கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு மாதம் கழித்து இறந்த சிறுமி – என்ன நடந்தது?

கரூரில் கடந்த ஆண்டில் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மதுமிதா என்ற 13 வயது சிறுமி, ஒரு மாதம் கழித்து 2025 நவம்பர் 2 அன்று உயிரிழந்துள்ளார்.
உரிய நேரத்தில் தரமான சிகிச்சை கிடைக்காததால்தான் தங்கள் குழந்தை இறந்ததாக சிறுமியின் பெற்றோர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
'அந்த சிறுமிக்கு கூட்ட நெரிசலில் மிதிபட்டதால் ஏற்பட்ட ரத்தக்கட்டால் செப்டிக் ஷாக் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக உள்உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த சிறுமியின் இறப்புக்கு இதுவரை எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை.
தங்கள் குழந்தையின் இறப்பு குறித்த ஆவணங்களை தவெகவினர் வாங்கிச் சென்றதாகவும், அதற்குப்பின் எந்தத் தகவலும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதுபற்றி கட்சி மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளதாகவும், விரைவில் இழப்பீடு வழங்கப்படுமென்றும் தவெகவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images
'விஜயை சந்திக்க சென்னை சென்ற சிறுமி'
கரூரில் கடந்த ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். பல குடும்பங்களில் 2 அல்லது 3 பேர் வரை மரணமடைந்திருந்தனர். இந்த சம்பவத்திற்குப் பின், இதுவரையிலும் கரூருக்கு விஜய் வரவில்லை. ஆனால் உயிரிழந்த 41 பேருடைய குடும்பத்தினரையும் ஒரு மாதம் கழித்து அக்டோபர் 27 அன்று சந்தித்தார்.
மாமல்லபுரத்திற்கு அவர்களை அழைத்து வரச்செய்த விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
தவெக சார்பில் ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் இழப்பீடும் வழங்கினார்.
ஒவ்வொரு உயிரிழப்புக்கும் தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம், மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர்களில் ஒன்றரை வயது குழந்தை துருவிஷ்ணுவும் ஒருவர். விமல்–மாதேஸ்வரி ஆகிய தம்பதியரின் ஒரே குழந்தையான துருவிஷ்ணுவை விமலின் மூத்த சகோதரி லல்லி, தூக்கிச் சென்றுள்ளார். விஜய் பரப்புரை நடந்த இடத்திற்கு 100 மீட்டர் தூரத்துக்குள் விமலின் வீடு இருந்ததால், சாலையோரத்தில் நின்று வேடிக்கை பார்க்க அவர்கள் சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் லல்லியின் கையிலிருந்த குழந்தை துருவிஷ்ணு, கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தது. அதேநேரத்தில் லல்லியும், அவருடைய 13 வயது மதுமிதாவும் கூட்ட நெரிசலில் மிதிபட்டு, சிலரால் காப்பாற்றப்பட்டதாக பிபிசியிடம் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.
வெளிக்காயம் எதுவும் இல்லாத நிலையில், அவரும், அவருடைய மகளும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, துருவிஷ்ணுவின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக அவசரமாக வீடு திரும்பிவிட்டனர்.
ஆனால் அதற்குப் பின் ஒரு வாரம் கழித்து மதுமிதா மிகவும் உடல் சோர்ந்து காணப்பட்டதாகக் கூறிய லல்லி, அருகிலுள்ள சிறிய தனியார் மருத்துவமனைக்குச் சென்று, மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொடுத்ததாகக் கூறினார். இருப்பினும் அவருக்கு உடல்சோர்வும், வயிற்றுவலியும் தீராதநிலையில், 2025 அக்டோபர் 27 அன்று, சென்னையில் விஜயை சந்திக்க இவர்களிருவரும் விமல் குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது தன் மகளுக்கு ஏற்பட்டுள்ள உடல் பாதிப்பு குறித்து விஜயிடம் கூறியதாக லல்லி தெரிவித்தார்.
இதுபற்றி பிபிசியிடம் பேசிய லல்லி, ''விஜயிடம் பேசுகையில், என் மகளுக்கு கூட்ட நெரிசலில் சிக்கிய பின்பு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது பற்றி கூறினேன். அதற்கு அவர், நாங்கள் கொடுத்துள்ள கார்டை வைத்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்றார். நாங்களும் அந்த நம்பிக்கையில் திரும்பிவிட்டோம். ஆனால் அது எனது தம்பியின் குடும்பத்திற்கு தரப்பட்டுள்ள கார்டு என்பதால், அதில் எனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று அப்பல்லோ மருத்துவமனையில் கூறிவிட்டனர்.'' என்றார்.

சென்னையில் இவர்கள் விஜயை சந்தித்து விட்டுத் திரும்பிய பின்பு, மதுமிதாவின் உடல்நிலை மோசமாகி, மீண்டும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கிருந்து நவம்பர் 1 அன்று திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்து அனுப்பியுள்ளனர். மறுநாள் அங்கு அவர் உயிர் பிரிந்துள்ளது. விஜயை மாமல்லபுரத்தில் பார்த்து வந்த ஒரு வாரத்துக்குள் மதுமிதா உயிரிழந்துள்ளார்.
''எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி கூட கிடையாது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க எங்களுக்கு வசதியில்லை. அதனால் வேறு வழியின்றி மீண்டும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தோம். அங்கு நாளுக்கு நாள் அவளுடைய உடல்நிலை மோசமடைந்தது. முதலில் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். மூச்சுவிட சிரமப்பட்டாள். சர்க்கரை அளவு அதிகமாவதாகவும், சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். டயலாசிஸ் செய்தனர். இறுதியில் அவளுக்கு மூளைக்காய்ச்சல் என்று திருச்சி மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் கூறினர். '' என்றார் லல்லி.
மதுமிதாவுக்குத் தரப்பட்ட சிகிச்சை ஆவணங்கள், ஸ்கேன் ரிப்போர்ட், அவருடைய இறப்புக்கு திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தரப்பட்ட இறப்புச்சான்று ஆகியவற்றையும் அவருடைய குடும்பத்தினர் பிபிசியிடம் பகிர்ந்தனர்.
மருத்துவமனை நிர்வாகம் தந்துள்ள இறப்புச்சான்றில், மதுமிதாவின் இறப்புக்கு செப்டிக் ஷாக், சுவாச செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய் என 3 விதமான காரணங்களை திருச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
கரூர் மாநகராட்சி சார்பில் தரப்பட்ட இடுகாடுச் சீட்டில் இறப்புக்கு மூளைக்காய்ச்சல் என்று காரணம் எழுதப்பட்டுள்ளது.
இதில், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தரப்பட்டுள்ள இறப்புக்கான காரணத்தையே எடுத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அரசு மருத்துவர்கள்.
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய கரூர் அரசு மருத்துவக்கல்லூரியின் முன்னாள் டீன் (ஓய்வு) தாமோதரன், ''அந்த குழந்தை கூட்ட நெரிசலில் மிதிபட்டிருந்ததால் உடலுக்குள் பலவிதமான உள்உறுப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக செப்டிக் ஷாக் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறலும், சிறுநீரக பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம். இந்த பாதிப்புகள் முற்றிய நிலையில் மூளைக்காய்ச்சலும் வந்திருக்கலாம். ஆனால் முதலில் அந்தக் குழந்தைக்கு இருந்த உள்காயமே இதற்கு அடிப்படைக் காரணமாயிருந்திருக்கும்.'' என்றார்.
செப்டிக் ஷாக் என்பது பற்றி பிபிசியிடம் விளக்கிய எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் கார்த்திக், ''உடலில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அது சரி செய்யப்படாமல், நாள்பட்ட நிலையில் சீழாக மாறி உடல் முழுவதும் ரத்தத்துடன் பரவும்போது நுரையீரல், சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பித்து விடும். அதுதான் செப்டிக் ஷாக் எனப்படும்'' என்றார்.
கரூர் அருகேயுள்ள மொச்சகொட்டம்பாளையத்தில் வசிக்கும் லல்லி–பசுபதி தம்பதியின் வீட்டிற்கு, விஜய் முதல்வராக பதவியேற்ற மே 10 அன்று பிபிசி நேரில் சென்றபோது, இருவரும் மகளின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டனர்.
தங்கள் மகளுக்கு நல்ல தரமான சிகிச்சை மட்டும் கிடைத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்று இருவரும் குமுறலை வெளிப்படுத்தினர்.
இதே கருத்தை லல்லியின் தந்தை வெங்கடேசனும், தம்பி விமலும் தெரிவித்தனர்.
பிபிசியிடம் பேசிய விமல், ''எனது மகன் அதே இடத்தில் உயிரிழந்துவிட்டான். ஆனால் எனது அக்காவின் மகளுக்கு நல்ல சிகிச்சை கிடைத்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். அது முடியாமல் போனதுதான் பெரும் வேதனையாகவுள்ளது. இனி எதிர்காலத்தில் எந்தவொரு ஏழைக்குழந்தையும் உரிய சிகிச்சையின்றி இறப்பதைத் தடுக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை தர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.
'இழப்பீடு கிடைக்காத நிலை'

''எனக்கு 4 மகள்கள், ஒரே ஒரு மகன். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனும் அந்த சம்பவத்தில் இறந்து போனதில் எங்களுக்கு தீராத வேதனை. இதிலிருந்து மீள்வதற்குள் எனது மூத்த மகளின் (லல்லி) மகளும் காயமடைந்து சரியான சிகிச்சை கிடைக்காமல் ஒரு மாதம் கழித்து இறந்துவிட்டாள். மகனின் மகனையும், மகளின் மகளையும் பறிகொடுத்துவிட்டு வேதனையில் தவிக்கிறேன்.'' என்று கண்ணீர் விட்டார் வெங்கடேசன்.
தன் மகன் குடும்பத்திற்கு எல்லாவிதமான இழப்பீடும் கிடைத்துவிட்ட நிலையில், மகள் குடும்பத்திற்கு எவ்வித இழப்பீடும் கிடைக்காதது மேலும் வேதனையாக இருப்பதாக வெங்கடேசன் தெரிவித்தார்.
இழப்பீடுக்கு முறையிட்டது பற்றி மதுமிதாவின் பெற்றோர் விரிவாக விளக்கினர். ஒரு மாதம் கழிந்து தங்கள் குழந்தை இறந்ததால் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் பட்டியலில் தன் மகள் சேர்க்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
''அந்த சம்பவத்தில் நானும் எனது மகளும் மிதிபட்டு உயிர் தப்பினோம். எனது தம்பி மகன் இறந்த துயரத்தில் சிகிச்சை முழுதாக எடுக்காமல் வீடு திரும்பிவிட்டோம். என் தம்பியின் மகனை நான் தூக்கிச்சென்றபோதுதான் அவன் இறந்துவிட்டதால், அந்த குற்றவுணர்ச்சியிலேயே நான் வேதனையில் இருந்தேன். அதனால் தனக்கிருந்த வலியை எனது மகள் என்னிடம் மறைத்துவிட்டாள். சென்னைக்கு விஜயை பார்க்கச்சென்றபோதும் முடியாமல்தான் அவரைப் பார்க்கும் விருப்பத்தோடு வந்தாள்.'' என்றார் லல்லி.
தங்கள் மகளின் இறுதிச்சடங்கிற்கு தவெக சார்பில் சிலர் வந்ததாகவும், அவர்களிடம் தங்கள் மகளுக்கு தரப்பட்ட சிகிச்சை விபரங்கள், இறப்பு சார்ந்த ஆவணங்களைக் கொடுத்ததாகவும் லல்லி தெரிவித்தார்.
அவர்களும் இழப்பீடுக்கு ஏற்பாடு செய்வதாகக்கூறிச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் யார், என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதும், தொடர்பு எண்ணும் தெரியவில்லை என்றார் லல்லி.
''தவெக சார்பில் விபரங்களை வாங்கிச் சென்றதால் ஏதாவது இழப்பீடு வருமென்று நினைத்தோம். ஆனால் அதற்குப் பின் யாரைத் தொடர்பு கொள்வது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு தரும் இழப்பீடுக்காக கடந்த பிப்ரவரி மாதத்தில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அவர்களும் மேலிடத்துக்கு அனுப்புவதாகக் கூறினர். அதற்குப் பின் தேர்தல் வந்துவிட்டதால் அதுவும் கிடைக்கவில்லை.'' என்று கூறிய அவர், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு விபரங்களை பகிர்ந்தார்.

பட மூலாதாரம், TVK
தவெக கூறுவது என்ன?
விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலின்போது, சிறுமி மதுமிதாவுக்கு ஏற்பட்ட பாதிப்பால்தான் அவர் ஒரு மாதத்துக்குப் பின் உயிரிழந்திருக்கிறார் என்பது மதுமிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பகிரும் தகவலாகவுள்ளது. அதற்கு முன்பாக தங்கள் குழந்தைக்கு வேறு எந்தவிதமான பாதிப்புகளும் இருந்தது இல்லை என்று பசுபதியும் லல்லியும் கூறுகின்றனர்.
தற்போது விஜய் முதல்வராகியிருக்கும் நிலையில், தங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் இழப்பீடு கிடைக்குமென்று பசுபதி –லல்லி இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

விஜயை மதுமிதா சந்தித்து வந்த ஒரு வாரத்திற்குள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்தது குறித்தும், அவர் மரணமடைந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை இழப்பீடு கிடைக்காதது குறித்தும் தவெக தரப்பு கருத்தை அறிய கரூர் மாவட்டத்தின் ஒரே தவெக சட்டப்பேரவை உறுப்பினரான கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யாவை தொடர்பு கொண்டபோது அவரிடம் பதில் பெறமுடியவில்லை.
தவெக தரப்பில் இதற்கு பதிலளித்த திருச்சி மண்டல வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் அரசு, ''அந்த சிறுமி விஜயைப் பார்க்க வரும்போதே மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நடக்கவே கஷ்டப்பட்டார், அதைப் பார்த்து விட்டு நாங்கள் கேட்டபோது கொஞ்சம் உடல்நிலை சரியில்லை என்று கூறினர். பின்பு அவர் இறந்ததாகத் தகவல் வந்ததும், அவர்களைச் சந்தித்து விபரங்களைச் சேகரித்துக்கொண்டோம்.'' என்றார்.
''அது 42-வது உயிரிழப்பு என்று கட்சியின் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியுள்ளோம். தற்போது எங்கள் அரசு வந்துவிட்டதால் இந்த குழந்தையின் குடும்பத்துக்கும் விரைவில் இழப்பீடு தரப்படும்'' என்றார்.
''கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களையும் நம் குடும்பம் போல பார்த்துக் கொள்ள வேண்டுமென விஜய் கூறியுள்ளார். இடையில் அந்த குடும்பங்களைச் சேர்ந்த இருவர் விபத்தில் சிக்கியபோதும் உரிய சிகிச்சைக்கு உதவினோம். அதனால் மதுமிதா குடும்பத்திற்கும் இழப்பீடு பெற்றுத்தருவதோடு, அவர்களுக்கு எப்போதுமே உதவியாக இருப்போம். முதல்வர் விஜய் கரூருக்கு நேரில் வர திட்டமிட்டுள்ளார். விரைவில் அவர் கையாலேயே இதைக்கொடுக்கவும் வாய்ப்புள்ளது.'' என்றார் வழக்கறிஞர் அரசு.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































