மு.க.ஸ்டாலின், 14 அமைச்சர்கள் தவெகவிடம் தோல்வி - வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

பட மூலாதாரம், @mkstalin/X
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மு.க ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 15 பேர் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இவர்களில் ஒருவர் தவிர மற்ற அனைவரும் தவெக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்துள்ளனர்.
மு.க ஸ்டாலின் (கொளத்தூர்)

பட மூலாதாரம், x/mkstalin
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல், கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்தார்.
இந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் 2021இல் 70,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார் ஸ்டாலின். தற்போது 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்.
இங்கு தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
துரைமுருகன் (காட்பாடி)
நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், 62,225 வாக்குகள் மட்டுமே பெற்ற அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் எம். சுதாகர் 69,868 வாக்குகள் பெற்று இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் வி. ராமு 63,998 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
துரைமுருகன் முதல்முறையாக 1971இல் தேர்தலில் களம்கண்டு, வெற்றிபெற்றது காட்பாடி தொகுதியில் இருந்து தான். அதன் பின்னர் 1984 முதல் 2026 அவர் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் இதற்கு முன்னர், 1984 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் அவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அன்பில்மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்)

பட மூலாதாரம், @Anbil_Mahesh/X
பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்தமுறை அவர் 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் விஜயகுமார் 89,837 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
அப்பாவு (ராதாபுரம்)
திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவு, 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் 69,947 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் அப்பாவு கடந்த 1996 முதலே போட்டியிட்டு வருகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அவர், தற்போது மீண்டும் தோல்வி அடைந்துள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி)

பட மூலாதாரம், @ptrmadurai/X
தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய தொகுதியில் 19,128 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் மதர் பதுருதீன் 63,414 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்ட இயக்குநர் சுந்தர்.சி 33,538 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பழனிவேல் தியாகராஜன் 2016 மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் இங்கு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை தோல்வியைச் சந்தித்துள்ளார்.
எஸ். முத்துசாமி (ஈரோடு மேற்கு)
வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதியில் 22,250 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அங்கு தவெக வேட்பாளர் அனந்த் மோகன் 96,836 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கே.ஆர். பெரியகருப்பன் (திருப்பத்தூர்)

பட மூலாதாரம், @OfficeOfKRP/X
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அங்கு தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கே. ஆர். பெரியகருப்பன் 2006 முதலே திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வந்துள்ளார். இதற்கு முந்தைய நான்கு தேர்தல்களிலும் அவர் வெற்றியே பெற்றுள்ளார்.
தா. மோ. அன்பரசன் (ஆலந்தூர்)
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆலந்தூர் தொகுதியில் 29,609 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
தவெக வேட்பாளர் எம்.ஹரிஷ் அங்கு 1,12,205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை)

பட மூலாதாரம், @Subramanian_ma/X
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் சைதாப்பேட்டை தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்த முறை அவர் 28,514 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் இங்கு 81,205 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பி.கீதாஜீவன் (தூத்துக்குடி)
சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி தொகுதியில் 37,731 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
அங்கு முதல்முறையாக களம் கண்ட தவெக வேட்பாளர் மற்றும் நடிகர் ஸ்ரீநாத் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
எஸ்.எம்.நாசர் (ஆவடி)
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் ஆவடி தொகுதியில் 76,311 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
அங்கு தவெக வேட்பாளர் ரமேஷ் குமார் 1,80,384 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி)
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்றவர்.
இந்த முறை அவர், தவெக வேட்பாளர் காமராஜிடம் 1,566 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளார். காமராஜ் 68,416 வாக்குகள் பெற்றுள்ளார்.
மூர்த்தி (மதுரை கிழக்கு)

பட மூலாதாரம், @pmoorthy21/X
வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை கிழக்கு தொகுதியில் 2011இல் தோல்வியைச் சந்தித்தார், அதன் பிறகு 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அங்கு வெற்றி பெற்றார்.
இந்த முறை 16,547 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
இங்கு தவெக வேட்பாளர் கார்த்திகேயன் 1,18,777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காந்தி (ராணிப்பேட்டை)
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை தொகுதியில் 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் தாஹிரா 91,149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மதிவேந்தன் (ராசிபுரம்)

பட மூலாதாரம், @MMathiventhan/X
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் 57,854 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கு தவெக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 74,808 வாக்குகளுடன் வெற்றியும், பாஜகவின் பிரேம்குமார் 60,297 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
சாமிநாதன் (காங்கேயம்)
தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் காங்கேயம் தொகுதியில், 59,230 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
இந்தத் தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் நடராஜ் 71,122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தவெக வேட்பாளர் மணி கவுண்டர் 62,989 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
ராஜேந்திரன் (சேலம் வடக்கு)
சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் சிவக்குமார் இந்தத் தொகுதியில் 85,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































