நேபாளத்தை உரிய நேரத்தில் எச்சரிக்க சீனா தவறிவிட்டதா? புதிய சர்ச்சை

நேபாளத்தின் பேரிடர் முகமையின்படி, ஆகஸ்ட் 27 அன்று 823 பேர் இன்னும் தொடர்பில்லாமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 27, 2026 அன்று, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், விதூர் நகராட்சியில் உள்ள தேவிகாட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சேற்றில் மூழ்கிய வீடுகளின் வான்வழிக் காட்சி. நேபாளத்தின் பேரிடர் முகமையின்படி, ஆகஸ்ட் 27 அன்று 823 பேர் இன்னும் தொடர்பில்லாமல் இருந்தனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளம், மூன்று மாவட்டங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர்.

இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து நேபாளத்தாலும் சீனாவாலும் எந்தத் தகவலையும் வழங்க முடியவில்லை.

நேபாளம் மற்றும் சீனா இடையே வானிலைத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், சமீபத்தில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து முன்கூட்டிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று நேபாளத்தின் நீர் மற்றும் வானிலை அறிவியல் துறை தெரிவித்துள்ளது.

எனினும், இந்தப் பேரிடர் குறித்து நேபாளத்துக்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்காததால் தான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் மறுத்துள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சீனத் தூதரகம் இந்தத் தகவல்களைப் போலியானவை என்று கூறி, "ஆகஸ்ட் 26-ஆம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததுடன், நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.

புதன்கிழமை ஏற்பட்ட சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீன பிரதமர் லீ கெகியாங் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். திபெத்தில் ஏற்பட்ட பேரிடரால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் வானிலைத் துறையால் உறுதியான தகவல் எதையும் தெரிவிக்க முடியவில்லை.

வானிலைத் துறையின் மூத்த விஞ்ஞானி விபூதி பொக்காரெல் கூறுகையில், "இந்த வெள்ளத்திற்கான காரணம் குறித்து சீன அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பதைக் கூறும் நிலையில் அவர்களும் இல்லை. இந்தச் சம்பவம் நேபாளத்தில் நடந்ததா அல்லது திபெத் பகுதியை நோக்கி நடந்ததா என்பதும் தெரியவில்லை" என்றார்.

2016-ஆம் ஆண்டிலும் ராசுவாகதி பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே சரியான நேரத்தில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றிருந்தால் உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்துக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேவிகாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த பாலம் மற்றும் சேற்றில் மூழ்கிய வீடுகளின் வான்வழிக் காட்சி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 27, 2026 அன்று, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், விதூர் நகராட்சி, தேவிகாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த பாலம் மற்றும் சேற்றில் மூழ்கிய வீடுகளின் வான்வழிக் காட்சி.

சீனா என்ன சொன்னது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம், இவ்விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு , தகவல்களைப் பகிரவில்லை என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "ராசுவா-கியிரோங் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சீனா ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளது. நேபாளத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும். முதற்கட்ட தகவல்களின்படி, நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிச்சரிவுகளும், பாறைகள் மற்றும் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் உயிரிழப்புகளும், பலர் காணாமல் போன சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகம் மேலும் கூறுகையில், "எதிர்காலத்தில், குறிப்பாக நாடுகளின் எல்லைகளைக் கடந்து ஏற்படும் பேரிடர்களின்போது, வானிலை, நீர் மற்றும் நிலவியல் ரீதியான அபாயங்கள் குறித்த தகவல்களை சிறப்பாகப் பரிமாறிக்கொள்ள ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவோம். நேபாளமும் சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமின்றி, நிலவியல் ரீதியாகவும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.

எனவே, இந்தப் பேரிடரிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

நேபாளமும் சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமின்றி, நிலவியல் ரீதியாகவும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாளத்தின் நுவாகோட்டில் உள்ள போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வான்வழிக் காட்சி.

பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் நவீன் சிங் கட்கா என்ன கூறுகிறார்?

வெள்ளம் எங்கிருந்து உருவானது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

நேபாளத்துக்கும் திபெத்துக்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு பகுதியில் இது நிகழ்ந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். அது எந்த இடம் என்பதைத் தீர்மானிக்க இன்னும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீனத் தரப்பிலிருந்து எனக்கு அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. இது மண் சரிவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆனால், நான் தொடர்பில் உள்ள பனிப்பாறை ஆய்வாளர்கள், பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் சரிந்து வந்து ஆற்றின் நீரோட்டத்தைத் தடுத்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

பின்னர், நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தபோது, ​​அது உடைந்தது. இருப்பினும், இதுதான் நடந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தற்போது பருவமழைக் காலம் என்பதால், வானில் அதிக மேகங்கள் உள்ளன.

செயற்கைக்கோள் படங்களும் தெளிவாக இல்லை. அது சரியாக எங்கு உள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இது எல்லைப் பகுதியில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

"இது இமயமலைத் தொடராகும். கிழக்கு இமயமலை, மத்திய இமயமலை, மேற்கு இமயமலை ஆகியவை இந்தியாவில் உள்ளன. அதன் பின்னர் காரகோரம் பகுதி வருகிறது.

நேபாளத்தில் கிழக்கு இமயமலை மற்றும் மத்திய இமயமலையின் சில பகுதிகள் உள்ளன. அது திபெத் பகுதியிலும் நீண்டுள்ளது. அங்கு 7,000 முதல் 8,000 மீட்டர் உயரம் கொண்ட மலைகள் உள்ளன. அங்கிருந்துதான் பல ஆறுகள் உருவாகின்றன.

காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் மலைகள் கணிசமாக வலுவிழக்கின்றன. முன்பு சிமெண்ட் போன்று செயல்பட்ட பனி தற்போது வேகமாக உருகுவதால், பாறைகள் கீழே சரிந்து வருகின்றன. அதனால்தான் இவ்வளவு மண் மற்றும் பாறைகள் கலந்த நீரோட்டங்களை நாம் பார்க்கிறோம்.

புவியியல் நிலைமைகள் ஏற்கெனவே கடினமாக இருந்தன. காலநிலை மாற்றம் இந்தப் பகுதிகள் அனைத்தையும் மிகவும் நிலையற்றதாக மாற்றியுள்ளது.

நிலைமைகள் நிலையற்றதாகும்போது, பாறைகளும் படிவுகளும் கீழே சரிந்து வருகின்றன. ஆறுகள் அவற்றை சிறிது நேரம் தடுத்து வைத்திருக்கின்றன. பின்னர் அந்தத் தடுப்பு உடைந்து, அவை கீழ்நோக்கி வந்து இந்தப் பேரழிவை ஏற்படுத்துகின்றன.

இதேபோன்ற வெள்ளம் 2016-ஆம் ஆண்டில் இரண்டாவது போடேகோஷி பகுதியில் ஏற்பட்டது. அங்கு இரண்டு போடேகோஷி ஆறுகள் உள்ளன. இந்தச் சம்பவம் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டது. அப்போதும் சீனா எந்தத் தகவலையும் வழங்கவில்லை.

இப்போது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அதிகாரிகளிடம் கேட்கும்போதும், தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைப்பதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இது ஏன் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நான் முயற்சித்து வருகிறேன். நிலவியல் ஒரு சவாலாக உள்ளது. ஆனால், இத்தனை மலைகளையும் பனிப்பாறைகளையும் கண்காணிக்க முடியுமா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. இதுபோன்ற கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன.

மிக முக்கியமாக, இந்தத் தகவல்கள் பகிரப்படுகின்றனவா என்பதுதான் கேள்வி.

நாடுகளுக்கு இடையேயான, எல்லை தாண்டிய தகவல் தொடர்பு சீனா அல்லது திபெத்தில் இருந்து நேபாளத்துக்கும், பின்னர் நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கும் தகவல்கள் பரிமாறப்படுகின்றனவா?

பேரிடர்களைப் பொறுத்தவரை, முன்கூட்டிய எச்சரிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை எப்போதும் பேசுகிறது. ஆனால், இங்கு அது நடப்பதை நாம் பார்க்கவில்லை. இது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

இதேபோன்ற வெள்ளம் 2016-ஆம் ஆண்டில் இரண்டாவது போடேகோஷி பகுதியில் ஏற்பட்டது. அங்கு இரண்டு போடேகோஷி ஆறுகள் உள்ளன. இந்தச் சம்பவம் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டது. அப்போதும் சீனா எந்தத் தகவலையும் வழங்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 27, 2026 அன்று, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டம், விதூர் நகராட்சி, தேவிகாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்குப் பிறகு சேற்றில் மூழ்கிய வீடுகளின் வான்வழிக் காட்சி.

ஏன் தகவல் பகிர்வு இல்லை?

போடேகோஷி ஆற்றில் இதற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு தயாரித்த அறிக்கையிலும் சர்வதேச எல்லை முழுவதும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

"சீனா மற்றும் நேபாளத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் ஆறுகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக இருப்பதால், சர்வதேச எல்லையைத் தாண்டி முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்த இருதரப்பு ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"வெள்ளம், பனிப்பாறை உடைப்பு அல்லது ஏற்படக்கூடிய பிற பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களை வழங்குவதன் மூலம், இந்த அமைப்பு உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைக்க உதவும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"சீனாவுடனான எல்லைப் பகுதியில் உள்ள பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச ஒருங்கிணைப்பின் அடிப்படையில் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்துவது அவசியம்" என்று அந்த அறிக்கை முடிவு செய்திருந்தது.

திபெத்தில் வானிலை தொடர்பான ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால், அதுகுறித்து நேபாளத்துக்கு தகவல் தெரிவிக்க என்ன ஏற்பாடு உள்ளது?

மூத்த வானிலை ஆய்வாளர் விபூதி போகரெல் பிபிசி நேபாளியிடம் கூறுகையில், "தகவல்களைப் பெறுவதற்கான ஓர் அமைப்பு உள்ளது. ஆனால், அதே இடத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருந்தால், அங்கிருந்தும் இதுகுறித்து ஏதேனும் தகவல் கிடைத்ததா என்பதுதான் கேள்வி" என்றார்.

"வானிலை தொடர்பான தகவல்கள் இனி வழங்கப்படும் என்று ஏற்கெனவே பேசப்பட்டது. ஆனால், தகவல் வழங்க வேண்டுமென்றால் முதலில் அந்தத் தகவல் நம்மிடம் இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

எல்லை தாண்டிய தகவல் பரிமாற்றம் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பேரிடர் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத் தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய அவர், "இந்தச் சம்பவம் மறுபுறத்தில் நடந்ததால், வெள்ளம் ஏற்பட்ட பிறகுதான் அதுகுறித்து நமக்குத் தெரியவந்தது. இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சீன அரசுக்கும் நேபாள அரசுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்த விவகாரத்தில் முன்னேற வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்" என்றார்.

புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளச் சம்பவத்துக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங், தற்போதைய வெள்ளக் கட்டுப்பாட்டு நிலை மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

சீனாவின் சிசிடிவி செய்தியின்படி, அனைத்து துறைகளும் தொடர்புடைய அமைப்புகளும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அபாயங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிபர் ஷி வலியுறுத்தினார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

திரிபுவன் பல்கலைக்கழகத்தின் மத்திய சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் சுதீப் தாக்கூரும், எல்லை தாண்டிய தகவல் பரிமாற்றம் பெரிய அளவிலான உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைக்க முடியும் என்று கருதுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (டிரோன் படம்) திபெத்தியப் பகுதியை நோக்கிய மேல் லெண்டே ஆற்றில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச்சரிவினால் உண்டான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பெருக்கெடுத்த திரிஷூலி ஆற்றங்கரையோரம் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் வான்வழிக் காட்சி.

தகவல் பரிமாற்றத்தில் அரசாங்கத்தின் பங்கு குறித்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்?

சீனாவில் பனிப்பாறை உடைதல் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் நேபாளத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் இருந்தால், அது குறித்த தகவல்களை வழங்கும் அமைப்பை உருவாக்க சீனத் தரப்புடன் நேபாள அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புல்சோக் பொறியியல் வளாகத்தின் பேரிடர் ஆய்வு மையத்தின் இயக்குநர் வசந்த் அதிகாரி பிபிசியிடம் கூறுகையில், "எல்லை தாண்டிய பனிப்பாறை உடைதல் பிரச்னையைப் பொறுத்தவரை, சீன அரசுடன் அரசு மட்டத்தில் ஒருங்கிணைந்து நேபாள அரசு முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்க வேண்டும். இதைச் செய்ய முடியும்" என்றார்.

"இந்த விவகாரத்தை சீன அரசிடம் அதிகாரப்பூர்வமாக எடுத்துச் சென்றால், இதுபோன்ற முன்கூட்டிய தகவல்களை வழங்குவதில் சீன அரசு ஒத்துழைக்கும் என்று நான் நினைக்கிறேன். தற்போது தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படவில்லை" என்று அவர் கூறினார்.

இதற்காக புவிநிலைச் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

திபெத்தில் பனிப்பாறைகள் காரணமாக ஏற்படும் எந்தவொரு பிரச்னையும் நேபாளத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், இந்த விவகாரத்தில் நேபாளமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திரிபுவன் பல்கலைக்கழகத்தின் மத்திய சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் சுதீப் தாக்கூரும், எல்லை தாண்டிய தகவல் பரிமாற்றம் பெரிய அளவிலான உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைக்க முடியும் என்று கருதுகிறார்.

அவர் கூறுகையில், "நேபாளம்-சீனா அல்லது நேபாளம்-இந்தியா இடையே முன்கூட்டிய தகவல்களை வழங்குவதற்கான அமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை. இதற்கான தெளிவான வழிமுறையும் இல்லை" என்றார்.

"அங்கு (திபெத்தில்) தகவல்களைச் சேகரிப்பதற்கான அமைப்பு உள்ளது. ஆனால், அந்தத் தகவல்களை இங்கு பகிர்வதற்கான அமைப்பு இல்லை" என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மிட்டேரி பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகும், தகவல் பரிமாற்றத்துக்கான ஏற்பாடுகளை உருவாக்குவதில் அரசு எந்த முன்முயற்சியையும் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

"அரசு மட்டத்தில் தூதரக ரீதியான முயற்சிகள் தேவை. ஆனால், இந்த விவகாரத்தில் நமது பலவீனம் வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற அறிவியல் தகவல்களை வழங்குவதில் அவர்களுக்கும் எந்தப் பிரச்னையும் இருக்கக் கூடாது. எனவே, நமது கருத்தை அவர்களிடம் தெளிவாக எடுத்துச் செல்ல நாம் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது" என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு