டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த 5 மாடிக் கட்டடம் இடிந்து ஐந்து பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

டெல்லியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்தியத் தலைநகர் டெல்லியில் மாணவர்கள் தங்கியிருந்த பி.ஜி. விடுதி அமைந்திருந்த ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

செய்தி நிறுவனங்களான பிடிஐ மற்றும் ஏஎன்ஐ தகவலின்படி, இதுவரை 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தென்மேற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தபோது, அதற்குள் சுமார் 50 பேர் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி கூடுதல் காவல் துணை ஆணையர் அபிமன்யு போஸ்வால் செய்தியாளர்களிடம், "இதுவரை 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்." என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "கட்டடத்தின் உரிமையாளர் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகிறோம். எங்களிடம் அனைத்து தகவல்களும் உள்ளன. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்." என்றார்.

டெல்லி பல்கலைக்கழக வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள 'ஹாஸ்டல் டேஸ்' என்ற அந்தக் கட்டடத்தின் அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் இல்லாததால், அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பலர் கட்டடம் இடிந்து விழுந்தபோது தங்களது அறைகளில் இருந்ததாகக் கருதப்படுகிறது.

டெல்லியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், Reuters

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சில மாணவர்கள் தொலைபேசி மூலம் அழைப்புகளை மேற்கொண்டு வருவதாக சம்பவ இடத்தில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

விடுதி அமைந்திருந்த கட்டடத்துக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டடமும் இடிந்து விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அருகில் இருந்த கட்டடத்தில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

"இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைப் பாதுகாப்பாக மீட்க சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றும் அவர் கூறினார்.

இடிந்து விழுந்த கட்டடம் 40 அல்லது 50 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 மாடிக் கட்டடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், AFP via Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அருகில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர், அந்தக் கட்டடம் 100 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், குத்தகைதாரர் வருமானத்தை அதிகரிப்பதற்காக அதன் அடித்தளத்தில் மண் தோண்டும் பணியை மேற்கொண்டதாகவும் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார்.

"மேல்பகுதிக் கட்டடத்தை அவர்கள் வலுப்படுத்தினர். ஆனால், கீழே இருந்த தூண்கள் பலவீனமாக இருந்தன," என்று அவர் கூறினார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக அவர் தெரிவித்தார்.

இந்திய தேசிய மாணவர் சங்கம், கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் என கண்டறியப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

"மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதை எந்தச் சூழலிலும் பொறுத்துக்கொள்ள முடியாது," என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கட்டடத்தின் உரிமையாளரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு