19 மாத குழந்தையின் உறுப்பு தானம் - இளம்பெண், 2 குழந்தைகளுக்கு கிடைத்த மறுவாழ்வு

19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம் - இளம்பெண், 2 குழந்தைகளுக்கு கிடைத்த மறுவாழ்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச் சாவு அடைந்த 19 மாத குழந்தையின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் இளம் கொடையாளரான இந்த குழந்தையின் சிறுநீரகங்கள் 20களில் இருக்கும் ஒருவருக்கும், இருதயம் மற்றும் நுரையீரல் வேறு இரு குழந்தைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மூளையில் திரவம் சேர்ந்து வந்ததால் குழந்தைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை வயது குழந்தை என்பதால், குழந்தை தனக்கு ஏற்பட்ட அசௌகரியங்களையும் அறிகுறிகளையும் பெற்றோர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. குழந்தை ஏனோ சோர்வாக உள்ளது, சாப்பிட முடியவில்லை என்று பெற்றோர்கள் நினைத்திருந்தனர்.

19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

சமூகப் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தையின் பெற்றோர், விழுப்புரம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கூட்டிச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

குழந்தைக்கு ஹைட்ரோகெபாலஸ் எனும் நிலை உருவாகியிருந்தது. (ஹைட்ரோகெபாலஸ் என்பது, மூளை மற்றும் முதுகுத் தண்டைப் பாதுகாக்கும் செரிப்ரோஸ்பைனல் திரவம், மூளையின் உள்ளேயுள்ள வென்ட்ரிக்கிள்கள் எனப்படும் காலிப் பகுதிகளில் அசாதாரணமாக அதிக அளவில் தேங்கும் நிலை. இந்தத் திரவச் சேர்க்கை மூளையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்). அப்போது அந்த பெற்றோருக்கு அதன் முழு விவரம் தெரியாது.

"திரவம் மிக குறுகிய காலத்தில் வேகமாக சேர்ந்துள்ளது. எனவே மருத்துவமனைக்கு வரும்போதே குழந்தையின் உடல் நலம் மிகவும் இக்கட்டான நிலையில் தான் இருந்தது. அறுவை சிகிச்சை செய்த பிறகும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை" என்று சிகிச்சை வழங்கிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறை இயக்குநர் மருத்துவர் ஆர்.ராகவேந்திரன் கூறுகிறார்.

19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, Hydrocephalus என்பது மூளையின் உள்ளேயுள்ள வென்ட்ரிக்கிள்கள் எனப்படும் காலிப் பகுதிகளில் அசாதாரணமாக அதிக அளவில் திரவம் தேங்கும் நிலை.

சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்த குழந்தை

ஆறு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வையில் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டது. பின்பு, அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அதாவது குழந்தை உயிருடன் இருக்கிறது. ஆனால் மூளையின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கும் வகையில் நிரந்தர பாதிப்புகள் மூளையில் ஏற்பட்டிருந்தன.

"ஹைட்ரோகெபாலஸ் பிறவி குறைபாட்டின் காரணமாக ஏற்பட்டுள்ளது. சிலரில் அதன் அறிகுறிகளும் பாதிப்பும் பிறந்த உடனே ஏற்படாமல் தாமதமாகவும் ஏற்படலாம்" என்கிறார் மருத்துவர் ராகவேந்திரன்.

சில நாட்கள் முன்பு எல்லா குழந்தைகளையும் போல ஓடி ஆடி விளையாடிய குழந்தை அந்த தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கையிலிருந்து மீண்டும் எழுந்து வராது என்பது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்றுக் கொள்ள முடியாத அந்த உண்மையை, அந்த பெற்றோர்கள் ஒப்புக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர்.

மருத்துவக் குழுவில் இருந்த ஆலோசகர்கள் பெற்றோர்களிடம் பேச தொடங்கினர். உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினர். துயர் மிகுந்த தருணத்திலும் தங்கள் குழந்தையின் உறுப்புகளை தானம் கொடுப்பது என்று முடிவு செய்தனர் பெற்றோர்கள். தமிழ்நாட்டில் இது வரை உறுப்பு தானம் அளித்த கொடையாளர்களில் இந்த 19 மாத குழந்தை இளம் கொடையாளரானார்.

'மகனை திரும்பி பார்க்காமல் சென்ற தாய்'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

உறுப்பு தானத்துக்கு ஒப்புக் கொண்ட பிறகு, இறந்தும் இறக்காமல் இருந்த தனது குழந்தையை கடைசியாக ஒரு முறை பார்த்தார் அவரது தாய். உறுப்பு தான அறுவை சிகிச்சைக்காக குழந்தையை அரங்குக்கு உள்ளே மருத்துவர்கள் எடுத்துச் சென்றனர். அறுவை அரங்கு கதவுகள் மூடப்பட்டன. தனது மகன் இறந்துவிட்ட காட்சியை மனதில் பதிவு செய்ய விரும்பாத அந்த தாய் அங்கிருந்து திரும்பி பார்க்காமல் அவரது கணவருடன் புறப்பட்டு விட்டார்.

இவ்வளவு விவரங்களை பிபிசி தமிழிடம் தொலைபேசியில் தெரிவித்த மருத்துவர் ராகவேந்திரன் திடீரென பேசுவதை நிறுத்தி விட்டார். மறுமுனையில் நிலவியது மௌனம் மட்டுமே.

மீண்டும் பேச தொடங்கிய அவர், "அறுவை சிகிச்சைக்கு பிறகு, தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்தோம்" என்று கூறினார்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த குழந்தையின் தந்தை, "என் குழந்தையால் முடியவில்லை. மற்ற குழந்தைகளுக்காக செய்துள்ளோம்" என்று கூறிச் சென்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 20 மாத குழந்தையின் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டிருந்தன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் சாந்தாராமன், "தானத்தில் உயர்ந்த தானமாக உறுப்பு தானத்தை கருதுகிறேன். மிகவும் துயரமான தருணத்தில் அவர்கள் உன்னதமான முடிவு எடுத்துள்ளனர். ஒரு மருத்துவராக நான் மனநிறைவு அடைகிறேன்" என்றார்.

"பல நேரங்களில் உறுப்பு தானம் அளிக்கலாம் என்ற முடிவை தாய்மார்கள் தான் எடுக்கின்றனர். எவ்வளவு வயதாகி இருந்தாலும் ஒரு தாய்க்கு தனது குழந்தை எப்போதும் குழந்தை தான். எனவே, தனது குழந்தையின் உறுப்புகள் மற்றொரு உடம்பில் இயங்குவதன் மூலம், தனது குழந்தை ஒரு வகையில் உயிருடன் இருப்பதாக தாய்மார்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். அந்த உன்னதமான முடிவை எடுப்பது எளிதல்ல, மிகுந்த தைரியம் வேண்டும்" என்றார்.

19 மாத குழந்தையின் உறுப்புகள் தானம்

பட மூலாதாரம், Getty Images

சிறுவர்களின் உறுப்புகள் பெரியவர்களுக்கு பொருந்துமா?

மூளைச்சாவு அடைந்த குழந்தையின் இரண்டு சிறுநீரகங்கள் சென்னையில் 20களில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும், கல்லீரல் சென்னையில் ஒரு குழந்தைக்கும், இருதயம் கோவையில் உள்ள ஒரு குழந்தைக்கும் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் உறுப்புகள் பல நேரங்களில் பெரியவர்களுக்கு பொருந்தும் என்கிறார் மருத்துவர் சாந்தாராமன்.

" பல உறுப்புகள் பிறக்கும் போதே பெரியவர்களில் இயங்குவது போல, குழந்தைகளில் இயங்கும். ஒன்றரை வயதாகும் போது, உறுப்புகளின் அளவும் கிட்டத்தட்ட பெரியவர்களை ஒத்ததாக இருக்கும்." என்று அவர் விளக்குகிறார்.

"சிறுநீரகங்களை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியது GFR (Glomerular Filtration Rate - சிறுநீரகங்கள் ரத்தத்தை எந்த அளவு சுத்தம் செய்கின்றன என்று கணிப்பது). கொடையாளருக்கும், தானம் பெறுபவருக்கும் இது பொருத்தமாக இருக்க வேண்டும். பெரியவர்களில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, ஒரு சிறுநீரகத்தை தானமாக பெற்றாலே போதுமானதாக இருக்கும். ஆனால் சிறியவர்களிடமிருந்து சிறுநீரகங்களை தானமாக பெற்றால் இரண்டு சிறுநீரகங்களும் தேவைப்படும்" என்கிறார் மருத்துவர் ராகவேந்திரன்.

இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதன் எடையும் பரப்பளவுமே முக்கியம் என்று குறிப்பிடுகிறார். உறுப்பு தான காத்திருப்பு பட்டியலில் குழந்தைகளும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு