வெனிசுலா, மார்க்ஸ், லெனின்: பல ஆண்டுகளாக கம்யூனிசம் சார்ந்த பெயர்களை சூட்டும் தமிழக கிராமம் – ஏன் தெரியுமா?

வெனிசுலா என ஒருவருக்கு பெயர் வைப்பார்களா?
ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்னிந்தியா… இப்படியெல்லாம்?
இவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் கிடையாது, மதுரைக்கு அருகிலுள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தில் இவ்வாறு பெயர்கள் சூட்டுவதே யதார்த்தம்.
அதோடு, கார்ல் மார்க்ஸ், சே குவேரா, லெனின், ஜோதி பாசு, ஹோ சி மின்... இவர்கள் அனைவரும் இன்றும் இதே கிராமத்தில் அரசியல் பேசுகிறார்கள், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்குச் செல்கிறார்கள், ஒரு இயல்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
மதுரையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வன்னிவேலம்பட்டி எனும் சிறிய கிராமம்.
பல ஆண்டுகளாக தொடரும் மரபு

இந்தக் கிராம மக்கள் தங்களது பிள்ளைகளுக்கு கம்யூனிசம் சார்ந்த பெயர்களைச் சூட்டுகிறார்கள். இந்த வழக்கம் பல ஆண்டுகளாகவே தொடர்கிறது.
"எனக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளின் பெயர் 'மார்க்சியா', இரண்டாவது மகளின் பெயர் 'லெனினா'" என்கிறார், இக்கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான நாகஜோதி.
"என்னுடைய தாத்தா-பாட்டி, அம்மா-அப்பா, என் மாமனார் என குடும்பத்தில் பலரும் கம்யூனிஸ்டுகள் தான். நான் சிறுவயதிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களுக்கு செல்வேன். எனக்கு பெயர் வைக்கும்போது அவர்கள் 'சாமி' பெயர் வைத்துவிட்டார்கள். எனவே நான் எனது பிள்ளைகளுக்கு கம்யூனிசம் சார்ந்த பெயர்கள் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்" என்கிறார் அவர்.
"என் உடன்பிறந்த அக்கா மகனுக்கு 'ரணதிவே' என்று பெயர் வைத்துள்ளோம். என்னுடைய நாத்தனார் பெண்ணுக்கு 'வெனிசுலா' என்று பெயர் வைத்திருக்கிறோம்" என்று கூறும் நாகஜோதி, "என்னைப் பொறுத்தவரை கம்யூனிசம் என்பது எல்லோருக்கும் எல்லாமே சமமாகக் கிடைக்க வேண்டும். எனவே பெயர் வைத்ததோடு மட்டுமல்லாது, இதையும் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்" என்கிறார்.

தங்களது பிள்ளைகளுக்கு கம்யூனிசம் சார்ந்த பெயர்களைச் சூட்டுவது மட்டுமின்றி, அதன் கொள்கைகளையும் கற்றுக்கொடுப்பதாக கிராம மக்கள் பலரும் கூறுகின்றனர்.
"எனது கணவர் 40 ஆண்டுகள் கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். அவரைப் பார்த்து தான் நானும் போராட்டங்களுக்கு சென்றேன். பல முறை என்னை கைது செய்திருக்கிறார்கள். இப்போது எனது பிள்ளைகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளனர்" என்கிறார் 85 வயதான ராசம்மா.
"எனது மூத்த மகள் பெயர் கௌரி. கேரளாவின் கம்யூனிஸ்ட் தோழர் கௌரியின் பெயரை வைத்தோம். மற்றொரு மகன் பெயர் ஃபிடல் காஸ்ட்ரோ, அதற்கு அடுத்தவர் அலெக்சாண்டர், அதற்கு அடுத்தவர் டிமிட்ரோவ்" என்கிறார் அவர்.
"எனது மகள் வழி பேரனுக்கு 'ஹோ சி மின்' என பெயர் வைத்தோம். 26 வயதான அவன் இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பல போராட்டங்களில் கலந்துகொள்கிறான்" என ராசம்மா குறிப்பிடுகிறார்.
கிராமத்தில் கம்யூனிசம் அறிமுகமானது எப்படி?
1960-களில் வேலை தேடி தஞ்சாவூருக்குச் சென்ற வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த வேம்பு என்பவர், அங்கு கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளில் வன்னிவேலம்பட்டி திரும்பிய வேம்பு, உள்ளூர் மக்களுக்கும் கம்யூனிசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
"அப்போது ஊரில் பலரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வேம்பு, ஊரில் அனைவரிடமும் கம்யூனிசக் கொள்கைகளை விளக்கினார். இறுதியில், ஒரு 10 பேர் அதன் விவசாய சங்கத்தில் இணைந்தோம்" என்கிறார் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான மலர்முத்து.
"சாப்டூர் கிராமத்தில் விவசாய சங்க மாநாட்டுக்கு வேம்பு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு வந்தவர்கள் மேடையில் பேசியதைக் கேட்டதும், எங்களுக்கு பெரும் நம்பிக்கை வந்தது. குறிப்பாக, நமது உரிமைகள் எவ்வளவு முக்கியம் என புரிந்தது" என்கிறார் அவர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு
அதன் பின்னர் கிராமத்தில் நடந்த ஒரு போராட்டம் பெரும்பாலான மக்களை கம்யூனிசம் நோக்கி திருப்பியதாக குறிப்பிடுகிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன்.
"1960களில் இந்த கிராமத்து பெரியவர் ஒருவர், புறம்போக்கு நிலத்தில் வாழை பயிர் செய்திருந்தார். அது தவறு தான், ஆனால் அப்போது அவருக்கு சட்டங்கள் குறித்து தெளிவுகள் இருக்கவில்லை. பெரும் செலவில் பயிரிட்ட அந்த வாழைகள் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்தபோது, யாரோ வழக்கு போட்டு விட்டார்கள். அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வாழை மரங்களை அழிக்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட, காவல்துறையும் வந்துவிட்டது."
"அப்போது அந்த பெரியவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் தோழர்கள் களமிறங்கி, மரத்துக்கு ஒருவராக நின்று 'எங்களை வெட்டிவிட்டு, மரத்தை வெட்டுங்கள்' என்று கோஷமிட்டனர். அதேசமயம், வேறு சில தோழர்கள் நீதிபதியிடம் முறையிட்டு, 'அறுவடைக்குப் பிறகு, நிலத்தை மீட்டுக்கொள்ளலாம்' என மறுஉத்தரவு வாங்கி வந்தனர். அந்த சம்பவம் தான் முதல் விதை" என்கிறார் அவர்.
"இந்த கிராமத்தில் ரஷ்யா, சீனா, ஜப்பான், இந்தியன், இந்தியா என நாடுகளின் பெயர்களையே சிலர் வைத்திருக்கிறார்கள். உலக கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் சோசலிச கொள்கையின் மீதான பற்றுதலால் இந்த பெயர்கள் வைக்கப்பட்டன" என்று கூறுகிறார் முருகன்.
அதேபோல், "ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, உமாநாத், ஜானகி அம்மாள் என இந்திய மற்றும் தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்களும் இங்கு அதிகம் உள்ளன. குறிப்பாக, மதுரையில் பிறந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவராகவும் இருந்த ஜானகி அம்மாளின் பெயர் மட்டும் சுமார் 20 முதல் 25 பேருக்கு வைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறுகிறார்.

சாதி மறுப்பும் கடவுள் நம்பிக்கையும்
கம்யூனிச கொள்கைகளின் பரவல் காரணமாக தங்களது கிராமத்தில் சாதிய பிரச்னைகள் இல்லை என, இக்கிராம மக்கள் கூறுகிறார்கள்.
"சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே, சாதி பாகுபாடு சமூகத்தில் வலுவாக இருந்த காலத்திலேயே, இந்த கிராமத்தில் சாதி, மதம் கடந்து திருமணங்கள் நடந்திருக்கின்றன. இதனால், 'கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வேறு சாதியில் பெண் கொடுக்கிறார்களே' என்று அப்போது சிலர் விமர்சித்ததும் உண்டு. ஆனால், அந்த நடைமுறை இன்றைக்கு சாதிய பாகுபாடுகள் பெருமளவு குறைவதற்கு வழிவகுத்திருக்கிறது" என்கிறார் மலர்முத்து.
"மற்ற ஊர்களில் வெவ்வேறு சாதியினருக்கு தனித்தனி மயானங்கள் இருக்கும். ஆனால், எங்கள் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம் காரணமாக, ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் ஒரே மயானம்தான். சாதி வேறுபாடின்றி அனைவரும் ஒரே மயானத்தில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இங்கு உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாட்டுக்கே இடமில்லை" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மதத்தை விமர்சித்த கம்யூனிச தலைவர்களின் பெயரைச் சூட்டிக்கொள்ளும் வழக்கம் ஒருபுறம் என்றால், மறுபுறம் குலதெய்வ வழிபாடுகளும் வன்னிவேலம்பட்டி கிராமத்தில் இயல்பாகவே நடக்கின்றன.
அதிலும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் தான் இந்த கிராமத்தின் கோயிலில் வெகு விமரிசையாக திருவிழா நடத்தப்பட்டது.
"கோயில் திருவிழாக்களில் முன்னின்று அனைத்தையும் செய்வதே கம்யூனிஸ்ட் தோழர்கள் தான். எங்கள் நம்பிக்கை எங்களோடு, நாங்கள் பிறரது நம்பிக்கையை மதிக்கிறோம்" என்கிறார் மலர்முத்து.
இதுகுறித்துப் பேசும் நாகஜோதி, "சாமியை நம்புகிறவர்களுக்கு சாமி இருக்கிறது. இல்லாதவர்களுக்கு இல்லை. அதுவொரு கொள்கையாக இருந்தாலும் குலதெய்வ வழிபாடு என்பதனால் சாமியும் கும்பிடுவார்கள், விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்" என்கிறார்.

அரசியல் சார்புகளில் மாற்றங்கள்
ஆனால், கம்யூனிச கொள்கைகளின் தாக்கம் இன்னும் இருந்தாலும், மக்களிடையே அரசியல் சார்புகளில் மாற்றங்கள் தென்படுகின்றன.
"2011ஆம் ஆண்டு வரை இந்த கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அரசியல் செல்வாக்கு இருந்தது. மற்ற கட்சிகளுக்குச் சென்றவர்கள்கூட தங்களது குழந்தைகளுக்குக் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பெயர்களைச் சூட்டும் வழக்கம் தொடர்கிறது" என்கிறார் முருகன்.
முதலில் தனது தந்தையின் வழியைப் பின்பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகளில் உறுப்பினராக இருந்து, தற்போது வேறு கட்சிக்கு மாறிவிட்டதாகக் கூறுகிறார் லெனின்.
"எனக்கு ஆரம்பத்தில் கம்யூனிசத்தின் மீது விருப்பம் இருந்தது. பிறகு நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் திராவிடக் கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது, எனக்கு அதில் விருப்பம் இல்லாமல் போனது. அதனால் நான் வெளியே வந்து இப்போது வேறு கட்சியில் இணைந்திருக்கிறேன்" என்கிறார் லெனின்.
கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான 'தேர்தல் அரசியல்' ஆதரவு தற்போது குறைந்துவிட்டது என்பதை ராசம்மாவும் ஒப்புக்கொள்கிறார்.
"ஆரம்பத்தில் இந்த கிராமத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என இரண்டு பிரிவுகள்தான் இருந்தன. அதிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் செல்வாக்கு இருந்தது, தோழர்களை எதிர்த்து நிற்கவோ, தேர்தலில் எதிர்த்து வாக்குகளைப் பெறவோ யாராலும் முடியாது. நல்லது, கெட்டது எது நடந்தாலும், கிராமம் அவர்கள் பின்னால் நின்றது. ஆனால், இன்று கிராமத்தில் பல கட்சிகள் வந்துவிட்டன, கம்யூனிச கட்சிகளின் செல்வாக்கும் குறைந்துள்ளது" என்கிறார் ராசம்மா.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் இல்லை. 543 மக்களவை உறுப்பினர்களில் 8 பேர் மட்டுமே கம்யூனிஸ்டுகள்.
ஆனால், வன்னிவேலம்பட்டி என்ற இந்த சிறிய கிராமத்தில் எங்கும் கம்யூனிச அடையாளங்கள் நிறைந்திருக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































