டிரம்பின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள முடியும் என இரான் நம்புவது ஏன்?

பட மூலாதாரம், Anadolu via Getty Images
- எழுதியவர், அமீர் அஜிமி
- பதவி, பிபிசி நியூஸ் பாரசீகப் பிரிவு ஆசிரியர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"உலகம் முழுவதும் இரானின் பொருளாதார தொடர்புகளுக்கு எதிராக பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளோம்" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெஸன்ட், டிஜிட்டல் சொத்துகள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இரானுடன் பொருளாதார ரீதியாக கூட்டணி வைத்திருக்கும் எந்த நாடும் தனிமைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், "பொருளாதார டி-டே" (Economic D-Day) என்று பெஸன்ட் குறிப்பிட்ட இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் ஒலித்த அளவுக்கு இரானில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, இரான் பொருளாதார அமைச்சர் அலி மதனிசாதே, இதை "வழக்கமான அதே பழைய பேச்சு" என்று விமர்சித்தார். மேலும், "எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள இரான் தயாராக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கைகளை இரான் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததாகவும், அவற்றை சமாளிப்பதற்கான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவரது எதிர்வினை சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்: அமெரிக்கா ஏற்கெனவே எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவிட்ட நிலையில், இனி என்ன செய்ய முடியும் என்பதே இரான் தலைவர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கலாம்.
அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக மேலும் விரிவான இரண்டாம் நிலைத் தடைகளை விதிப்பதாக பெஸன்ட் எச்சரித்துள்ளார்.
ஆனால், இந்த அடிப்படைக் கொள்கை புதிதல்ல. பல ஆண்டுகளாக இரான் அமெரிக்கத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இரானுடன் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னர் இருந்ததைவிட பரவலாக அமெரிக்காவால் இந்தத் தடைகளை அமல்படுத்த முடியுமா என்பதுதான் இரானை பொறுத்தவரை முக்கியமான விஷயம்.
அமெரிக்காவின் முற்றுகை ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு கடல் வழியாக ஏற்றுமதி செய்த அளவுக்கு அதிகமான எண்ணெயை ஏற்றுமதி செய்யும் இரானின் திறனை இது குறைத்துள்ளது.
மேலும், பொருட்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்வதையும் கடினமாக்கியுள்ளது.
இரான் ஏழு நாடுகளுடன் நீண்ட நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
தடைகளைத் தவிர்ப்பதற்காக அந்த வழிகளைப் பயன்படுத்திய அனுபவமும் அந்நாட்டுக்கு பல ஆண்டுகளாக உள்ளது.
ஆனால், குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியைப் பொறுத்தவரை, நில வழித்தடங்களால் கடல் வழி வர்த்தகத்தை எளிதில் ஈடுகட்ட முடியாது.
எனவே, முந்தைய தடைகளுக்குப் பிறகும் செயல்பட்டு வந்த வழித்தடங்களை, குறிப்பாக சீனா மற்றும் இரானின் அண்டை நாடுகளுடன் தொடர்புடைய வழிகளை அமெரிக்காவால் முடக்க முடிந்தால், அழுத்தம் மிகவும் தீவிரமாகலாம்.
அது எளிதான காரியம் அல்ல. சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை இந்தத் தடைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அவை சட்டவிரோதமானவை என்றும் தெரிவித்தது.
தடைகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் கூடாது என்று எதிர்க்கும் இரானுக்குள் உள்ள சக்திகளுக்கு பெஸன்ட்டின் அறிவிப்பு வலுசேர்க்கக்கூடும்.
அமெரிக்காவின் பிற வழிமுறைகள் குறைந்துவிட்டதால், அமெரிக்கா மீண்டும் பொருளாதார அழுத்தத்தை கையில் எடுத்துள்ளதாக அவர்கள் வாதிடக்கூடும்.
புதிய ராணுவ நடவடிக்கை பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில், பல ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடைகளாலும் இரானை அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்க வைக்க முடியவில்லை.
மேலும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கும் அமெரிக்கா மிகக் குறைந்த வாய்ப்பையே விட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பிற மத்தியஸ்த நாடுகள் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்கா மேலும் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை.
மீண்டும் விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்கள், ஒப்பந்தத்தை ஆதரிக்கும் இரான் அதிகாரிகளின் நிலையை பலவீனப்படுத்தக்கூடும்.

பட மூலாதாரம், EPA
பணவீக்கமும் பொருளாதார நெருக்கடியும்
போர் தொடங்குவதற்கு முன்பே இரானின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் இருந்தது.
அதிக பணவீக்கம் மற்றும் வேகமாக மதிப்பிழந்து வந்த நாணயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களுடன் சண்டை தொடங்கிய பின்னர் மேலும் மோசமடைந்துள்ளது.
இரானின் நாணயமான ரியாலின் மதிப்பு சரிவு, மக்களிடையே பரவலாகவும் கடுமையாகவும் உணரப்படுகிறது. இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது, தொழில் நிறுவனங்கள் எதிர்காலத் திட்டங்களை வகுப்பதில் சிரமப்படுகின்றன, மக்களின் சேமிப்புகளின் மதிப்பும் குறைகிறது.
எண்ணெய் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள், அரசாங்கத்துக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணியையும் குறைக்கின்றன.
34 வயதான நெகின் என்பவர் (நெகின் அவரது உண்மையான பெயர் அல்ல), தற்போது தனது மாத வருமானம் சுமார் 100 டாலர் (73 பவுண்ட்) மட்டுமே இருப்பதாகக் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், "நான் சினிமா, நாடகம் அல்லது இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில்லை. யாருக்கும் பரிசுகள் வாங்குவதில்லை. பிறந்தநாள் விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. அரசாங்கத்தின் மானியச் சீட்டு இருந்தால் மட்டுமே என்னால் இறைச்சி வாங்க முடிகிறது. இல்லையென்றால், அதை வாங்கும் அளவுக்கு என்னால் செலவிட முடியாது" என்றார்.
இரண்டு குழந்தைகளின் தாயும் இல்லத்தரசியுமான மோனா, போர் தொடங்கியதிலிருந்து தனது கணவர் வேலை இல்லாமல் இருப்பதாகக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " நேற்று தொடங்கிய தடைகளுக்குப் பிறகு, எங்களுக்கு பயமாக இருக்கிறது. போர் தொடங்கியதிலிருந்து என் கணவர் மீண்டும் வேலைக்குச் செல்லவில்லை. அவர் முன்பு கப்பல்களில் வேலை செய்து வந்தார்" என்றார்.
மேலும், "எங்களது செலவுகளை முடிந்தவரை சமாளிக்க முயற்சிக்கிறோம். ஆனால், தேவையற்ற அனைத்து செலவுகளையும், சிறிய ஆடம்பரங்களையும் நிச்சயமாகக் குறைக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்" என்றார்.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக காலம் செயல்பட்டு வருவதாக இரான் கருதக்கூடும். ஹோர்மூஸ் நீரிணையில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டால், எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகள் உயரக்கூடும்.
இது அமெரிக்காவின் பணவீக்கத்தை அதிகரிப்பதுடன், நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்பாக அரசியல் பிரச்னையாகவும் மாறக்கூடும்.
இதனால், இரான் கவனிக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட காலக்கெடு உள்ளது. ஆனால், அமெரிக்கத் தேர்தல்களை நம்பியிருப்பது ஒரு ஆபத்தான முடிவாகும்.
அதற்குள் இரானின் பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்திருக்கக்கூடும்.
மேலும், இடைக்காலத் தேர்தல்களுக்கு அப்பால் இன்னொரு பிரச்னையும் உள்ளது.
டிரம்ப் 2028-ஆம் ஆண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதால், அவரது பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் நிர்வாகம் இரானுடனான மோதலைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், அதனால் ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் அதிக சுதந்திரம் இருப்பதாக உணரக்கூடும்.
எனவே, இரான் இரண்டு நிகழ்வுகளைக் கவனித்து வருகிறது.
ஒன்று, அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள். மற்றொன்று, இரானுக்குள் நடக்கும் உள்நாட்டு நிகழ்வுகள்.
ஒவ்வொரு மாதமும் எண்ணெய் ஏற்றுமதி குறைவதும், வர்த்தகம் பாதிக்கப்படுவதும், ரியால் மீது அழுத்தம் அதிகரிப்பதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்காக காத்திருப்பதை மேலும் செலவுமிக்கதாக மாற்றுகின்றன.
இதனால் இரான் தலைவர்கள் கடினமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது சலுகைகளை வழங்கினால், அழுத்தத்துக்கு அடிபணிந்ததாகத் தோன்றலாம்.
மேலும், அமெரிக்கா தொடர்ந்து மேலும் மேலும் கோரிக்கைகளை முன்வைக்கும் என்று கூறும் கடுமையான நிலைப்பாட்டாளர்களுக்கு அது வலுசேர்க்கலாம்.
டிரம்பின் உத்தி அரசியல் அல்லது பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டால், காத்திருப்பது இரானின் நிலையை மேம்படுத்தக்கூடும்.
ஆனால், பிற்காலத்தில் பலவீனமான பொருளாதாரத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலையையும் இரான் எதிர்கொள்ள நேரிடலாம்.
இப்போது பெரும்பாலான விஷயங்கள் இரானுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தே உள்ளன.
அமெரிக்கா தங்களைத் தண்டிக்கும் என்று கருதி சீன வங்கிகள், பிராந்திய வர்த்தகக் கூட்டாளிகள் மற்றும் நிறுவனங்கள் பின்வாங்கத் தொடங்கினால், பெஸன்ட்டின் நடவடிக்கை இரானின் கணக்கீட்டை மாற்றக்கூடும்.
அப்படி நடக்கவில்லை என்றால், அதற்கு நேர்மாறான விளைவு ஏற்படலாம். சமரசத்துக்கு எதிராக வாதிடும் இரானியர்கள், அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுத்ததாகக் கூறியபோதிலும், அது அதிகார சமநிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறலாம்.
மேலும், இரான் தொடர்ந்து காத்திருக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுவார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

























