5 ஆண்டுகளில் 16 பட்டங்கள்: கால்பந்து உலகில் ஆதிக்க சக்தியாக ஸ்பெயின் உருவெடுத்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நீல் ஜான்ஸ்டன்
- பதவி, பிபிசி ஸ்போர்ட் செய்தியாளர், நியூயார்க்கிலிருந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஸ்பெயின் மீண்டும் சாதித்துக் காட்டியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில் ஐரோப்பிய சாம்பியன்களாக முடிசூட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்து ஸ்பெயின் அணி இப்போது உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
அவர்கள் இதேபோன்றதொரு சாதனையை 2010 ஆம் ஆண்டிலும் நிகழ்த்தியிருந்தனர், அது யூரோ 2008 ஐ வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தது.
ஸ்பெயினின் இந்த வெற்றி, ஆடவர் மற்றும் மகளிர் கால்பந்து விளையாட்டில் அவர்களின் அசாதாரணமான ஆதிக்கத்தைத் தொடர்ந்து நீட்டிக்கச் செய்கிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை பட்டங்களை ஒரே நேரத்தில் வைத்திருக்கும் முதல் நாடு ஸ்பெயின் தான். 2023-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் மகளிர் அணி சாம்பியனானது.
அதுமட்டுமல்ல, ஆண்கள் அணி 2023 இல் நேஷன்ஸ் லீக் பட்டத்தையும், 2024 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்றது. அதே நேரத்தில் பெண்கள் அணி 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் நேஷன்ஸ் லீக் பட்டங்களை வென்றது.
உண்மையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஸ்பெயின் 17 வயதுக்குட்பட்டோர் நிலை முதல் சீனியர் நிலை வரை வியக்கத்தக்க வகையில் 16 உலக மற்றும் ஐரோப்பிய பட்டங்களை வென்றுள்ளது.
"இது ஒரு முழுமையான ஆதிக்கம்" என்று ஸ்பானிஷ் கால்பந்து நிபுணர் கில்லெம் பலாக் பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.
"இது ஒரு மிகச் சரியான சாதகமான புயல் போன்றது. கலாசார ரீதியாக, நாம் சில விஷயங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் செய்கிறோம். அதை எல்லாரும் நம்புகிறார்கள். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் இதோடு நிறுத்திவிடக் கூடாது. ஆண்கள் அணி 2010-இல் உலகக் கோப்பையை வென்றது, யூரோவை வென்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான். இப்போது நாம் அதை மீண்டும் செய்துள்ளோம், இது மற்றொரு எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டது போன்றது."

பட மூலாதாரம், Carl Recine/Getty Images
ஸ்பெயினின் வெற்றி இயந்திரம்
பெண்கள் கால்பந்து (2022-2026 வரை 11 பட்டங்கள்)
சீனியர்: 1 x உலகக் கோப்பை (2023); 2 x நேஷன்ஸ் லீக் (2024, 2025).
அண்டர்-20: 1 x உலகக் கோப்பை (2022).
அண்டர்-19: 5 x அண்டர்-19 ஐரோப்பிய சாம்பியன்ஸ் (2022, 2023, 2024, 2025, 2026).
அண்டர்-17: 1 x உலகக் கோப்பை (2022); 1 x ஐரோப்பிய சாம்பியன்ஸ் (2024).
ஆண்கள் கால்பந்து (2022-2026 வரை 5 பட்டங்கள்)
சீனியர்: 1 x உலகக் கோப்பை (2026); 1 x ஐரோப்பிய சாம்பியன்ஸ் (2024); 1 x நேஷன்ஸ் லீக் (2023).
அண்டர்-23: 1 x ஒலிம்பிக் தங்கப் பதக்கம் (2024).
அண்டர்-19: 1 x ஐரோப்பிய சாம்பியன்ஸ் (2026).
'ஆபத்தான முடிவாக இருந்தது'

பட மூலாதாரம், Justin Setterfield/Getty Images
டிசம்பர் 2022 இல் ஸ்பெயின் அணி லூயிஸ் டி லா புவென்டேவை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தபோது, அவர் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் நேஷன்ஸ் லீக் (2023), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (2024) மற்றும் உலகக் கோப்பை (2026) ஆகியவற்றை பெற்றுத் தருவார் என்று வெகு சிலரே எதிர்பார்த்திருப்பார்கள்.
