இரானின் முன்னாள் அதிபர் இஸ்ரேலுக்கு "விருப்பமான எதிரியாக" இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Isna
- எழுதியவர், சையத் ஜெஃப்ரி
- பதவி, அரசியல் ஆய்வாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"வெறுக்கத்தக்க இந்த ஆட்சி (இஸ்ரேல்) வீழ்ச்சியை நோக்கிய சரிவுப் பாதையில் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், மேலும் கடவுளின் அருளால் அது வீழும், எந்தவொரு காரணியாலும் அதைக் காப்பாற்ற முடியாது. இந்த ஆட்சி அதன் பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, விரைவில் உலக அரங்கில் இருந்து துடைத்தெறியப்படும்."
பல ஆண்டுகளாக, இது போன்ற கருத்துக்கள் முன்னாள் இரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தை உலகின் குறிப்பிடத்தக்க இஸ்ரேல் எதிர்ப்பு ஆளுமைகளில் ஒருவராக மாற்றின.
அவர் யூத இனப்படுகொலையைக் கேள்விக்குள்ளாக்கினார், இஸ்ரேலை ஒரு "கற்பனையான ஆட்சி" என்று அழைத்தார், மேலும் தடைகள் இருந்தபோதிலும் இரானின் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதை ஆதரித்துப் பேசினார்.
இத்தகைய நிலைப்பாடுகளையே, இரான் தங்களுக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருப்பதாக விளக்கும்போது, இஸ்ரேல் அதிகாரிகள் அடிக்கடி மேற்கோள் காட்டினர்.
ஆனால், தற்போது நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, "போருக்குப் பிந்தைய திட்டமிடல்" நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவும் இஸ்ரேலும், அக்மதினெஜாத் இரானின் பாதுகாப்பு அமைப்பிலிருந்து விலகி, எதிர்காலத் தலைவராக உருவெடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையைப் பற்றியும் பரிசீலித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்தத் திட்டம் தோல்வியடைந்தது என்று டைம்ஸ் செய்தி கூறுகிறது. ஏனெனில் போரின் தொடக்கத்தில் அஹ்மதிநெஜாத்-தை வீட்டுக் காவலில் இருந்து விடுவிப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில், அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அஹ்மதிநெஜாத் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவில்லை, மேலும் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அரசியல் ஆய்வாளர்கள் பலர் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நீண்ட காலமாக கடுமையான இஸ்ரேல் எதிர்ப்பு கருத்துக்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒருவருடன், அமெரிக்கா அல்லது இஸ்ரேல் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிக்கப்பட்டது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வெளிப்படையான முரண்பாடு, அக்மதினெஜாதின் அரசியல் பிம்பம் தொடக்கத்தில் இருந்தே தோன்றியதைக் காட்டிலும் அதிக சிக்கலானதா என்ற கேள்வியையும் மீண்டும் எழுப்பியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலுக்கு ஒரு பயனுள்ள எதிரியா?
இப்பிரச்னையின் நுட்பமான தன்மையைப் புரிந்துகொள்ள, இரானிய அரசியலில் அஹ்மதிநெஜாத் முதன்முதலில் செல்வாக்கு பெற்ற காலத்திற்கு நாம் செல்ல வேண்டும்.
2003ஆம் ஆண்டில், ஒரு அரசியல் பிரமுகராகப் பலருக்கும் தெரியாதவராக இருந்தபோதிலும், அவர் டெஹ்ரானின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005-ஆம் ஆண்டில், சர்வவல்லமை படைத்த அதி உயர் தலைவர் அலி காமனெயியின் வெளிப்படையான ஆதரவோடு, அவர் அதிபராக அதிகாரத்திற்கு வந்தார்.
தனது தேர்தலின் போது நீதி, எளிமை மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்த முழக்கங்களைப் பயன்படுத்திய அவர், தனது உள்நாட்டுக் கொள்கைகளால் அல்லாமல், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் யூத இனப்படுகொலை குறித்த தனது கருத்துக்களின் காரணமாகவே மிக விரைவாக உலகளாவிய பிரமுகராக மாறினார்.
அக்டோபர் 2005-இல், டெஹ்ரானில் நடந்த 'சியோனிசம் இல்லாத உலகம்' மாநாட்டில், "அமெரிக்காவும் சியோனிசமும் இல்லாத ஒரு உலகம் சாத்தியமானது தான்" என்று அஹ்மதிநெஜாத் கூறினார்.
சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, யூத இனப்படுகொலையின் உலகளாவிய பார்வையை மறுபரிசீலனை செய்வதற்கான சர்ச்சைக்குரிய சர்வதேச மாநாடும் டெஹ்ரானில் நடத்தப்பட்டது. நன்கு அறியப்பட்ட யூத இனப்படுகொலை மறுப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த மாநாடு, சர்வதேச அளவிலான எதிர்வினை அலையைத் தூண்டியது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சில இஸ்ரேலிய அதிகாரிகளும் ஆய்வாளர்களும், அஹ்மதிநெஜாத் தனது கடுமையான சொல்லாடல்கள் மற்றும் யூத இனப்படுகொலை மறுப்பு ஆகியவற்றின் மூலம், பயனுள்ள வகையில் இஸ்ரேலுக்குச் சாதகமாகவே செயல்பட்டதாக வெளிப்படையாகக் கூறினர்.
2008-ஆம் ஆண்டில், மொசாட்டின் முன்னாள் தலைவரான எஃப்ராயிம் ஹலேவி, அவரை "இஸ்ரேலுக்கு இரான் அளித்த மிகப்பெரிய பரிசு" என்று விவரித்தார். அவரது கருத்துக்கள் இரானின் அச்சுறுத்தலை உலகம் தீவிரமாக எடுத்துக்கொள்வதை எளிதாக்கியதாக அவர் கூறினார்.
அஹ்மதிநெஜாத்தின் ஆதரவாளர்கள் இதை நிராகரித்து, அவர் இஸ்ரேலையும் மேற்கத்திய நாடுகளையும் எதிர்கொள்ளும் ஒரு தீவிரமான மற்றும் கருத்தியல் சார்ந்த கொள்கையை மட்டுமே பின்பற்றினார் என்று கூறினர்.
அதிகாரத்திற்குப் பிறகு பிம்ப மாற்றம்

பட மூலாதாரம், Getty Images
2013-இல் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, அஹ்மதிநெஜாத் அதி உயர் தலைவர் அலி காமனெயி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை உள்ளிட்ட இரானின் பாதுகாப்பு அமைப்பின் சில பிரிவுகளுடன் மோதலில் ஈடுபட்டார்.
பின்னர் இரானின் கார்டியன் கவுன்சில் மூலம் அவர் அதிபர் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து பலமுறை தடை செய்யப்பட்டார்.
நியூயார்க் டைம்ஸ் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இரான் மற்றும் ஷியா அச்சு திட்டத்தின் தலைவரான ராஸ் ஜிம்ட், அஹ்மதிநெஜாத் பெரும்பாலும் முரண்பாடான மற்றும் எதிர்பாராத நிலைப்பாடுகளை எடுத்ததாக விளக்கினார்.
"அஹ்மதிநெஜாத்தின் அதிபர் பதவி என்பது ஜனரஞ்சகவாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் கலவையாக இருந்தது" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய ஆண்டுகளில், சமூக ஊடகங்களில் அஹ்மதிநெஜாத் தனது சர்வதேச பிம்பத்தை மாற்றி வடிவமைத்துள்ளார். அஹ்மதிநெஜாத் ஆங்கிலத்தில் ட்வீட் செய்துள்ளார், மிச்சிகன் பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், புகழ்பெற்ற அமெரிக்க ராப்பர் துபாக் ஷகூரை மேற்கோள் காட்டியுள்ளார். அதேபோல் அமெரிக்காவில் "அரசியல் ஊழலுக்கு எதிராகப் போராடியதற்காக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும் பாராட்டியுள்ளார்.
ஆனால், இரானுக்குள்ளும், மேற்கத்திய நாடுகளின் பார்வையிலும் ஒரு மிதமான பிம்பத்தை உருவாக்குவதை நோக்கிய இந்த நகர்வை ஜிம்ட் அங்கீகரித்தாலும், 90 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அஹ்மதிநெஜாத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கும் அளவிலான ஆதரவு ஒருபோதும் இருந்ததில்லை என்று அவர் கூறினார்.
அமெரிக்க நிபுணர்களிடையே எழுந்த சந்தேகம்
பிபிசி பெர்ஷியனிடம் பேசிய மூன்று அமெரிக்க வல்லுநர்களும், அஹ்மதிநெஜாத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான ஒரு "தீவிரமான செயல்பாட்டுத் திட்டம்" குறித்த அறிக்கையைச் சந்தேகிக்கிறார்கள்.
நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும், பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வாளருமான மேக்ஸ் ஆப்ராம்ஸ், போருடன் தொடர்புடைய அதிக அளவிலான தவறான தகவல்களைக் குறிப்பிட்டு, இந்தத் தகவலை "மிக அதிக சந்தேகத்துடனேயே" அணுக வேண்டும் என்று கூறுகிறார்.
அஹ்மதிநெஜாத்தின் யூத இனப்படுகொலை மறுப்பு மற்றும் இரானின் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதில் அவரது பங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் மீண்டும் பதவிக்கு வருவதை இஸ்ரேல் வரவேற்க வாய்ப்பில்லை என்றும், அதே நேரத்தில் டிரம்பைப் பொறுத்தவரை, ஒரு வெற்றிகரமான ஆட்சி மாற்றத்தின் சொல்லாடலுக்குள் அஹ்மதிநெஜாத் பொருந்தமாட்டார் என்றும் அவர் கருதுகிறார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக் கவுன்சிலின் இலான் பெர்மனும், நம்பகமான அமெரிக்க-இஸ்ரேலிய திட்டம் என்ற யோசனை சாத்தியமற்றது என்றே கருதுகிறார்.
தலைமைப் போட்டிக்கான ஒருவராக அஹ்மதிநெஜாத்தின் பெயர் பரிசீலிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்திருக்க மாட்டார் என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த மைக்கேல் ரூபின், இந்தத் தகவலை "கற்பனையானது" என்று அழைப்பதோடு, நியூயார்க் டைம்ஸ் பெயர் தெரியாத ஆதாரங்களை அதிகமாகச் சார்ந்துள்ளது என்று கூறுகிறார்.
இருப்பினும், அஹ்மதிநெஜாத் இரானிய சமூகத்தின் சில பகுதியினரை எவ்விதம் ஈர்த்தார் என்பதை மேற்கத்திய நாடுகளில் உள்ள பலர் இன்னும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கிடையில், நியூயார்க் டைம்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தங்களது செய்தி குறித்து "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாகத் தெரிவித்துள்ளதுடன், இது அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் இரானிய அதிகாரிகள் மற்றும் பிற விபரமறிந்த ஆதாரங்களுடனான உரையாடல்களின் அடிப்படையிலானது என்றும் வலியுறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், khamenei.ir
இஸ்ரேலுக்கு உள்ளிருந்து எழுந்த எதிர்வினை
சில இஸ்ரேலிய பாதுகாப்பு வல்லுநர்கள், இத்தகைய ஒரு சூழ்நிலை இரானைப் பற்றிய இஸ்ரேலின் புரிதலை எவ்வாறு வெளிப்படுத்தும் என்பதில் கவனம் செலுத்தினர்.
தேசிய பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் டேனி சிட்ரினோவிச் எக்ஸ் தளத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.
அஹ்மதிநெஜாத்திற்கு "முடிசூட்ட" முயலும் எந்தவொரு முயற்சியும், இரானின் அரசியல் அமைப்பைப் பற்றிய ஆழமான தவறான புரிதலையே பிரதிபலிக்கும் என்று அதில் எழுதியுள்ளார்.
அஹ்மதிநெஜாத்திற்கு ஒரு உண்மையான அதிகார அடித்தளம் இல்லை என்றும், இரானின் உயரடுக்கு ஆயுதப் படையான ஐஆர்ஜிசி அவரை ஒருபோதும் ஆதரிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது இரானில் இருக்கும் ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் வீழ்ந்தால் மட்டுமே அவரால் கட்டுப்பாட்டை எடுக்க முடியும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அதைச் சாதிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி இஸ்ரேலிய பாதுகாப்பு ஆய்வாளரான யோசி மெல்மேன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தக் கதை பல கோணங்களில் அபத்தமானது" என்று எழுதியுள்ளார். சிறுபான்மையினரின் கிளர்ச்சிகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஒரு ஆட்சியின் வீழ்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்ற எந்தவொரு யோசனையும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் இருந்து திட்டமிடுபவர்கள் "ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தார்கள்" என்பதையே காட்டும் என்று அவர் கூறினார்.
அஹ்மதிநெஜாத்தின் பெயர் ஏன் முதலில் குறிப்பிடப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images
இத்தனை சந்தேகங்களுக்குப் பிறகும், ஏன் அஹ்மதிநெஜாத்தின் பெயர் குறிப்பிடப்பட்டது என்ற கேள்வி எஞ்சி நிற்கிறது.
அவருடைய மூன்று குணங்களின் அடிப்படையில் இக்கேள்விக்கான பதில் அமைந்திருக்கலாம்.
புகழ், அரசாங்கத்திற்குள் இருந்த அனுபவம் மற்றும் உச்சத் தலைவரிடமிருந்து அவர் பேணும் தூரம். அஹ்மதிநெஜாத் இரானுக்குள் நன்கு அறியப்பட்டவர், அரசாங்கத்தை நடத்திய அனுபவம் கொண்டவர், அடித்தட்டு மக்களின் மொழியைப் புரிந்தவர் மற்றும் இஸ்லாமியக் குடியரசின் அதிகார வழிமுறைகளை நன்கு அறிந்தவர்.
அதே நேரத்தில், காமனெயியுடனான அவரது கருத்து வேறுபாடுகள் காரணமாக, அவர் வெறுமனே அரசாங்கத்தின் உள்மட்டத்தில் இருப்பவராக மட்டும் கருதப்படுவதில்லை.
சில வெளியுறவுக் கொள்கை வல்லுநர்களின் பார்வையில், இந்த குணங்கள் குழப்பமான ஒரு காலகட்டத்தில் அவரைப் பயன்படுத்தக்கூடிய ஒரு நபராகக் காட்டியிருக்கலாம்.
ஒரு கூட்டாளியாக அல்ல, மாறாக அதிகாரக் கட்டமைப்பிற்குள் பிரிவினைகளை உருவாக்குவதற்கான ஒரு தற்காலிக நபராக அவர் கருத்தப்பட்டிருக்கலாம்.
அஹ்மதிநெஜாத் உண்மையில் யார்?
சில இரானிய விமர்சகர்களும் பார்வையாளர்களும், அஹ்மதிநெஜாத்தின் அதிபர் பதவி மற்றும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டுப் பயணங்கள் முதல் சமீபத்திய போரின் போது அவர் மௌனம் காத்தது வரையிலான பல ஆண்டுகால நடத்தை அவரது அரசியல் நிலைப்பாடு குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
அவரது கொள்கைகள் சர்வதேச அளவில் இரானைத் தனிமைப்படுத்த உதவியதுடன், அணுசக்தி நெருக்கடியைத் தீவிரப்படுத்தின என்றும், இறுதியில் இரானுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்திய மிகவும் பயனுள்ள அரசியல் பிரசாரங்களில் சிலவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இப்போது வெளியாகியுள்ள நியூயார்க் டைம்ஸ் செய்தி அந்த விவாதங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.
இது முதல் முறை அல்ல.
தனது அதிபர் பதவிக் காலத்தில், முன்னணி சீர்திருத்தவாதப் பிரமுகர்கள் மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகள் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தியதன் மூலம் அவர் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டு, சர்ச்சைக்குரிய 2009 தேர்தலைத் தொடர்ந்து நடந்த மக்கள் போராட்டங்களுடன் தொடர்புடையதாகும். இருப்பினும், அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அதே பிரமுகர்களுடன் அவர் சமரசம் செய்ய முயன்றதாகவும், தனக்கு முன்னால் அதிபராக இருந்த ஒருவருடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யக்கூட முயற்சித்தார் என்றும் இரானிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை.
உறுதியான கருத்தியல் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, நிலைப்பாடுகளை மாற்றுவதற்கும் கூட்டணிகளை மறுவரையறை செய்வதற்கும் அவர் காட்டிய இந்த வெளிப்படையான விருப்பம், வெளிநாட்டு சக்திகளுடன் இருக்கும் ஏதேனும் ரகசியத் தொடர்புகளைக் காட்டுவதை விட, உள்நாட்டு அதிகாரப் போட்டிகளுக்குள் அவர் கையாண்ட உத்திகளையே பிரதிபலிக்கக்கூடும்.
உண்மையில், அஹ்மதிநெஜாத்தை இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் இணைக்கும் எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை.
ஆனால், ஒரு மைய முரண்பாடு இன்னும் நீடிக்கிறது.
நீண்டகாலமாகக் கடுமையான இஸ்ரேல் எதிர்ப்பு சொல்லாடல்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு அரசியல்வாதி, தற்போது சில செய்திகளின்படி, இரானின் எதிர்காலத்திற்கான ஒரு சாத்தியமான தேர்வாகச் சித்தரிக்கப்படுகிறார்.
இது அஹ்மதிநெஜாத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இரானிய அரசியலில் தொடர்ந்து நீடிக்கும் கேள்விகளில் ஒன்றை மீண்டும் எழுப்பியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































