ஆபாசக் குறுஞ்செய்தி புகார்: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ பதவி பறிபோகுமா? சட்ட வல்லுநர் விளக்கம்

தவெகவை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்
படக்குறிப்பு, அருள் விக்னேஷ்
    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தமிழ்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் அந்த எம்எல்ஏவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் ஐபிஎஸ் அதிகாரியும் திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருமான ஷ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். புகார் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால், ஒரு எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மட்டுமே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதற்குப் போதுமானதா? குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் பதவியை இழக்க நேரிடுமா?

எப்போது எம்எல்ஏ பதவி பறிக்கப்படும்?

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 8(3)-ன்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் குற்றத்தில் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியில் தொடரத் தகுதி இழப்பார் என்று கூறினார்.

"ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு, அவருக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்தே அவர் மக்கள் பிரதிநிதியாகத் தொடரத் தகுதியிழக்கிறார்," என்று அவர் விளக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், ''கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வழக்கின் விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து நீதிபதி குறைந்தபட்ச தண்டனையையோ அல்லது அதிகபட்ச தண்டனையையோ வழங்கலாம். தண்டனையின் அளவைத் தீர்மானிப்பது நீதிபதியின் முடிவைப் பொறுத்தது'' என்று தெரிவித்தார்.

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான வழக்கில், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தனது எம்எல்ஏ பதவியை இழப்பார் என்றார் அவர்.

மேலும், ஒரு எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது, கைது செய்யப்படுவது அல்லது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது ஆகியவை மட்டும் அவரது பதவியைப் பறிக்காது என்று மனுராஜ் சண்முகசுந்தரம் கூறுகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்
படக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மனுராஜ் சண்முகசுந்தரம்

முன்னாள் சபாநாயகர் கூறுவது என்ன?

விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் இந்த வழக்கிலிருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு எம்எல்ஏ பதவியை இழந்தால் மேலும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் டி. ஜெயக்குமார்
படக்குறிப்பு, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் டி. ஜெயக்குமார்

பிற மாநிலங்களில் பதவியை இழந்த எம்எல்ஏக்கள்

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2019-ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை பெற்றார். இதையடுத்து, அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் துத்தி தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ ராம்துலார் கோண்ட், சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2023-ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கான்பூரின் சிசாமாவ் தொகுதி முன்னாள் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்ஃபான் சோலங்கி, ஒரு பெண்ணின் வீட்டுக்குத் தீ வைத்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதையடுத்து, அவர் எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்: ஆய்வு சொல்வது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஜனநாயக அமைப்பு (Association for Democratic Reforms – ADR) 2026 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வு, மக்கள் பிரதிநிதிகள் மீதான பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை அளிக்கிறது.

நாடு முழுவதும் பதவியில் உள்ள 4,881 எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்த இந்த அறிக்கையின்படி, 187 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதாகத் தங்களது பிரமாணப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் எம்.பி.க்கள்; 168 பேர் எம்.எல்.ஏ.க்கள்.

மாநிலங்களின் அடிப்படையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 69 மக்கள் பிரதிநிதிகள் இத்தகைய வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு இந்தப் பட்டியலில் 15-ஆவது இடத்தில் உள்ளது. இங்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு மக்களவை உறுப்பினர் என மொத்தம் 3 பேர் தொடர்பாகப் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் இருப்பதாக 14 மக்கள் பிரதிநிதிகள் தங்களது தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் தெரிவித்துள்ளனர். இவர்களில் 12 பேர் எம்.எல்.ஏ.க்கள்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
படக்குறிப்பு, அருள் விக்னேஷ் (கோப்புப் படம்)

அரசியல் கட்சிகளின் கோரிக்கை என்ன?

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ சி. அருள் விக்னேஷைக் கைது செய்யக் கோரி காவல்துறை இயக்குநரிடம் திமுக சார்பில் புகார் அளித்துள்ளார்.

பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண் அதிகாரி ஏற்கெனவே புகார் அளித்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசுக்கு ஆளுநர் வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். புகாரை மூடி மறைக்க மாநில அரசு முயன்றதாகக் குற்றம்சாட்டிய அவர், புகாரை மறைக்க முயன்றவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

உள் புகார்கள் குழுவை அமைத்தது அரசு

பெண் அதிகாரியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உள் புகார்கள் குழுவை (Internal Complaints Committee – ICC) அமைத்து தமிழ்நாடு அரசு நவம்பர் 24-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் புகார்கள் குழுவின் தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் எஸ். மதுமதி, சட்டத்துறைச் செயலாளர் பி. சுமதி மற்றும் வெளிப்புற உறுப்பினராக சுனிதா ஜோ ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

இந்தக் குழு 60 நாள்களுக்குள் விசாரணையை முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெறும் என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு