"தவெக வெற்றிக்கான காரணம்" - தரவுகள் சொல்லும் செய்தி என்ன?

பட மூலாதாரம், TNDIPR
- எழுதியவர், சஞ்சய் குமார்
- பதவி, தேர்தல் ஆய்வாளர்
- எழுதியவர், விபா அட்ரி, அரிந்தாம் கபிர்
- பதவி, ஆய்வாளர்கள், லோக்நிதி, சிஎஸ்டிஎஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் தவெகவின் வெற்றி பல அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. தவெக கணிசமான இடங்கள் மற்றும் வாக்கு சதவிகிதம் பெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்த நிலையில், இந்த அளவிற்கான வெற்றி எதிர்பார்க்கப்படவில்லை.
108 இடங்கள் மற்றும் 34.92 வாக்கு சதவிகிதத்துடன் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. மாநிலக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பாரம்பரியமாக கோலோச்சி வந்த தமிழ்நாட்டு அரசியலில் இது மிகவும் அரிதான முடிவுகள். ஒரு புதிய கட்சி இத்தகைய முடிவுகளைப் பெறுவது மாநிலத்தின் அரசியல் அரங்கில் முக்கியமான மாற்றமாக அமைகிறது.
போல்ஸ் மேப் தளத்திலிருந்து கிடைக்கும் தேர்தலுக்குப் பிந்தைய தரவுகள், இந்த முடிவுகள் திமுக அரசு மீதான வலுவான அதிருப்தி, குறிப்பாக அதன் செயல்பாடு மீது வாக்காளர்களுக்கு இருந்த அதிருப்தியினாலே சாத்தியமாகியுள்ளது என்பதைக் காட்டுகின்றன.
அதே வேளையில் விஜயின் பிரபலம், விஜயின் தலைமை மீதான வலுவான நம்பிக்கை, இளம், நகர்ப்புற மற்றும் பெண் வாக்காளர்கள் மத்தியிலான ஆதரவு ஆகியவற்றால் தவெக பலனடைந்துள்ளது.
திமுக தலைமையிலான மாநில அரசு மீதிருந்த அதிருப்தி அலை இருந்ததை தரவுகள் தெளிவாக காட்டுகின்றன. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் இது முக்கியமான பங்காற்றியுள்ளது. 22% பேர் அரசாங்கத்தின் செயல்பாடு மீது முழுவதும் திருப்திகரமாக உள்ளதாக தெரிவித்த நிலையில் 28% பேர் முழுவதும் திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பான்மையான வாக்காளர்கள் மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியதில் இருந்து இந்த உணர்வைப் புரிந்துகொள்ள விரும்புகிறது. 58% வாக்காளர்கள் (அதாவது 5-இல் 3 வாக்காளர்கள்) திமுகவிற்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கக்கூடாது எனத் தெரிவித்தனர். 34% வாக்காளர்கள் மட்டுமே திமுக அரசு தொடர வேண்டும் என்பதற்காக வாக்களித்தனர்.
இந்த அதிருப்தியும் வாக்காளர்களின் தேர்வின்மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது. திமுக அரசு மீது அதிருப்தியில் இருந்த வாக்காளர்கள் அதிமுக கூட்டணி அல்லது தவெக பக்கம் சாய்ந்தார்கள். எனினும் அந்த வாக்காளர்கள் அதிமுகவை தேர்வு செய்ததைவிட தவெகவை தேர்வு செய்ததே அதிகமாக இருந்தது.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், திமுக அரசு மீது பகுதியளவு திருப்தியடைந்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட பாதி (திமுக ஆதரவு - 35%, தவெக ஆதரவு - 32%) பேர் தவெகவை தேர்வு செய்துள்ளனர். அதிருப்தி வாக்காளர்களை மட்டுமல்லாமல் பகுதியளவு திருப்தியடைந்த வாக்காளர்களையும் தவெக கவர்ந்துள்ளது. இதன்மூலம் அதிருப்தி உணர்வு என்பதையும் கடந்து பரவலான ஆதரவு தவெகவுக்கு இருந்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பட மூலாதாரம், TNDIPR
முக்கியமான நிர்வாக பிரச்னைகள் என்று வருகையில் வாக்காளர்கள் திமுக மற்றும் அதிமுக கூட்டணியை தெளிவாக தேர்வு செய்யாததை தரவுகள் காட்டுகின்றன, இதன்மூலம் அரசியல் களம் தவெகவிற்கு ஆதரவாக இருந்துள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களுக்குத் தீர்வு வழங்குவதில் எந்தக் கட்சி சிறந்த நிலையில் இருக்கிறது என்கிற கேள்வி வாக்காளர்களிடம் முன்வைக்கப்பட்டது. பத்தில் மூன்று பேர் எந்தக் கட்சியும் அதற்கு உகந்த நிலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே உள்ள அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையில் உள்ள வெற்றிடத்தையே இது காட்டுகிறது. இந்தச் சூழ்நிலை புது வரவான தவெக ஒரு மாற்றாக தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான இடத்தை வழங்கியுள்ளது.
தவெக பற்றிய விழிப்புணர்வும் அதிக அளவில் இருந்தது அக்கட்சியின் செயல்பாட்டிற்கு ஆதரவாக இருந்துள்ளது. 10-இல் 8 வாக்காளர்கள் தவெக பற்றி கேள்விப்பட்டிருந்தனர். இது புதிய கட்சியான தவெக, பொதுமக்கள் மத்தியில் ஊருடுவி பரந்த தரப்பிலான வாக்காளர்களை சென்றடைந்ததைக் காட்டுகிறது. அவர்களின் தேர்தல் இருப்பை வடிவமைப்பதில் இது சாதகமாக அமைந்துள்ளது.
விழிப்புணர்வையும் கடந்து, வாக்காளர்கள் மத்தியில் விஜய் அதிக அளவிலான நம்பிக்கையைப் பெற்றுள்ளார். வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (54%), தமிழ்நாடு அரசியலில் விஜய் அர்த்தமுள்ள மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான திறம்வாய்ந்த தலைவர் எனப் பதிலளித்துள்ளனர்.
அவருடைய அரசியல் அனுபவமின்மை காரணமாக அவரின் திறன் மீது 35% பேர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விஜய் திறம்வாய்ந்த தலைவர் எனத் தேர்வு செய்தவர்களில் 10-இல் 6 பேர் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். அவரின் திறன் மீது சந்தேகம் எழுப்பியவர்களில் 10-இல் ஒருவர் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர்.
விஜய் மீதான நம்பிக்கை முதலமைச்சர் தேர்விலும் பிரதிபலித்திருக்கிறது. 34% வாக்காளர்கள் விஜயைத் தேர்வு செய்துள்ள நிலையில் 24% எடப்பாடி பழனிசாமியையும் 23% மு.க.ஸ்டாலினையும் தேர்வு செய்துள்ளனர்.
இளம் வாக்காளர்கள் மத்தியில் விஜய்க்கு வலுவான ஆதரவு இருந்துள்ளது. 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்களில் 10-இல் 6 பேர் தவெகவிற்கு வாக்களித்துள்ளனர். திமுக மற்றும் அதிமுக கூட்டணியை விட இது பெருமளவு அதிகம். 26 - 35 வயதுக்கு உட்பட்டவர்களில் 42% பேர் ஆதரவைப் பெற்ற தவெக முதன்மையான தேர்வாக உள்ளது. வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் தவெகவிற்கு ஆதரவு குறைந்திருந்தாலும் இளம் வாக்காளர்கள் மத்தியில் கிடைத்த ஏகோபித்த ஆதரவு அவர்களுக்குச் சாதகமாக அமைந்து இளைஞர்கள் மத்தியில் வலுவான சக்தியாக தவெகவை நிறுத்தியுள்ளது.
பாலினம் வாரியான தரவுகளைப் பார்க்கும்போதும் கட்சி வாரியான ஆதரவில் முக்கியமான அம்சங்கள் தெரியவருகின்றன. ஆண் வாக்காளர்கள் மத்தியில் திமுக மற்றும் தவெக குறைந்த அளவிலான ஆதரவை மட்டுமே பெற்றுள்ளது.

பட மூலாதாரம், TNDIPR
இந்தக் குழுவில் அதிமுகவிற்கு வலுவான ஆதரவு இருந்துள்ளது. அதற்கு நேர் மாறாக பெண் வாக்காளர்கள் மத்தியில் திமுக மற்றும் அதிமுகவை விட தவெகவிற்கு ஏகோபித்த ஆதரவு இருந்துள்ளது.
அதோடு கிராமப்புறங்களை (28% ஆதரவு) விடவும் நகர்ப்புறங்களில் (42% ஆதரவு) தவெகவிற்கு அதிக ஆதரவு இருந்துள்ளது. தவெகவிற்கு ஆதரவு குறைவாக இருந்த கிராமப்புறங்களில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே போட்டி இருந்துள்ளது.
இதன் மூலம் தவெகவின் பரப்புரை, பிரபலம் வழிவந்த தலைமை மற்றும் இளைஞர்களை மையப்படுத்திய பிரசாரம் ஆகியவை நகர்ர்புறங்களில் அதிகம் பலனளித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
தவெகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும், தன்னை ஒரு முறை விதிவிலக்காக அல்லாமல் மாநிலத்தின் முக்கிய நீண்டகால அரசியல் சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பதையும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
மேலும் இது, ஒரு கட்சி அதன் தலைவரின் செல்வாக்கின் அடிப்படையில் முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்து மாநிலம் மற்றும் தேசிய அளவில் அரசியலின் தன்மையை வடிவமைக்கும் புதிய மூன்றாவது முன்னணி ஒன்று உருவாவதற்கான உதாரணத்தை இந்திய அரசியலுக்கு வழங்கும்.
தனது முதல் தேர்தலிலே, வாக்கு சதவிகிதம் மற்றும் இடங்களைப் பொருத்தவரையில் இவ்வளவு பெரிய ஆதரவைப் பெற்ற ஒரு அரசியல் கட்சி எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் எவ்வாறு தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் என்பதை அறிந்துகொள்வதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
(வாக்குப்பதிவுக்குப் பிறகு லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது)
சஞ்சய் குமார் ஒரு தேர்தல் ஆய்வாளர், விபா அட்ரி மற்றும் அரிந்தாம் கபிர் லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள்
இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளர்களின் சொந்த கருத்துக்களே. இவை நிறுவனத்தின் கருத்துக்கள் அல்ல.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