கத்தாரில் நடந்த உலகக் கோப்பையின் கடைசி 16 சுற்றில் மொராக்கோவிடம் ஸ்பெயின் தோற்று வெளியேறியிருந்தது. லூயிஸ் என்ரிக் தனது பதவியில் இருந்து விலகிய பிறகு, ஒரு மாற்றுப் பயிற்சியாளர் தேவைப்பட்டார்.
"இவர்களின் விளையாட்டு பாணியையும் கட்டமைப்பையும் புரிந்து வைத்திருந்த இந்த நபரை (டி லா புவென்டே) அவர்கள் தேர்ந்தெடுத்தனர்," என்று பலாக் மேலும் கூறினார்.
"இது மிகவும் ஆபத்தான முடிவாக இருந்தது. அவர் இந்த அளவுக்கு வெற்றிகரமாக இருப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்."
கடந்த ஐந்து ஆண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்களில் மூன்றை - (2008, 2012, 2024) வென்றுள்ள ஸ்பெயின் அணிக்கு, எந்தவொரு பெரிய கிளப்பிற்கும் பயிற்சியாளராக இருந்திராத டி லா புவென்டேவை பொறுப்பாளராக நியமித்தது ஆபத்தானதாகவே தோன்றியது.
1994 இல் ஒரு வீரராக ஓய்வு பெற்ற பிறகு, டி லா புவென்டே ஸ்பெயினின் இளைஞர் அணிகளின் பொறுப்பை ஏற்கும் முன்பு வரை, கீழ்நிலை ஸ்பானிஷ் லீக்குகள், இளைஞர் பிரிவுகள் மற்றும் உதவிப் பயிற்சியாளர் பதவிகள் உட்பட பல்வேறு கிளப்புகளில் 15 ஆண்டுகளை வெவ்வேறு பொறுப்புகளில் கழித்தார்.
"டி லா புவென்டே இந்த வீரர்களில் பெரும்பாலோரை அவர்களின் அகாடமி காலத்திலிருந்தே அறிவார். இந்த அணி தொடர்ந்து ஒன்றாக வளர்ந்து வருகிறது" என்று ஸ்பெயினின் முன்னாள் மிட்ஃபீல்டர் ஜுவான் மாடா பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.
"இது தற்போதைய வெற்றிக்கான அணி மட்டுமல்ல; எதிர்காலத்திற்கான அணியும் கூட," என்றார்.
அண்டர்-19, அண்டர்-21 மற்றும் ஒலிம்பிக் நிலைகளில் பொறுப்பு வகித்த பிறகு, சீனியர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து, டி லா புவென்டே தனது எதிரணியினருக்கு மரியாதை அளிக்கும் கலாசாரம், பொறுமை மற்றும் அமைதியைப் போதிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
"உங்களில் பெரும்பாலோர் என்னை விட இளையவர்கள், நீங்கள் அனுபவத்தை மதிக்க வேண்டும்" என்று 65 வயதான அவர் வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.
''ஒரு போட்டி முடிந்த பிறகு சில வீரர்கள் என்னிடம், 'பயிற்சியாளரே, இப்போது இன்னும் எதை வெல்லப் போகிறோம்? எல்லா வயது பிரிவுகளிலும் நாங்கள் வென்றுவிட்டோமே' என்று கேட்டனர்.''
''அப்போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம். எங்களுக்கான அடுத்த இலக்கு செப்டம்பரில் நடைபெறும் அடுத்த போட்டிதான். ஏனெனில் இந்த அணியினர் ஒருபோதும் சளைக்காதவர்கள்''
தேசிய அணிகளின் இந்த வெற்றி, கிளப் கால்பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெப் கார்டியோலா 10 ஆண்டுகள் பல கோப்பைகளை வென்ற பிறகு மான்செஸ்டர் சிட்டி கிளப்பை விட்டு வெளியேற முடிவு செய்த போதிலும், 2026-27 பிரீமியர் லீக் சீசனைத் தொடங்கும் மேலாளர்களில் குறைந்தது கால் பகுதியினர் ஸ்பானிஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
ஸ்பெயின் இப்போது அனைத்துப் போட்டிகளிலும் சேர்த்து தனது கடைசி 38 போட்டிகளில் தோல்வியடையாமல் உள்ளது, இது வரலாற்றிலேயே எந்தவொரு ஐரோப்பிய அல்லது தென் அமெரிக்க அணியும் செய்திராத மிக நீண்ட சாதனையாகும்.

பட மூலாதாரம், JAIME REINA / AFP via Getty Images
'நாங்கள் அனைத்தையும் வென்று வருகிறோம்'
இதற்கிடையில், கடந்த ஒரு தசாப்தத்தில் ஸ்பெயினின் மகளிர் கால்பந்தும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. முக்கிய போட்டிகளிலும் அந்த அணி தொடர்ந்து வெற்றிகளைப் பெறத் தொடங்கியுள்ளது.
2023 மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. 2015-ல் தான் உலகக் கோப்பையில் முதன்முறையாக பங்கேற்ற அந்த அணிக்கு, இது மூன்றாவது உலகக் கோப்பைத் தொடரிலேயே கிடைத்த சாதனையாகும்.
அதைத் தொடர்ந்து, ஸ்பெயின் மகளிர் அணி 2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை நேஷன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றது.
"ஸ்பெயினில் பெண்கள் கால்பந்தின் மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை" என்று முன்னாள் வீராங்கனையும் தற்போது பத்திரிகையாளருமான மரியா கர்ரிடோ 2024 இல் பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் எஃப்சி பார்சிலோனா அணிக்காக விளையாடியபோது, சிறுமிகளுக்கான லா மாசியா (பார்சிலோனாவின் புகழ்பெற்ற அகாடமி) என்று எதுவும் இல்லை. எங்களின் சொந்த போக்குவரத்து செலவுகளை நாங்களே கவனித்துக் கொண்டோம், எங்களின் பெற்றோர்கள் எங்களை பயிற்சிக்கு அழைத்து வந்தனர், மேலும் நாங்கள் எந்தப் பணமும் சம்பாதிக்கவில்லை. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில், நிலைமை மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. அதிக இளைஞர் பிரிவுகளை உருவாக்குதல், சிறந்த வசதிகள் மற்றும் சிறுமிகளுக்கான பிரத்யேக கால்பந்து அகாடமியை நிறுவுதல் உள்ளிட்ட பெண்கள் கால்பந்தை ஊக்குவிப்பதற்கான கணிசமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.''
''இந்த மாற்றம் விளையாட்டை மறுவடிவமைப்பு செய்தது மட்டுமல்லாமல், ஸ்பெயினில் பெண்கள் கால்பந்திற்கான மரியாதையையும் உயர்த்தியுள்ளது.''
ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளுக்குமான இந்த வெற்றிகள், கடந்த தசாப்தத்தில் இளைஞர் மட்டத்தில் பல பட்டங்களை வென்றதைத் தொடர்ந்து கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
'வெற்றி என்பது மேலும் வெற்றியைத் தரும்'

பட மூலாதாரம், Maddie Meyer - FIFA/FIFA via Getty Images
ஸ்பெயின் கால்பந்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது. அந்த நாட்டின் ஆதிக்கம் இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்று பலர் நம்புகின்றனர்.
லாமின் யமால் மற்றும் பாவ் குபார்சி ஆகிய இரு சிறந்த இளம் திறமைகளை ஆண்கள் அணி கொண்டுள்ளது, அவர்கள் தங்களது 19 வயதிலேயே முதல் உலகக் கோப்பை பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.
தேசிய பெண்கள் அணிக்காக விளையாடும் விக்கி லோபஸ், அதே வயதில் பார்சிலோனா அணியில் மூன்று முறை சாம்பியன்ஸ் லீக் வென்றவர்.
முன்னணி ஆட்டக்காரரான சல்மா பரல்லுவெலோவும் 23 வயதை எட்டுவதற்கு முன்பே தனது நாட்டிற்காக 50 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.
"ஸ்பெயின் விளையாடும் பாணியை உலகில் எவராலும் நெருங்கக் கூட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று இங்கிலாந்தின் முன்னாள் கோல்கீப்பர் ஜோ ஹார்ட் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பிபிசி ஸ்போர்ட்டிடம் தெரிவித்தார்.
"இந்த உலகக் கோப்பையில் யாரும் அவர்களைத் தொடக் கூட முடியவில்லை, முழு தொடரிலும் அவர்களுக்கு எதிராக வெறும் 10 ஷாட்டுகள் மட்டுமே இலக்கை நோக்கி அடிக்கப்பட்டன."
ஸ்பெயின் இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என 1998 உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் தியரி ஹென்றி, ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
"அவர்களின் கட்டமைப்பு மற்றும் அவர்கள் நடைமுறைப்படுத்திய முறைக்கு நான் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.
"ஏனென்றால் ஸ்பெயின் இதற்கு முன்பு இதுபோன்று வென்றதில்லை. ஆனால் இப்போது அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் வென்று வருகிறார்கள்."
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































