மாறும் கணக்குகள்: தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற பாஜகவுக்கு திமுக ஒத்துழைக்குமா?

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர், நாடாளுமன்றத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருப்பதால் முந்தைய கூட்டத்தொடர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

திரிணாமூல் காங்கிரஸின் 28 மக்களவை உறுப்பினர்களில் 20 பேர், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே - யுபிடி) கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேர் பாஜகவில் இணைந்ததையடுத்து, மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் கணக்கு மாறியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளனர்.

மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக, அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான முயற்சிகளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029-க்குள் நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவை கொண்டு வர அரசு தயாராகி வருகிறது.

அதோடு, தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவையும் அரசு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு மசோதாக்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேறவில்லை.

அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாக முழுமையாக உறுதியான பிறகே, புதிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திரிணாமூல் காங்கிரஸின் கிளர்ச்சி செய்ததாகக் கூறப்படும் 20 மக்களவை உறுப்பினர்களும், சிவசேனா (யுபிடி) கட்சியின் ஆறு உறுப்பினர்களும் இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்தால், அதற்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 293-லிருந்து 319 ஆக உயரும்.

ஆனால், அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று வாக்களித்தால், அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான 360 உறுப்பினர்கள் என்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எட்டுவதற்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இருக்காது.

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுப்ரியா சுலே

சுப்ரியா சுலே கூறியது என்ன?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

புதன்கிழமை முதல், பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே, அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரிப்பது குறித்து தெளிவான விதிகள் மசோதாவில் இடம்பெற்றால், அதற்கு ஆதரவளிப்பது குறித்து தங்களது கட்சி பரிசீலிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த முயற்சிகள் வேகமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகையைப் பொருட்படுத்தாமல், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் உயர்த்தும் முன்மொழிவே இந்த விவாதத்தின் மையமாக இருப்பதாக சுப்ரியா சுலே கூறினார்.

"இதனை நடைமுறைப்படுத்துவதற்கான தெளிவான நடைமுறையை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். மக்கள்தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தென் மாநிலங்களுக்கு பாதகமாக இருக்கும் என்ற அச்சம் உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறியிருந்தாலும், அவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் அது இடம்பெறவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

இந்த அம்சங்கள் மசோதாவில் சேர்க்கப்பட்டால், அதை எதிர்ப்பதற்குக் காரணம் இல்லை என்றும் சுப்ரியா சுலே கூறினார்.

ஆனால், மசோதாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பான இறுதி முடிவு, இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

"50 சதவிகிதம் தொகுதிகள் அதிகரிப்பு தொடர்பான விதி இடம்பெற்றால், அதற்கு ஆதரவளிப்பதைப் பரிசீலிப்போம். இந்த மசோதா எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகவில்லை," என்றும் அவர் கூறினார்.

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட சுப்ரியா சுலே, முன்மொழியப்பட்ட நடைமுறையின்படி அந்த மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 48-லிருந்து 72 ஆக அதிகரிக்கும் என்று கூறினார்.

"இந்த 72 தொகுதிகளில், மூன்று தொகுதிகள் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்சி/எஸ்டி) ஒதுக்கப்படும். மீதமுள்ள 69 தொகுதிகளில் சில பெண்களுக்கு ஒதுக்கப்படும். அப்போது பொது பிரிவுக்காக 48 தொகுதிகளே மீதமிருக்கும். இதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பதே கேள்வி," என்று சுப்ரியா சுலே தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி, மூத்த மத்திய அரசு அதிகாரி ஒருவர் தி இந்து நாளிதழிடம், "தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் 50 சதவிகிதம் அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்துக்கும் தற்போது உள்ள பிரதிநிதித்துவ விகிதம் குறைக்கப்படாது," என்று கூறியதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால், அரசு இதுவரை வெளியிட்டுள்ள எந்த வரைவு மசோதாவிலும் இந்த உத்தரவாதம் இடம்பெறவில்லை.

முந்தைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறிய இந்த மசோதாவை அரசு மீண்டும் தாக்கல் செய்யத் தயாராகிறதா என்ற விவாதங்கள் நிலவி வரும் நிலையில், சுப்ரியா சுலே இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

அரசியல் ஆய்வாளர் வினோத் சர்மா கூறுகையில், "பாஜகவிடம் சுப்ரியா சுலே மிகவும் எளிய நிபந்தனையைத்தான் முன்வைத்துள்ளார். அமித் ஷா ஏற்கெனவே சுப்ரியா சுலே கூறிய அம்சத்தைப் பற்றிப் பேசி வந்துள்ளார். ஆனால், அது வரைவு மசோதாவில் இடம்பெறவில்லை. ஒருவகையில், சுப்ரியா சுலே தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்," என்றார்.

"உண்மையான பிரச்னை 50 சதவிகித அதிகரிப்பு அல்ல. மக்களவைத் தொகுதிகளை எவ்வாறு மறுவிநியோகம் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. சுப்ரியா சுலே அதைப் பற்றி எதுவும் கூறவில்லை. தொகுதி மறுவரையறை ஆணையத்துக்கு யார் தலைமை வகிப்பார்கள் என்பதுதான் உண்மையான விவாதம். தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படாமல் இருப்பதுதான் முக்கியம்," என்றும் அவர் கூறினார்.

"தொகுதி மறுவரையறை விவகாரத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒத்துழைக்கலாம் என்ற செய்திகள், தற்போது அரசியல் கட்சிகளின் நெருக்கடி மட்டுமல்ல. அரசியலின் சித்தாந்தமும் அடிப்படை நோக்கமும் நெருக்கடியில் உள்ளன என்பதை மீண்டும் வெளிப்படுத்துகின்றன," என்று அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பால்ஷிகர், சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி (கோப்புப்படம்)

சுப்ரியா சுலே இந்தக் கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பே, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நெருக்கமாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் பரவியிருந்தன.

செவ்வாய்க்கிழமை இரவு, தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பிரஃபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோரும் பங்கேற்றதாகவும், இதனால் இரு அணிகளும் மீண்டும் இணையக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்ததாகவும் கூறப்படுகிறது.

"புதிய தொகுதி மறுவரையறை மசோதா இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரிக்கும் விதி அதில் இடம்பெற்றிருந்தால், இந்தியா கூட்டணியில் அதைப் பற்றி விவாதிப்போம். அது பொதுநலனுக்கானதாக இருந்தால், ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்போம்," என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்குள்ளும் அதிருப்தி இருப்பதையும், இந்தியா கூட்டணிக்குள் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதையும் காங்கிரஸ் அறிந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிதம்பரம் கூறியது என்ன?

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

"2026 ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் முந்தைய கூட்டத்தொடரில், 131-ஆவது அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவால் முடியவில்லை. தற்போது அதை மீண்டும் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது," என்று அவர் கூறினார்.

"மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடு, ஏற்கெனவே அரசியலமைப்பின் (106-ஆவது திருத்தச்) சட்டத்தின் மூலம் செய்யப்பட்டுவிட்டது. எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டிய அவசியம் முன்பும் இல்லை, இப்போதும் இல்லை," என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

"திரிணாமூல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பிளவைத் தொடர்ந்து, அந்த மசோதாவின் புதிய வடிவத்தை நிறைவேற்றத் தேவையான ஆதரவைப் பெற பாஜக முயற்சி செய்து வருகிறது," என்றும் அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத் சந்திர பவார்) மற்றும் திமுகவின் ஆதரவைப் பெறவும் பாஜக முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த மசோதாவின் உண்மையான நோக்கத்தை தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) மற்றும் திமுக ஏற்கெனவே புரிந்துகொண்டுள்ளன. எனவே, அவை தங்களது முந்தைய நிலைப்பாட்டிலேயே தொடரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று ப. சிதம்பரம் கூறினார்.

திமுக கூறியது என்ன?

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, "தொகுதி மறுவரையறை மசோதா எந்த விதத்தில் வரவிருக்கிறது என்பதை அரசாங்கம் இதுவரை தெரிவிக்கவில்லை. அதற்கான வரைவு மசோதாவையும் கொடுக்கவில்லை. எனவே, அதுபற்றி நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது.

தொகுதிகளை 25%-50% அதிகரிப்போம் என்பது ஊடகங்களில் வெளியான ஒன்று. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. மசோதாவின் குறிப்புகள் வந்தபிறகே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லமுடியும்." என்றார்.

மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா, "தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான திமுக நிலைப்பாடு குறித்து தவறான தகவல் பரவியிருக்கிறது. எங்கள் நிலைப்பாட்டை கூட்டத்தில் எடுத்து வைத்தோம். இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதை மத்திய அரசு சொல்லவில்லை. மசோதா வெளியான பிறகே நிலைப்பாட்டைச் சொல்வோம். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அளவுக்கு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை முழுமையாக எதிர்ப்போம். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. திமுக அதில் உறுதியாக இருக்கிறது." என்றார்.

மேலும் பேசிய திருச்சி சிவா, "ஏற்கெனவே தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவாகத்தான் இருக்கிறது. இது நிறைவேற்றப்பட்டால் வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கூடி, தென் மாநிலங்களின் குரலுக்கு மதிப்பில்லாமல் போய்விடும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 1976-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி, வடக்கு-தெற்கு மாநிலங்களில் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுடன் இருப்பதால் அதை மனதில் வைத்து 25 ஆண்டுகளாக ஒத்திவைத்தார். 2001-ஆம் ஆண்டு வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது அதேநிலை தொடர்ந்ததை மனதில் வைத்து மீண்டும் 25 ஆண்டுகள் ஒத்திவைத்தார். இதுதொடர்பாக, கடந்த திமுக ஆட்சியில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். தென்மாநிலங்களின் உரிமைகள் பறிபோகக் கூடாது, இன்னும் 25 ஆண்டுகள் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்." என்றார்.

மேலும், இப்போதிருக்கும் 543 தொகுதிகளிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதில் கருத்து வேறுபாடு இல்லை என்றும் திருச்சி சிவா தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை மசோதா, பாஜக, திமுக, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தவ் தாக்கரே - சுப்ரியா சுலே

எந்தெந்த கட்சிகள் அரசை ஆதரிக்கின்றன?

மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) 293 உறுப்பினர்கள் உள்ளனர். அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற அதற்கு இன்னும் 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 149 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த மசோதா நிறைவேற 164 வாக்குகள் தேவை.

ஆனால், தற்போது அரசியல் சூழல் மாறியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸின் 28 மக்களவை உறுப்பினர்களில் 20 பேர், தேசிய குடிமக்கள் கட்சியில் இணைந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

மக்களவையில் 22 உறுப்பினர்களைக் கொண்ட திமுக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. இந்தியா கூட்டணியின் கூட்டங்களில் பங்கேற்பதையும் அக்கட்சி நிறுத்திக்கொண்டது. அண்மையில், சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப் தாக்கரே) கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் சிவசேனாவில் இணைந்தனர்.

தற்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, திமுக மற்றும் இந்தியா கூட்டணியின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற மோதி அரசு முயற்சி செய்து வருகிறது.

மக்களவையில் 22 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 8 உறுப்பினர்களையும் கொண்ட திமுகவின் ஆதரவைப் போலவே, மக்களவையில் 37 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களையும் கொண்ட சமாஜ்வாதி கட்சியின் ஆதரவும் இன்னும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

வாக்கெடுப்பின்போது அனைத்து உறுப்பினர்களும் அவையில் பங்கேற்றால், அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 360 வாக்குகள் தேவைப்படும்.

ஜூலை 24-ம் தேதிக்குப் பிறகு மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 117 உறுப்பினர்களாக உயரும் என்றும், அது அந்தக் கட்சியின் இதுவரையிலான அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நியமன உறுப்பினர்கள் 7 பேர், சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேர் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவையில் மொத்தம் 153 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற ஆளும் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.

எனினும், அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை எட்டுவதற்கு, அதாவது 164 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு, மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு