வெள்ளம் சூழ்ந்த லாவோஸ் குகைக்குள் ஒரு வாரத்திற்கு பிறகு 5 பேர் உயிருடன் மீட்பு

குகை, லாவோஸ், கனமழை, நிலச்சரிவு, மீட்புப்பணி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மிக ஆழமாகச் செல்லும் இந்தக் குகை அமைப்பு, மிகவும் குறுகலானது என்றும், இதிலுள்ள சில பகுதிகள் சுமார் 50 சென்டிமீட்டர் அகலம் மட்டுமே உடையவை என்றும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்
    • எழுதியவர், பேட்ரிக் ஜாக்சன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

மத்திய லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் சிக்கியிருந்த ஏழு கிராமவாசிகளைக் கண்டறிவதற்கான தேடுதல் நடவடிக்கையில் 5 பேரை லாவோஸ் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

கனமழை மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் இவர்கள் சிக்கியிருந்தனர். 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுடன் இருந்த இரண்டு கிராமவாசிகளைக் காணவில்லை என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மத்திய மாகாணமான சய்சம்பூனைச் சேர்ந்த அந்த 7 கிராமவாசிகளும், தங்கம் மற்றும் வனவிலங்குகளைத் தேடி கடந்த வாரம் புதன்கிழமை குகைக்குள் சென்றுள்ளனர். ஆனால், குகையின் நுழைவாயில் வெள்ளத்தால் அடைபட்டதால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

மீட்புக்குழுவினர் பகிர்ந்துள்ள வீடியோ காட்சிகளில், நீரில் மூழ்கிச் செல்லும் 'டைவர்ஸ்' வெள்ளத்தில் மூழ்கியிருந்த குறுகலான, சேறு நிறைந்த பாதையில் தவழ்ந்து சென்றதைக் காண முடிகிறது.

லாவோஸின், மக்களுக்கான தன்னார்வ மீட்பு அமைப்பைச் சேர்ந்த பூன்காம் லுவாங்லாத் என்பவர், காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"நான் இன்னும் நடுக்கத்துடனேயே இருக்கிறேன்" என்று கூறிய அவர். "எங்கள் மீட்புக்குழுவே இதைச் சாத்தியமாக்கியது" என்று கூறினார்.

மிக ஆழமாகச் செல்லும் இந்தக் குகை அமைப்பு, மிகவும் குறுகலானது என்றும், இதிலுள்ள சில பகுதிகள் சுமார் 50 சென்டிமீட்டர் அகலம் மட்டுமே உடையவை என்றும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

"நாங்கள் 5 பேரை உயிருடன் பாதுகாப்பாகக் கண்டுபிடித்துள்ளோம்" என்று 'ரெஸ்க்யூ வாலண்டியர் ஃபார் பீப்பிள்' அமைப்பைச் சேர்ந்த மீட்புப் பணியாளர் ஒருவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் இன்னும் இரண்டு பேரைத் தேடி வருகிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி 16:30 மணிக்கு (09:30 GMT) கிராமவாசிகள் மீட்கப்பட்டதாகத் தாய்லாந்து மீட்புப் பணியாளர் கெங்கச் பாங்காவோங் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

முன்னதாகப் புதன்கிழமை, ஃபின்லாந்தைச் சேர்ந்த சிறப்பு மீட்பு டைவர்ஸ் மிக்கோ பாசி கூறுகையில், மீட்புக்குழுவினர் இந்த குகைக்குள் "நூற்றுக்கணக்கான மீட்டர் நீளும் இந்த குகையில் தொடர் தடைகள், வெள்ள நீர், இடிந்து விழும் அபாயங்கள் மற்றும் அசுத்தமான காற்றின் காரணமாக ஏற்படும் பேராபத்துகள்" ஆகியவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார். கிராமவாசிகள் சிக்கியிருந்த குகை ஒரு "கைவிடப்பட்ட தங்கச் சுரங்கம்" என்றும் குறிப்பிட்டார்.

சிக்கிக்கொண்ட அந்த ஏழு பேரும் குகையின் வெளியேறும் வழியிலிருந்து சுமார் 300 மீட்டர் உள்ளே இருந்திருக்கலாம் என்று அவர் கணித்திருந்தார்.

தலைநகருக்கு வடக்கே சுமார் 120 கிமீ தொலைவில் உள்ள இந்தக் குகைக்குள் கிராமவாசிகள் கடந்த புதன்கிழமை நுழைந்ததாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குகை, லாவோஸ், கனமழை, நிலச்சரிவு, மீட்புப்பணி

பட மூலாதாரம், EPA

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"இந்தப் பகுதி யாருக்கும் சொந்தமானது அல்ல" என பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனது பெயரை முழுமையாக வெளியிட விரும்பாத லாவோஸ் மீட்புப் பணியாளர் பேங், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "உள்ளூர் மக்கள் குகைக்கு சென்று குழிகள் தோண்டுவதும், உணவைத் தேடுவதும் வழக்கம்தான்" என்றும் அவர் கூறினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள ஒரு மலையின் அடிவாரத்தில், வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் இரண்டு வாரங்கள் சிக்கியிருந்த 12 இளம் தாய்லாந்து சிறுவர்களையும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உதவிய மீட்புக்குழுவில் கெங்க்காச் பாங்காவோங் இடம் பெற்றிருந்தார்.

உலகம் முழுவதிலுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிபுணர்கள் பங்கேற்ற அந்த அசாதாரண மீட்புப் பணி, உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்களும் ஆவணப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 'தெர்ட்டீன் லைவ்ஸ்' என்ற திரைப்படமும், 'தி ரெஸ்க்யூ' என்ற ஆவணப்படமும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு