"நைட் கிளப்பில் ஆபாச நடனமாட வற்புறுத்தினார்கள்," - துபாய் வேலைக்கு சென்ற பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலை என கூறி விட்டு, இரவு விடுதிகளில் ஆபாச நடனமாடும் வேலைக்கு தமிழக பெண்கள் பலர் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அங்கிருந்து தப்பி வந்ததாகக் கூறும் இளம் பெண் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
துபாயில் இருந்து தப்பி வந்து விட்டதால், தினமும் ஏஜென்ட்கள் வழியாக மிரட்டப்படுவதால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அந்த பெண் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த அந்த பெண்ணின் கணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார். கொரோனா கால சிக்கல்களால் மீள முடியாத துயரத்துக்குச் சென்ற அவருக்கு, உதவுவதாகக் கூறி அவரது நண்பர் ஒருவர் துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலைக்கு தன்னை அனுப்பியதாக அந்த பெண் கூறினார்.
காவல்துறையிடம் புகார் கொடுத்து விட்டு வந்த அவர் நம்மிடையே பேசும்போது தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை விடுத்தார்.
''தினமும் எனக்கு ஏஜென்ட் மூலமாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. என்னை யாரோ கண்காணிக்கிறார்கள், பின்தொடருகிறார்கள் என்று தோன்றுகிறது. என் புகார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அது என்னைப் போல ஏமாந்த பல பெண்களும் புகார் தர முன்வர உதவும். ஏஜென்ட் மாஃபியா பற்றிய தகவல்களும் வெளிவரும்,''என்கிறார் அவர்.
''எனக்கு பாஸ்போர்ட், விசா என எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்தது ஒரு ஏஜென்ட். இரண்டு ஆண்டுகளாக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். குடும்ப நண்பர் போல பழகியதால் எனக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், நான் துபாய் சென்ற பின்னர்தான் நைட் கிளப்களில் ஆபாச நடனமாடும் வேலைக்காக என்னை அனுப்பியுள்ளார்கள் என்று தெரிந்தது. நான் மிகவும் துடித்துப் போனேன். என்னை துபாய்க்கு அனுப்பும் முன்னர், ரூ.50 ஆயிரம் கொடுத்து துணி, மேக்அப் சாதனங்கள் வாங்குமாரு சொன்னார்கள். என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் வந்தேன். ஆனால் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி விட்டார்கள்,'' என்கிறார்.
துபாய் ஏஜென்ட் ஹோட்டலில் இருந்து பாருக்கு அழைத்துச் சென்ற பின்னர் தொடர்ந்து பல வகையில் துன்புறுத்தப்பட்டேன் என்கிறார் அவர்.
''நைட் கிளப்பில் நடனமாட வேண்டும் என வற்புறுத்தினார்கள். அங்கு யாரிடமும் உதவி கேட்கமுடியவில்லை. நான் அணிந்திருந்த உடையை மாற்றி டூ பீஸ் ஆடை அணிய கட்டாயப்படுத்தினார்கள் , சித்ரவதை செய்தார்கள். நான் மறுத்தவுடன் என்னை அடித்தார்கள். பாருக்கு வரும் கஸ்டமருடன் ரூமுக்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் அவர்களின் பேச்சை கேட்கவில்லை என்பதால், மேக்கப் அறைக்கு கொண்டு சென்று அடித்தார்கள்,''என்கிறார் அப்பெண்.
துபாய் சென்றதில் இருந்து மன வருத்தத்தில் சரியாக சாப்பிடவில்லை என்பதால் உடல் நலிவுற்றேன் என கூறும் அவர் தொடர்ந்து தனக்கு அங்கு நேர்ந்த இன்னல்களை விவரித்தார்.
''தினமும் மோசமான அனுபவங்கள் எனக்கு காத்திருந்தன. ஒவ்வொரு நாள் இரவும் ஒரு யுகமாகத்தான் கழிந்தன. மீண்டும் சென்னைக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. தினமும் ஏஜென்ட்டுக்கு போன் செய்தேன். முதலில் எனக்கு பதில் சொன்னவர்கள், பிறகு என்னை அச்சுறுத்தினார்கள். என் குடும்பத்தில் என் வேலையை பற்றி சொல்லி விடுவேன் என்றும் என் குழந்தைகளிடம் சொல்வதாகவும் சொன்னதால் மிகவும் பயந்தேன்,'' என்கிறார்
தந்தையின் இறப்பு காரணமாக, பார் ஓனரிடம் விடுமுறை கேட்டதாகக் கூறும் அவர், மீண்டும் துபாய் வந்து விடுவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று தான் கட்டாயப்படுத்தபட்டதாக சொல்கிறார். ஏஜென்ட் சொல்வது போல மெசேஜ் அனுப்பியதால்தான் சென்னைக்கு திரும்பி வர முடிந்தது என்கிறார்.
''நான் விமான நிலையம் வந்ததும், ஏஜென்ட்கள் என்னை துரத்தினார்கள். நான் என் நண்பர்களின் உதவியால் உயிர் பிழைத்தேன்,''என்கிறார் அவர்.
அப்பெணுக்கு சட்ட உதவிகள் செய்து வரும் இந்திய சமூக நல அமைப்பின் செயலாளர் ஹரிஹரன் பேசுகையில், ''அவரின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் அதோடு, அவரை போன்ற பெண்கள் துபாயில் இருந்து விடுவிக்கப்படவேண்டும். அவரை ஏஜென்ட்கள் பின்தொடருகிறார்கள். இதுபோன்ற வழக்குகளை ஆள்கடத்தல் வழக்காக விசாரிக்கவேண்டும்,''என்கிறார் ஹரிஹரன்.
அப்பெண்ணால் குற்றம்சாட்டப்படும் ஏஜென்டின் அலைபேசிக்கு பலமுறை அழைத்தபோதும், அவரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.
இந்த வழக்கை விசாரித்து வரும் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஞான செல்வத்திடம் பேசினோம்.
''வழக்கில், முழுமையான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். அரசு விதிகளின்படி, தேவையான ஆவணங்கள், பணிபுரிவதற்கான ஒப்பந்தத்துடன் அவர் துபாய் சென்றாரா என்பதில் தெளிவு வேண்டும். அவர் குற்றம் சாட்டும், ஏஜென்டை விசாரிக்க அழைத்திருக்கிறோம். குற்றச்சாட்டுகளை அவர் முழுமையாக நிராகரிக்கிறார். அப்பெண்ணிடம் பழகியதில்லை என்கிறார். அதனால், இருவரையும் ஒரே நேரத்தில் விசாரிக்க வேண்டியுள்ளது. அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்,''என ஆய்வாளர் ஞானசெல்வம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
(இந்தச் செய்தி, 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரசுரிக்கப்பட்டது. அதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரை துபாய் அனுப்பிய முகவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால், அந்தப் பெண் புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அந்தப் புகார் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என காவல் துறை தரப்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்தச் செய்தியில் 22.05.2026 அன்று உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.)


























