வெயில் காலங்களில் ஏசி தீப்பிடிப்பது ஏன்?
வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இத்தகைய சூழலில் ஏசி பயன்பாடும் அதிகரித்துள்ளது. ஆனால், கடும் வெப்பத்தினால் ஏசி வெடிக்கும் சம்பவங்களை காண முடிகிறது. அதனால் ஏசியை பாதுகாப்பாக கையாள்வதும் மிக முக்கியம்.
பெரும்பாலும் கோடைக்காலத்தில் ஏசி ஏன் வெடிக்கிறது? அவற்றை தவிர்ப்பது எப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம்.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பொருத்தப்படும் ஏசிகளில் ஏற்படும் வெடிப்பு சம்பவங்களுக்கும், அதிகரித்து வரும் வெப்பநிலைக்கும் தொடர்பு உள்ளது. இதன் அறிவியல் காரணத்தை புரிந்துகொள்வதற்காக பிபிசி செய்தியாளர் அர்ஷத் மிசால் இதுபற்றி IIT வாரணாசி-இன் மெக்கானிக்கல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சகார் சர்காருடன் பேசியுள்ளார்.
குளிர்விக்கும் செயல்முறைக்காக, சுற்றுப்புற வெப்பநிலை அதாவது கம்ப்ரசர் அருகிலுள்ள வெப்பநிலை கண்டென்சர் வெப்பநிலையை விட சுமார் 10 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில், ஏசி கண்டென்சரின் வெப்பநிலை பொதுவாக 50 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதால், சுற்றுப்புற வெப்பநிலை இந்த அளவை மீறும்போது ஏசி செயல்படாமல் போகிறது. இத்தகைய சூழலில், கண்டென்சர் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், கண்டென்சர் வெடிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது என சகார் சர்கார் குறிப்பிடுகிறார்.
அதிக வெப்பநிலையைத் தவிர, ஏசியில் விபத்துகள் ஏற்படுவதற்கான பல முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலில், வாயு கசிவு. கண்டென்சரில் இருந்து வாயு கசிந்தால், அழுத்தம் சமநிலை குலைகிறது என கூறும் நிபுணர்கள் இதனால் கண்டென்சர் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, அது அதிக வெப்பமடைந்து, தீப்பற்றும் அபாயம் அதிகரிக்கிறது.
அடுத்ததாக, அழுக்கான காயில்கள். கண்டென்சர் காயில், ஏசியின் குளிர்விக்கும் செயல்முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது காற்றிலிருந்து வெப்பத்தை வெளியேற்றுகிறது. ஆனால், இந்த காயில் தூசி மற்றும் அழுக்கால் அடைத்துக் கொண்டால், வாயுக்களின் இயல்பான ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் கண்டென்சர் அதிக வெப்பமடைந்து, தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
மற்றொரு முக்கிய காரணம், மின்னழுத்த மாற்றங்கள். அடிக்கடி ஏற்படும் மினழுத்த ஏற்றத் தாழ்வுகள் கம்ப்ரசரின் செயல்திறனை பாதிக்கும். இதன் விளைவாக, ஏசி பழுதடையவும், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
கடும் வெப்பத்தில், ஏசி கம்ப்ரசரை நேரடி வெயிலில் வைக்காமல், நிழலில் வைப்பது மிகவும் முக்கியம். அதேபோல கம்ப்ரசர் மற்றும் கண்டென்சர் யூனிட்டின் சுற்றுப்புறத்தில் போதுமான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் ஏசி யூனிட் அதிக வெப்பமடைவதைத் தடுக்கலாம்.
ஏசியை முறையாக சர்வீஸ் செய்து வருவது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் சிறிய பிரச்னைகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்ய முடியும்.
ஏர் ஃபில்டர் மற்றும் குளிரூட்டும் காயில்களை அடிக்கடி சுத்தம் செய்வதால், இது கம்ப்ரசர் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, ஏசி சீராக செயல்பட உதவுகிறது. செம்பு கண்டென்சர் கொண்ட ஏசிகள், அலுமினியம் கண்டென்சர் கொண்ட ஏசிகளை விட சிறந்தவை என நிபுணர்கள் கூறுகின்றனர். அவை விலை அதிகமாக இருந்தாலும் நீண்ட நாட்கள் நீடிக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் செம்பு, தண்ணீர் அல்லது காற்றில் உள்ள ஈரப்பதத்துடன் எளிதில் வினைபுரியாது. அதனால் அது துருப்பிடிக்காமல் இருக்கும்.மேலும், அதன் Low specific heat தன்மையால், காப்பர் விரைவாக சூடாகாது. அதேபோல குளிர்ச்சியடைய குறைந்த நேரமே எடுத்துக்கொள்ளும். இதனால் அலுமினியம் ஏசிகளை விட காப்பர் ஏசிகளை நிபுணர்கள் அதிகம் பரிந்துரைக்கிறார்கள்.
உலக வெப்பமயமாதலின் தாக்கம் இந்தியாவில் தெளிவாகப் பதிவாகி வரும் நிலையில் ஆண்டுதோறும் வெப்பஅலைகள் மேலும் கடுமையாகின்றன.
பிபிசியின் ஓர் கட்டுரைப்படி, இந்தியாவின் 30 கோடி வீடுகளில் வெறும் 8 சதவீத வீடுகளில் மட்டுமே ஏசி வைத்திருந்தாலும் சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட யூனிட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏசி சந்தையாக இந்தியா திகழ்வதாக அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு உலகளவில் விற்கப்பட்ட 17 கோடி ஏசி யூனிட்களில், சீனாவில் 9 கோடி யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் 1 கோடி யூனிட்களை வாங்கியுள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் இந்திய வீடுகளில் ஏசி பயன்பாடு ஒன்பது மடங்கு அதிகரிக்கும் என சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் மதிப்பீடு கூறுகிறது. இது தொலைக்காட்சி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பிற வீட்டு உபயோக சாதனங்களின் வளர்ச்சியை விட மிகவும் அதிகமாக இருக்கும்.
இதனால் எதிர்காலத்தில் ஏசி பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்பது உறுதியாகி உள்ள நிலையில் ஏசியை பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதை பாதுகாப்பாக பயன்படுத்துவதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



