திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே எரியும் தீபத்திலிருந்து சுடரை பெற்று தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றத்தில் மனு

பட மூலாதாரம், @VanniTamizhVCK/X
உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், ஆனால் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய மனு
இந்தநிலையில் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லைவ் லா இணையதளம் தெரிவித்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில், வழக்கத்தின்படி அதிகாரிகள் நேற்று ஏற்றிய தீபம் இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அந்தத் தீபத்தின் சுடரில் இருந்து தீபத்தூணில் உள்ள தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல், மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு முறையிட்டார்.
நாளையோ அல்லது நாளை மறுநாளோ மனுவைப் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அன்றைய தினம் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே மகாதீபம் ஏற்றப்பட்டது.
வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
இது தொடர்பான வழக்கு இன்று (நவம்பர் 25) காலை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தகவலை சட்டச் செய்திகளை வெளியிடும் லைவ் லா இணையதளம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்தரப்பு இந்த விவகாரத்தை எழுப்புவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் தாங்கள் இதை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறிய செயல் என்று தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரிய தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிட்டார். கோவில் அறங்காவலர் குழுவின் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோவிலின் மரபு மற்றும் வழக்கத்தின்படி உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள இடத்தில்தான் தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே ஏற்றப்பட்ட தீபத்தை எடுத்துச் சென்று தீபத்தூணில் ஏற்றியிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதோடு, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என்றும் மற்றொரு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அந்தக் கோரிக்கையை ஏற்காத நீதிபதி அரவிந்த் குமார், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைக் கோருபவர்கள் அதற்கான உரிய மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?
மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காகச் செல்ல வேண்டிய நபர்களின் பெயர்களை கோவில் நிர்வாகம் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது முதல் நவம்பர் 24ஆம் தேதி மாலை வரை, தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு உட்பட்டு அந்த உத்தரவைச் செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இதற்காக மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், மூன்றாவது கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் ஒவ்வோர் அம்சமும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபத்தூணுக்குச் செல்லும் குழுவில் இடம்பெற வேண்டியவர்களின் எண்ணிக்கை, அவர்கள் செல்ல வேண்டிய நேரம், பயன்படுத்த வேண்டிய வழி, அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை, பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகள் கோவில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், காவல் ஆணையர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாகவும், கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ததாக ஆட்சியர் விளக்கம்
நவம்பர் 23ஆம் தேதி இரவு கோவில் செயல் அலுவலரிடம் இருந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 24ஆம் தேதி காவல் ஆணையருடன் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசித்ததுடன், சம்பவ இடத்தையும் நேரில் ஆய்வு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போது பார்வையாளர்கள், செயல் நடுவர்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஆகியோர் பணியில் ஈடுபடுவதற்குத் தயாராக இருந்ததை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு துறை ஆணையரிடமும் கேட்டுக் கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தின் முடிவு என்ன?
திருப்பரங்குன்றம் கோவிலின் அறங்காவலர் குழு, கார்த்திகை மகாதீபத்தை வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே ஏற்ற முடிவு செய்திருந்தது.
கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகள், ஆகம விதிகள் மற்றும் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் மரபுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறங்காவலர் குழு விளக்கியிருந்தது. இதன் காரணமாக, தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குச் செல்ல வேண்டிய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு கோவில் நிர்வாகத்தின் முடிவு முக்கியக் காரணமாக அமைந்ததாக மாவட்ட ஆட்சியர் தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டதா என்ற கேள்வி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நவம்பர் 20ஆம் தேதி வழங்கிய இடைக்கால உத்தரவு, நவம்பர் 24ஆம் தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், கோவில் நிர்வாகம், தொல்லியல் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே தீபத்தூணுக்குச் செல்ல வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டிருந்தாலும், இறுதியில் தீபம் ஏற்றப்படாததற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருபுறம், கோவில் நிர்வாகம் பெயர்களை வழங்காததால் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். மறுபுறம், நீதிமன்ற உத்தரவு இருந்தபோதும் தீபம் ஏற்றப்படாதது வேண்டுமென்றே செய்யப்பட்ட மீறல் என்று மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை, கோவில் நிர்வாகத்தின் முடிவு, மனுதாரர் தரப்பின் வாதங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் எவ்வாறு பரிசீலிக்கிறது என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்.

பட மூலாதாரம், Nainar Nagenthran/X
அரசியல் தலைவர்கள் கூறியது என்ன?
நவம்பர் 24ஆம் தேதி மாலை வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளன.
அதேநேரத்தில், கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளும் மத நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
'முதலமைச்சர் விஜயின் வரலாற்றுப் பிழை' - நயினார் நாகேந்திரன்
தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அரசு நேரடியாக மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்து முதலமைச்சர் விஜய் தெரிந்தே மாபெரும் வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
"இடைத்தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரின் வழிபாட்டு உரிமைகளைப் புறக்கணித்து, நீதித்துறையின் மாண்பை அரசு மதிக்கத் தவறிவிட்டதாக" அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் பலிகடாவாகி உள்ளதாகவும், முன்பு இதே தவறைச் செய்த திமுக ஆட்சியை இழந்தது போல, தவெக அரசின் அழிவுக்கான 'கவுன்ட்டவுன்' தொடங்கிவிட்டதாகவும்" அவர் பதிவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைச் செயல்படுத்தாமல் சட்டத்துறை அமைச்சரே அதற்கு எதிராகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்தார். "சட்டத்தையும் பக்தர்களின் உணர்வுகளையும் அரசு அவமதித்துவிட்டதால், சட்டத்துறை அமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டதாகவும்" தமிழிசை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் செல்ல முயன்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் எல். முருகன், பக்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான தடுப்பு நடவடிக்கைகளை "ஜனநாயகப் படுகொலை" எனக் கடுமையாகச் சாடினார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்ததற்காக அரசு விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
'அரசு தனது கடமையைச் செய்யவில்லை' - எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi K Palaniswami/X
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசின் முடிவை விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்த விவகாரத்தில் தமிழக அரசு தனது கடமையில் இருந்து தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்றும், நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அரசு செயல்படுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், "இந்த விவகாரத்தில் அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாதது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
'முதல்வரை தவறாக வழிநடத்துகிறார்கள்' - அண்ணாமலை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை விமர்சித்துள்ள வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, "நீதிமன்றத் தீர்ப்புகளை அரசு தனது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அணுகக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
"நீதிமன்றத் தீர்ப்புகளை நேர்மையாகச் செயல்படுத்தும்போதுதான் நீதித்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் இடையிலான சமநிலை நிலவும்" என்று கூறியுள்ள அண்ணாமலை, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறக்கணித்து தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாக" குற்றம் சாட்டியுள்ளார்.

பட மூலாதாரம், K.Annamalai/X
மேலும், "முதல்வர் விஜயை சுற்றியுள்ளவர்கள் அவரைத் தவறாக வழிநடத்துவதுடன், அவரைச் சுற்றி ஒரு மாயையான பிம்பத்தையும் உருவாக்கி இருப்பதாகத் தெரிகிறது. அந்தச் சூழலை முதல்வர் உடைக்காவிட்டால் அதன் பாதிப்பு அவருக்கே ஏற்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
"அரசியல் காரணங்கள், அறியாமை அல்லது கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் என எந்தக் காரணம் கூறப்பட்டாலும், அரசியலமைப்புக்கு உட்பட்டு ஆட்சி நடத்துவோம் என்ற உறுதிமொழிக்கு மாறாகத் தமிழக அரசு செயல்பட்டு இருப்பதாகவும், இது வரலாற்றில் அழிக்க முடியாத பிழையாக அமையும்" என்றும் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
'வகுப்புவாத சக்திகளின் சதிகள் முறியடிப்பு' - மாணிக்க தாகூர்
ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் மாணிக்கம் தாகூர், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதை ஆதரித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைக் காரணம் காட்டி பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் பின்புலத்தோடு தேவையற்ற பதற்றத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும், வகுப்புவாத சக்திகளின் சதிகளையும் தமிழ்நாட்டு மக்களும் தமிழக அரசும் இணைந்து முறியடித்துள்ளதாக மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, "தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வரும் ஆகம விதிகள் மற்றும் மரபின்படியே உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் உண்மையான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு இருப்பதாக" அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Manickam Tagore .B/X
"எவ்வித அழுத்தங்களுக்கும் தூண்டுதல்களுக்கும் அடிபணியாமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு இடமளிக்காமல் மத நல்லிணக்கத்தையும் சமூக நீதியையும் பாதுகாத்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அரசின் உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மனதார வரவேற்பதாகவும், இது சமூகநீதி மண் என்பதை தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்து இருப்பதாகவும்" மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
'சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது' - திருமாவளவன்
உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபமண்டபத்தில் மகாதீபத்தை ஏற்றிய மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
"சங்பரிவார்களின் சதி முயற்சியை முறியடித்து தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்" எனத் தெரிவித்துள்ள அவர், "சங்பரிவார்களின் 'வலைப்பின்னல் அரசியல்' வலிமையை அறிந்தவர்களால் எத்தனை நெருக்கடிகளைத் தாண்டி இதைச் சாதித்திருக்க முடியும் என்பதை உணர முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஆட்சிக்கு எத்தகைய நெருக்கடி வந்தாலும், தமிழர் மரபையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதில் உறுதியோடு செயலாற்றியுள்ள தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உளமார்ந்த பாராட்டுகள்" என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Thol.Thirumavalavan/Facebook
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வரம்பு மீறியதாக பெ. சண்முகம் குற்றச்சாட்டு
பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடும் அழுத்தங்களுக்கும் நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணியாமல், தொன்மையான வழிபாட்டு மரபையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் தீபம் ஏற்ற தவெக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
"சங்பரிவாரத்தின் ஆத்திரமூட்டல்களுக்கு இரையாகாமல் மக்கள் அமைதியாக திருக்கார்த்திகை விழாவைக் கொண்டாடியுள்ளதாக" குறிப்பிட்டுள்ள அவர், "கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தேவையில்லாமல் இந்தப் பிரச்னையில் தலையிட்டது வரம்புமீறிய செயல். மதவெறி சக்திகளின் சதிச் செயல்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
"திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதன் மூலம், கோவிலின் தொன்மையான மரபுகளையும், ஆகம விதிகளையும், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்தியுள்ள தவெக அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக" மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கம்போல் இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
'அமைதியும், ஒற்றுமையும் காப்பாற்றப்பட்டுள்ளது' - தமிமுன் அன்சாரி
"வழக்கம் போல் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றி வரலாற்று மரபையும், மத நல்லிணக்கத்தையும் காப்பாற்றிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக" மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு திமுக அரசும், 2014ஆம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் இதே நிலைப்பாட்டையே எடுத்திருந்த நிலையில், தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதைக் கண்டித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், "இதில் வெற்றி-தோல்வி என்பதைவிட அமைதியும் ஒற்றுமையுமே காப்பாற்றப்பட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































