"மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து" - த.வெ.க. அளித்த விளக்கம் என்ன?

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு மற்றும் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை என தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சர்ச்சை என்ன?

இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வந்தே மாதரம் முதலில் ஒலிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து அடுத்தடுத்து ஒலிக்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினர். ஆனால் இன்று மாலை நடைபெற்ற தற்காலிக பேரவைத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் இதே வரிசையில் தான் பாடல்கள் ஒலிக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் மரபுகளை மீறுவதாக உள்ளது என அரசியல் கட்சிகள் விமர்சித்தன. அதோடு தமிழ்த்தாய் முதலில் பாடப்படும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.

தலைவர்களின் விமர்சனம் என்ன?

இன்று நடைபெற்ற தமிழக முதலமைச்சர் பதவி ஏற்பு நிகழ்வில் பாரம்பரிய மரபு மாற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர் மாளிகையின் உத்தரவுப்படி இந்த நிகழ்வை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"இந்த நிகழ்ச்சி நிரலில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மூன்றாம் நிலையில் வைத்தது மரபு மீறிய செயலாகும். இந்த தவறுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழ்நாடு அரசு கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முதன் முதலில் தமிழ் தாய் வாழ்த்துப் பாடாமல் வந்தேமாதரம் பாடப்பட்டது தமிழ்நாட்டின் மரபை மீறிய‌ நிகழ்வு ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், "தமிழ் மொழி வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதை ஏற்கவே முடியாது. புதிய அரசு பதவி ஏற்பு விழா, ஆளுநர் வழிகாட்டுதலில் நடைபெற்றதால் "வந்தேமாதரம்" முதன்மைப் படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டின் அரசு விழாக்களில் தமிழ் தாய் வாழ்த்து தொடக்கத்திலேயே பாடப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை பற்றி குறிப்பிட்ட திருமாவளவன், "இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்தப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும்." என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், "இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும்." என்றார்.

இந்தச் சூழலில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை தமிழக வெற்றிக் கழகம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், "ஆளுநர் மாளிகை உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி நிரலில் 'வந்தே மாதரம்' பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழை மூன்றாம் நிலைக்குத் தள்ளியது மரபு மீறிய செயலாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், "வந்தேமாதரம், நாட்டுப் பண் முதல் இரு நிலைகளுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசு இதுவரை அரசு விழாக்களில் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய கீதமும் பாடுவது, நாட்டின் விடுதலைக்கு பிறகு இதுவரை கடைப்பிடித்து வரும் மரபாகும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டதும், பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ள முடியாமலும் இருந்தது. இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இது ஏற்புடையதல்ல. ஆகவே, அரசு நிகழ்ச்சிகளில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவின் பதில் என்ன?

இந்த நிலையில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை," என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தவெக அரசுக்கு வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை எனக் கூறும் அவர் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாவது என்றும் தெரிவித்தார். "இன்று பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை." என்றார் ஆதவ் அர்ஜுனா.

இன்றைய நிகழ்வில் நடந்ததை விவரித்துக் குறிப்பிட்ட அவர், "இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!" என்றும் தெரிவித்தார்.

மேலும் அவரது அறிக்கையில், "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு