மெஸ்ஸி அதிகம் ஓடாமல் நடந்தே சாதிப்பது எப்படி? வயதை வென்ற பரிணாமத்தின் கதை

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Koji Watanabe/Getty Images

படக்குறிப்பு, தனது ஆறாவது உலககோப்பையில் விளையாடுகிறார் 39 வயதான மெஸ்ஸி
    • எழுதியவர், கைலெம் பலாகுவே
    • பதவி, பிபிசி விளையாட்டு கட்டுரையாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக கோப்பையை தக்க வைக்கும் முதல் அணியாகவும், ஒட்டுமொத்த உலககோப்பை வரலாற்றில் கோப்பை தக்க வைக்கும் மூன்றாவது அணியாகவும் அர்ஜென்டினா வருமானால் அதன் மையப்புள்ளியாக லியோனல் மெஸ்ஸி இருப்பார்.

தனது ஆறாவது உலககோப்பையில் விளையாடுகிறார் 39 வயதான மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெக்ஸிகோவின் கில்லெர்மோ ஓச்சோவா ஆகியோரும் 6 உலக கோப்பைகளில் விளையாடியுள்ளனர். இந்தத் தொடரில் எட்டு கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி மூன்று மூன்று கோல் வாய்ப்புகளும் வழங்கி உள்ளார்.

இந்தத் தொடரில் பிரான்ஸ் வீரர் கிலியம் எம்பாப்பே உடன் கோல்டன் பூட் போட்டியில் மெஸ்ஸி முன்னிலையில் இருக்கிறார். உலகளாவிய கால்பந்து ரசிகர்கள் 2003-இல் பார்சிலோனாவுக்கு அறிமுகமான மெஸ்ஸியைவிடவும் மாறுபட்ட ஒருவரைப் பார்த்தனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து உடனான வரலாற்றுப் பகையை அர்ஜென்டினா புதுப்பிக்க இருக்கிறது. அட்லான்டா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முழு கவனமும் மெஸ்ஸியின் மீதே விழும்.

பெரும்பாலான வீரர்கள் பின்னடைவைச் சந்திப்பார்கள். மிகவும் உயரிய நிலையில் விளையாடும் வீரர்கள் மட்டுமே தகவமைத்துக் கொள்வார்கள். ரொனால்டோ தனது வேகம் குறைந்த பிறகு பெனால்டி கோல் வேட்டை நடத்துபவராக தன்னை மீட்டுருவாக்கம் செய்து கொண்டார்.

மெஸ்சி தனது திறன் குறைவுக்கு ஏற்ப மாறவில்லை. மாறாக அவரை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கும் இந்த விளையாட்டை விடவும் ஒருபடி முன்னே இருந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தன்னை தகவமைத்துக் கொண்டார்.

இந்த உலகக் கோப்பையில், அவர் முன்பைவிட அதிகமாக கோல் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். ஆனால் குறைவாக ஓடியுள்ளார். அவர் 33 முறை கோல் அடிக்க முயற்சி செய்ததுடன், 21 கோல் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். மொத்தம் 54 தாக்குதல் பங்களிப்புகள் என்பது, 1986 உலகக் கோப்பையில் டியாகோ மரடோனாவுக்குப் பிறகு அதிகபட்சமாகும்.

இவை அனைத்தும் அவர் மைதானத்தில் கடந்த தூரத்தில் 47 சதவிகிதத்தை நடந்தே கடந்த நிலையில் சாத்தியப்படுத்தியுள்ளார். அவுட்ஃபீல்டில் விளையாடும் ஒரு வீரருக்கும் இதுவே அதிகபட்ச சதவிகிதம்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

20 நிமிடங்களுக்கும் அதிகமாக விளையாடிய அர்ஜென்டினா கள வீரர்களில், ஒரு போட்டிக்கு சராசரியாக குறைந்த தூரம் ஓடியவரும் மெஸ்ஸிதான். அவர் 90 நிமிடத்திற்கு வெறும் 8.2 கிலோமீட்டர் மட்டுமே ஓடியுள்ளார்.

மெஸ்ஸியின் புள்ளிவிவரங்கள் அத்துடன் நிற்பதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு போட்டிக்கு 5.3 என இருந்த அவரின் ஸ்பிரின்ட்ஸ் இந்த முறை 2.7 என்ற அளவிலே உள்ளது.

மெஸ்ஸி 15 உலககோப்பை போட்டிகளில் போலந்து மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்றை இங்கிலாந்து செய்தாக வேண்டும். அவரை கோல் அடிக்கவும் அசிஸ்ட் செய்யவும் விடாமல் தடுக்க வேண்டும். 15 உலக கோப்பை போட்டிகளில் 16 கோல்களும் 7 அசிஸ்டுகளும் பெற்றுள்ளார் மெஸ்ஸி.

தனது 16 வயதுல் ஜோஸ் மொரின்ஹோவின் போர்டோ அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் அறிமுகமான மெஸ்ஸி வலதுபுறத்தில் விளையாடுவது, பந்தை கடத்திச் செல்வது மற்றும் அடிக்கடி உட்புறமாக ஊடுருவிச் செல்வது போன்றவற்றைச் செய்து வந்தார். அதன்பிறகு, தற்போதைய அர்ஜென்டினா மற்றும் இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் வீரராக உருவெடுக்கும் வரை, குறைந்தது ஐந்து முறை தனது ஆட்ட பாணியை மாற்றிக்கொண்டு தன்னை மறுவடிவமைத்துள்ளார்.

மெஸ்ஸிக்கு ஏற்பட்ட முதல் திருப்புமுனை

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Luis ACOSTA / AFP via Getty Images

கடந்த காலத்தில் மிகச் சிறந்த வீரராகவும் உலகம் முழுவதும் அறியப்பட்டவராகவும் இருந்த ரொனால்டினோ மெஸ்ஸி பயிற்சி பெறுவதை முதல் முறையாகப் பார்த்தபோது, "அவர் சிறந்த வீரராக இருப்பார்" எனத் தெரிவித்தார்.

அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 ஆகஸ்டில் ஜுவான் கேம்பர் தொடரில் ஜுவென்டஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி தன்னை உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். 18 வயதான மெஸ்ஸியைப் பார்த்து மிரண்டு போன ஜுவென்டஸ் மேலாளர் ஃபாபியோ கேப்பல்லோ அவரைத் தனது அணியில் சேர்க்கத் தொடர்ந்து முயன்றதாக செய்திகள் உள்ளன.

மெஸ்ஸிக்கு 21 வயதானபோது ரொனால்டினோவின் புகழ் மங்கத் தொடங்கியது. அந்தச் சூழலில் மெஸ்ஸியிடமிருந்து அணிக்கு என்ன தேவைப்பட்டது என்பது பற்றி அப்போதைய பார்சிலோனா அணியின் மேலாளர் ஃப்ராங்க் ரிஜ்கார்ட் தெளிவாக இருந்தார்.

"ஆட்டத்தின் மையப்பகுதியில் அவர் இருக்க வேண்டும். அவர் எவ்வளவு அதிகமாக பந்தைத் தொடுகிறாரோ, அது அணிக்கு அவ்வளவு நல்லது" என்று ரிஜ்கார்ட் தெரிவித்தார்.

2008-இல் பெப் குவார்டியோலா அணி மேலாளரானபோது மைதானத்தில் வலது பக்கம் மெஸ்ஸி கோட்டையாக இருந்தது. கோல் அடிப்பதற்கான அவரின் தனிப்பட்ட வழித்தடமாக இருந்தது.

முதல்முறையாக வலது பக்கத்திலிருந்து மெஸ்ஸியை நகர்த்த வேண்டும் என குவார்டியோலா முடிவெடுத்தது கோல் அடிப்பதற்காக அல்ல, அணியின் தடுப்பாட்டத்தை பலப்படுத்தவே அந்த முடிவை எடுத்தார்.

மெஸ்ஸி தடுப்பாட்டத்திற்குப் பெரிதாக உதவவில்லை. இது டிஃபன்டர்களின் வேலையைக் கடினமாக்கியது. ஆனால் மெஸ்ஸி எப்போதும் ஆட்டத்தின் மையப்புள்ளியாக இருப்பார் என்பது அவரது மேலாளருக்குத் தெரிந்திருந்தது.

மிகப்பெரிய போட்டிகளுக்கும் மிகப்பெரிய தருணங்களுக்காகவும் அவரது புதிய நிலைக்கு ஏற்ப அணி கட்டமைக்கப்பட்டது.

மெஸ்ஸியின் பாதையை மாற்றிய அந்த முடிவு

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், LLUIS GENE/AFP via Getty Images

நாள்: மே 2, 2009.

இடம்: சான்டியாகோ பெர்னாபூ மைதானம், மேட்ரிட்.

தருணம்: லா லிகோ தொடரில் ஒரு போட்டி

குவார்டியோலா முக்கியமான முடிவு ஒன்றை எடுத்தார். மெஸ்ஸியை வலது பக்கத்திலிருந்து நகர்த்தி மையத்தில் நிறுத்தினார். ஆனால் அவரை ஸ்ட்ரைகராக நிறுத்தாமல் களம் முழுவதும் சுதந்திரமாகச் செயல்பட வைத்தார்.

சாமுவேல் எட்டோ வலதுபக்கம் சென்றார். தியெர்ரி ஹென்ரி இடதுபக்கம் சென்றார். சுதந்திரமாகச் செயல்படுமாறு மெஸ்ஸியிடம் தெரிவிக்கப்பட்டது. போட்டி முடிவில் பார்சிலோனா 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது. அன்றைய போட்டியில்தான் "ஃபால்ஸ் நைன்" என்ற தந்திரம் மீண்டும் உலகக் கவனத்தை ஈர்த்தது.

அது ஒன்றும் புதிதானது அல்ல. 1953-இல் குஸ்டாவ் செபெஸின் ஹங்கேரி அணி இங்கிலாந்து அணியை அவர்களின் சொந்த மண்ணியிலே தகர்த்திருந்தது. 6-3 என்கிற கணக்கில் வென்ற அந்தப் போட்டியில் நந்தோர் ஹிடெக்குடியை மிட்ஃபீல்டிலிருந்து மாற்றியிருந்தார். நடுக்கள வீரர்களை அவர்களின் நிலையிலிருந்து மாற்றி ஃபெரென்க் புஸ்காஸ் மற்றும் சான்டோர் கோக்சிஸ் ஆகியோருக்கு இடம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

நெதர்லாந்து அணிக்காக, முதலில் ரினஸ் மைக்கேல்ஸின் கீழ், ஜோஹன் க்ரூஃப் 'டோட்டல் ஃபுட்பால்' தத்துவத்தின் அடிப்படையில் களமெங்கும் சுதந்திரமாகச் செயல்படும் முன்கள வீரராக விளையாடினார்.

முதலில் மெஸ்ஸி தீர்வு இல்லாத பிரச்னையாக உருவெடுத்தார். அவர் தடுப்பு வரிசைகளுக்கு இடையே சென்று விளையாடியபோது மேட்ரிட் அணியின் வீரர்கள் அவரைப் பின்தொடர்ந்து இடைவெளியை உருவாக்குவதா அல்லது அங்கேயே இருந்து அவருக்கு நிறைய இடம் கொடுப்பதா என முடிவெடுக்க வேண்டியிருந்தது.

இந்த இரண்டு வாய்ப்புகளுமே வேலை செய்யவில்லை. இந்த இடைவெளிகளுக்கு இடையே எந்த விதமான சவாலுமின்றி மெஸ்ஸி கடந்து சென்றார்.

தனக்குப் பின்னால் ஜாவி, ஆண்ட்ரஸ் இனியெஸ்டா மற்றும் யாயா டூரே ஆகியோர் இருக்க, ஹென்றி மற்றும் எட்டூ ஆகியோர் எதிரணியின் தடுப்பாட்டத்தை அகலமாக விரிக்க, எதிரணி எடுத்த ஒவ்வொரு முடிவும் தவறானதாகவே அமைந்தது.

அதற்குச் சில வாரங்கள் கழித்து மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் குவார்டியோலா இதையே முயற்சி செய்து பார்த்தார். 20 நிமிடத்திலே மெஸ்ஸி தனது தலையால் கோல் அடித்தார்.

2011 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையே 69 லா லிகா போட்டிகளில் 96 கோல்கள் அடித்தார் மெஸ்ஸி.

2009-ஆம் ஆண்டு அவருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்பட்டது அதற்குப் பிறகு நிரந்தரமான ஒன்றாக மாறிப்போனது. 2010, 2011, 2012, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் அவர் பாலன் டி ஓர் விருது பெற்றார். ஒட்டுமொத்தமாக எட்டு பாலன் டி ஓர் விருதுகளை வென்றுள்ளார் மெஸ்ஸி. 22 வயதில் முதல் விருதை வென்ற நிலையில் கடைசியாக 36வது வயதில் வென்றிருந்தார்.

"நான் தந்திரங்களுக்கு அதிக கவனம் செலுத்துவதில்லை," என 2024-இல் பத்திரிகையாளர் ஜுவான் பாப்லோ வர்ஸ்கியிடம் மெஸ்ஸி தெரிவித்திருந்தார்.

"ஆனால் குவார்டியாலோவிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இடைவெளிகள், பந்துகளை தக்கவைப்பது, விளையாட்டு எப்படி வேலை செய்கிறது ஆகியவை பற்றி தெரிந்து கொண்டேன்," என்று அவர் தெரிவித்தார்.

ஓர் அணியின் சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயம்

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், David Ramos/Getty Images

2015-இல் ஜாவியும் அதற்கு மூன்று ஆண்டுகள் கழித்து இனியஸ்டாவும் பார்சிலோனாவிலிருந்து விலகியபோது சில மாற்றங்கள் நிகழ்ந்தன. மெஸ்ஸி தான் எப்போதும் தீவிரமான ஆட்டக்காரராக இருந்தார். இப்போது அவரே முழு இயந்திரமாகவும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

நடுக்களம் தான் அவரின் பாதுகாப்பு வளையமாக இருந்தது. பந்தை நகர்த்திச் சென்று தனக்கான இடத்தை உருவாக்கும் அவருடைய களம் பறிபோனது. ஒரு காலகட்டத்தில், மெஸ்ஸி ஒரே நேரத்தில் ஜாவி, இனியெஸ்டா மற்றும் கோல் அடிப்பவர் என மூன்று பேரின் பணிகளையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எவரிடமிருந்தும் இதை எதிர்பார்ப்பது மிகையானது.

தன்னை வளர்த்துக் கொண்டதன் மூலம் அதை மெஸ்ஸி கையாண்டார். மெஸ்ஸி ஆட்டத்தில் ஆழமான இடத்தைப் பிடித்தார். ஆட்டத்தை ஒருங்கிணைப்பராகவும் தொடங்கி முடித்து வைப்பவராகவும் அவரே இருந்தார்.

அவரின் புள்ளிவிவரங்களில் கோல் எண்ணிக்கையை அசிஸ்டுகள் மிஞ்சின. 2019-20 காலகட்டத்தில் 33 லா லிகா போட்டிகளில் 22 அசிஸ்டுகள் மற்றும் 25 கோல்கள் அடித்திருந்தார்.

ஆனால் பேரிஸ் செயின்ட் ஜெர்மெயின் அணிக்காக முதல் தொடரில் அவர் விளையாடியபோது இந்த மாற்றம் திட்டவட்டமானது. 34 போட்டிகளில் 11 கோல்கள், 15 அசிஸ்டுகள் எடுத்திருந்தார். கிளப் அளவிலான போட்டிகளில் முதல்முறையாக கோல்களைவிடவும் அசிஸ்டுகள் அதிகமாக எடுத்திருந்தார்.

"கோல் அடிக்கும் ஒரு வீரர் இனியஸ்டாவாக மாறினார்," என அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

கேப்டன் மீதான சுமையிலிருந்து மெஸ்ஸி தன்னை விடுவித்துக் கொண்ட காலகட்டம்

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அர்ஜென்டினா அணியின் கேப்டனாக மெஸ்ஸியின் மிகச்சிறந்த தருணம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் உலகக் கோப்பையை வென்றபோது அமைந்தது.

இந்தப் பரிணாம வளர்ச்சிக்கு நிகராக உருவான மற்றுமொரு கதை அர்ஜென்டினாவுக்கு மெஸ்ஸி யார் என்பது தான். இந்தக் கதை தீர்வதற்கு மேலும் காலம் எடுத்தது.

2011 ஆகஸ்டில் அவர் கேப்டன் ஆனார். அதன் பிறகு தோல்விகள் தொடர்ந்தன. மாரகானாவின் நடைபெற்ற 2014 உலக கோப்பை இறுதிப் போட்டியில் கூடுதல் நேரத்தில் ஜெர்மனியிடம் அர்ஜென்டினா தோற்றது. 2015 கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் சிலி அணியிடம் பெனால்டி சுற்றில் அர்ஜென்டினா தோற்றது. 2016 கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியிலும் சிலியிடம் மீண்டும் பெனால்டி சுற்றில் அர்ஜென்டினா தோற்றது.

மூன்று ஆண்டுகளில் மூன்று இறுதிப் போட்டிகள், அவை அனைத்திலும் தோற்றது பொதுமக்கள் மத்தியில் அவர் மீதிருந்த எதிர்பார்ப்பை இறுக்கியது. கடைசியாக தோற்ற உலககோப்பைத் தொடருக்குப் பிறகு அவர் விலகினார். அதற்கு முன்னரும் இரண்டு முறை அதனை யோசித்திருந்தார். ஆனால் மீண்டும் வந்தார். இந்த முறை வேறு ஒரு வீரராக வந்தார்.

2019 கோப்பா அமெரிக்கா தொடரில் பிரேசில் உடனான அரையிறுதிப் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் அர்ஜென்டினா வெளியேறியதைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மெஸ்ஸி தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அர்ஜென்டினா மீதான எதிர்பார்ப்பு தன் மீது சுமையாக மாறியபோது அமைதியாக விலகிச் சென்ற வீரர் இவரல்ல. தான் வெல்லாத ஒன்றை வைத்து தன்னை அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும் என முடிவு செய்த ஒரு தலைவரை அங்கு பார்க்க முடிந்தது.

2021 கோப்பா அமெரிக்கா தொடர் தான் மெஸ்ஸிக்கு மீட்சியாக அமைந்தது. மாராகனா இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி 28 ஆண்டுகால கோப்பைக்கான காத்திருப்பை அர்ஜென்டினா முடிவுக்குக் கொண்டுவந்தது. போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸி ஆற்றிய உரை வீரர்களை உணர்ச்சிவசப்பட வைத்திருந்தது.

2022 உலககோப்பையில் கலந்து கொண்ட மெஸ்ஸி வேறு ஒரு நபராக இருந்தார். இதற்கு முந்தைய அனைத்தின் ஒரு தொகுப்பாக உருவெடுத்து வந்து நின்றார்.

2022 உலககோப்பை அரையிறுதியில் குரேஷியாவுக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்ற நிலையில் ஜோஸ்கோ குவார்டியோல் என்கிற வீரருக்கு எதிராக மெஸ்ஸி ஓடிச் சென்றது, 2009-ஆம் ஆண்டில் காலகட்டத்தில் இருந்த இளம் மெஸ்ஸியை மீண்டும் நினைவூட்டியது.

இறுதிப் போட்டியில் பிரான்சுக்கு எதிராக மெஸ்ஸி அடித்த இரண்டு துல்லியமான கோல்கள் ஆட்டத்தை 3-3 என சமன் செய்ய உதவியது. அதன் பின்னர் மிகவும் முக்கியமான பெனால்டி சுற்றில் கோலாக மாற்றியும் அர்ஜென்டினா வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

"கால்பந்து நிறைய மாறிவிட்டது," என 2023-இல் ஜினிடைன் ஜிடேனுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.

மேலும் அந்த நேர்காணலில், "நீங்கள் விளையாடும் விதம், அமைப்பு. இன்று கால்பந்து மிகவும் தந்திரங்கள் நிறைந்த உடலுழைப்பு தேவையான ஒன்றாக மாறிவிட்டது. முன்னர் உங்களுக்கு நிறைய இடம் கிடைத்தது." என்றார் மெஸ்ஸி.

நவீன கால்பந்தாட்டத்தின் மூன்று தனித்துவமான காலகட்டத்தில் விளையாண்ட ஒரு வீரருக்கான தொனியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

போர்டோ மற்றும் செல்சியாவின் உடல் வலிமை மிக்க நடுக்கள வீரர்கள், நிலைசார்ந்த மற்றும் பந்து பரிமாற்றத்தில் உச்சநிலை, கார்டியோலாவுக்குப் பிந்தைய விரைவான நிலைமாற்றங்களுடனான போட்டி என அனைத்துக் கட்டத்தையும் கடந்து அவற்றில் வெற்றி பெற்றவராகவும் மெஸ்ஸ் விளங்குகிறார்.

'மெஸ்ஸியைப் பற்றிய புகழுரைகள் தவறவிட்ட விஷயம்'

லியோனல் மெஸ்ஸி, உலககோப்பை கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லியோனல் மெஸ்ஸி ஜூலை 2023-இல் மேஜர் லீக் கால்பந்து அணியான இன்டர் மியாமியில் இணைந்தார்.

இன்டர் மியாமி, 2024 கோப்பா அமெரிக்கா தற்போது இந்தத் தொடரில் மெஸ்ஸி ஓடுவதைவிட அதிகம் நடக்கிறார்.

ஒரு கட்டத்தில் விமர்சகர்கள் இதனை அவருக்கு எதிராகப் பயன்படுத்தினர். தற்போது அது தான் நிபுணத்துவமாகத் தெரிகிறது. அவர் ஆட்டத்தை நன்கு கவனிக்கிறார். தேவைப்படும் தருணங்களுக்காக தனது ஆற்றலைச் சேமித்து வைக்கிறார்.

"கடைசியாக உள்ள மெஸ்ஸி தான் எப்போதும் சிறந்த மெஸ்ஸி" என அவரின் சிறுவயது ஆதர்ச நாயகனான பாப்லோ ஐமர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் கூறியது தற்போதும் சரியாகவே இருக்கிறது.

கடந்த இரு தசாப்தங்களில் மெஸ்ஸி சாதித்தவை வெறும் கோப்பைகளும் புள்ளிவிவரங்களும் மட்டுமல்ல. ஒரு கால்பந்து வீரர் அவரது தொழில்முறை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னவாக இருக்கலாம் என்பதன் மீட்டுருவாக்கத்தையும் அவர் சாதித்துள்ளார்.

கபெல்லோவை பிரமிக்க வைத்த அந்த இளம் வீரர். ஐரோப்பிய கால்பந்தின் வரைபடத்தை மாற்றியமைத்தவர் எனப் பல பரிமாணங்களை மெஸ்ஸி கொண்டிருக்கிறார்.

இறுதியில் தனது நாட்டிற்குத் தேவைப்பட்ட அந்த ஒருவராக, அதாவது உலகக் கோப்பையை வென்ற அணியின் 'குவாட்டர்பேக்' வீரராக அந்த அணியின் கேப்டன் மாறினார். தற்போது அரிதாகவே ஓடும் இந்த அனுபவம் வாய்ந்த வீரர் முதலாவதாக அனைத்தையும் பார்க்கிறார்.

இந்த உலகக் கோப்பை மெஸ்ஸியைப் பற்றிப் பல மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகளை முன்வைத்துள்ளது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை விஷயத்தின் சாராம்சத்தைத் தவறவிட்டுவிட்டன. அவர் எவ்வளவு சிறந்தவர் என்பது முக்கியமல்ல, மாறாக, எத்தனை முறை அவர் முற்றிலும் புதிய ஒருவராக மாற வேண்டியிருந்தது என்பதே முக்கியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு