ஃபிஃபா: இங்கிலாந்துக்கு 60 ஆண்டுகளில் அதிக வலி ஏற்படுத்தும் தோல்வி என கூறப்படுவது ஏன்?

ஆட்டநேர முடிவை அறிவிக்கும் நடுவரின் இறுதி விசிலுக்குப் பிறகு, ஜூட் பெலிங்ஹாமும் அவரது இங்கிலாந்து அணி வீரர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆட்டநேர முடிவை அறிவிக்கும் நடுவரின் இறுதி விசிலுக்குப் பிறகு, ஜூட் பெலிங்ஹாமும் அவரது இங்கிலாந்து அணி வீரர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
    • எழுதியவர், பில் மெக்நல்டி
    • பதவி, அட்லாண்டாவில் உள்ள தலைமை கால்பந்து செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இங்கிலாந்தின் வேதனையான ஆண்டுகள் இப்போது 60 ஆண்டுகளைத் தாண்டி நீளப் போகிறது, ஆனால் உலகக் கோப்பை அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி, எல்லாவற்றையும் விட மிகவும் வேதனையான காயமாக இருக்கலாம்.

அற்புதமான அட்லாண்டா மைதானத்தின் உள்ளே இருந்த கடிகாரம், 1966-இல் வெம்ப்ளி மைதானத்தில் ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை வென்றதற்குப் பிறகு, ஆண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான இங்கிலாந்தின் நீண்டகால காத்திருப்பு முடிவடைய இன்னும் ஐந்து நிமிட சாதாரண ஆட்ட நேரமே மீதமுள்ளது என்பதைக் காட்டியது.

அந்தோணி கார்டன் 55-ஆவது நிமிடத்தில் அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றபோது, அந்த அணியின் வீரர்களும் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டுச்செலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பை தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.

ஆனால், டுச்செலின் மோசமான முடிவுகள் இங்கிலாந்தின் பிடியைத் தளர்த்தின. அதன்பின், லயோனல் மெஸ்ஸி வழிநடத்திய அர்ஜென்டினாவின் தாக்குதல்கள் அலை அலைவாக தொடர்ந்தன.

ஒரு கோல் விழுவது தவிர்க்க முடியாதது என்று தோன்றியது — அது 85 ஆவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸிடமிருந்து வந்தது.

அதன்பிறகு, இங்கிலாந்து கடும் அழுத்தத்தில் இருந்தபோது, காயம் காரணமாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் லாடாரோ மார்டினெஸ் தலையால் அடித்த கோல் அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அதன்பிறகு இங்கிலாந்தால் மீண்டு வர முடியவில்லை. அதனால், வெற்றியை மிக நெருங்கியும் மீண்டும் தவறவிட்ட அந்த அணியின் மற்றொரு ஏமாற்றமான தோல்வியை கண்டு, கால்பந்து ரசிகர்களால் நிரம்பிய அந்த நாடு அதிர்ச்சியுடன் கண்விழித்தது.

இங்கிலாந்து அணியை வழிநடத்தும் பணியில் டுச்செல் தோல்வி

சர் கரேத் சவுத்கேட்-இன் பதவிக்காலத்துக்குப் பிறகு தாமஸ் டுச்செல் பொறுப்பேற்றபோது, அவரது முன்னோடியால் வெல்ல முடியாத போட்டிகளை இவர் வென்று காட்டுவார் என்ற ஒற்றை யோசனையே அவரது தனித்துவமான தகுதியாகக் கருதப்பட்டது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த இரண்டு யூரோ கோப்பை இறுதிப்போட்டிகள் மற்றும் 2018 உலகக்கோப்பை அரையிறுதியில் சவுத்கேட் மீது விமர்சிக்கப்பட்ட அதீத எச்சரிக்கை உணர்வு டுச்செலை ஆட்கொள்ளாது என்று நம்பப்பட்டது.

சவுத்கேட் பின்வாங்கிய இடத்தில், டுச்செல் இங்கிலாந்தை வெற்றிக் கோட்டைத் தாண்ட வைப்பார் என்றே கருதப்பட்டது.

ஆயினும்கூட, முக்கிய தருணத்தில் அழுத்தம் உச்சத்தில் இருந்தபோது, சவுத்கேட் செய்திருந்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கக் கூடிய அதே வகையான உத்தி ரீதியான பின்வாங்கலையும் தோல்வியையும் டுச்செல் அரங்கேற்றினார்.

அதற்குப் பதிலாக, அந்த முடிவுக்காக இப்போது டுச்செல் விமர்சனங்களை எதிர்கொள்வார், அது முற்றிலும் நியாயமானதே.

யூரோ 2024-க்குப் பிறகு சவுத்கேட்டுக்குப் பின் ஒரு விரைவான தீர்வாக கால்பந்து சங்கம் இவரைத் தேர்ந்தெடுத்தது. 2026 உலகக் கோப்பையை வெல்வது அல்லது டுச்செல் கூறியது போல் "சட்டையில் இரண்டாவது நட்சத்திரத்தைப் பதிப்பது" மட்டுமே இவரது ஒரே நோக்கமாக இருந்தது.

இங்கிலாந்து அணிக்கு மேலும் துரதிருஷ்டவசமான கதைகளோ அல்லது ஏமாற்றங்களோ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே அவர் கொண்டு வரப்பட்டார் என்பதால், மிகக் கடுமையான கோணத்தில் பார்த்தால், இந்த அரையிறுதிப் போட்டி என்பது ஒரு சுமாரான செயல்பாடு அல்லது தோல்வியடைந்த முயற்சியாகவே கருதப்பட முடியும்.

சவுத்கேட்டைப் போலவே, டுச்செல்லும் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு அணிக்கு எதிராக இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை.

டுச்செல் முக்கியமாகத் தனது சொந்தக் கைகளாலேயே இங்கிலாந்தின் தோல்வியைத் தேடிக்கொண்ட விதம் குறித்தும், சவுத்கேட் மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டுவந்த அதே தவறுகளை இவரும் அப்படியே மீண்டும் செய்தது குறித்தும் நிச்சயம் பல குற்றச்சாட்டுகள் எழும்.

இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டுச்செல், யூரோ 2028 தொடரில் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் டுச்செல், யூரோ 2028 தொடரில் அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பழைய மற்றும் கசப்பான ஒரு போட்டி வரலாற்றின் தற்போதைய பரபரப்பான ஆட்டத்தில், கார்டன் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலை பெறச் செய்த உடனே, டுச்செல் தற்காப்பு ஆட்ட வியூகத்தை கையாள முடிவு செய்தார்.

இந்த உத்தி இதற்கு முந்தைய நாக்-அவுட் போட்டிகளில் மெக்சிகோ மற்றும் நார்வே அணிகளுக்கு எதிரான இங்கிலாந்தின் வெற்றிகளுக்கு உதவியாக இருந்தது - ஆனால், மெஸ்ஸியின் உத்வேகத்துடன் ஆடிய அர்ஜென்டினாவுக்கு எதிராக இது வேலை செய்யவில்லை.

ஆட்டம் முடிய 18 நிமிடங்கள் இருந்தபோது, கோல் அடித்த ஆண்டனி கார்டனுக்குப் பதிலாக தற்காப்பு வீரர் எஸ்ரி கோன்சாவை டுச்செல் களம் இறக்கினார்; அத்துடன் இங்கிலாந்தின் தடுப்பாட்டத்தை ஐந்து பேர் கொண்ட பின்வரிசையாக மாற்றினார். அதைத் தொடர்ந்து, டெக்லான் ரைஸ் மற்றும் ரீஸ் ஜேம்ஸ் ஆகியோருக்குப் பதிலாக நிக்கோ ஓ'ரெய்லி மற்றும் டான் பர்ன் ஆகியோரைக் கொண்டு வந்தார்.

டுச்செல் எடுத்த இந்த முடிவு மிக மோசமானது என்பது அடுத்த கணமே தெளிவாகத் தெரிந்தது. இது அர்ஜென்டினா அணியின் தாக்குதல் அழுத்தத்தை இன்னும் அதிகரித்ததே தவிர வேறொன்றையும் செய்யவில்லை, விளைவாக அந்த கடைசி நிமிட கோல்களும் விழுந்தன. இந்தத் தோல்விக்கு முழு முதற்காரணம் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க டுச்செல் மட்டுமே.

அவரது இந்த தற்காப்பு அணுகுமுறையை அப்பட்டமாக காட்டும் ஒரு புள்ளிவிவரம் இருக்கும் என்றால் அது இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றதற்கும், அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கழித்து மார்டினெஸ் அடித்த வெற்றி கோலுக்கும் இடைப்பட்ட நேரத்தில், பந்து வெறும் 12% நேரம் மட்டுமே பந்து இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதுதான்.

போட்டியின் இறுதி தருணங்களில் இங்கிலாந்துக்கு கோல் அடிப்பது அவசரத் தேவையாக மாறியதால், 96-ஆவது நிமிடத்தில் டுச்செல் இவான் டோனியை களமிறக்கினார். இந்தத் தொடரில் அவர் விளையாடிய முதல் போட்டி அதுவாகும்.

டோனியின் அந்த 'கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்ட' மிகக் குறுகிய கால ஆட்டம், டுச்செலின் வீரர் தேர்வுகள் சிலவற்றின் மீதும் கேள்விகளை எழுப்பியது. ஒருவேளை, ஒருபோதும் நடக்காமல் போன பெனால்டி சூட்-அவுட் வாய்ப்புக்காக மட்டுமே டோனி அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்தாரா?

மேலும், டுச்செலின் தற்காப்பு ஆட்டக்காரர்களின் தேர்வுகள், குறிப்பாக வலது-பின்வரிசை வீரர் தேர்வு குறித்த விவாதம் தொடர்ந்து சூடுபிடிக்கும்.

அடிக்கடி காயடையும் வாய்ப்புள்ள ரீஸ் ஜேம்ஸ் முழு உடற்தகுதியுடன் விளையாடுவார் என்ற நம்பிக்கையில் டுச்செல் முடிவெடுத்தார். ஆனால், தொடைத் தசை காயம் காரணமாக செல்சி அணியின் அந்தத் தற்காப்பு வீரர் விலகியதும், வலது பக்கத் தற்காப்பு நிலை இங்கிலாந்துக்கு திடீரென சிக்கலான ஒன்றாக மாறியது.

பனாமாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்து, பின்னர் மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறிய ஜாரெல் குவான்சா, ஜெட் ஸ்பென்ஸ் மற்றும் எஸ்ரி கோன்சா ஆகியோருக்கு இடையே இந்த வலது-பின்வரிசை இடம் ஒரு 'மியூசிகல் சேர்' விளையாட்டுப் போல மாறிக்கொண்டே இருந்தது. அதன் பிறகே அரையிறுதிப் போட்டிக்கு ரீஸ் ஜேம்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்த போது, ட்ரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட் தூரத்திலிருந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். அவரது தடுப்பு ஆட்டத்தின் பலவீனத்தை மட்டுமே காரணமாக வைத்து, அவரது இயல்பான திறமைகளை டுச்செல் முற்றிலும் புறக்கணித்தார்.

மேலும், இந்தத் தோல்வியின் பின்னணி குறித்து ஆராயப்படும் போது, கோல் பால்மர் மற்றும் பில் ஃபோடன் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான ஆட்டத்திறனை டுச்செல் புறக்கணித்த முடிவும் (செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிகளுக்காக இருவரும் இந்த சீசனில் சுமாராகவே விளையாடினர் என்பதால் இதை இப்போது சொல்வது எளிதுதான்) மற்றும் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியின் மார்கன் கிப்ஸ்-வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுக்காததும் மீண்டும் ஒரு விவாதப் பொருளாக மாறும்.

மெக்சிகோவுக்கு எதிரான வெற்றிக்குப் பிந்தைய கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாகக் கை உடைந்ததால் இந்தத் தொடர் யாருக்கு பாதியிலேயே முடிந்ததோ, அந்த ஜோர்டான் ஹென்டர்சன், அணியினருக்கு ஒரு உத்வேகமாக இருப்பார் என்பதற்காக மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் களத்தில் இறங்கி விளையாடும் ஒரு முக்கிய வீரராக இருக்கவில்லை.

இந்தத் துறையில் அவரது நிபுணத்துவத்தையும் ஆளுமையையும் டுச்செல் அவ்வளவு மதிக்கிறார் என்றால், ஹென்டர்சனை ஏன் அவரது பின்னணி ஊழியர்களில் ஒருவராக அழைத்துச் சென்று, இளைய, அதிக படைப்பாற்றல் கொண்ட வீரருக்கு ஒரு இடத்தை உருவாக்கியிருக்கக் கூடாது?

இது இங்கிலாந்துக்கும் டுச்செல் மற்றும் அவரது வியூகரீதியான அணுகுமுறைக்கும் ஒரு ஏமாற்றமான நாளாகும்.

இது இங்கிலாந்தின் மிக வேதனையான தோல்வியா?

கடந்த பல ஆண்டுகளாக இங்கிலாந்து அணி எத்தனையோ வேதனைகளைச் சந்தித்துள்ளது; ஆனால் அந்த யூரோ கோப்பை இறுதிப்போட்டித் தோல்விகள் உட்பட, மொத்தம் ஏழு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் கண்டு செய்தி சேகரித்த ஒரு பார்வையாளராக, இந்தத் தோல்விதான் எல்லாவற்றையும் விட மிக மோசமானதாக எனக்குத் தோன்றுகிறது.

வரலாற்றுப் பின்னணிகளையும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளையும் கண்முன் கொண்டுவரும் தங்களின் பழைய எதிரியான அர்ஜென்டினாவுக்கு எதிராக இந்தத் தோல்வி அமைந்தது என்பதால் மட்டுமே, இங்கிலாந்து வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த அளவுக்கு ஒரு தீராத ஏமாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.

ஏனெனில், இந்த உலகக் கோப்பை அரையிறுதி, "இப்படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?" என்ற கேள்வியை எப்போதும் எழுப்பும் போட்டியாகவே இருக்கும். இந்தத் தொடரில் பலமுறை தோற்கடிக்கக்கூடிய அணியாகத் தோன்றிய அர்ஜென்டினா, ஆனால் தோல்வியை ஏற்க மறுத்தது.

இது உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியாகும். வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில், இந்த விளையாட்டின் மிக உயர்ந்த கோப்பையைக் கைப்பற்றுவதற்காகப் போட்டியிடுவதற்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்.

ஆறு தசாப்தங்களாகத் தங்களால் தாண்ட முடியாத ஒரு பெரும் தடையாக இருந்த எல்லையைக் கடக்க இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் ஒருமுறை இடறி விழுந்துள்ளது.

சில நேரங்களில் மிகவும் ஆக்ரோஷமாக மாறிய இந்த ஆட்டத்தில், கார்டன் அடித்த கோல் இங்கிலாந்துக்கு ஓரளவுக்கு ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் தோன்றியது. அவர்கள் தங்களின் பந்து கட்டுப்பாட்டையும் ஆட்டத்தின் பிடியையும் இழந்த பிறகும் கூட, இறுதியில் முற்றிலும் நிலைகுலைந்து போகும் வரை வெற்றி எல்லை அவர்களின் கண்முன்னேதான் இருந்தது.

இப்படியொரு பிரம்மாண்டமான மேடையில் இந்தத் தோல்வி நிகழ்ந்திருப்பதால், இது மற்ற எல்லாவற்றையும் விட மிக ஆழமாக ஆராயப்படும். அத்துடன் மற்ற எந்தவொரு தோல்வியையும் விட அதிக அளவிலான வருத்தத்தையும் விட்டுச் செல்லும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில், சர் கரேத் சவுத்கேட்டின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லினில், சர் கரேத் சவுத்கேட்டின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியது.

உலகக்கோப்பையிலிருந்து இங்கிலாந்து அணி எதை கற்றுக் கொள்ள முடியும்?

மெக்சிகோ நகரத்தில் உள்ள அஸ்டெகா மைதானத்தில், போட்டியை நடத்தும் இணை நாடான மெக்சிகோ அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்துவதற்காக இங்கிலாந்து அணி கடுமையாகப் போராடி வென்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, சிலிர்ப்பூட்டும் இரவு அவர்களுக்கு எப்போதும் நினைவிருக்கும்.

ஜூட் பெல்லிங்ஹாம் தனது உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்திறனை நிரூபித்ததும், டுச்செலின் வியூக மாற்றங்களும் திட்டங்களும் இங்கிலாந்தை இறுதிவரை அழைத்துச் செல்லும் ஒரு சிறந்த வியூக வகுப்பாளராக அவர் இருக்கக்கூடும் என்று தோன்றச் செய்ததுமாக இங்கிலாந்தின் மிகச்சிறந்த உலகக்கோப்பை வெற்றிகளில் ஒன்றாக அது அமைந்தது.

பெல்லிங்ஹாமுடன் கேப்டன் ஹாரி கேனும் அந்த உயர்தர வரிசையில் இணைகிறார். ஆனால், அடுத்த உலகக்கோப்பை வரும்போது தனக்கு 36 வயதாகிவிடும் என்பதால், பேயர்ன் முனிக் அணியின் இந்த நட்சத்திர முன்கள வீரர் இந்த வெளியேற்றத்தின் வலியை மற்ற அனைவரையும் விட மிக அதிகமாக உணர்வார்.

முந்தைய 32 அணிகள் சுற்றுப் போட்டியில் காங்கோ குடியரசுக்கு எதிராகவும், பின்னர் கால்இறுதிப் போட்டியில் நார்வேக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி பின்னடைவிலிருந்து மீண்டு வந்து தங்களின் மனவலிமையை நிரூபித்தது; ஆனால், அவர்கள் தங்களின் முழு திறமையோடும் தடையற்ற வேகத்தோடும் விளையாடிய தருணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

அர்ஜென்டினாவிடம் அடைந்த இந்த அதிர்ச்சிகரமான தோல்வியின் விதம், தங்களின் இந்த பெரிய தொடர்களின் சாபம் எப்போதாவது ஒருமுறை முடியுமா என்று இங்கிலாந்து அணியையும் அதன் ரசிகர்களையும் நிச்சயம் யோசிக்க வைக்கும்.

கடந்த யூரோ 2024 இறுதிப்போட்டியில் தங்களை வீழ்த்திய, தற்போதைய உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஸ்பெயின் அணிக்கு எதிராக, தங்களின் சொந்த மண்ணில் நேஷன்ஸ் லீக் போட்டி செப்டம்பர் மாதத்தில், நடக்கவிருப்பதால், இந்தத் தோல்வியிலிருந்து அவர்கள் மிக விரைவாக மீண்டு வர வேண்டும்.

டுச்செலின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

கால்பந்து சங்கம் (FA) மற்றும் டுச்செலுக்கு இடையேயான ஒப்பந்தம் ஆரம்பத்தில் இந்த உலகக்கோப்பையின் இறுதி வரை மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், 2028 யூரோ கோப்பை வரை அவரைப் பயிற்சியாளராக நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் அவரிடம் வழங்கப்பட்டது.

உலகக்கோப்பை போட்டி எப்படி அமையப் போகிறது என்று தெரியாத ஒரு சூழ்நிலையிலும், கால்பந்து சங்கம் எடுத்த இந்த முடிவு ஒரு ஆச்சர்யமாகவும், அதே சமயம் அவர்களுக்கு ஒரு பெரிய நிதிப் பொறுப்பாகவும் அமைந்தது.

இந்தத் தொடரில் டுச்செலின் செயல்பாடு ஒரு முழுமையான வெற்றியாகக் கருதப்பட முடியாது என்றாலும், அடுத்த யூரோ கோப்பைக்கு அணியை வழிநடத்த அவருக்கு கால்பந்து சங்கத்தின் (FA) முழு ஆதரவு உள்ளது.

சிறந்த தடுப்பு ஆட்டக்காரரான ஜான் ஸ்டோன்ஸ் நிச்சயம் தனது சர்வதேச ஆட்ட வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், இங்கிலாந்து அணி ஒரு புதிய மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும். மேலும், மார்கஸ் ராஷ்ஃபோர்ட் மீது டுச்செல் தொடர்ந்து நம்பிக்கை வைப்பாரா?

கோல்கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்டுக்கு 32 வயதே ஆவதால் அவர் தொடர்ந்து விளையாடலாம், இருப்பினும் அவருக்கான சாத்தியமான அடுத்த தலைமுறை மாற்று வீரர்களைக் கண்டறிய வேண்டிய தேவை உள்ளது.

உலகக் கோப்பை ஆயத்தப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், லிவர்பூல் அணியின் 17 வயது ரியோ நகுமோஹா இங்கிலாந்தின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக் கோப்பை ஆயத்தப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், லிவர்பூல் அணியின் 17 வயது ரியோ நகுமோஹா இங்கிலாந்தின் எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

டெக்லான் ரைஸ் மற்றும் எலியட் ஆண்டர்சன் ஆகியோர் வரும் ஆண்டுகளில் இங்கிலாந்து நடுவரிசையின் வலுவான அடித்தளமாக விளங்க முடியும். அதே நேரத்தில், முழு உடற்தகுதியுடன் இருக்கும் புகாயோ சாகா அணிக்கு மற்றொரு மிகப்பெரிய சொத்தாக அமைவார்.

பில் ஃபோடன், கோல் பால்மர் மற்றும் மார்கன் கிப்ஸ்-வைட் ஆகியோரின் திறமைகளையும், அத்துடன் கிரிஸ்டல் பேலஸ் அணியின் ஆடம் வார்டனையும் டுச்செல் இன்னும் பரிசீலிக்க முடியும். அதே நேரத்தில் மியாமியில் நடந்த உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளில் லிவர்பூல் அணியின் 17 வயது விங்கர் ரியோ ங்குமோஹா தனக்கு எவ்வளவு ஒரு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதைக் காட்டியுள்ளார்.

ஆர்சனல் அணியின் 16 வயது விங்கரான மேக்ஸ் டொவ்மேனின் அசாத்திய திறமையும் இங்கிலாந்தின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு.

இருப்பினும், தற்போதைக்கு, அர்ஜென்டினாவிடம் அடைந்த தோல்வியின் வலி, மற்றும் அது நிகழ்ந்த விதத்திலிருந்து மீண்டு வர இங்கிலாந்து அணியும் டுச்செலும் சிறிது காலம் எடுத்துக்கொள்வார்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு