அமெரிக்கா - சோவியத் பனிப்போரை தொடங்கி வைத்த சர்ச்சில் உரை; ஸ்டாலின் என்ன செய்தார்?

1946 மார்ச் 5-ஆம் தேதி ஆற்றிய தனது உரையில், அமெரிக்கா தனது பார்வையை வெளிநாடுகளை நோக்கித் திருப்ப வேண்டும் என்றும், தனிமைப்படுத்தும் கொள்கைக்குத் திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சர்ச்சில் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Alamy

    • எழுதியவர், கிரெக் ஹோக்விட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1946-ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், பிரிட்டனின் போர்க்காலத் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சில், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து மேற்குலகிற்கு உருவாகி வரும் அச்சுறுத்தல் குறித்து அவசர எச்சரிக்கை விடுத்தார்.

"பால்டிக் கடலில் உள்ள ஸ்டெட்டின் முதல் அட்ரியாடிக் கடலில் உள்ள ட்ரைஸ்டே வரை, கண்டத்தின் குறுக்கே இரும்புத் திரை இறங்கியுள்ளது." ஒரே வாக்கியத்தில், ஒன்றுக்கொன்று எதிரான இரு வாழ்க்கை முறைகளுக்கு இடையேயான பிரிவை சர்ச்சில் வரையறுத்தார்.

ஒரு புறம் முதலாளித்துவ மேற்குலகம்; மறுபுறம் கம்யூனிச கிழக்கு.

1946 மார்ச் 5-ஆம் தேதி ஆற்றிய தனது உரையில், அமெரிக்கா தனது பார்வையை வெளிநாடுகளை நோக்கித் திருப்ப வேண்டும் என்றும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் கொள்கைக்குத் திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சர்ச்சில் வலியுறுத்தினார்.

போருக்குப் பிந்தைய உற்சாகத்துக்கும், எதிர்காலத்தில் புதிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற குழப்பமான உணர்வுக்கும் இடையில் உலகம் இருந்த ஒரு தருணத்தை அது பிரதிபலித்தது.

அப்போது அனைவரும் இதை உணர்ந்திருக்கவில்லை.

ஆனால், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் என்ற இரண்டு புதிய வல்லரசுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக உலகை கருத்தியல் அடிப்படையில் இரு முகாம்களாகப் பிரிக்கவிருந்த பனிப்போருக்கான சூழல் எவ்வாறு உருவாகி வந்தது என்பதை சர்ச்சில் அடையாளம் கண்டிருந்தார்.

அப்போது சர்ச்சில் ஒரு தனிப்பட்ட குடிமகனாக மட்டுமே பேசினார். போரின் பெரும்பாலான ஆண்டுகளில் பிரிட்டனை வழிநடத்திய உலகத் தலைவராக அவர் பேசவில்லை.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

போரில் வெற்றி பெற்ற பின்னர், போருக்குப் பிந்தைய உலகம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை முக்கிய வல்லரசுகள் திட்டமிட்டுக் கொண்டிருந்த நிலையில், 1945 பொதுத் தேர்தலில் பிரிட்டன் மக்கள் சர்ச்சிலை பதவியில் இருந்து அகற்றினர்.

விஈ நாள் (VE Day) கொண்டாட்டங்கள் முடிந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், மக்கள் தன்னை நிராகரித்ததால் மனமுடைந்து குழப்பமடைந்த 71 வயதான சர்ச்சில், அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

ஆனால், அவரது மனதில் ஏற்கெனவே ஒரு விஷயம் இருந்தது.

போர் முடிவை நெருங்கியபோது, நாஜி ஜெர்மனியைத் தோற்கடிப்பதற்காக கிழக்கு ஐரோப்பா முழுவதும் முன்னேறியபோது சோவியத் படைகள் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து பின்வாங்கவில்லை என்பதை சர்ச்சில் கவனித்திருந்தார்.

புதிதாக விடுவிக்கப்பட்ட அந்த நாடுகளில் சோவியத் ஆதரவு பெற்ற ஆட்சிகள் உருவாகி வந்தன. தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்தை மாஸ்கோ வெளிப்படுத்தி வந்தது.

ஆனால், இவ்வளவு பேரழிவை ஏற்படுத்திய உலகளாவிய போருக்குப் பிறகு, குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், தங்களது முன்னாள் போர்க்கால கூட்டாளியான சோவியத் ஒன்றியத்தை எதிர்கொண்டு மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்தும் அபாயத்தை விரும்பவில்லை.

சர்ச்சில் இதற்கு உடன்படவில்லை.

சோவியத் ஒன்றியத்தின் மீது தாக்குதல் நடத்துவதையும் அவர் பரிசீலித்தார். இந்த வெடிகுண்டு போன்ற ரகசியத் திட்டத்துக்கு 'ஆபரேஷன் அன்திங்கபிள்' (Operation Unthinkable) என்று பெயரிடப்பட்டது.

பிரிட்டனின் ராணுவ ஆலோசகர்கள் விரைவிலேயே அது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை உணர்ந்தனர். அதன் பெயரே இதற்கான ஒரு குறிப்பாக இருந்திருக்கலாம். இதையடுத்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

பிரதமராக இல்லாவிட்டாலும், சர்ச்சிலின் வார்த்தைகளுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து முக்கியத்துவம் இருந்தது.

1945 அக்டோபரில், எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து அவருக்கு ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பு வந்தது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள சிறிய மத்திய மேற்கு நகரமான ஃபுல்டனில் இருந்த, அதுவரை அதிகம் அறியப்படாத வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரியில் பேசுமாறு அவருக்கு அழைப்பு வந்தது.

அந்தக் கடிதத்தின் கீழே அமெரிக்க அதிபரின் ஆதரவு வாசகம் எழுதப்பட்டிருந்தது:

"இது எனது சொந்த மாகாணத்தில் உள்ள ஓர் அற்புதமான பள்ளி. உங்களால் இதைச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். நான் உங்களை அறிமுகப்படுத்துகிறேன். அன்புடன், ஹாரி ட்ரூமன்."

சர்ச்சிலின் உரை தனது அரசாங்கத்துக்கும் பயனளிக்கும் என்பதை அமெரிக்க அதிபர் கணித்திருந்தார்.

அமெரிக்கா உருவான காலம் முதலே, உள்நாட்டு முன்னுரிமைகளையும் வெளிநாடுகளில் கொண்டிருந்த தனது லட்சியங்களையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்ற சவாலை எதிர்கொண்டு வந்தது.

ராணுவ வீரர்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், பல அமெரிக்கர்கள் உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தனர்.

ஆனால், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து உருவாகக்கூடிய அச்சுறுத்தல் குறித்து சிலர் கவலையடைந்திருந்தனர்.

அந்த நேரத்தில் அமெரிக்க மக்களின் மனநிலை எந்த நிலையில் இருந்தது என்பதை மதிப்பிடுவதற்கு சர்ச்சிலின் உரையை ட்ரூமன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

'சிறப்பு உறவு'

சர்ச்சில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, பல வாரங்கள் செலவிட்டு அந்த உரையைத் தயாரித்தார். போரின் அழிவுகளில் இருந்து உருவாகி வந்த புதிய உலகம் குறித்த தனது எண்ணங்களை அவர் அதில் தெளிவுபடுத்தினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் இருந்து அதிபர் ட்ரூமனுடன் அவர் மிசோரி சென்றார். ரயிலில் பயணம் செய்தபோது ட்ரூமன் உரையின் பிரதியை வாசித்தார்.

சர்ச்சில் தனக்குப் பின் பிரிட்டிஷ் பிரதமரான கிளெமென்ட் அட்லீக்கு எழுதிய கடிதத்தில், ட்ரூமன் உரைக்கு ஒப்புதல் அளித்தது குறித்து பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

"இது மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், பரபரப்பை ஏற்படுத்தும் என்றாலும், நன்மையை மட்டுமே செய்யும் என்றும் அவர் என்னிடம் கூறினார். உரையின் போதும் அதற்குப் பிறகும் அவர் அதே அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தார்."

ட்ரூமன், சர்ச்சிலை "அந்த மாபெரும் உலகக் குடிமகன்" என்று அறிமுகப்படுத்தினார். இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதற்கு வளாகத்தில் இருந்த ஒரே இடமான கல்லூரியின் உடற்பயிற்சிக் கூடத்தில் மேடை அமைக்கப்பட்டது.

அந்த உரைக்கு 'அமைதிக்கான வலுவான அடித்தளங்கள்' (Sinews of Peace) என்று தலைப்பு வைக்கப்பட்டது. இது ரோமானிய பேச்சாளரான சிசரோ பயன்படுத்திய "போருக்கான வளங்கள்" (sinews of war) என்ற சொற்றொடரை மாற்றியமைத்ததாகும்.

போருக்கான வடிவத்தை உருவாக்கிய அமெரிக்கா, அமைதியை உருவாக்குவதிலும் தனது பங்கை ஆற்ற வேண்டும் என்று அந்த உரையில் சர்ச்சில் வலியுறுத்தினார்.

"போர் மற்றும் கொடுங்கோன்மை என்ற இரண்டு மாபெரும் அழிவு சக்திகளிடமிருந்து" பாதுகாப்பு கோரிய அவர், புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியாது என்றார்.

"போரைக் கண்டிப்பாகத் தடுப்பதோ, உலக அமைப்பு தொடர்ந்து வளர்வதோ, ஆங்கிலம் பேசும் மக்களிடையே நான் கூறியுள்ள சகோதரத்துவ உறவு இல்லாமல் சாத்தியமில்லை. இதன் பொருள், பிரிட்டிஷ் காமன்வெல்த் மற்றும் பேரரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு இருக்க வேண்டும் என்பதாகும்" என்று அவர் கூறினார்.

சர்ச்சில் பாதி அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர். பிரிட்டனின் பாதுகாப்பும் வளமும் அமெரிக்காவுடனான நெருக்கமான உறவைச் சார்ந்திருப்பதாக அவர் நம்பினார்.

அவர் புதிதாகப் பயன்படுத்திய "சிறப்பு உறவு" என்ற சொற்றொடர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசாரத் தொடர்புகளை விவரிக்க இன்றும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்தக் கூட்டாண்மை பல நேரங்களில் குறிப்பிடத்தக்க அளவில் சிக்கலான வெளிநாட்டு உறவாகவே இருந்துள்ளது.

இந்த உரையில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான "இரும்புத் திரை" என்ற சொற்றொடர், அரசியல் சொற்பயன்பாட்டில் இடம்பெற்றது.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் "பண்டைய தலைநகரங்களும் நாடுகளும்" சோவியத் ஒன்றியத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருப்பதை சர்ச்சில் எச்சரித்தார்.

இந்த சோவியத் ஆதரவு நாடுகள் "காவல் அரசுகளாக" மாறி வருவதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகள் "முழுமையான சர்வாதிகாரக் கட்டுப்பாட்டை" பெற முயன்று வருவதாகவும் அவர் எச்சரித்தார்.

முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் இடையிலான பிளவைத் தெளிவாக விவரிக்கும் சொல்லாக "இரும்புத் திரை" என்ற பதத்தை சர்ச்சிலின் உரை பிரபலப்படுத்தியது.

ஆனால், அந்தச் சொல்லை உருவாக்கியவர் அவர் அல்ல.

உண்மையில், அதற்கு முன்பே அவரே அந்தச் சொல்லைப் பலமுறை பயன்படுத்தியிருந்தார்.

வரலாற்றாசிரியர் பேராசிரியர் டேவிட் ரெனால்ட்ஸ், பிபிசியின் 'விட்னஸ் ஹிஸ்டரி' நிகழ்ச்சியிடம் கூறுகையில், "மேற்குலகுக்கும் போல்ஷெவிசத்துக்கும் இடையிலான உறவைப் பற்றி 'இரும்புத் திரை' என்ற சொல் போல்ஷெவிக் புரட்சிக் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரும் அதை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியுள்ளார். ஆனால், உலகம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு கட்டத்தில், ஃபுல்டனில் அவர் அதை உலகம் முழுவதும் தெரியப்படுத்தியது இதுவே முதல் முறை" என்றார்.

விஈ நாள் (VE Day) முடிந்து ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், பெரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த அமைதி இன்னும் நிலையற்றதாகவே உள்ளது என்று சர்ச்சில் கூறினார்.

"நாம் உருவாக்கப் போராடிய விடுதலை பெற்ற ஐரோப்பா இதுவல்ல. நிரந்தர அமைதிக்குத் தேவையான அடிப்படை அம்சங்களைக் கொண்ட ஐரோப்பாவும் இதுவல்ல" என்று அவர் கூறினார்.

உலகின் பாதுகாப்புக்கு "ஐரோப்பாவில் புதிய ஒற்றுமை" தேவை என்றும், மேற்கத்திய ஜனநாயக நாடுகள் சோவியத் ஒன்றியத்தை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

"போரின்போது எங்கள் ரஷ்ய நண்பர்களையும் கூட்டாளிகளையும் நான் பார்த்த விதத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் மிகவும் போற்றுவது வலிமையைத்தான் என்றும், குறிப்பாக ராணுவ ரீதியான பலவீனத்தை அவர்கள் மிகவும் குறைவாகவே மதிக்கிறார்கள் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அந்தக் காரணத்தால், அதிகாரச் சமநிலை என்ற பழைய கோட்பாடு சரியானதல்ல" என்று சர்ச்சில் கூறினார்.

1930-களில் ஹிட்லர் மற்றும் நாஜி ஜெர்மனியை சமாதானப்படுத்தும் கொள்கைக்கு எதிராக தான் எச்சரித்ததை சர்ச்சில் மக்களுக்கு நினைவூட்டினார்.

"யாரும் கேட்கவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக நாம் அனைவரும் அந்தப் பயங்கரமான சுழலில் இழுக்கப்பட்டோம்" என்றார்.

மேலும், "மீண்டும் அது நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது" என்றும் அவர் கூறினார்.

சோவியத் ஒன்றியம் மற்றொரு மோதலை விரும்புகிறது என்று தான் நம்பவில்லை என்றாலும், அது "போரின் பலன்களையும், தனது அதிகாரத்தையும் கொள்கைகளையும் காலவரையின்றி விரிவுபடுத்துவதையும்" விரும்புகிறது என்று சர்ச்சில் கூறினார்.

சர்வதேச உறவுகளின் முக்கியக் கொள்கைகளை வகுக்கும் அடிப்படை ஆவணமான ஐ.நா. சாசனத்தைப் பாதுகாப்பதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் ஒன்றுபட்டு நிற்கவில்லை என்றால், "நிச்சயமாக பேரழிவு நம் அனைவரையும் சூழ்ந்துவிடும்" என்று அவர் எச்சரித்தார்.

நீண்டகாலமாக பிபிசியில் பணியாற்றிய ஒளிபரப்பாளர் அலிஸ்டர் கூக், 50 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நீண்டகால வாராந்திர நிகழ்ச்சியான 'லெட்டர் ஃப்ரம் அமெரிக்கா'வில், சர்ச்சிலின் எச்சரிக்கைக்கு மேற்கத்திய நாடுகளில் பொதுமக்களிடையே கிடைத்த எதிர்வினை பெரும்பாலும் மந்தமாக இருந்ததை நினைவுகூர்ந்தார்.

"நாஜிக்கள் சரணடைந்து வெறும் 10 மாதங்களுக்குப் பிறகு, சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்தலாகக் கருதி அனைவரையும் எச்சரிக்கத் தொடங்குவதற்கு நிச்சயமாக இது சரியான நேரம் அல்ல" என்று அவர் கூறினார்.

"பெரும்பாலான சுதந்திர நாடுகளில் பெரும்பாலான மக்கள், சர்ச்சிலின் வார்த்தைகளைக் கேட்டு பெருமூச்சு விட்டனர் அல்லது மிகவும் கோபமடைந்தனர் என்று நினைக்கிறேன்" என்றார் கூக்.

பலர் சர்ச்சிலை "அவரது பழைய எரிச்சலூட்டும் குணத்துடன் இருந்த, போரை விரும்புபவர்" என்று கருதினர். ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் தவறாக இருந்தோம்; அந்தப் பழைய முணுமுணுப்பாளர் தான் மீண்டும் சரியாகக் கூறியிருந்தார்" என்று கூக் கூறினார்.

நேட்டோ உருவாக்கம்

சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், தனது முன்னாள் கூட்டாளியான சர்ச்சிலின் உரைக்கு கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றினார். சர்ச்சிலை நாஜிக்களுடன் ஒப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ கம்யூனிஸ்ட் நாளிதழான 'பிராவ்தா'வில் அவர், "ஹிட்லர் தனது இனக் கோட்பாட்டை அறிவித்து, ஜெர்மன் மொழி பேசும் மக்கள் மட்டுமே முழுமையான மதிப்புமிக்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி போரைத் தொடங்கினார். சர்ச்சிலும் ஓர் இனக் கோட்பாட்டின் மூலம் போரைத் தொடங்குகிறார். ஆங்கில மொழி பேசும் நாடுகள் மட்டுமே முழுமையான மதிப்புமிக்க நாடுகள் என்றும், ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டியது அவற்றின் கடமை என்றும் அவர் கூறுகிறார்." என்று எழுதியிருந்தார்.

நிலைமையை அமைதிப்படுத்துவதற்காக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகள் தொடக்கத்தில் சர்ச்சிலின் உரையில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன.

ஆனால், ஓராண்டுக்குப் பிறகு, அதிபர் ட்ரூமன் உலகளாவிய ஜனநாயகத்தின் பாதுகாவலராக அமெரிக்கா செயல்படும் என்று உறுதியளித்தார்.

சோவியத் ஒன்றியத்தின் விரிவாக்கத்தையும் கம்யூனிசத்தின் பரவலையும் கட்டுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

பின்னர் 'ட்ரூமன் கோட்பாடு' என்று அழைக்கப்பட்ட இந்தக் கொள்கை, நேட்டோ அமைப்பு உருவாகவும், பின்னர் கொரியா மற்றும் வியட்நாமில் நடந்த மோதல்களில் அமெரிக்கா ஈடுபடவும் வழிவகுத்தது.

இறுதியில், சர்ச்சில் விவரித்த இரும்புத் திரை உருவகமான தடையாக மட்டுமல்லாமல், ஒரு உண்மையான பௌதிகத் தடையாகவும் மாறியது. 1961-ஆம் ஆண்டு பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.

28 ஆண்டுகளுக்கு அது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஒரு நாட்டையே பிரித்து வைத்திருந்தது.

இறுதியாக 1989-ஆம் ஆண்டு அந்தச் சுவர் இடிக்கப்பட்ட பிறகு, இரு வல்லரசுகளின் தலைவர்கள் தனித்தனியாக வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரிக்கு வந்தனர். பனிப்போர் முடிவடைந்ததைக் குறிக்கும் அடையாளமாக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1990-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், சுவர் இடிக்கப்பட்டதன் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில், சர்ச்சிலின் பேத்தி எட்வினா சாண்ட்ஸ் உருவாக்கிய சிற்பத்தை அர்ப்பணித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் அங்கு சென்றபோதும், சர்ச்சிலைப் போலவே அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் ஒரு தனிப்பட்ட குடிமகனாக இருந்தார்.

சர்ச்சிலின் உரை சோவியத் ஒன்றியத்தில் "பனிப்போரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக" எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதை கோர்பச்சேவ் ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு உலகம் எவ்வளவு மாறிவிட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"உலக அரசியலின் முக்கிய மையங்களில், அமைதி, ஒத்துழைப்பு, பரஸ்பர செயல்பாடு மற்றும் பொதுவான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார்.

தொலைநோக்குப் பார்வையுடன் சர்ச்சில் ஆற்றிய உரையைப் போல, கோர்பச்சேவின் வார்த்தைகள் பல ஆண்டுகளைக் கடந்து அதே அளவுக்கு எதிரொலிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு