தங்கம் இறக்குமதி வரி உயர்வு சாமானியர்களை எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோதி அண்மையில் கூறியிருந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியைஇரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தி இந்திய அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து விலையுயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்வதை குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆனால், இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர் உயர்வு மற்றும் சட்ட விரோதமாக தங்கம் கடத்தப்படுவது போன்றவை ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தை மக்கள் வாங்கும் திறன் குறைந்தால், தங்க நகை உற்பத்தியையே பெரிதும் நம்பியுள்ள பொற்கொல்லர்கள் போன்றவர்களுக்கு வாழ்வாதார பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரதமர் மோதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போரை குறிப்பிட்டு இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள், பொதுமக்கள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பலவற்றை பேசினார்.
அதில், குறிப்பாக, "ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்" என பிரதமர் மோதி பொதுமக்களை வலியுறுத்தினார்.
"நாம் தங்கம் வாங்கக் கூடாது. அந்நிய செலாவணியை சேமிக்க வேண்டும்." என்றார்
பிரதமர் நரேந்திர மோதியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நகை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மத்திய அரசின் அறிவிப்பு
பிரதமர் மோதி இவ்வாறு பேசிய மூன்று நாட்களிலேயே தங்கம், வெள்ளி குறித்த மற்றொரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி மீது 10% அடிப்படைச் சுங்க வரி மற்றும் 5% விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியை அரசு விதித்துள்ளது, இதன் மூலம் நடைமுறை இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த முடிவு எடுக்கப்பட்டது ஏன்?
தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியா அந்நிய செலாவணியை (டாலர்கள்) செலவிட வேண்டியுள்ளது, இது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், டாலருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்திய ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
தற்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகக் குறைந்த நிலையில் உள்ளது.
முதலீட்டு ஆலோசகர் சதீஷ் கூறுகையில், "ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கான தேவை உள்ளது. தங்கம் மற்றும் கச்சா எண்ணெயை இந்தியா அதிகமாக இறக்குமதி செய்வதால், நம்முடைய வர்த்தக பற்றாக்குறை மிகவும் அதிகமாகி வருகிறது. வர்த்தக பற்றாக்குறை இன்னும் அதிகமானால் நிதி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், பிரதமர் மோதி முதலில் தங்கத்தை வாங்க வேண்டாம் என கூறினார். இப்போது தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் மக்கள் அவற்றை வாங்கும் திறனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
'தொடர்ந்து விலை உயரும்'
இந்த முடிவு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி அதன் விநியோகச் சங்கிலியின் கடைசிபுள்ளியில் உள்ள நுகர்வோரையே அதிகம் பாதிக்க உள்ளது என பல்வேறு தரப்பு நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி முதலில் இறக்குமதியாளர்கள் தொடங்கி புல்லியன் முகவர்கள் (தங்கம் மற்றும் வெள்ளியை மொத்தமாக வாங்கும் மற்றும் விற்கும் வர்த்தகர்கள்) அதன்பின் நகை உற்பத்தியாளர்கள், நகைக் கடைகளை அடைந்த பின்னரே இறுதியில் நுகர்வோரை சென்றடையும். இந்த சங்கிலியில் கடைசியில் உள்ள நுகர்வோரையே இறக்குமதி வரி உயர்வு அதிகம் பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பட மூலாதாரம், Getty Images
தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், "இறக்குமதி வரி உயர்வால் நகை விற்பனையாளர்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. ஏனெனில், உதாரணமாக முன்பு விற்பனையாளர்கள் தங்கத்தை 100 ரூபாய்க்கு வாங்கி 105 ரூபாய்க்கு விற்றார்கள் என வைத்துக்கொள்வோம். இப்போது, இறக்குமதி வரி உயர்வால் அதே தங்கத்தை 110 ரூபாய்க்கு வாங்கி மக்களிடம் 115 ரூபாய்க்கு விற்கவேண்டிய நிலை வரும். எனவே, விற்பனையாளர்களுக்கு அதே லாபம் தான். இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர் தான். தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகமாகும்" என்றார்.
இரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போருக்கு மத்தியில், பங்குச்சந்தை முதல் கச்சா எண்ணெய், தங்கம்-வெள்ளி என எல்லாவற்றிலும் நிலையற்றதன்மை காணப்படுகிறது.
கோவையை சேர்ந்த தங்க நகைகள் உற்பத்தியாளர் கணேஷ் வெள்ளி விலையிலும் தொடர்ந்து ஏற்றம் காணப்படும் என்கிறார்.
"தங்கத்தைவிட வெள்ளி விலை உயர்வின் வேகம் அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு தங்கத்தின் விலையில் ரூ.100 ஏற்றம் காணப்பட்டால், வெள்ளியில் அது ரூ. 200 என்றளவில் உயரும்" என கூறினார்.
"இதனால், தங்கம் வாங்குவது குறையுமா என்று சொன்னால் அதற்கான திறன் குறையும். மக்கள் 10 சவரன் வாங்கும் இடத்தில் 9 சவரன் தான் வாங்க முடியும்." என்கிறார், தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சலானி.
அதேபோன்று இந்த அறிவிப்பை தொடர்ந்து ஒருவர் எவ்வளவு தங்க நகைகளை வாங்கலாம் என்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றன.
"ஆனால், அப்படியான கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போதைக்கு வராது. அதேபோன்று இந்த வரி உயர்வால் தங்க இறக்குமதியை குறைக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது." என்றார் சாந்தகுமார்.

பட மூலாதாரம், Getty Images
சட்ட விரோத தங்கக் கடத்தல்
விலை உயர்வு தவிர்த்து நிபுணர்கள் "சட்டவிரோத தங்க கடத்தல் அதிகமாகும்" என ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் இருந்து குறிப்பாக துபையில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்படும் செய்திகளை இந்திய ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ரன்யா ராவ் துபையில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை எடுத்து வந்தபோது வருவாய் புலனாய்வு துறையினரால் கடந்தாண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக 2020-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஒரு தூதரக பார்சலில் இருந்து 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோகிராம் எடையுள்ள 24 காரட் தங்கத்தை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் கைப்பற்றியது.
சாந்தகுமார் கூறுகையில், "இறக்குமதி வரி உயர்வின் நீண்ட கால விளைவாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வரப்படுவது அதிகமாகும். அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதனால் லாபம் அடைவர். இறக்குமதி வரி உயர்வு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும் வாய்ப்பும் உள்ளது" என்றார்.
பொற்கொல்லர்களுக்கு பாதிப்பு
நுகர்வோர் தவிர தங்க நகைகள் செய்வதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள பொற்கொல்லர்களையும் இது பாதிக்கும் என்கிறார் சலானி.
"பொற்கொல்லர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும், ஏனெனில் அவர்களுக்கு இதுதான் வாழ்வாதாரமே." என்றார் சலானி.
இதற்கு தங்க நகை உற்பத்தியாளர்கள் புதிய நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என யோசனையை முன்வைக்கிறார், தங்க நகைகள் உற்பத்தியாளர் கணேஷ் .
"எடை அதிகமாக உள்ள நகைகளை தயாரிப்பதை குறைத்து லேசான எடையுள்ள நகைகளை உற்பத்தி செய்யும் வகையில் வேலையின் போக்கை மாற்ற வேண்டும். ஏனெனில், மக்கள் தங்க நகைகளை வாங்கும் திறன் குறையும்போது, லேசான எடையுள்ள நகைகளை வாங்கவே அவர்கள் விரும்புவர். அப்படி லேசான எடைகொண்ட நகைகளை தயாரித்தால் சந்தையும் நிலையாக இருக்கும்." என்கிறார் கணேஷ்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































