You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காங்கிரஸ், பாஜக அல்லாத திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி சாத்தியமா? திடீரென பரவிய தகவலும் பின்னணியும்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. இந்தத் தகவலை திமுக தரப்பு உடனடியாக மறுத்துவிட்டது.
அதேசமயம், செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, "எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை, தீர்க்கமான முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி 'கிங் மேக்கர்' அல்ல, அவரே 'கிங்'" என கூறியிருந்தார்.
அரசியலில் இரு துருவங்களாக உள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவிய தகவல், உண்மையான முயற்சிகளை அறிந்து வெளியானதா அல்லது யூகங்களாக பரவியதா, வதந்தியாக பரப்பப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இப்படியொரு முயற்சி நடந்தது உண்மை என்று பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
திமுக, அதிமுக இரு கட்சியினரும் அதை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
அப்படி நடந்தால் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் அழிந்துவிடுமென்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர்.
சமூக ஊடகங்களில் பரவிய தகவல்
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி தங்களின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை வழங்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தத்தமது நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இதுகுறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளன.
இந்நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமையப போவதாக பரவிய அந்தத் தகவல், காட்சி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பேசுபொருளானது. வடஇந்திய ஊடகங்களிலும் இந்தத் தகவல் பரவி, விவாதத்தைக் கிளப்பியது.
மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், ''இப்படிச் செய்யாதீர்கள்!'' (DONT DO THIS) என்று வெளியிட்ட காணொளி, பெரிதும் கவனம் ஈர்த்தது. அவர் நேரடியாக திமுக–அதிமுக கூட்டணியைப் பற்றி அதில் குறிப்பிடாவிட்டாலும் அவர் அதைத்தான் குறிப்பிடுவதாகக் கூறி, காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்கள் மேலும் சூடுபிடித்தன.
திட்டவட்டமாக மறுத்த திமுக!
திமுக தரப்பிலிருந்து சில மணிநேரத்துக்குள் இதற்கான எதிர்வினை வெளிப்பட்டது.
திமுக எம்.பி கலாநிதி வீராசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "காங்கிரஸின் துரோகத்தையும் (ஒருவேளை மற்ற கூட்டணிக் கட்சிகளின் துரோகத்தையும்) மீறி, திமுக ஒரு திறமையான எதிர்கட்சியாக செயல்பட முடிவு செய்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதை நிறுத்துமாறு பாஜகவை அதிமுக வற்புறுத்துகிறது. இது மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கட்டும். 6 மாதங்கள் இடையூறு செய்யாமல் பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலமைப்பு நெருக்கடியையோ அல்லது மற்றொரு தேர்தலையோ திமுக விரும்பவில்லை. பள்ளி குழந்தைகளுக்கு இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை புதிய அரசு தொடர வேண்டும்.'' என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், சென்னை பசுமைவழிசாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலையோ இதுகுறித்த கேள்விக்கு, "எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை, தீர்க்கமான முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமி 'கிங் மேக்கர்' அல்ல, அவரே 'கிங்' தான்" என கூறியிருந்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன், ''இப்படியொரு தகவலைப் பரப்பிய மூத்த பத்திரிகையாளர்களிடம்தான் இதைக் கேட்க வேண்டும். இப்படியொரு விஷயம் நடப்பதற்கு துளியாவது சாத்தியம் உள்ளதா என்று கொஞ்சம் யோசித்திருந்தால் நிச்சயமாக இதைப் பரப்பியிருக்க மாட்டார்கள். பொய் நீண்ட காலம் நிலைக்காது என்பது ஒரே நாளில் தெரிந்துவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அப்படி ஒரு தகவல் குறித்து கருத்து கூறினால் எங்களுடைய தரம் குறைந்துவிடுமென்று நினைக்கிறேன்.'' என்றார்.
திமுக தரப்பில் கூறியது என்ன?
இதுகுறித்து பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, "பத்திரிகையாளர்கள் சிலர் அடிப்படை அறமின்றி செயல்படுவதன் வெளிப்பாடு இது" என்றார். இந்தத் தகவல் எந்தப் பத்திரிகையாளரால், யாருடைய தூண்டுதலின்பேரில் எப்படிப் பரவத் துவங்கியது என்பதை உண்மையான ஊடகங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்ற சரவணன் அண்ணாதுரை, மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு விஷயத்தை திசைதிருப்பும் நோக்குடனே இந்தத் தகவல் பரப்பப்பட்டது என்றார்.
பிபிசியிடம் பேசிய சரவணன் அண்ணாதுரை, ''திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நன்றி கூற சென்றபோது, மக்களிடம் ஏற்பட்ட நெகிழ்ச்சி, அதைத்தொடர்ந்து அவரைத் தோற்கடித்தது தொடர்பாக மக்களிடம் பரவிய அனுதாப அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை திசைதிருப்பவே இவ்வாறு செய்யப்படுகிறது.'' என்றார்.
ஊடகவியலாளர்களை தூண்டிவிடுவது அரசியல் கட்சி நிர்வாகிகளா?
இந்தத் தகவலை யார் கிளப்பியிருந்தாலும் ஊடகங்கள் இதைப் புறம்தள்ளியிருக்க வேண்டுமென்கிறார், அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல். இதனால் மற்ற விஷயத்தை திசை திருப்பவும் முடியாது என்கிறார் அவர்.
பிபிசி தமிழிடம் பேசிய பாபு முருகவேல், ''உண்மையிலேயே இப்படியொரு தகவல் எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை. ஆனால், அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என்ற விஷயத்தை ஊடகங்கள் எப்படி எளிதாக எடுத்துக்கொண்டன என்பது புரியவில்லை. அப்படி நடந்தால் அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டையும் வீழ்த்திவிட்டு தவெக மொத்தமாக ஜெயித்துவிடும். அப்படி செய்வது இரு கட்சிகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அது என்றைக்குமே சாத்தியமேயில்லை.'' என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா கூறுகையில், "தமிழக அரசியலில் இன்னும் எத்தனை வெற்றி, தோல்விகள் நிகழ்ந்தாலும், இதுபோன்ற ஒரு முயற்சியை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே எடுக்க வாய்ப்பில்லை" என்றார்.
''யாரோ எதற்காகவோ தூண்டிவிடும் ஒரு விஷயத்தை, சில ஊடகவியலாளர்களும், அரசியல் விமர்சகர்களும் எந்தவொரு நம்பகத்தன்மையும், அடிப்படை அறமும் இன்றி பரப்பிவிடுகின்றனர். இது தமிழ் ஊடக உலகில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்று நான் கருதுகிறேன். ஒருவேளை அப்படிச் செய்தால், அடுத்த தேர்தலில் தவெக 200 தொகுதிகளுக்கும் மேலாக வென்றுவிடும்.'' என்றார் துரை கருணா.
''அதேநேரத்தில், இவற்றில் ஒரு சில தகவல்கள், அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாகளிடம் இருந்து ஊடகவியலாளர்கள் மூலமாக பரப்பப்படுவதும் உண்மை. யாரிடமிருந்து தகவல் வந்தாலும் பிரேக்கிங் நியூஸ் போடுவதிலும், சமூக ஊடகங்களில் பதிவிடுவதிலும் ஊடகவியலாளர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.'' என்றார் அவர்.
பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், ''அது வதந்தியோ, யூகமோ கிடையாது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அதற்கான முயற்சிகள் நடந்தன. அது உண்மைதான். நான் கூட்டணி ஆட்சி என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது நடக்கவே கூடாது என்றுதான் நான் பதிவிட்டேன். அதற்குப் பின் அதில் என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.'' என்றார்.
காங்கிரஸ், பாஜக அல்லாத திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி சாத்தியமா?
தற்போதைய நிலையில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களில் தவெக வென்றுள்ளது. இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் பட்சத்தில் சட்டப்பேரவையின் பலம் 233 ஆகிவிடும். தவெக மற்றும் காங்கிரஸ் 112 போக, திமுகவுக்கு 59 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக, கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் அடக்கம்.
இவை தவிர்த்து, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 2 உறுப்பினர்கள் உள்ளனர். தேமுதிகவுக்கு ஒரே ஒரு உறுப்பினர் இருக்கிறார். இதே கூட்டணியில் சொந்த சின்னத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களில் வென்றுள்ளது. ஆக மொத்தம் திமுக கூட்டணியின் தற்போதைய பலம் 68 ஆகும்.
இதேபோன்று, அதிமுக சின்னத்தில் நின்று வென்ற 47 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். பாமகவுக்கு 4 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக மற்றும் அமமுகவுக்கு தலா ஒரு உறுப்பினர் உள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக கூட்டணியின் பலம் 53 ஆகும். இதில், பாஜகவைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிமுக கூட்டணியின் பலம் 52 ஆக இருக்கும்.
திமுக–அதிமுக கட்சிகள் மட்டும் கூட்டணி சேர்ந்தால் 106 உறுப்பினர்களும், காங்கிரஸ், பாஜக தவிர்த்து, இரு கூட்டணிகளின் மொத்த உறுப்பினர்களும் 120 ஆக இருப்பார்கள். இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும் இணைந்தால் மட்டுமே, ஆட்சியமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதே தமிழக சட்டப்பேரவையின் இப்போதைய உறுப்பினர் கணக்காக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு