம் மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் அளித்துள்ளனர்.

இதைப் பற்றி விவரித்த ஜெய்சங்கர், " கடந்த ஆட்சியில் கேங்மேன் பணிகளை நிரப்பியதில் விடுபட்டவர்களாக ஐந்தாயிரம் பேர் உள்ளனர். இவர்களை உடனடியாக பணியில் சேர்க்கலாம். ஐ.டி.ஐ முடித்துவிட்டு தொழில்நுட்பரீதியாக திறன் உள்ளவர்களில் பத்தாயிரம் பேரை நியமிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளோம்" என்கிறார்.

"பயிற்சி பெற்ற ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு எடுக்க வேண்டும்" எனக் கூறும் அவர், "இவர்களுக்கு தினசரி சம்பளமாக 766 ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களை வேலைக்கு எடுப்பதால் அரசுக்கு எந்த சிரமமும் இருக்கப் போவதில்லை. இதுவே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்" எனக் கூறுகிறார்.

இதற்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், "15 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்கிவிடுவோம். இதர பிரச்னைகள் குறித்து பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் பதில் அளித்தார்.

'பேரிடர் கால குழுக்கள்'

சென்னை மற்றும் புறநகரில் மின்வெட்டு பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு 500 பேர் கொண்ட 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

"இந்தக் குழுக்களைக் கண்காணிப்பதற்கு பத்து உயர் மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உபகரணங்களால் ஏற்படும் பிரச்னை, சமூக விரோத செயல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மதுரை உள்பட பிற மாவட்டங்களில் இதேபோன்ற குழுக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட சி.டி.ஆர்.நிர்மல்குமார், "பேரிடர் காலங்களில் உள்ளது போன்று இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு