ராவண வதம் இல்லை, 76 நாட்கள் கொண்டாட்டம் - தனித்துவமான தசராவின் 600 ஆண்டுக்கால மரபு

பட மூலாதாரம், Vimal Minj
- எழுதியவர், அலோக் புத்துல்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பஸ்தர் தசரா பண்டிகையின் தனிச்சிறப்பு, இதில் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு குறிப்பிட்ட பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதுதான்.
இந்தியாவின் பிற பகுதிகளில் ராவணனின் உருவ பொம்மைகளை எரித்து தசரா பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் வனப்பகுதியில் பிரமாண்டமான மரத்தேர் பவனி வருகிறது. இங்கு ராம்லீலா நிகழ்ச்சிகளோ, ராவண வதமோ, அம்பில் இருந்து வில் எய்யும் சடங்குகளோ தசராவின்போது மேற்கொள்ளப்படுவதில்லை.
பஸ்தரில் தசரா என்பது பகவான் ராமர் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விழா அல்ல. மாறாக, இப்பகுதியின் காவல் தெய்வமாக வழிபடப்படும் அன்னை தந்தேஸ்வரியின் பெருமையைப் போற்றும் திருவிழா. இந்த விழா மொத்தம் 76 நாட்கள் நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவின் தனித்துவமான அம்சம், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டிருப்பதுதான். ஒரு கிராமத்தினர் தேருக்கான மரத்தை வழங்குகின்றனர், மற்றொரு கிராமத்தினர் தேரை இழுப்பதற்கான கயிறுகளைத் தயாரித்து வழங்குகின்றனர், இன்னொரு கிராமத்தினர் தேரை இழுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, விழா எவ்விதத் தடங்கலுமின்றி நடைபெற வேண்டி, ஒன்பது நாட்கள் ஒரு குழிக்குள் அமர்ந்து பிரார்தனை செய்யும் 'யோகிகள்' மற்றொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு தேருக்கான மரம் ஒரு கிராமத்தில் இருந்தும், கைவினைஞர்கள் வேறொரு கிராமத்தில் இருந்தும், கயிறுகள் மற்றொரு பகுதியில் இருந்தும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல, 'வெற்றித் தேரை' இழுக்கும் உரிமை, கிலேபால் பர்கானாவை சேர்ந்த மரியா பழங்குடியின மக்களுக்கு மட்டுமே உரியதாக உள்ளது.

பட மூலாதாரம், Vimal Minj
பஸ்தர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பஸ்தர் தசரா விழாக் குழுவின் தலைவருமான மகேஷ் காஷ்யப் இதுகுறித்துப் பேசியபோது, "பஸ்தரில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இதில் பங்கேற்பதுதான் இந்த தசரா விழாவின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து, உலகப் புகழ்பெற்ற பஸ்தர் தசரா விழாவைக் கண்டு ரசிக்கின்றனர். இந்த விழாவில் நாங்கள் உருவ பொம்மைகளை எரிப்பதில்லை" என்றார்.
இந்தியாவின் பிற பகுதிகளில் தசரா பண்டிகையின்போது ராவணனின் உருவ பொம்மையை எரித்துக் கொண்டாடுவார்கள். ஆனால், பஸ்தரில் இந்த விழா மக்களின் பங்கேற்பாலும் கூட்டு உழைப்பாலும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மக்கள் ஒன்றிணைந்து பிரமாண்டமான தேரை உருவாக்கி, அதை ஊர்வலமாக இழுத்துச் செல்கின்றனர். விழா முடிந்ததும் அனைவரும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிவிடுவார்கள். அடுத்த ஆண்டு விழா தொடங்கும்போது மீண்டும் ஒன்றுகூடி, அதே மரபைத் தொடர்கிறார்கள்.
600 ஆண்டுகள் பழமையான மரபு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர் புருஷோத்தம தேவ், ஒடிசாவின் ஜெகந்நாதர் புரிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. முரியா, பாத்ரா, கோண்ட், தகத், மஹ்ரா உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மற்றும் சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் அவருடன் சென்றனர். மன்னர் வாகனங்கள் எதையும் பயன்படுத்தாமல், நடைபயணமாக புரிக்கு பயணம் மேற்கொண்டார்.
புரி மன்னர், புருஷோத்தம தேவுக்கு 16 சக்கரங்களைக் கொண்ட ஒரு தேரைப் பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. பஸ்தருக்கு திரும்பியதும், அந்தத் தேரின் சக்கரங்களைப் பிரித்து, நான்கு சக்கரங்களை ஜெகந்நாதருக்கும், மீதமுள்ள 12 சக்கரங்களை தேவி தந்தேஸ்வரிக்கும் அவர் அர்ப்பணித்தார். அன்றிலிருந்து, பஸ்தர் தசரா விழாவின்போது தேவி தந்தேஸ்வரியின் புனித குடையான சத்ரா தேரின் மீது வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
ஆடி மாத அமாவாசை நாளன்று காலையில், காட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய மரக்கட்டை ஒன்று ஜகதல்பூரில் உள்ள தந்தேஸ்வரி கோயிலின் முன்பாக வைக்கப்படுகிறது. துர்லு கோட்லா என்று அழைக்கப்படும் இந்த மரக்கட்டையும், தேர் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் வைத்து வழிபடப்படுகின்றன. பத் யாத்ரா என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கே, பஸ்தர் தசரா விழாவின் தொடக்க நிகழ்வாகும்.
இதையடுத்து, தேரைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு சுமார் பத்து நாட்களில் 40 அடி உயரமுள்ள தேர் உருவாக்கப்படுகிறது. ஜார்-உமர்கான், பேடா-உமர்கான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்கள், இயந்திரங்களின் உதவியின்றி பாரம்பரியக் கருவிகளான பாசுலா என்ற சிறிய கோடரி போன்ற கருவி, கோடரி, பிந்தனா எனும் துளையிடும் கருவி போன்றவற்றைக் கொண்டு தேரை உருவாக்குகிறார்கள்.
தேரின் வெவ்வேறு பாகங்களுக்குத் தேவையான மரங்களைச் சேகரிக்கும் பொறுப்பு குறிப்பிட்ட கிராமங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராம மக்கள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பணியைச் செய்து வருகின்றனர். தேரை இழுப்பதற்கான கயிறும் மரப்பட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தக் கயிற்றைப் பொட்டானார் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கொண்டு வந்து வழங்குகின்றனர்.
புரட்டாசி மாத பித்ரு மோக்ஷ அமாவாசை நாளன்று மாலை, பஸ்தர் தசரா விழாவின் மிகவும் வியப்பூட்டும் சடங்குகளில் ஒன்று நடைபெறுகிறது. பங்காரம் சௌக்கில் உள்ள கச்சிங்குடியில், பாங்கா சமூகத்தைச் சேர்ந்த திருமணமாகாத கன்னிப்பெண் ஒருவர், கச்சின் தேவி எனும் தெய்வத்தின் அருளைப் பெறும் ஊடகமாகச் செயல்படுகிறார். பின்னர், அவர் முட்களால் ஆன ஊஞ்சலில் அமர்ந்து, தசரா கொண்டாட்டங்களைத் தொடங்குவதற்குத் தெய்வத்தின் சார்பில் அனுமதி வழங்குகிறார். இந்தச் சடங்குடன் விழாவின் அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்குகின்றன.
மாவட்ட ஆட்சியராக விரும்பும் தேவியின் பிரதிநிதி
பஸ்தர் தசரா விழாவைத் தொடங்குவதற்கு முன்பு, கச்சின் தேவியிடம் அனுமதி கோரப்படுகிறது. மிர்கான், சந்தார், திக்டா உள்ளிட்ட பழங்குடியினச் சமூகத்தினர் கச்சின் தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி பிஹு, கடந்த ஐந்து ஆண்டுகளாக கச்சின் தேவியின் சார்பில் சடங்குகளில் பங்கேற்று வருகிறார். எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சியராக வேண்டும் என்பதே அவரது கனவு.

பட மூலாதாரம், Vimal Minj
"நான் கச்சின் தேவியின் பிரதிநிதியாக மாறும்போது, என்னை ஒரு தனிநபராக உணர்வதில்லை. அப்போது என்னால் பிஹுவாக இருக்க முடிவதில்லை. தேவியைப் போலவே நானும் மக்களுக்குத் தரிசனம் அளிக்கிறேன். என்னைப் பார்ப்பதற்காகப் பலர் வருகிறார்கள். பிற பகுதிகளில் இருந்து தெய்வங்களும் என் முன்னிலையில் கொண்டு வரப்படுகின்றன," என்கிறார் அவர்.
பஸ்தர் தசரா விழாவின்போது, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்க, ஒவ்வொரு நாளும் பாரம்பரிய சடங்குகள் நடைபெறுகின்றன.
புரட்டாசி மாதத்தின் வளர்பிறைக் காலத்தில், இரண்டாம் நாள் முதல் ஏழாம் நாள் வரை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான கிராம மக்கள், மரப்பட்டைகளால் செய்யப்பட்ட தடிமனான கயிறுகளை வடம் பிடித்து தேரை இழுக்கின்றனர். தேரில் வலம் வரும் தேவி தந்தேஸ்வரிக்கு, காவல்துறையினர் ஆயுத மரியாதை செலுத்துகின்றனர். பெண்கள் திருஷ்டி கழிக்கும் சடங்குகளைச் செய்து, தேரின் மீது மலர்களைத் தூவுகின்றனர்.
அஷ்டமி நாளன்று நள்ளிரவில், 'நிஷா ஜாத்ரா' என்ற சடங்கு நடக்கிறது. அப்போது, தேவி தந்தேஸ்வரியின் பல்லக்கு, தந்தேஸ்வரி கோயிலில் இருந்து 'நிஷா ஜாத்ரா' கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கோயில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படுகிறது.
இந்தச் சடங்கின்போது விலங்கு பலியும் இடம்பெறுகிறது. மேலும், தெய்வத்துக்குப் படைக்கப்படும் 'போக்-பிரசாதம்' எனப்படும் புனித உணவு, பாரம்பரியமாக அரச குருவின் குடும்பத்தினரால் தயாரிக்கப்படுகிறது.
விஜயதசமி நாளன்று, எட்டு சக்கரங்களைக் கொண்ட 'விஜய ரதம்' எனப்படும் வெற்றித் தேர் வெளியே கொண்டு வரப்படுகிறது. ஊர்வலம் முடிந்ததும், நள்ளிரவில் இந்தத் தேர் சடங்கு முறையில் 'திருடப்பட்டு', கும்தகோட் காடுகளில் மறைத்து வைக்கப்படுகிறது. 'பிதர் ரையினி' என்று அழைக்கப்படும் இந்தச் சடங்கு, பஸ்தர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று.
இதற்கிடையில், கும்தகோட் பகுதியில் ஒடிசா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட தெய்வங்கள் ஒன்று கூடுகின்றன. மறுநாள், அரச குடும்பத்தின் பிரதிநிதி ஒருவர் அந்தப் பருவத்தின் முதல் அறுவடையைத் தெய்வத்திற்குப் படைக்கிறார். இதைத் தொடர்ந்து, பொது மக்களுடன் இணைந்து 'நவ்கானி' எனப்படும் அறுவடைத் திருவிழாவையும் கொண்டாடுகிறார். அதன் பின்னர், தேர் மீண்டும் ஊர்வலமாகப் புறப்படுகிறது.

பட மூலாதாரம், Vimal Minj
முரியா தர்பார்
தசரா திருவிழா, 'முரியா தர்பார்' நிகழ்வுடன் நிறைவடைகிறது. வரலாற்று ஆவணங்களின்படி, இந்த மரபு 1876ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது. மன்னராட்சிக் காலத்தில், பழங்குடிச் சமூகங்களின் பாரம்பரியத் தலைவர்களான மஞ்சி, முக்கியா, சால்கி, நாயக் ஆகியோர் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளை நேரடியாக மன்னரிடம் எடுத்துரைப்பார்கள். இந்த மரபு இன்றும் தொடர்கிறது.
ஆனால், இப்போது மன்னருக்குப் பதிலாக, தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் மக்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து, அவர்களின் குறைகளையும் பிரச்னைகளையும் கேட்டறிகின்றனர்.
முரியா தர்பார் முடிந்ததும், திருவிழாவுக்கு வருகை தந்த தெய்வங்கள் உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படுகின்றன. தண்டேவாடாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மாவலி மாதாவின் பல்லக்கும், தேவி தண்டேஸ்வரியின் புனிதக் குடையான சத்ராவும் பிரமாண்டமான ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது, ஆயுதமேந்திய காவலர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தி தெய்வங்களை வழியனுப்புகின்றனர்.
இத்துடன் தசரா திருவிழா நிறைவடைகிறது. தேர் அதன் இருப்பிடத்திற்குத் திரும்புகிறது, தெய்வங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்கின்றன. தொலைதூரக் கிராமங்களில் இருந்து வந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.
ஆனால், இந்த மரபு இத்துடன் முடிந்துவிடுவதில்லை. அடுத்த ஆண்டும் காட்டில் இருந்து மரங்கள் கொண்டு வரப்படும், கைவினைஞர்கள் தங்கள் கருவிகளைத் தயார்படுத்துவார்கள், கயிறுகள் பின்னப்படும். ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து மீண்டும் தேரை இழுப்பார்கள்.
அதற்குள், பிஹு அடுத்த வகுப்புக்குச் சென்றிருக்கலாம். ஆனாலும், மீண்டும் 'கச்சின் தேவி'யின் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டால், இந்த ஆண்டு அவள் கூறிய அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லக்கூடும்: "அந்தத் தருணங்களில், தான் பிஹு அல்ல!"
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































