"தர்பூசணியில் எலி நச்சு" - மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரணத்திற்கு காரணம் என்ன?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பை பைதுனி பகுதியில் டோகாடியா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நகரத்தையே உலுக்கியது.

இந்த மரணங்கள் உண்மையில் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பல நாட்களாகக் குழப்பம் நீடித்தது.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பான தடய அறிவியல் ஆய்வக அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், விசாரணைக்கு முக்கியமான மருத்துவ மற்றும் அறிவியல் ரீதியான ஆதரவு கிடைத்துள்ளது.

தடயவியல் ஆய்வக அறிக்கையின்படி, இறந்தவர்களின் உடலுறுப்பு மாதிரிகளைப் பரிசோதித்ததில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இறந்த நான்கு பேருடைய கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் மண்ணீரல் மாதிரிகளிலும், அதே போல் வயிற்றுப் பகுதி, பித்தநீர் மற்றும் அடிவயிற்றுக் கொழுப்பு ஆகியவற்றிலும் துத்தநாக பாஸ்பைடு ('ஜின்க் பாஸ்பைடு') என்ற நச்சு ரசாயனக் கலவையின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது விசாரணை அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

துத்தநாக பாஸ்பைடு என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு ரசாயனம் ஆகும். இது முதன்மையாக எலிகளைக் கொல்லும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

தடயவியல் ஆய்வக அறிக்கை வெளியான பிறகு, இந்த மரண வழக்கு குறித்த விசாரணை ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

மும்பை பைதுனியில் வசித்து வந்த இந்தக் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களும் ஏப்ரல் 25 அன்று இரவு உணவிற்குப் பிறகு உயிரிழந்தனர். குடும்பத்தினர் அனைவரும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அன்று இரவு உணவிற்குப் பிறகு மிகவும் தாமதமாக அந்தக் குடும்பத்தினர் அனைவரும் தர்பூசணி பழத்தை சாப்பிட்டுள்ளனர். அவர்கள் நச்சு பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று உள்ளூர் மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

துத்தநாக பாஸ்பைடு என்றால் என்ன?

துத்தநாக பாஸ்பைடு என்பது எலிகள், சுண்டெலிகள் மற்றும் பிற கொறித்துண்ணிகளைக் கொல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு மிக உயர்ந்த நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் கலவை ஆகும்.

இது விவசாயம் மற்றும் தானியக் கிடங்குகளில் எலிகளைக் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

துத்தநாக பாஸ்பைடு என்பது துத்தநாகம் (Zn) மற்றும் பாஸ்பரஸ் (P) ஆகியவற்றால் ஆன ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்ப்பாடு Zn₃P₂ ஆகும். இது அடர் சாம்பல் அல்லது கருப்பு நிறப் பொடியாக அல்லது சிறு துகள்களாகவோ காணப்படுகிறது.

அது வயிற்றுக்குள் சென்றால் என்ன நடக்கும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, துத்தநாக பாஸ்பைடு வயிற்றிலுள்ள அமிலத்துடன் வினைபுரிந்து 'பாஸ்பைன்' (phosphine) எனப்படும் ஒரு மிக உயர்ந்த நச்சுத்தன்மை கொண்ட வாயுவை உருவாக்குகிறது.

இந்த வாயு உடலின் செல்கள் ஆற்றலை உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. இது இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

துத்தநாக பாஸ்பைடை தற்செயலாக விழுங்கினாலோ அல்லது பாஸ்பைன் வாயுவைச் சுவாசித்தாலோ அது மரணத்தை விளைவிக்கும்.

எனவே, பல நாடுகளில் இந்த ரசாயனத்தின் பயன்பாடு கடுமையான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளது. மேலும் இது பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிபிசி மராத்தி ஊடகத்திடம் பேசிய மும்பையைச் சேர்ந்த மருத்துவர் பூஷன் ரோக்டே, "துத்தநாக பாஸ்பைடு என்பது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வேதிப்பொருள் ஆகும்" என்று தெரிவித்தார்.

எலிகள் மற்றும் இதர பூச்சிகளைக் கொல்லும் "எலி விஷமாக" இது பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமாக கருப்பு அல்லது சாம்பல் நிறத் தூள் வடிவில் இருக்கும். இருப்பினும், அதன் பயன்பாடு மற்றும் தோற்றத்தைப் பொறுத்து சந்தையில் சில வெவ்வேறு வடிவங்களில் இது கிடைக்கிறது"என்றார்.

"இது மனித உடலுக்கும் மற்ற செல்லப்பிராணிகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது." என்றும் அவர் கூறினார்.

இது உடலுக்கு எப்படி தீங்கு விளைவிக்கிறது என்பதைப் பற்றிப் பேசிய மருத்துவர் ரோக்டே, "இந்த வேதிப்பொருள் வயிற்றின் வழியாக உடலுக்குள் சென்றாலோ அல்லது ஈரப்பதத்துடன் தொடர்பு கொண்டாலோ, அது 'பாஸ்பைன் வாயுவை' உருவாக்குகிறது, இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது" என்று கூறினார்.

இந்த வாயு உடலின் செல்கள் ஆக்சிஜனைப் பயன்படுத்துவதைத் தடுத்து, பல உறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கிறது.

இது வாந்தி, மூச்சில் பூண்டு போன்ற மணம், நெஞ்சில் இறுக்கம், மூச்சுத் திணறல் மற்றும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது. சிறிய அளவில் உட்கொண்டாலும் இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.

"இதற்கு என்று குறிப்பிட்ட மாற்று மருந்து எதுவும் கிடையாது. எனவே, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான ஆதரவு சிகிச்சைகள் மட்டுமே அளிக்கப்படுகின்றன.

இந்த வேதிப்பொருளை குழந்தைகள் மற்றும் உணவுப் பொருட்களிடமிருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும்.

தவறுதலாக விழுங்கினாலோ அல்லது நச்சு பாதிப்பு ஏற்பட்டதாகச் சந்தேகித்தாலோ, வாந்தியைத் தூண்ட முயற்சிக்காதீர்கள். அத்தகைய சூழ்நிலையில், உடனடியாக நோயாளியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றும் மருத்துவர் ரோக்டே கூறினார்.

தடயவியல் அறிக்கை என்ன வெளிப்படுத்தியது?

தடய அறிவியல் ஆய்வக அறிக்கை தொடர்பாக, அதன் இயக்குநர் மருத்துவர் விஜய் தாக்கரேவிடம் பிபிசி மராத்தி பேசியது.

மருத்துவர் தாக்கரே கூறுகையில், "பைதுனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த வழக்கில், தடய அறிவியல் ஆய்வக அறிக்கையை இன்று காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்" என்றார்.

மேலும்,"அந்த அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களின் உடலுறுப்பு மாதிரிகளான கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் மாதிரிகளிலும், அதே போல் வயிற்றுப் பகுதி பொருட்கள், பித்தம் மற்றும் வயிற்றுக் கொழுப்பு மாதிரிகளிலும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டுள்ளது. தர்பூசணி பழ மாதிரிகளிலும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

மும்பை மண்டலம்-1 இன் காவல்துறை துணை ஆணையர் பிரவீன் முண்டேவும் இது குறித்த தகவல்களை வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "தடய அறிவியல் ஆய்வகத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், உயிரிழந்த அனைவரின் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் உள்ளிட்ட உடலுறுப்பு மாதிரிகளிலும், வயிற்றுப் பகுதி பொருட்கள், பித்தம் மற்றும் வயிற்றுக் கொழுப்பு மாதிரிகளிலும் துத்தநாக பாஸ்பைடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

பிரவீன் முண்டே தொடர்ந்து பேசுகையில், "விசாரணையின் போது எடுக்கப்பட்ட தர்பூசணி மாதிரி ஒன்றிலும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டது. இருப்பினும், விசாரணைக்காக அனுப்பப்பட்ட மற்ற உணவு மாதிரிகள் எதிலும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்படவில்லை" என்று கூறினார்.

மேற்கொண்டு நடத்தப்பட வேண்டிய விசாரணையின் திசை குறித்து, தடய அறிவியல் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் பிரவீன் முண்டே தெரிவித்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு