You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடைசி வரை போராடிய கெய்க்வாட் - கவுரவமான ஸ்கோரை எட்டிய சிஎஸ்கே
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
ஐபிஎல் 2026 தொடர் பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இரண்டும் 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என்ற ஒரே சாதனையைக் கொண்டுள்ளன.
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியில் இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார். டைட்டன்ஸ் அணியில் அர்ஷத் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் பௌலர் ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சிஎஸ்கே 158 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தப் போட்டியின் தொடக்கம் அதிர்ச்சிகரமாக இருந்தது. பவர்பிளேவில் குஜராத் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசியதால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. சஞ்சு சாம்சன் (11 ரன்கள்), உர்வில் பட்டேல் (4 ரன்கள்) இருவரையும் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் வெளியேற்றினார் ககிஸோ ரபாடா. அடுத்த ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார் இம்பேக்ட் வீரராகக் களமிறக்கப்பட்ட சர்ஃபராஸ் கான்.
இப்படி அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது சிஎஸ்கே. 9வது ஓவரில், 2 ரன்கள் எடுத்திருந்த டெவால் பிரெவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார் மானவ் சூதர். அதனால் 37/4 என்ற நிலையில் சூப்பர் கிங்ஸ் தடுமாறியது.
ஒருபக்கம் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்துகொண்டிருக்க, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் நிதானமாக நிலைத்து நின்று ஆடினார். அவர் ஒருபக்கம் நிலைத்து நிற்க, அதன்பிறகு வந்த ஷிவம் துபே (22 ரன்கள்), கார்த்திக் ஷர்மா (15 ரன்கள்), ஜேமி ஓவர்டன் (18 ரன்கள்) ஆகியோர் சிறு அதிரடி கேமியோக்கள் ஆடினார்கள். அதனால் சூப்பர் கிங்ஸ் ரன்ரேட் மெல்ல உயர்ந்தது.
ஆரம்பத்தில் நிதானம் காட்டிக்கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷத் கான் வீசிய 13வது ஓவரில் இருந்து மெல்ல தன் வேகத்தைக் கூட்டினார். டெத் ஓவர்களில் அவர் பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசியதால் சூப்பர் கிங்ஸ் 150 ரன்களைக் கடந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 12 ஓவர்கள் முடிவில் 51/4 என்ற நிலையில் இருந்த சூப்பர் கிங்ஸ், கடைசி 8 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து மேலும் 107 ரன்கள் சேர்த்தது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கெய்க்வாட், 60 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
சிஎஸ்கேவின் எழுச்சிப் பயணம் தொடருமா?
சஞ்சு சாம்சனின் பேட்டிங் சிஎஸ்கேவுக்கு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தொடக்கத்தில் மூன்று முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டான அவர், கடந்த நான்கு போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு 48 ரன்கள் அடித்து அணியின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளார்.
அதே நேரத்தில், நூர் அகமது தனது பந்துவீச்சு ஃபார்மை மீண்டும் கண்டுபிடித்துள்ளார். கடைசி மூன்று போட்டிகளில் 6.50 என்ற எகானமி ரேட்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
எம்எஸ் தோனி அணியில் பங்கேற்பது குறித்து தெளிவு இல்லை என்ற போதிலும், அணியின் சமநிலை மேம்பட்டு வருகிறது. அகீல் ஹொசைன் போன்றவர்கள் புதிய பந்தை சிறப்பாக கையாளுவதில் முக்கிய பங்கு வகிப்பதும் சிஎஸ்கேவுக்கு பலமாக உள்ளது.
ஆனால், ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் ஃபார்ம் இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.
தடுமாறும் குஜராத் அணி
குஜராத் அணியின் ஓபனர்கள் டிஃபென்சிவ் அணுகுமுறையுடன் விளையாடுவதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஓபனிங் பேட்டர்கள் பலமாக இருந்த போதிலும் பின்வரிசை வீரர்கள் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதும் பிரச்னையாக உள்ளது.
பேட்டிங்கில் உள்ள பிரச்னை ரஷீத் கான், ரபாடா, போன்ற பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை தரக்கூடும்.
டாஸில் நடந்தது என்ன?
டாஸ் வென்ற ஷுப்மன் கில், "நாங்கள் பல விஷயங்களைச் சரியாகச் செய்து வருகிறோம். சிறிய தருணங்களில் வெற்றி பெறுவதுதான் இப்போது முக்கியம். பந்துவீச்சில் நாங்கள் ரன்களை விட்டுக் கொடுக்கும்போது, அந்த மூன்று முதல் நான்கு ஓவர் இடைவெளியில் மிக அதிகமான ரன்களைக் கொடுத்து விடுகிறோம். எனவே, மிடில் ஓவர்களில் சரியான லென்த்தில் தொடர்ந்து பந்து வீசுவதே இப்போதைய தேவை. அதைப்பற்றித்தான் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்." என்று கூறினார்.
பவர்பிளேவில் அதிரடியாக ஆடுவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கில், "ஆடுகளம் சாதகமாக இருந்தால் பவர்பிளேயில் 70-80 ரன்கள் அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும். ஆனால் சூழ்நிலையை கணிப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை அது 170-180 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளமாக இருந்தால், அதற்கேற்ப விளையாட வேண்டும். இறுதியில், நடக்காத ஒன்றைப் பற்றி யோசிப்பதை விட, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு விளையாடுவதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆடுகளம் சற்று காய்ந்த நிலையில் உள்ளது, பெரும்பாலும் ஆட்டம் முடியும் வரை இது மாற்றமில்லாமல் அப்படியேதான் இருக்கும். எனவே, நாங்கள் முதலில் பேட்டிங் செய்வதை விரும்புகிறோம். ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயித்து, அதைத் தற்காத்துக் கொள்ள முயற்சிப்போம். கடந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்ற ரன் வித்தியாசம் எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது." என்று கூறினார்.
தன்னுடைய ஃபார்ம் குறித்துப் பேசிய அவர், "நான் பேட்டிங்கை நன்றாகத் தொடங்கினாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போகிறது. உண்மையைச் சொன்னால், இது எனக்கு அபூர்வமாக நடக்கும் ஒன்றுதான், அடிக்கடி இப்படி நடப்பதில்லை. நான் சொன்னது போல, எனக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கும் வரை அல்லது மற்ற வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அணி வெற்றி பெறும் வரை எனக்குக் கவலையில்லை. ஆனால் எப்போது நான் களத்தில் நிலைத்து நின்று விளையாடுகிறேனோ, அன்று என்னுடைய நாள் என்று உணர்ந்தால், அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது." என்றார்.
பிளேயிங் லெவனில் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தப் போட்டிக்கான சிஎஸ்கே பிளேயிங் லெவனில் உர்வில் பட்டேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் பட்டேல், டெவால் பிரெவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் ஷர்மா, ஜேமி ஓவர்டன், அகீல் ஹொசைன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: சர்ஃபராஸ் கான், முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் வீர், ராமகிருஷ்ணா கோஷ், மேத்யூ ஷார்ட்.
குஜராத் டைட்டன்ஸ்
இந்தப் போட்டிக்கான டைட்டன்ஸ் பிளேயிங் லெவனில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அர்ஷத் கான் இடம்பெற்றிருக்கிறார்.
பிளேயிங் லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாரூக் கான், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், அர்ஷத் கான், மானவ் சூதர், ககிஸோ ரபாடா, மொஹம்மது சிராஜ்.
சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: குல்வந்த் கெஜ்ரொலியா, ராகுல் திவேதியா, கிளென் ஃபிலிப்ஸ், நிஷாந்த் சிந்து, அனுஜ் ராவத்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு