"கண்ணாடி உடைவதைக் கேட்டேன்" - டிரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த அறை எப்படி இருந்தது?

    • எழுதியவர், கேரி ஓ’டானக்
    • பதவி, முதன்மை வட அமெரிக்க செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நான் எனது கத்தி மற்றும் முட்கரண்டியை அப்போது தான் கீழே வைத்தேன். எனக்கு முன்பு வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடனமாடு அறையின் (பால்ரூம்) பிரதான நுழைவுவாயில் அமைந்துள்ள திசையில் எங்கிருந்தோ சத்தம் வந்ததை நான் கவனிக்கவில்லை.

என்ன சத்தம் வருகிறதென நன்றாக மீண்டுமொரு கேட்க முயற்சித்தேன். சிறிது நேரத்திலே அது பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் ஏற்படுத்தும் சத்தம் என நினைத்தேன்.

பார்வை குறைபாடு உடையவன் என்பதால் நான் சத்தங்களில் கவனம் செலுத்துவேன். கண்ணாடி உடைவதைக் கேட்டேன்.

பிறகு நான் பேசிக் கொண்டிருந்த எனது சக ஊழியர் டேனியலின் தலை என்னைக் கடந்து செல்வதை உணர்ந்தேன். அவர் தரையை நோக்கிச் செல்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எனவே நானும் அவரைப் பின் தொடர்ந்தேன்.

மேசையின் துணிக்கு கீழே மண்டியிட்டவாறு இருந்தேன். மற்றுமொரு சனிக்கிழமை இரவு, மற்றுமொரு அதிபர் நிகழ்வு, மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியில் நான் இருக்கிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.

2024-ஆம் ஆண்டு ஜீலை மாதம் பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடைபெற்ற டிரம்பின் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து நூலிழையில் டிரம்ப் உயிர்பிழைத்த நிகழ்வின்போதும் நான் அங்கு இருந்தேன்.

அதனைத் தொடர்ந்த தருணங்கள் கூச்சல்களாலும் ஓடிக் கொண்டிருந்த மக்களாலும் நிரம்பியிருந்தது.

ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருந்தது. சில வினாடிகளுக்குள் நாங்கள் மேசைக்கு கீழ் இருந்தோம்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட உடனே பலரும் நடைபாதையிலிருந்து பால்ரூமுக்குள் எவ்வாறு சென்றனர் என்பதை மற்றுமொரு சக ஊழியர் விவரித்துக் கொண்டிருந்தார்.

மேசைக்குள் கீழ் நாங்கள் காத்திருந்த 5 அல்லது 10 நிமிடத்திற்கும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் அந்த அறைக்குள் நுழைந்து விருந்துக்காக காத்திருந்த சுமார் 2,500 பேரை நோக்கி சுடப்போகிறாரா என்பதைப் பார்க்க காத்திருந்தோம்.

எங்களுக்குப் பின்னால் இருந்த மேடையிலிருந்து அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸை அமெரிக்க ரகசிய சேவை பிரிவினர் எவ்வாறு அழைத்துச் சென்றனர் என்பதை மற்றுமொரு சக ஊழியர் விவரித்துக் கொண்டிருந்தார்.

மற்ற அதிகாரிகள் தலைக்கவசம் மற்றும் குண்டு துளைக்காக உடைகளை அணிந்துகொண்டு துப்பாக்கியுடன் வேறு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா எனக் கூட்டத்தில் தேடிக் கொண்டிருந்தனர்.

இரவு விருந்துக்கு சற்று முன்பாக நான் சுகாதார செயலாளர் ராபர்ட்.எஃப்.கென்னடி ஜூனியரை பால்ரூமில் பார்த்தேன். அவர் அந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறாரா என்று நான் கேட்டேன். அவர் தான் பசியில் இருந்ததாகவும் நிகழ்வில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் கூறினார். எனக்கு மிக அருகில் இருந்த மேசையில் தான் அவர் அமர்ந்திருந்தார்.

எங்களுக்குப் பின்னாடி 30 மீ தூரத்தில் பிரதான கதவுகள் இருந்தன. எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தனது காதலியை பாதுகாத்தவாறு எங்களுடன் தான் தரையில் இருந்தார். அவருக்கு உதவ ரகசிய சேவை அதிகாரி ஒருவர் அறையைக் கடந்து வந்தார்.

உடனடியாக நம்முடைய எண்ணமெல்லாம் மீண்டும், அதுவும் அதிபருக்கு மிக அருகில் ஏன், எதற்கு, எவ்வாறு துப்பாக்கி ஏந்திய நபர் வந்திருக்க முடியும்? என்கிற கேள்விகளை நோக்கிக் சென்றது.

ஹில்டன் விடுதியைச் சுற்றிய அனைத்து சாலைகளும் விசாரணை அமைப்புகளால் துண்டிக்கப்பட்டு சில மணி நேரத்திற்கு மூடப்பட்டன. ஆனால் நிகழ்வு நடந்த இடத்திலும் பாதுகாப்பு என்பது அவ்வளவு தீவிரமாக இல்லை.

கதவிற்கு வெளியே நின்றிருந்த நபர் என்னுடைய நுழைவுச்சீட்டை சுமார் 6 அடி தூரத்திலிருந்து கடமைக்கென ஒரு பார்வை பார்த்தார்.

நான் அந்த அரங்கிற்குச் செல்ல லிப்டில் சென்றபோது ஒரு அதிகாரி என்னை சோதித்து பார்த்தார். ஆனால் எனது மேலுறைக்கு உள்ளே நான் வைத்திருந்த பொருட்களால் ஏற்பட்ட எச்சரிக்கை மணியை அவர் பொருட்படுத்தவில்லை. எனது உடைமைகளை ஒப்படைக்க வேண்டும் என அவர் கேட்கவில்லை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அங்கிருந்த பாதுகாப்பு ஒரு அதிபர் கலந்து கொள்ளாத ஒரு சாதார வெள்ளை மாளிகை நிருபர்களின் விருந்து நிகழ்ச்சியைப் போல தான் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு நாங்கள் பால்ரூமில் அடைந்திருந்தபோது செய்தியை வழங்குவதற்கும் கூடுதலாக தெரிந்து கொள்வதற்கும் கைப்பேசி சமிக்ஞை பெற தீவிரமாக முயன்றோம்.

அந்த சம்பவத்தின் தீவிரத்தைப் பற்றி நான் அதிகம் சிந்திக்காமல் இருக்க முயன்றேன்.

ஆனாலும் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதைப் பற்றி உங்களின் மனது சிந்திக்காமல் இருக்க முடியாது. உங்களின் அதிர்ஷ்டம் முடிவதற்குள் இந்த நாட்டில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு