கும்மிடிப்பூண்டியில் இரண்டாம் உலகப்போர் கால குண்டுகளா? பிபிசி தமிழ் கள ஆய்வு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைக்குள் நுழையும்போதே காற்றில் ஒருவித ரசாயன நெடியை உணர முடிகிறது. ஏராளமான தொழிற்சாலைகள், அவற்றுக்கு நடுவே விவசாய நிலங்கள் எனத் தொழில்துறையும் விவசாயமும் கலந்த பகுதியாக இது அமைந்துள்ளது.
ஆனால், இந்தத் தொழிற்சாலைகளுக்கு நடுவே மிகப்பெரிய ஆபத்து ஒன்று மறைந்திருப்பதாக இங்குள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட வெடிபொருள்களால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்பதே அவர்களின் அச்சத்துக்குக் காரணம்.
நான் இப்போது நின்றுகொண்டிருப்பது கும்மிடிப்பூண்டியில் இந்திய விமானப்படையின் பாதுகாப்பில் உள்ள நிலத்துக்கு அருகே.
இந்த நிலத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அவற்றால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அருகிலுள்ள கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுடைய அச்சத்துக்கான காரணம் என்ன? வெடிபொருள்கள் குறித்து இந்திய விமானப்படை கூறுவது என்ன?
இதுகுறித்து அறிந்துகொள்ள கிராம மக்களையும் அதிகாரிகளையும் நேரில் சந்தித்தது பிபிசி தமிழ்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்குட்பட்டு ரெட்டிபாளையம், புதுப்பேட்டை, முத்துரெட்டி கண்டிகை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
விவசாயத்தை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த இந்தப் பகுதியில் தற்போது தொழிற்சாலைகளும் அதிகரித்துள்ளன.
இங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200க்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்கி வருகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.
இதுதவிர பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
இவற்றுக்கு அருகே, முத்துரெட்டி கண்டிகை பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது.
அந்த நிலத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த வெடிபொருள்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், சிறுபுழல்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவிக்குமார்.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகிலேயே சிப்காட் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இரும்பு உருக்குத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதே கிராம மக்களின் அச்சமாக உள்ளது.
இந்தப் பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாகக் கூறுகிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர் அருள்.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டிருப்பது தொடர்பாக கிராம மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை எனக் கூறுகிறார், புதுப்பேட்டை கிராமத்தில் வசிக்கும் சுரேஷ்.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கக்கூடும் என்றும் அவர் அச்சம் தெரிவிக்கிறார்.
இதேபோன்ற அச்சத்தை முத்துரெட்டி கண்டிகை கிராமத்தில் வசிக்கும் மக்களும் வெளிப்படுத்துகின்றனர்.
குறிப்பாக, அருகில் பெட்ரோலிய நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், தங்களது பாதுகாப்பு குறித்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறார், இந்தக் கிராமத்தில் வசிக்கும் வனிதா.
வெடிபொருள்களைப் பாதுகாப்பாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்கிறார், அதே கிராமத்தைச் சேர்ந்த தேவி.
கிராம மக்களின் அச்சத்தைத் தொடர்ந்து, வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இடத்துக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றது.
அப்போது, அந்த வளாகத்தின் முன்பாக இரண்டு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களிடம் பேசியபோது, வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ளதால் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இந்த வளாகத்தின் நான்கு புறங்களிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்புறத்திலும் சுவர்களால் சூழப்பட்ட ஒரு கட்டடம் உள்ளது.
அதன் அருகில் அபாய எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இந்த இடத்துக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. இங்கு தொடர்ந்து பாதுகாப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராம மக்களின் அச்சம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
அப்போது, இந்த இடம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது என்றும், அங்கு புதைக்கப்பட்டுள்ள வெடிபொருள்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த இடத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் மணியரசனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, மக்கள் அச்சப்படும் அளவுக்கு அங்கு நிலைமை உள்ளதா என்பது குறித்து தொழில்நுட்பரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கிராம மக்கள் அச்சப்படும் இடத்தில் உண்மையில் என்ன இருக்கிறது என்பது குறித்து இந்திய விமானப்படையிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை நிலையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப் பகுதி அமைந்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை பிபிசி தமிழுக்கு விரிவான விளக்க அறிக்கை ஒன்றை வழங்கியது.
முத்துரெட்டி கண்டிகை பகுதியில் வெடிகுண்டுகள் எதுவும் புதைக்கப்படவில்லை என்றும், இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த சில வெடிபொருள்கள் மட்டுமே அங்கு புதைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அந்த வெடிபொருள்களை நீண்ட தொலைவு எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றது எனக் கருதப்பட்டதால், 1948ஆம் ஆண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கும்மிடிப்பூண்டியில் உள்ள பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் புதைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அங்குள்ள வெடிபொருள்களைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காகப் புதுடெல்லியில் உள்ள தீ, வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய விமானப்படை கூறியுள்ளது.
வெடிபொருள்களால் அங்குள்ள மண் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்தப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளில் குறைந்த அளவில் டி.என்.டி. (TNT) எனப்படும் வெடிபொருள் கண்டறியப்பட்டதாகக் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த அளவு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் வழிகாட்டி அளவைவிடக் குறைவாக இருந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
அதேபோல், வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் டி.என்.டி. கண்டறியப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும், வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து முத்துரெட்டி கண்டிகை கிராமம் சுமார் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதாகவும் இந்திய விமானப்படை தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட வெடிபொருள்கள் இன்றுவரை பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளன.
அவை புதைக்கப்பட்ட காலத்தில் இந்தப் பகுதியைச் சுற்றிலும் பெரும்பாலும் விவசாய நிலங்களே இருந்ததாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான தொழிற்சாலைகள் இந்தப் பகுதியில் உருவாகியுள்ளன.
வெடிபொருள்கள் புதைக்கப்பட்டுள்ள இடம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய விமானப்படை கூறுகிறது.
இருப்பினும், தொழிற்சாலைகள் அதிகரித்துள்ள சூழலில், அந்த வெடிபொருள்கள் முழுமையாக அகற்றப்படும் வரை தங்களது அச்சம் நீங்காது என்பதே கிராம மக்களின் கருத்தாக உள்ளது. வெடிபொருள்களைப் பாதுகாப்பாக அகற்றி, தங்களது அச்சத்துக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



