ஒடிசாவில் கிறிஸ்தவ மதபோதகர் மற்றும் அவரின் இளம் மகன்களை கொன்றவர் விடுதலை செய்யப்படுவாரா? - நாட்டையே உலுக்கிய வழக்கின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, சமூக விவகாரங்கள் ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறையான மரணம் தொடர்பான சில விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவை சில வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதபோதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகன்களைக் கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்று சிறையில் உள்ள ஒருவரை விடுவிக்கக் கோரும் மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (செப்டம்பர் 2) முடிவெடுக்க உள்ளது.
ரவீந்திர குமார் பால் என்ற இயற்பெயர் கொண்ட தாரா சிங், 2000ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் உள்ளார்.
கிழக்கு மாநிலமான ஒடிசாவில் (முன்னர் ஒரிசா) ஒரு கிராமத்தில் ஆஸ்திரேலிய மதபோதகர் ஸ்டெயின்ஸையும் அவரது 6 மற்றும் 10 வயது மகன்களையும் உயிருடன் எரித்துக் கொன்றதற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழுநோயாளிகளுக்காக 30 ஆண்டுகள் பணியாற்றியவர் ஸ்டெயின்ஸ். ஆனால், சிங்கும் அவருடன் தொடர்புடைய இந்துத்துவ கடுமைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பின்தங்கிய சாதிகளைச் சேர்ந்த ஏழை இந்துக்கள் மற்றும் பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டினர்.
இந்தக் கொடூரமான குற்றத்தின் தீவிரம், இந்தியாவின் சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலகளவில் பெரும் கண்டனத்தையும் எழுப்பியது.
தற்போது தாரா சிங் விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தக் கொடூரக் குற்றத்தின் நினைவுகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாரிபடாவில் ஸ்டெயின்ஸ் வசித்து வந்தார். அங்கு உள்ள பழங்குடியின மக்களிடையே அவர் பணியாற்றி வந்தார்.
1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி இரவு அவர்கள் கொலை செய்யப்பட்டனர். அதற்கு முன்பு, ஸ்டெயின்ஸும் அவரது மகன்களும் அண்டை மாவட்டமான கேயோஞ்சரில் உள்ள தொலைதூர கிராமமான மனோகர்பூரில் நடைபெற்ற கிறிஸ்தவக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அவர்கள் தங்களது ஜீப்பில் தூங்கிக்கொண்டிருந்தபோது, தாரா சிங் தலைமையிலான 60 முதல் 70 பேர் கொண்ட கும்பல் அவர்களது வாகனத்தைச் சூழ்ந்து, அதற்கு தீ வைத்ததுடன், அவர்கள் தப்பிச் செல்வதையும் தடுத்தது.

பட மூலாதாரம், AFP via Getty Images
குற்றத்துக்குப் பிறகு தாரா சிங் தலைமறைவான நிலையில், அவரைப் பற்றிய தகவல் அளித்து அவரைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் (அப்போது சுமார் 18,000 அமெரிக்க டாலர்) வெகுமதி வழங்கப்படும் என்று கூறி, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் சுவரொட்டிகளை ஒட்டினர்.
அந்தக் காலகட்டத்தில் வெளியான தகவல்களின்படி, கிராம மக்கள் மற்றும் பழங்குடியினர் அவருக்கு உதவியதாகக் கூறப்பட்டது.
அவர்கள் அவரை, "யானைகளுடன் விளையாடி, புலிகள் மீது சவாரி செய்யும் நவீன கால டார்சன்" என்று புகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓராண்டுக்குப் பிறகு காட்டுக்குள் இருந்த அவரது பதுங்குமிடத்தில் நடத்தப்பட்ட இரவு நேர திடீர் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து கூறியது என்ன?
சில மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து 'இந்தியா டுடே' இதழின் ரூபன் பானர்ஜிக்கு அளித்த பரபரப்பான நேர்காணலில், ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளைக் கொலை செய்யவில்லை என தாரா சிங் மறுத்தார்.
ஆனால், "கிரஹாம் ஸ்டெய்ன்ஸை எனக்குப் பிடிக்காது" என்றும், "கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு எதிரான இயக்கத்தை முன்னின்று நடத்தியதாகவும்" அவர் கூறினார்.
"மத போதகர்கள் எங்கள் மதத்தை குறிவைத்து வருகின்றனர். ஏமாற்றுதல் மற்றும் ஆசை காட்டுதல் மூலம் அவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்து வருகின்றனர். எங்கள் மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு உண்மையான இந்துவாக, அவர்களை எதிர்ப்பது எனது பொறுப்பு" என்று அவர் கூறினார்.
"இந்தப் பகுதியில் நான் மிகவும் பிரபலமான நபராக இருந்ததால், இந்தக் கொலைகளில் காவல்துறையினர் என்னை சிக்கவைத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார்.
இந்துக்களின் நலனுக்காக "தியாகியாகத் தயாராக இருப்பதாக" தாரா சிங் கூறினார். ஆனால், தன்னை ஒருபோதும் குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளிக்காது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தண்டனை விவரம்
அவரது நம்பிக்கை தவறாகிப் போனது.
2003ஆம் ஆண்டு, விசாரணை நீதிமன்றம் தாரா சிங்குக்கு மரண தண்டனையும், மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உயர் நீதிமன்றம் அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
அவரது கூட்டாளியான மகேந்திர ஹெம்ப்ராமுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், மற்ற 11 பேரின் தண்டனைகளை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்தது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அரசு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
மற்ற குற்றங்கள்
ஸ்டெய்ன்ஸை கொலை செய்தது மட்டும் தாரா சிங் செய்த குற்றம் அல்ல.
1999ஆம் ஆண்டு மதச் சிறுபான்மையினருக்கு எதிராக அவர் செய்த மேலும் இரண்டு கொடூரமான குற்றங்களுக்காகவும் 2007ஆம் ஆண்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய மதபோதகரையும் அவரது குழந்தைகளையும் அவர் கொலை செய்த அதே ஆண்டில்தான் இந்தக் குற்றங்களும் நடந்தன.
ஒரு சம்பவத்தில், தேவாலயத்துக்குத் தீ வைத்து, அது எரிந்து கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பிக்க முயன்ற கத்தோலிக்க பாதிரியார் அருள் தாஸை அம்பால் தாக்கிக் கொலை செய்த கும்பலை வழிநடத்தியதற்காகவும், மற்றொரு சம்பவத்தில், முஸ்லிம் ஆடை வியாபாரியான ஷேக் ரஹ்மானை அடித்து, உயிருடன் எரித்துக் கொலை செய்ததற்காகவும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பல இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களை ஏற்றிச் சென்ற முஸ்லிம் வியாபாரிகளின் லாரிகளைக் கடத்தி, அவற்றை விடுவித்ததில் தாராசிங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காவல்துறை 10 வழக்குகளைப் பதிவு செய்திருந்தது.
சிறையில் இருந்து அளித்த பேட்டியில், இதில் "தனிப்பட்ட முறையில் ஈடுபடவில்லை" என்று தாரா சிங் மறுத்தார்.
ஆனால், "எனது ஆதரவாளர்கள் இதைச் செய்திருக்கலாம்" என்று கூறினார். அதே நேரத்தில், "பசுக்களின் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் பசுவதைக்கு எதிரான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததாகவும்", அது "எந்த விலையைக் கொடுத்தாவது தடுக்கப்பட வேண்டும்" என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.
கிறிஸ்தவ தேவாலயத் தலைவர்கள், இந்தத் தாக்குதல்கள் கடுமையான இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தளத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டினர்.
ஆனால், தான் அந்த அமைப்பின் உறுப்பினர் அல்ல என்று சிங் மறுத்தார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி டி.பி. வாத்வா தலைமையிலான விசாரணை ஆணையமும் பின்னர், தாரா சிங் தனியாகவே செயல்பட்டதாகத் தெரிவித்தது.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி கூறியது என்ன?
கிரஹாம் ஸ்டெய்ன்ஸின் மனைவி கிளாடிஸ், தனது மகள் எஸ்தருடன் 2004ஆம் ஆண்டு ஜூலை வரை இந்தியாவிலேயே தங்கியிருந்தார். கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் தான் தாரா சிங்கை "மன்னித்துவிட்டதாக" அவர் கூறினார். "மன்னிப்பு குணமடைவதற்கான பாதையைத் திறக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, தாரா சிங் உச்ச நீதிமன்றத்தில் தண்டனைக் குறைப்பு மனுவைத் தாக்கல் செய்தார். சிறையில் தனது நடத்தை நன்றாக இருந்ததாகவும், தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த தனது மனுவில், 62 வயதான தாரா சிங், இந்தக் குற்றத்தை "இளமைப் பருவத்தின் தீவிர உணர்ச்சியின்" காரணமாகச் செய்ததாகக் கூறினார்.
வருத்தம் தெரிவித்த தாரா சிங்
"இருபது ஆண்டுகளுக்கும் முன்பு செய்யப்பட்ட தவறுகளை மனுதாரர் ஒப்புக்கொள்கிறார், மேலும் அதற்காக ஆழ்ந்த வருத்தமும் தெரிவிக்கிறார்.
இந்தியாவின் கொடூரமான வரலாறு குறித்த தீவிரமான எதிர்வினைகளால் தூண்டப்பட்ட இளமைப் பருவத்தின் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனுதாரரின் மனநிலை ஒரு தருணத்தில் கட்டுப்பாட்டை இழந்தது.
எனவே, நீதிமன்றம் செயல்களை மட்டுமின்றி, அவற்றுக்குப் பின்னால் இருந்த நோக்கத்தையும் ஆராய்வது அவசியம். எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரிடமும் தனிப்பட்ட விரோதம் மனதில் இருந்ததில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, தாரா சிங்கின் மனு குறித்து முடிவெடுக்குமாறு மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ஆனால், இதுவரை என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை மாநில அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கவில்லை.
ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற கடைசி விசாரணையின் போது, தாரா சிங்கின் மனுவை விசாரித்து வரும் தண்டனை மறுஆய்வு வாரியம் (எஸ்ஆர்பி), மேலும் சில ஆவணங்களுக்காகக் காத்திருப்பதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும், விசாரணையை ஒத்திவைக்கவும் கோரினர்.
இந்த வழக்கில் அரசு பல முறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரியதற்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்தது.
செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் (இன்று) தாரா சிங்கின் மனு குறித்து தண்டனை மறுஆய்வு வாரியம் முடிவெடுக்கத் தவறினால், நீதிமன்றமே முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தது.
"நீங்கள் விரும்பியபடி ஒரு முடிவை எடுங்கள். நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், நாங்களே முடிவெடுப்போம்" என்று நீதிமன்றம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
தாரா சிங் தாக்கல் செய்த தண்டனைக் குறைப்பு மனுவை மாநில அரசோ அல்லது நீதிமன்றமோ ஏற்றுக்கொண்டால் அவர் விடுதலை செய்யப்படலாம் என்ற தகவல்கள், இந்தியாவின் 3 கோடி கிறிஸ்தவ சமூகத்தினரிடையே சில கவலையை ஏற்படுத்தியுள்ளன. அவரது முந்தைய கருத்துகள் குறித்த அசௌகரியமும் இதற்/கு ஒரு காரணமாக உள்ளது.
2000ஆம் ஆண்டு 'இந்தியா டுடே' இதழுக்கு அளித்த நேர்காணலில், ஸ்டெய்ன்ஸின் குழந்தைகளைக் கொன்றதற்காக "எந்த வருத்தமும் இல்லை" என்றும், "ஒருபோதும் வருத்தப்படமாட்டேன்" என்றும் அவர் கூறியிருந்தார்.
"இந்துக்கள் இறக்கும்போது, மற்றவர்கள் அழுவதில்லை. மற்றவர்கள் இறக்கும்போது நாம் ஏன் அழ வேண்டும்? என்ன நடந்ததோ அது சரிதான். இனிமேல் என்ன நடந்தாலும் அதுவும் சரியாகத்தான் இருக்கும்."
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால், "நான் இதுவரை செய்து வந்ததைத் தொடர்ந்து செய்வேன் - பசுவதையையும் மதமாற்றங்களையும் எதிர்ப்பேன்" என்று அவர் கூறினார்.
"அரசு இவற்றைத் தடுக்க வேண்டும். அவை தடுக்கப்படாவிட்டால், மேலும் பலர் கொல்லப்படலாம். எதுவும் நடக்கலாம்" என்றும் அவர் கூறினார்.
'யூனியன் ஆஃப் கத்தோலிக் நியூஸ்' (UCN) இணையதளத்தில் சமீபத்தில் குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் கிறிஸ்தவ அரசியல் செயற்பாட்டாளர் ஜான் தயால், பல ஆண்டு காலமாக சிறையில் இருந்த பிறகு தண்டனைக் குறைப்பு வழங்கப்படுவது இந்தியாவில் "அசாதாரணமானது அல்ல" என்றும், "தண்டனை என்பது சீர்திருத்தத்துக்கும் இறுதியில் சமூகத்துக்குத் திரும்புவதற்கும் வழிவகுக்க வேண்டும் என்ற அதன் அடிப்படைக் கொள்கை மனிதநேயமானது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஒடிசாவில் உள்ள மதச் சிறுபான்மையினரிடையே நிலவும் பதற்றம் "வெறும் கற்பனையானது அல்ல" என்றும், அந்த மாநிலத்தின் கிறிஸ்தவ எதிர்ப்பு வன்முறையின் வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது இது புரிந்துகொள்ளக்கூடியது என்றும் தயால் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு உதாரணமாக, 2008ஆம் ஆண்டு கந்தமால் கலவரங்களை அவர் குறிப்பிடுகிறார். அந்தக் கலவரங்களில் பலர் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
"ஸ்டெய்ன்ஸ் படுகொலை ஒரு சாதாரண கொலை அல்ல. அது அனைவரும் பார்க்கவும், ஒரு எச்சரிக்கையாகப் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் வெளிப்படையாக நடத்தப்பட்ட, நாடகத்தன்மை கொண்ட பயங்கரவாதச் செயலாகும். பாதிரியார் அருள் தாஸ் மற்றும் ஷேக் ரஹ்மான் ஆகியோரின் கொலைகளும் இதே செய்தியையே மேலும் வலுப்படுத்தின" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தாரா சிங் இறுதியில் விடுதலை செய்யப்படுவாரா என்பது அல்ல, அந்த முடிவை அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதும், சிறுபான்மை சமூகங்களுக்கு ஏதேனும் நம்பிக்கையளிக்கும் உறுதி அளிக்கப்படுகிறதா என்பது தான் இப்போது பார்க்க வேண்டியதாக உள்ளது" என்று தயால் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































