ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சிக்கு நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி, மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்குத் தாம் ஆதரவு அளிக்கவில்லை எனக் லடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றவுள்ளார். எனினும், தனியார் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள இதை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று ஜோஹ்ரான் மம்தானி கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. மோகன் பகவத் 25ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் உலகளாவிய தொடர்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
நியூயார்க்கில் தங்கியிருக்கும் அவர், "யுனிவர்சல் ஒன்நெஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். மேலும், சனிக்கிழமை பிரபலமான மேடிசன் ஸ்கொயர் கார்டனில் சுமார் 5,000 பேர் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
"இந்தப் பேரணிக்கு நான் ஆதரவளிக்கவில்லை. ஆனால், ஒரு தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் நகர நிர்வாகத்திற்கு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை" என்று நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மம்தானி கூறினார்.
ஜோஹ்ரான் மம்தானியின் பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் பிரபல திரைப்பட இயக்குநரான மீரா நாயர். மீரா நாயர், "மிசிசிப்பி மசாலா", "மான்சூன் வெட்டிங்", "சலாம் பாம்பே" மற்றும் 9/11 சம்பவத்தை மையமாகக் கொண்ட "தி ரிலக்டன்ட் ஃபண்டமென்டலிஸ்ட்" உள்ளிட்ட குறிப்பிடத்தக்க திரைப்படங்களை இயக்கியுள்ளார். மீரா நாயர், ஜனநாயகக் கட்சியின் முற்போக்குப் பிரிவுடனும் தொடர்புடையவர்.
ஜோஹ்ரானின் தந்தை மஹ்மூத் மம்தானி, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார். கேப் டவுன் பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் 1848ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, அந்த நாட்டின் பழமையான பள்ளியான செயின்ட் ஜார்ஜ்ஸ் கிராமர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.
ஜோஹ்ரான் மம்தானி கூறியது என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை, மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தவுள்ள நிகழ்ச்சி குறித்தும், அதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் மம்தானியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அப்போது மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோகன் பகவத் பங்கேற்கும் பேரணி ரத்து செய்யப்பட வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த மம்தானி, "எனது நகரத்தின் வரலாற்றில் முதல் இந்திய-அமெரிக்க மேயராக நான் இங்கு நிற்கிறேன். எனது தாயாரின் குடும்பத்தினர் அனைவரும் இன்னும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்" என்றார்.
தனது குடும்பத்தினர் தமக்கு அறிமுகப்படுத்திய இந்தியாவும், சிறு வயது முதல் தான் நெருக்கமாக அறிந்த இந்தியாவும், "பன்மைத்துவ சமூகத்தையும், மதச்சார்பற்ற குடியரசையும் கொண்ட இந்தியாவாகும். அதனுடன் தொடர்புடைய ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை அது கொண்டிருந்தது" என்று அவர் கூறினார்.
"அதனால்தான், எந்த நாட்டிலும் இதுபோன்ற புறக்கணிக்கும் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயக்கம் வளர்ந்து வருவதைப் பார்ப்பது கவலை அளிக்கிறது" என்று மம்தானி தெரிவித்தார்.

பட மூலாதாரம், @NYCMayor
மேலும், "ஓர் இந்திய-அமெரிக்கராக மட்டுமின்றி, ஒவ்வொருவரும் தங்களைச் சேர்ந்தவர்களாக உணரும் உரிமையை ஆழமாக நம்பும் ஒரு நகரத்தின் மேயர் என்ற முறையிலும், அவர்களின் நிறம், நம்பிக்கைகள், மதம், விசுவாசம் அல்லது பூர்வீகம் எதுவாக இருந்தாலும், இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன்" என்றார்.
பல மதங்களுக்கு இடையிலான அமைப்புகளும், சிவில் உரிமை அமைப்புகளும் நியூயார்க் நகர மன்றத்திற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பு நடத்தின. மேடிசன் ஸ்கொயர் கார்டனில் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்தப் புகழ்பெற்ற அரங்கம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டுமென்றும் அவை வலியுறுத்தின.
இந்த அமைப்புகளில் ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ், இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில், இன்டர்ஃபெய்த் சென்டர் ஆஃப் நியூயார்க் உள்ளிட்ட அமைப்புகள் இடம்பெற்றிருந்தன.
மோகன் பகவத்தை அழைத்துள்ள அஹெட் ஃபோரம் ஏற்பாடு செய்யும் 'யுனிவர்சல் ஒன்னெஸ் செலிப்ரேஷன்' நிகழ்ச்சியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி நியூயார்க்கில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்கவுள்ளதாக சமூக ஊடக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பதிவில், "இந்த நிகழ்ச்சியின் செய்தி காலத்தைக் கடந்ததும், உலகளாவியதுமானதும் ஆகும். 'வசுதைவ குடும்பகம்'. இது, செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரிவுகளையும் வேறுபாடுகளையும் கடந்து மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் உறவுகளை உணர்ந்து, பரஸ்பர மரியாதை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை உணர்வை ஏற்றுக் கொள்ளுமாறு இது மக்களைக் கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா ஆண்டையொட்டி மேற்கொள்ளப்படும் உலகளாவிய தொடர்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மோகன் பகவத் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதியை விமர்சிக்கும் மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி, இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ளார். 2023 ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தினத்தையொட்டி மோதி நியூயார்க் சென்றிருந்தார். அப்போது, ஐ.நா. சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு மோதி தலைமை தாங்கினார்.
அப்போது நியூயார்க் நகர சட்டமன்ற உறுப்பினராக இருந்த மம்தானி, மோதியின் வருகை தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். அது மூன்று பேரின் கூட்டறிக்கை. அவருடன் நகர மன்ற உறுப்பினர்களான ஷஹானா ஹனீஃப், ஷேகர் கிருஷ்ணா ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
அந்த அறிக்கையில், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான உயிரிழப்புகளை ஏற்படுத்திய கலவரங்கள் நடைபெறுவதற்கு நரேந்திர மோதி அனுமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. மோதியின் வருகைக்கு நியூயார்க் மக்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஜோஹ்ரான் மம்தானி, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் விமர்சித்துள்ளார். பாஜக தனது இந்துத்துவ கொள்கையின் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் அழிக்க முயல்வதாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது மம்தானி வெளியிட்ட பதிவில், "எனது இந்து பாட்டி உருதுவில் கவிதைகள் வாசித்ததும், எனது இஸ்லாமிய தாத்தா குஜராத்தியில் பஜனைகள் பாடியதும்தான் இந்தியாவின் பாரம்பரியம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் 30 முதல் 40 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். பாலத்தீன பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பை ஜோஹ்ரான் மம்தானி வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ளார்.
மம்தானி கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயராக ஆகக்கூடும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பட மூலாதாரம், Getty Images
இனவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள மம்தானி
ஜோஹ்ரான் மம்தானி 2018ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். 2020ஆம் ஆண்டு நியூயார்க் மாகாண சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2025ஆம் ஆண்டு நியூயார்க் நகர மேயரானார். ஆனால், அதைவிட முக்கியமாக, 34 வயதான மம்தானி அமெரிக்க அரசியலில் ஒரு புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
ஜோஹ்ரான் மம்தானி நியூயார்க் நகர மேயரானால், நிதியுதவியை நிறுத்திவிடுவேன் எனக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கூட மம்தானியை தொடர்ந்து குறிவைத்து வருகிறார்.
நியூயார்க் நகர மேயர் பதவிக்கான ஜனநாயகக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதில் இருந்து, அவர் மீதான இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் ஜோஹ்ரான் மம்தானியின் இஸ்லாமிய அடையாளத்தைக் கேலி செய்தனர். மம்தானி மீதான வெளிப்படையான இனவெறித் தாக்குதல்கள், அமெரிக்க அரசியலில் இதுபோன்ற தாக்குதல்கள் இயல்பான ஒன்றாக மாறி வருவதற்கான அறிகுறியாக பலரால் பார்க்கப்பட்டன.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டி ஓகிள்ஸ், உகாண்டாவில் பிறந்து 2018ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற ஜோஹ்ரான் மம்தானியின் குடியுரிமையை ரத்து செய்து, அவரை நாடு கடத்த வேண்டுமெனக் கோரி நீதித்துறைக்கு கடிதம் எழுதினார்.
அமெரிக்க கூட்டாட்சி சட்டத்தின்படி, அமெரிக்காவில் குடியுரிமையை ரத்து செய்வது சிக்கலான நடைமுறையாகும். ஒருவர் குடியுரிமையைப் பெறும்போது மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால், அவரது குடியுரிமையை ரத்து செய்வது சாத்தியமாகும். ஆண்டி ஓகிள்ஸ், ஜோஹ்ரான் மம்தானியை 'லிட்டில் முகமது' என்று அழைப்பது வழக்கம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































