சன்ரைசர்ஸ் அணி முதலிடம்: கேட்ச்களுடன் ஆட்டத்தையும் கோட்டை விட்ட பஞ்சாப் கிங்ஸ்

    • எழுதியவர், நிதிஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

மும்பை, லக்னௌ ஆகிய இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளேஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்தேவிட்டது. கொல்கத்தா அணி எஞ்சிய ஐந்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்ல இனி ஆடவிருக்கும் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டும். ஆனால் அதில் இரண்டு போட்டிகள் பலம் வாய்ந்த பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளோடு உள்ளன.

மீதமிருக்கும் 6 அணிகளுக்கு இடையே பிளேஆஃப் வாய்ப்புக்கு கடும் போட்டி நிலவுகிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாபுக்கும் மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான மோதல் நேற்று (மே 06). இரு அணிகளுமே தங்களின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பெருமளவு நம்பியிருக்கின்றன. பவர்ப்ளேயில் அந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை வைத்து ரன்களை குவிப்பது, எஞ்சிய ரன்களை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்த்துக்கொள்வது என இரு அணிகளின் ஆட்டமுறையும் ஏறக்குறைய ஒன்றுதான்.

சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனிங் இணையான அபிஷேக் சர்மாவும் ஹெட்டும் இணைந்து பத்து இன்னிங்ஸ்களில் இதுவரை 543 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 208.05 ஸ்ட்ரைக் ரேட். பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான ப்ரியான்ஷ் ஆர்யாவும் ப்ரப்சிம்ரன் சிங்கும் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் 362 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். 242.5 ஸ்ட்ரைக் ரேட்.

இப்படி சம பலம் பொருந்திய இரு அணிகளும் மோதிய நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது பஞ்சாப். அந்த அணியில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருந்த சஷாங் சிங்கும் பெர்குசனும் அணிக்கு மீண்டும் திரும்பியிருந்தனர். ஹைதராபாத் அணியிலும் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாமல் இருந்த நிதிஷ் குமார் ரெட்டி மீண்டும் களம்கண்டார்.

ரன் மழை பொழிந்த ட்ராவிஷேக்

பஞ்சாப் வீரர் அர்ஷதீப் சிங்குக்கு இது மறக்கவேண்டிய சீசன். சர்வதேச டி 20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியிருக்கும் இந்திய வீரரான அர்ஷ்தீப், இந்த சீசனில் ஒன்பது போட்டிகளில் ஆடி பத்து விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். எகானாமியும் மிக அதிகம் (10.38). அவரின் மோசமான ஃபார்ம் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. அவரின் முதல் ஓவரிலேயே 11 ரன்கள். யான்சன் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரி என அபிஷேக் மட்டுமே 20 ரன்கள். அர்ஷ்தீப் வீசிய மூன்றாவது ஓவரிலும் 16 ரன்கள்.

நான்காவது ஓவரில் பெர்குசன் வந்துதான் இந்த இணையை பிரிக்கவேண்டியதாக இருந்தது. 35 ரன்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயரிடம் மிட் ஆப் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அபிஷேக். பவர்ப்ளே முடிவில் ஸ்கோர் 79/1.

இந்த சீசனில் ஹைதராபாத் அணியின் பவர்ப்ளே ரன் ரேட் 11.75, தொடரிலேயே இதுதான் அதிகம். ஏழாவது ஓவருக்கு வந்த வேகத்தில் ஹெட்டை அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினார் சஹல். பெர்குசன் வீசிய எட்டாவது ஓவரின் முதல் பந்திலேயே இஷான் கிஷனும் அவுட்டாகியிருக்க வேண்டியது. கைக்கு வந்த கேட்ச்சை தவறவிட்டார் கூப்பர் கானல்லி.

பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பரிதாபங்கள் அதோடு நிற்கவில்லை. அடுத்த ஓவரில் க்ளாஸன் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் சஷாங். டக் அவுட்டில் கன்னம் சிவக்க இதை பார்த்தபடி இருந்தார் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பாண்டிங். சஹலின் மூன்றாவது ஓவரில் மீண்டும் ஒரு கேட்ச் ட்ராப். இம்முறை தவறவிட்டது பெர்குசன். கேட்ச் கொடுத்தது இஷான் கிஷன். பாண்டிங், கேப்டன் ஷ்ரேயாஸ் இருவரும் கோபத்தில் தகித்துக் கொண்டிருந்தார்கள். அதே ஓவரில் ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் தவறவிட்டார் ப்ரப்சிம்ரன் சிங்.

இத்தனை வாய்ப்புகளை கொடுத்தும் பஞ்சாப் அணி கோட்டை விட்டபின் சும்மா இருப்பாரா கிஷன். வைஷாக் விஜயகுமார் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து அரைசதம் அடித்தபின் தான் அவுட்டானார். அதன்பின் வந்த நிதிஷ்குமார் ரெட்டியும் ரன்ரேட்டை தக்கவைக்க அதிரடி காட்ட, சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறந்தன. கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 61 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். இறுதி ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 235/4. க்ளாஸன் 43 பந்துகளில் 69 ரன்கள்.

சொதப்பிய பஞ்சாப் பேட்ஸ்மேன்கள்

இந்த இமாலய இலக்கை அடைய பஞ்சாப்பின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தங்களின் வழக்கமான அதிரடியை காட்டவேண்டியது அவசியம். ஆனால் முதல் ஓவரிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் அழகாய் ஷார்ட் பாலுக்கான ஃபீல்டிங் செட் செய்துவிட்டு கம்மின்ஸ் பந்துவீச, எதிர்பார்த்தபடியே அதை தூக்கி அடிக்க முயன்று டீப் ஸ்கொயர் பக்கம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ப்ரியான்ஷ் ஆர்யா.

அடுத்த ஓவரில் நிதிஷ் குமார் வீசிய முதல் பந்திலேயே ப்ரப்சிம்ரன் சிங்கும் அவுட். களத்தில் கடைசிவரை நின்று ஆடவேண்டிய பொறுப்பு ஷ்ரேயாஸ் ஐயருக்கு. ஆனால் அவருமே ஐந்து ரன்களில் இஷான் மலிங்கா பந்தில் அவுட். ஸ்கோர் நான்கு ஓவர்களில் 29/3.

ஆட்டத்தின் முடிவு கிட்டத்தட்ட அப்போதே தீர்மானமாகிவிட்டது. ஆனால், கானல்லியும் ஸ்டாய்னிசும் விடாப்பிடியாய் சேஸிங்கை தொடர்ந்தார்கள். அவர்களின் அதிரடியில் பவர்ப்ளே முடிவில் 57/3 என்கிற கௌரவமான நிலையை எட்டியது பஞ்சாப்.

அடுத்த ஓவரிலேயே ஸ்டாய்னிசும் அவுட். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த சுயான்ஷ் ஹெக்டே இப்போது களத்தில். இந்த ஆட்டத்திலும் அவர் அதிவேகத்தில் ரன்கள் சேர்த்தாலும் அதிகநேரம் களத்தில் நிற்க முடியவில்லை. 25 ரன்களுக்கு அவர் அவுட்டானபோது ஸ்கோர் 114/5. ஓவர்கள் 12. எட்டு ஓவர்களில் 122 ரன்கள் தேவை. ஓவருக்கு கிட்டத்தட்ட 16 ரன்கள். கைவசம் விக்கெட்களும் இல்லாத காரணத்தால் இந்த இலக்கு என்ன முயன்றாலும் எட்டமுடியாத இலக்கானது.

மோசமான பேட்டிங், அதைவிட மோசமான ஃபீல்டிங் என தொடர்ந்து தடுமாறிவரும் சஷாங் சிங் இந்த போட்டியிலும் நான்கு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வெற்றி பெற முடியாவிட்டாலும் முடிந்தவரை இலக்கை நெருங்கி நெட் ரன்ரேட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக இறுதிவரை போராடினார்கள் கூப்பர் கானல்லியும் மார்க்கோ யான்சனும். 14வது ஓவரில் 34 பந்துகளில் அரைசதம் கடந்த கொனல்லி அடுத்த 23 பந்துகளில் சதத்தையும் கடந்தார். ஐ.பி.எல்லில் அவரின் முதல் சதம் இது. இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டநாயகன். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.

ஃபீல்டிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் பஞ்சாப்

கேட்ச்கள் ஆட்டத்தை வென்று கொடுக்கும் (Catches win matches) என்பது கிரிக்கெட்டில் மறுக்க முடியாத உண்மை. இந்தத் தொடரில் அதிக கேட்ச்கள் தவறவிட்ட வீரர்கள் இருவர். ஒருவர் சென்னை அணியின் துபே. அதனால்தான் இப்போது அவரை இம்பேக்ட் பிளேயராக பேட்டிங்குக்கு மட்டும் களமிறக்கத் தொடங்கியிருக்கிறது சென்னை அணி. மற்றொரு வீரர் பஞ்சாபின் சஷாங் சிங்.

இரண்டு ஆட்டங்களுக்கு முன் ஒரே போட்டியில் அடுத்தடுத்து மூன்று கேட்ச்களை தவறவிட்டார் சஷாங். அதன்பின், காயம் காரணமாக இரு போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்டார். சக வீரரான அர்ஷதீப் சமூக வலைதளத்தில் வெளிப்படையாக அவரின் ஃபீல்டிங் திறமையை கேலிக்குள்ளாக்கி ரீல்ஸ் போடுமளவுக்கு இருந்தது சஷாங்கின் பீல்டிங் திறன்.

இரண்டு போட்டிகளுக்கு பின் நேற்று ஆடி, அந்தப் போட்டியிலும் முக்கியமான கேட்ச்சை தவறவிட்டார் சஷாங். ஒருவேளை சஷாங், கானல்லி, பெர்குசன் மூவரில் இருவர் கேட்ச்களை ஒழுங்காக பிடித்திருந்தால் இஷான் கிஷன், க்ளாஸன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருப்பார்கள். வெற்றி பஞ்சாப் வசமாகியிருக்கும். சஹல் மனம் வெதும்பியிருக்க மாட்டார். இதற்கும் காரணம் இருக்கிறது.

சஹல் இந்த சீசனில் மட்டும் ஒரு பவுலராக 16 கேட்ச் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதில் 8 மட்டுமே கேட்ச்சாகி விக்கெட்களாக மாறியிருக்கின்றன. இந்த சீசனில் அதிக கேட்ச் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த பவுலர்களில் சஹலுக்கே முதலிடம். அவர் மனமுடைய இதுவே காரணம்.

ஆடியிருக்கும் பத்து போட்டிகளில் 16 கேட்ச்களை தவறவிட்டிருக்கிறது பஞ்சாப் அணி. அவர்களின் கேட்ச் சதவிகிதம் 71.43 தான். தொடரிலேயே மோசமான கேட்ச் சதவிகிதம் கொண்டிருக்கும் அணி பஞ்சாப் தான். அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கும் இதுவே பிரதான காரணம். 'கேட்ச் தவறவிடுவது ஒரு வைரஸை போல எங்கள் அணியை தொற்றிக்கொண்டுள்ளது. இதிலிருந்து மீண்டால் மட்டுமே நாங்கள் அடுத்தடுத்து வெற்றிகளை பெறமுடியும்' என பயிற்சியாளர் பாண்டிங் வெளிப்படையாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமை மோசம். அவர் சொன்னதை போல தங்கள் ஃபீல்டிங் திறனை பஞ்சாப் மேம்படுத்திக்கொண்டால் மட்டுமே அந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு