நெரிசலில் 41 பேர் பலியான கரூரில் எந்தக் கட்சி வெற்றி? கரூர், கோவை மாவட்ட முடிவுகள்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கடந்த ஆண்டில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தவெக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சம்பவம் நடந்த பகுதி அடங்கியுள்ள தொகுதியில் அதிமுகவும், மற்ற 2 தொகுதிகளில் திமுகவும் வென்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் இந்த மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது.

கரூரில் 2 தொகுதிகளை இழந்துள்ள திமுக, இந்த தேர்தலில் கோவையில் கூடுதலாக 3 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில், கரூரில் ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ள அதிமுக, கோவை மாவட்டத்தில் அதிமுகவும் அதன் கூட்டணியும் 9 தொகுதிகளை இழந்துள்ளது. கோவையில் 10ல் 6 தொகுதிகளை வென்றுள்ள தவெக, கரூரில் நான்கில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

41 பேர் உயிரிழந்த கரூர் தொகுதியில் தவெகவுக்கு தோல்வி

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி, கரூரில் வேலுசாமிபுரம் என்ற இடத்தில் வாகன பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதுதொடர்பாக தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த சிபிஐ விசாரணைக்காக அதன் டெல்லி அலுவலகத்திற்கு விஜய் வரவழைக்கப்பட்டார்.

தனது பரப்புரைக் கூட்டத்தில் துயரம் நடந்ததும், மருத்துவமனைக்கு செல்லாமல் விஜய் விமானத்தில் சென்னை திரும்பியது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. விஜய் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததே நடந்த துயரத்திற்கு காரணம் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு காணொளி வெளியிட்ட விஜய், அதன் பின்னர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு நேரில் அழைத்துப் பேசி, இழப்பீடு வழங்கிய விஜய், அதன்பின்பு கரூருக்கு வரவேயில்லை. இதுவும் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திற்காகவும் விஜய் கரூர் நகருக்கு செல்லவில்லை.

"அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க போலீஸ் அறிவுறுத்தலின்படியே விஜய் உடனடியாக சம்பவ இடத்திலிருந்து கிளம்பியதாக" தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணொளி வாயிலாக பேசிய விஜய், "விரைவில் நேரடியாக வந்து சந்திப்பேன்" என்றும் உறுதியளித்தார்.

விஜய் பரப்புரையே மேற்கொள்ளாத நிலையில், கரூர் மாவட்டத்தில் தவெக நிலை என்னவாகும் என்ற கேள்வி இருந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில், கூட்ட நெரிசல் துயரம் நடந்தேறிய வேலுசாமிபுரம் அமைந்துள்ள கரூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த முறை இந்த தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இம்முறை வென்றுள்ளார். அவருக்கு 71,542 வாக்குகள் கிடைத்துள்ளன. இரண்டாமிடத்தில் வந்த தவெக வேட்பாளர் மதியழகனை (69711) விட 1821 வாக்குகள் மட்டுமே அவர் அதிகம் பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு 67,256 வாக்குகள் கிடைத்துள்ளன. நாதக வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகள் 5,465 மட்டுமே.

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ 70,827 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரையடுத்து வந்த தவெக வேட்பாளர் கார்த்திகேயனை( 51,445 வாக்குகள்) விட 19,382 வாக்குகள் அவர் அதிகம் பெற்றிருக்கிறார். அதிமுக வேட்பாளர் செல்வகுமார் 49,289 வாக்குகளும், நாதக வேட்பாளர் நரேன் 5,154 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

குளித்தலை தொகுதியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் 68,138 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளர் பாலசுப்ரமணியத்தை (67,559) 579 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருணாகரனுக்கு 60,317 வாக்குகளும், நாதக வேட்பாளர் செல்வநன்மாறனுக்கு 7,978 வாக்குகளும் கிடைத்துள்ளன.

நான்கில் 3 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ள தவெக, கிருஷ்ணராயபும் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தவெக வேட்பாளர் ஹெச்.சத்யா 62,378 வாக்குகள் பெற்று, அடுத்தபடியாக வந்த அதிமுக வேட்பாளர் திவ்யாவை (58,875 வாக்குகள்) 3,503 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். திமுக வேட்பாளர் சி.கே.ராஜாவுக்கு 57,292 வாக்குகளும், நாதக வேட்பாளர் சத்யாவுக்கு 6,102 வாக்குகளும் கிடைத்துள்ளன.

கோவையில் 3 தொகுதிகளை கைப்பற்றிய திமுக

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றிருந்தது. தற்போது அவற்றில் 2 தொகுதிகளை இழந்துள்ளது. அந்தத் தேர்தலில் கரூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார்.

இம்முறை அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வென்றது. திமுக ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதனால் கோவை மாவட்டத்தின் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன் காரணமாக, இந்தத் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியிருந்தது. செந்தில்பாலாஜி 59,724 வாக்குகள் பெற்று, தவெக வேட்பாளர் செந்தில்குமாரை 2,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கோவை தெற்கு, வால்பாறை (தனி) மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2021 தேர்தலில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி, இந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. அதிமுக தலைமைக்கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, தொண்டாமுத்தூர் தொகுதியில் 93,316 வாக்குகள் பெற்று, 14,725 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் கே.பி.ஆர். சதீஷை (78,591 வாக்குகள்) தோற்கடித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 2 தொகுதிகளை இழந்துள்ள திமுக, அதேநேரத்தில் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் (அதிமுக கூட்டணியான) பாஜக வென்ற ஒரு தொகுதி உட்பட 10க்கு 10 தொகுதிகளையும் கைப்பற்றிய அதிமுக, இந்த முறை 9 தொகுதிகளை இழந்துள்ளது. முதல் தேர்தலிலேயே கோவை மாவட்டத்தில் பத்தில் 6 தொகுதிகளை தவெக வென்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு