You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல், சூர்யவன்ஷி சதங்கள் வீண் - டெல்லி, ராஜஸ்தான் அணிகள் கேட்ச்களைத் தவறவிட்டு வெற்றியைப் பறிகொடுத்தனவா?
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நேற்று (ஏப்ரல் 25) இரண்டு ஐபிஎல் ஆட்டங்கள் நடந்தன. முதலில் நடந்த போட்டியில், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரிய சேஸை வெற்றிகரமாகத் துரத்தி டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். அடுத்ததாக, ஐபிஎல் வரலாற்றில் நான்காவது பெரிய இலக்கை சேஸ் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
டெல்லியில் நடந்த ஆட்டத்தில், பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த கே.எல்.ராகுல், 20 ஓவர்களும் களத்தில் இருந்து ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது தனிநபர் அதிகபட்ச ஸ்கோரை அவர் பதிவு செய்தார். அதன் காரணமாக 264 என்ற ஸ்கோரைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ். அவர்களின் மிகப் பெரிய ஸ்கோர் இதுதான். இருந்தும், அந்த அணியின் வெற்றிக்கு அந்த ஸ்கோர் போதுமானதாக இல்லை. 7 பந்துகளை மீதம் வைத்து போட்டியை வென்றது பஞ்சாப் கிங்ஸ்.
ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் 15 வயது இளம் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ரன்கள் விளாசி திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக 228 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அபிஷேக் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அதிரடியின் காரணமாக 9 பந்துகள் மீதம் வைத்து அந்த இலக்கை எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
தங்கள் பௌலரின் காயம், சுழலுக்கு ஒத்துழைக்காத ஆடுகளம் என இந்த இரு அணிகளின் தோல்விகளுக்குமே வெவ்வேறு காரணங்களைப் பட்டியிடலாம். ஆனால், இரு அணிகளின் தோல்விக்கும் பெரிய பங்களிப்பை ஏற்படுத்திய ஒற்றை முக்கியக் காரணம் - அவர்கள் கேட்ச்களைத் தவறவிட்டது.
கருண் நாயர் - 3 பந்துகளில் 2 கேட்ச் டிராப்கள்
15வது ஓவரின் கடைசிப் பந்து. 202/4 என்ற நிலையில் இருந்தது பஞ்சாப் கிங்ஸ். 31 பந்துகளில் 63 ரன்கள் தேவை. விப்ராஜ் நிகம் வீசிய பந்தை தூக்கியடிக்க ஷ்ரேயாஸ் ஐயர் முயற்சி செய்ய, பந்து எட்ஜாகி லாங் ஆஃப் திசையில் இருந்த கருண் நாயரை நோக்கிச் சென்றது. சில அடிகள் முன்னால் வந்து கருண் நாயர் எளிதான அந்தக் கேட்சைத் தவறவிட்டார்.
16வது ஓவரின் 2வது பந்து. 29 பந்துகளில் 56 ரன்கள் தேவை. இப்போது பௌலர் குல்தீப். ஷ்ரேயாஸ் ஐயர் அதேபோல் தூக்கி அடிக்க, பந்து மீண்டும் எட்ஜ் ஆனது. ஆனால், இந்த முறை லாங் ஆன் திசைக்கு சென்றது. மறுபடியும் சில அடிகள் முன்னாள் வந்து கேட்சைத் தவறவிட்டார் கருண் நாயர். 3 பந்துகள் இடைவெளியில் 2 கேட்ச் டிராப்கள் செய்தார் சப்ஸ்டிட்யூட் வீரராக வந்திருந்த கருண் நாயர்.
அதில் ஒரு கேட்சை அவர் பிடித்திருந்தாலும் ஆட்டம் மறுபடியும் டெல்லியின் பக்கம் வந்திருக்கும். ஏனெனில், 15வது ஓவரின் மூன்றாவது பந்தில் தான் நேஹல் வதேரா ஆட்டமிழந்திருந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்திருந்தால், அதுவும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை இழந்திருந்தால் அது பஞ்சாப் கிங்ஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். அடுத்து வரவிருந்த மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மார்க்கோ யான்சன் இருவருமே இந்த சீசன் பெரிதாக பேட்டிங் செய்திருக்கவில்லை. அதுவும் டெல்லிக்கு சாதகமாக அமைந்திருக்கக்கூடும். ஆனால், கருண் நாயர் அந்த வாய்ப்புகளையெல்லாம் தன் கைகளுக்கு இடையே நழுவவிட்டார்.
போட்டிக்குப் பிறகு பேசிய டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்ஷர் பட்டேல், "நாங்கள் மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்து வருகிறோம். இதுபோன்ற ஒரு விக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், தோல்வியே தகுதியான முடிவு என்று நான் நினைக்கிறேன்." என விரக்தியோடு கூறினார்.
ஜுரெல், ஹிட்மெயர் & ஜடேஜா - சிறந்த ஃபீல்டர்கள் செய்த தவறுகள்
இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில், முதல் ஓவரின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியிருந்தார் ஜோஃப்ரா ஆர்ச்சர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முந்தைய போட்டியிலுமே அபிஷேக் ஷர்மாவை முதல் பந்திலேயே பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் அவர். இந்த முறையும் அது நடந்திருக்கும். ஆனால், துருவ் ஜுரெல் அந்த வாய்ப்பைத் தவறவிட்டார். இந்த சீசனில் சிறந்த கீப்பர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட ஜுரெல், மிகவும் முக்கியமான வாய்ப்பைத் தவறவிட்டார்.
மணிக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த அந்த பந்தை அபிஷேக் ஷர்மா சரியாக ஆடாமல் போக, பந்து எட்ஜாகி பின்னால் சென்றது. தன் இடதுபக்கம் டைவ் அடித்து பந்தைப் பிடிக்க முயற்சி செய்த ஜுரெல், அதைப் பிடிக்கத் தவறினார். நல்ல ஃபார்மில் இருக்கும், ஆரஞ்ச் கேப்புக்கான போட்டியில் இருக்கும் ஒரு வீரரை முதல் பந்திலேயே வெளியேற்றியிருந்தால், மிகப் பெரிய சேஸின்போது அது அந்த அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அது நடக்கவில்லை.
அதே ஓவரில் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை அதேபோன்ற ஒரு கேட்ச் மூலம் வீழ்த்த உதவினார் ஜுரெல். ஆனால், ஹெட் இந்த சீசனில் சிறந்த ஃபார்மில் இல்லை. அவர் போட்டிகளை மாற்றக்கூடிய செயல்பாடுகளை இம்முறை கொடுக்கவில்லை. ஆனால், அபிஷேக் ஷர்மா கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் விக்கெட் நிச்சயம் ராயல்ஸுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
அடுத்தது 4வது ஓவரில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் அடித்த பந்து தேர்ட் மேன் திசைக்கு சென்றது. ஆனால், பந்தை சரியாகக் கணிக்காமல் கடைசி நொடியில் ஹிட்மேயர் விலகிவிட்டார். அப்போது அபிஷேக் எடுத்திருந்தது வெறும் நான்கே ரன்கள்.
ஆனால், ராயல்ஸுக்கு மூன்றாவது வாய்ப்பும் கொடுத்தார் அபிஷேக். ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்து... துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்தை பேக்வேர்ட் பாயின்ட் திசையில் அபிஷேக் அடித்தார். அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவின் கைகளுக்கே சென்றது. உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்களுள் ஒருவராகக் கருதப்படும் ஜடேஜா அந்த கேட்சைத் தவறவிட்டார்.
இந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் பவர்பிளேவுக்குள்ளேயே 2 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்திருக்கும். அவர்களின் வேகமான பயணத்துக்கு ஒரு சிறு வேகத்தடையாகவாவது அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல், இரண்டு இடது கை பேட்டர்கள் களத்தில் இல்லாத ஒரு சூழ்நிலை முன்பே ஏற்பட்டிருந்தால் ஸ்பின்னர்கள் பிஷ்னாய் அல்லது ஜடேஜாவை முன்னரே பயன்படுத்தக்கூடிய நம்பிக்கையை கேப்டன் ரியான் பராக் பெற்றிருப்பார். அது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், இரண்டு இடது கை பேட்டர்களும் 10வது ஓவர் வரை களத்தில் இருந்ததால் பிஷ்னாய், ஜடேஜா இருவரையும் அதுவரை பராக் பயன்படுத்தவேயில்லை.
ஜுரெல், ஹிட்மெயர், ஜடேஜா என சிறப்பாக கேட்ச் பிடிப்பதற்குப் பெயர் போன மூன்று பேர் அபிஷேக் ஷர்மா கொடுத்த வாய்ப்புகளைத் தவறவிட்டது, ராயல்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வல்லுநர்களையுமே ஆச்சர்யப்படுத்தியது.
இந்த வாய்ப்புகள் மட்டுமல்ல, நித்திஷ் குமார் ரெட்டியின் கேட்சை தேர்ட் மேன் திசையில் நின்றிருந்த பிரிஜேஷ் ஷர்மா தவறவிட்டார். ஆனால், அப்போது சன்ரைசர்ஸ் வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்திருந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய ராயல்ஸ் கேப்டன் பராக், "நாங்கள் சில கேட்ச்களைத் தவறவிட்டுவிட்டோம். அபிஷேக் போன்ற தரமான வீரர்களின் கேட்சுகளைத் தவறவிடக் கூடாது. மைதானத்தில் எங்களது செயல்பாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். நாங்கள் இன்னும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் செயல்பட வேண்டும். அதில் ஃபீல்டிங் மிக முக்கிய பங்கு வகிக்கிறது." என்று கூறினார்.
மேலும் தவறிய கேட்ச்கள்: 3வது பெரிய ஸ்கோரும், 3வது அதிவேக சதமும்
நேற்றைய (ஏப்ரல் 25) போட்டிகளில் தோற்ற இரண்டு கேப்டன்களுமே கேட்ச்களைத் தவறவிட்டது தங்கள் வெற்றியை எப்படி பாதித்தது என்று கூறினார்கள். ஆனால், சொல்லப்போனால் வெற்றி பெற்ற இரு அணிகளுமே கூட பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது அவர்களது ஃபீல்டிங்கால் தான்.
கே.எல்.ராகுல் 12 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் சஷாங்க் சிங். முந்தைய போட்டியில் 3 கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்ட சஷாங்க், ராகுலுக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுக்க, அதன்பிறகு மட்டுமே 140 ரன்கள் எடுத்தார் அந்த கேபிட்டல்ஸ் ஓப்பனர். ஆனால், ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது சஷாங்க் மட்டுமல்ல. அவர் 51 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினார் அந்தப் பந்தை வீசிய வைஷாக் விஜயகுமார். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஐபிஎல் வரலாற்றின் மூன்றாவது பெரிய தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்தார் ராகுல்.
அதேபோல் தான் வைபவ் சூர்யவன்ஷியும் வாய்ப்பு பெற்றார். அவர் 32 ரன்கள் எடுத்திருந்தபோது டீம் மிட்விக்கெட் திசையில் கிடைத்த கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார் அனிகேத் வெர்மா. அதன்பிறகு ஐபிஎல் தொடரின் மூன்றாவது அதிவேக சதத்தை நிறைவு செய்தார் சூர்யவன்ஷி.
நேற்று தவறியவை இந்த கேட்ச்கள் மட்டுமல்ல... ஸ்டாய்னிஸ், முகேஷ் குமார் இருவருமே கேட்ச் பிடித்து பவுண்டரி எல்லையை மிதித்த நிகழ்வு டெல்லி போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலுமே நிகழ்ந்தது.
இப்படிப் பல்வேறு கேட்ச்கள் சமீபமாக தவறவிடப்படுகின்றன. அது போட்டியின் முடிவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன்கள் அதை தற்போது வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு