மிதக்கும் கார்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சாதனை - தந்தையின் கனவை நிறைவேற்ற உயிரை பணயம் வைத்த மகன்

மார்கோ அமோரெட்டி மற்றும் மார்கோ டி கேண்டியா

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, தங்கள் பயணத்தின் முடிவில் ஒரு காரின் மீது நிற்கும் மார்கோ அமோரெட்டி மற்றும் மார்கோ டி கேண்டியா
    • எழுதியவர், விபெகே வெனேமா
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று, அட்லாண்டிக் பெருங்கடலில் பார்படாஸிலிருந்து 1200 கி.மீ தொலைவில், ஒரு எண்ணெய் கப்பல் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டது.

வோக்ஸ்வேகன் பாஸாட் மற்றும் ஃபோர்டு டானஸ் ஆகிய இரண்டு சிறிய மிதக்கும் கார்களும், அவற்றின் மேல் இரண்டு இளம் இத்தாலியர்களும் அமர்ந்திருந்தனர்.

23 வயதான மார்கோ அமோரெட்டி மற்றும் 21 வயதான மார்கோ டி கேன்டியா ஆகிய இரண்டு நண்பர்களும், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர்.

"நாங்கள் எந்த வகையான கப்பலில் பயணம் செய்கிறோம் என்று அந்தக் கப்பலின் கேப்டன் கேட்டார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர் எங்கள் வாகனத்தின் பதிவு எண்ணைக் கேட்கிறாரா என்றுகூட குழப்பமாக இருந்தது," என்கிறார் அமோரெட்டி.

அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அவர்களுக்கு குடிநீரும் பழங்களும் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும் உற்சாகமாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால், அவர்கள் ஏன் அங்கு இருந்தார்கள்?

காரில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடப்பது என்பது மார்கோ அமோரெட்டியின் தந்தை ஜியோர்ஜியோவின் நீண்ட நாள் கனவாக இருந்தது.

ஒரு சாகசக்காரராகவும் புகைப்படப் பத்திரிகையாளராகவும் இருந்த ஜியோர்ஜியோ அமோரெட்டியின் விசித்திரமான பயணங்கள் (காரால் இழுக்கப்படும் பாராசூட்டில் சஹாரா பாலைவனத்தைக் கடந்தது போன்றவை) உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகளில் இடம்பெற்றன.

சிறுவனாக இருந்த மார்கோவுக்கு, அவர் ஒரு சூப்பர் ஹீரோவைப் போலத் தோன்றினார்.

ஆனால், இப்போது ஜியோர்ஜியோ உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரது கடைசி கனவை நனவாக்க மார்கோவுக்கு கிடைத்த வாய்ப்பாக இது அமைந்தது.

ஜியோர்ஜியோ அமோரெட்டி

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, ஜியோர்ஜியோ அமோரெட்டி காரால் இழுக்கப்பட்ட பாராசூட்டில் சஹாரா பாலைவனத்தைக் கடந்தார்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இத்தாலியில், ஜியோர்ஜியோ தனது தீவிரமான கருத்துக்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெற்றார்.

தனது ஆறு குழந்தைகளுக்கும் வீட்டிலேயே கல்வி கற்பித்த அவர், அதிகாரப்பூர்வமாக ஒரு 'இல்லத்தரசராக' தன்னைப் பதிவு செய்யப் போராடினார்.

இவை இரண்டுமே அக்காலத்தில் மிகவும் புதிய கருத்துக்களாக இருந்தன. குழந்தைகள் நலனுக்காக வீட்டில் உள்ள பெண்களுக்கு அரசாங்கமே ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜியோர்ஜியோ தனது விசித்திரமான சாகசங்கள் மூலம் கிடைத்த ஊடகக் கவனத்தை, தனது சமூகச் செயல்பாடுகளைப் பிரபலப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார்.

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கான ஊதியப் போராட்டத்தை வலியுறுத்த, ஒரு மிதக்கும் காரில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க அவர் திட்டமிட்டிருந்தார்.

ஒரு பழைய காரை கடலில் மிதக்கக்கூடியதாக மாற்றுவதற்கு அவர் பல ஆண்டுகள் செலவிட்டார். மார்கோ அமோரெட்டி தனது தந்தை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அதன் மாடலை உருவாக்குவதைப் பார்த்துக்கொண்டே வளர்ந்தார்.

"அந்தக் கார் ஒரு கற்பனைக் கதையின் கதாபாத்திரத்தைப் போல இருந்தது. அது எங்களின் கனவாக இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

ஜியோர்ஜியோ 1978-ஆம் ஆண்டில் கேனரி தீவுகளில் இருந்து முதன்முதலில் இந்த "கடலில் பயணிக்கும் காரை" இயக்க முயன்றார்.

ஆனால் அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். 1988-ஆம் ஆண்டில், பிரான்சில் உள்ள கால்வாய் டு மிடியில் அவர் அதைப் பயன்படுத்தினார். அட்லாண்டிக் பெருங்கடலைக் கடப்பதே அவரது இறுதி இலக்காக இருந்தது, ஆனால் அவரால் அதற்கான பணத்தைத் திரட்ட முடியவில்லை.

 ஜார்ஜியோ அமோரெட்டி

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, 1978-ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க ஜார்ஜியோ அமோரெட்டி மேற்கொண்ட முதல் முயற்சி பாதியிலேயே தடைபட்டது.

தந்தையின் கனவை நனவாக்க...

அதன் பின்னர், 1998-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜியோர்ஜியோவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று கூறப்பட்டது.

இது அவரது மகன்களான மார்கோ, மௌரோ மற்றும் ஃபேபியோ ஆகியோருக்கு அவரது கடைசி கனவை நனவாக்குவதற்கான தூண்டுதலை அளித்தது.

அவர்கள் உடனடியாக இரண்டு பழைய கார்களைத் தயார் செய்யத் தொடங்கினர். அதில் உலோக பகுதிகள், பாய்மரக் கம்பங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் செயற்கைக்கோள் போன் ஆகியவற்றைப் பொருத்தினர்.

"நாங்கள் வாகனத்தில் செய்த மாற்றங்கள் சட்டப்படி சரியானவையா என்பது குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதனால், அந்த மாற்றங்கள் வெளியில் தெரியாதபடி முடிந்தவரை மறைத்துவைத்தோம்," என்று மார்கோ அமோரெட்டி கூறுகிறார்.

அவர்கள் கார்களை கேனரி தீவுகளுக்கு ஓட்டிச் சென்றனர்.

அங்கு இறுதி மாற்றங்களைச் செய்வதற்காக ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்தனர். கார்கள் மிதப்பதற்காக, அவற்றுக்குள் பாலியூரித்தேன் நுரையை நிரப்பினர். மேலும் உணவு, தண்ணீர் மற்றும் உறங்குவதற்காகக் கூரையின் மீது கூடாரம் பொருத்தப்பட்ட ஒரு சிறு படகைச் சேர்ப்பது போன்ற மாற்றங்களைச் செய்தனர்.

இது அவரது மகன்களான மார்கோ, மௌரோ மற்றும் ஃபேபியோ ஆகியோருக்கு அவரது கடைசி கனவை நனவாக்குவதற்கான தூண்டுதலை அளித்தது. அவர்கள் உடனடியாக இரண்டு பழைய கார்களைத் தயார் செய்யத் தொடங்கினர். அதில் உலோக பகுதிகள் , பாய்மரக் கம்பங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் செயற்கைக்கோள் மூலம் இயங்கும் போன் ஆகியவற்றைப் பொருத்தினர்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, லா பால்மா தீவில் இருந்து பயணத்தைத் தொடங்குவதற்காக மார்கோ அமோரெட்டியும் அவரது சகோதரர்களும் கார்களைத் தயார்படுத்தினர்.

ஜார்ஜியோவும் தனது மகன்களுடன் அந்தக் கடல் பயணத்தில் பங்கேற்க விரும்பினார். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அந்த வாய்ப்பை குடும்ப நண்பரான மார்கோ டி கேண்டியாவுக்கு வழங்கினார். இந்தப் பயணத்துக்காக கார்களைத் தயார்படுத்துவதில் மார்கோ முக்கியப் பங்காற்றியிருந்தார்.

"நீ இளைஞன். இந்தத் திட்டத்தை இனி நீயே முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை நான் உனக்கு வழங்கும் பரிசாக ஏற்றுக்கொள்," என்று ஜார்ஜியோ கூறினார்.

 ஜார்ஜியோ அமோரெட்டியும் மார்கோவும் இணைந்து எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, பயணம் தொடங்குவதற்கு முன், கேனரி தீவுகளில் ஜார்ஜியோ அமோரெட்டியும் மார்கோவும் இணைந்து எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்.

1999 மே 4-ஆம் தேதி, இருளின் போர்வையில், அந்த நான்கு சாகச வீரர்களும் லா பால்மா தீவின் தென்முனையில் அமைந்துள்ள ஃபாரோ டி ஃபுவென்கலியென்டே பகுதியில் இருந்து கார்களை கடலில் இறக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

சர்வதேசக் கடல் எல்லையை அடைய சிறிய வெளிப்புற இயந்திரங்களை பயன்படுத்தினர்.

எரிபொருள் தீர்ந்த பிறகு, காற்றும் கடல் நீரோட்டமும் தங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வரை அவர்கள் காத்திருந்தனர்.

அவர்கள் கடலில் கழித்த அந்த முதல் இரவில், நிலா மறைவதை அவர்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், கார் நீந்துவதற்கு தேவையான நீரோட்டம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. 11 நாட்களாக அவர்கள் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருந்தனர். கடல் நோயாலும் சோர்வாலும் பாதிக்கப்பட்ட ஃபேபியோ மற்றும் மௌரோ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

11 நாட்களாக அவர்கள் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருந்தனர். கடல் நோயாலும் சோர்வாலும் பாதிக்கப்பட்ட ஃபேபியோ மற்றும் மௌரோ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, கடல் நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மார்கோவின் சகோதரர்களான மௌரோவும் ஃபேபியோவும் மீட்கப்பட்டனர்.

மார்கோ எனப் பெயரிடப்பட்ட மற்ற இருவரும் ஆளுக்கொரு காரில் பயணத்தைத் தொடர்ந்தனர்.

காற்றைப் பயன்படுத்தி முன்னேறுவதற்காக அவர்கள் கார்களில் இருந்த பாய்மரக் கம்பங்களை உயர்த்தினர். அதன் பிறகு, அவர்களின் கடல் பயணம் சீராக முன்னேறத் தொடங்கியது.

அவர்கள் கடலில் கழித்த முதல் மாதத்தில், சூரியன், உப்பு மற்றும் தொடர்ச்சியான அசைவுகளுக்கும், ஓயாத சத்தத்துக்கும் பழக வேண்டியிருந்தது.

இரண்டு கார்களையும் இணைத்த கேபிள்கள் அடிக்கடி அறுந்தன, அவற்றை மீண்டும் இணைக்க வேண்டியிருந்தது.

"இரண்டாவது மாதத்துக்குள், கடல் நாங்கள் போராட வேண்டிய ஒரு எதிரியாகத் தோன்றவில்லை," என்று கூறும் கேண்டியா, "நாங்கள் மற்றொரு பரிமாணத்துக்குள் நுழைந்து நீராலான ஒரு உலகத்தின் அங்கமாக மாறினோம். இந்த நீல நிற உலகில் நாங்கள் முற்றிலுமாக மூழ்கிவிட்டோம்." என்கிறார்.

காரின் பின்புறத்தில் உள்ள கம்பியைப் பிடித்தபடி மார்கோ டி கந்தியா நிற்கிறார். அதே நேரத்தில், மௌரோ அமோரெட்டி காரிலிருந்து கடலுக்குள் குதிக்கிறார்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, லா பால்மா தீவின் கடற்கரையை ஒட்டி அந்த கார்கள் பல நாட்கள் கடலில் மிதந்துகொண்டிருந்தன.

பழுதுபார்த்தல், மீன்பிடித்தல், சமைத்தல் மற்றும் பாடல்கள் கேட்டல், நாட்குறிப்புகளை எழுதுதல் போன்றவற்றில் அவர்கள் தங்களது நாட்களைக் கழித்தனர்.

ஜியோர்ஜியோ தங்களுக்குச் சொல்லியிருந்த உயிர்வாழும் நுட்பங்களையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். பெண்களின் ஆடைகளைப் பயன்படுத்தி, வைட்டமின் சி-யின் ஆதாரமான பிளாங்க்டன்களைப் பிடிப்பது வரை அனைத்தையும் செய்தனர்.

படகின் பாய்மரத்திற்கு மேலே கட்டப்பட்டிருந்த கயிற்றில் உலர்த்தப்பட்ட மீனின் ஒரு துண்டை மார்கோ டி கந்தியா உண்கிறார்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, "ஆட்டோநாட்டி" என அழைக்கப்பட்ட அந்த இருவரும், மீன்களை வெயிலில் உலர்த்தி உணவாகப் பயன்படுத்துவது போன்ற உயிர்வாழும் முறைகளைப் பரிசோதித்தனர்.

நெருங்கி வந்த சுறா

ஒரு நாள் மாலை, அமோரெட்டி தனது காரை நோக்கி நீந்தத் தயாராக இருந்தபோது, டி கேண்டியா ஒரு பெரிய துடுப்பு நெருங்கி வருவதைக் கண்டார்.

அது ஒரு சுறா. அன்றிலிருந்து, அவர்களில் ஒருவர் நீந்தும்போது மற்றவர் கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

ஒரு நாள் மாலை, அமோரெட்டி தனது காரை நோக்கி நீந்தத் தயாராக இருந்தபோது, டி கேண்டியா ஒரு பெரிய துடுப்பு நெருங்கி வருவதைக் கண்டார். அது ஒரு சுறா. அன்றிலிருந்து, அவர்களில் ஒருவர் நீந்தும்போது மற்றவர் கண்காணிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, ஒரு சுறா மீனை கண்டதும், அவர்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவரும் வீட்டில் உள்ள குடும்பத்தினரிடம் பேச போனில் அழைப்பு விடுத்தனர். அவர்கள் இந்தத் தகவல்களைப் பின்தொடர்ந்து, செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர்.

கார்களில் பயணிக்கும் விண்வெளி வீரர்களைப் போல, புதிய எல்லைகளை ஆராயும் "ஆட்டோனாட்டி" என்று ஒரு பத்திரிகையாளர் அவர்களை அழைத்தார்.

ஆனால் மே 25-ஆம் தேதி, செயற்கைக்கோள் மூலம் இயங்கும் போன் வேலை செய்வதை நிறுத்தியது.

கடலில் இருந்த இருவருக்கும் அது ஒரு விடுதலை உணர்வைக் கொடுத்தது.

"தினசரி வீட்டைத் தொடர்பு கொண்டு பேசும் அந்த அழைப்பு ஒரு தடையாகவே இருந்தது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு மக்கள் சாகசம் செய்தது போல், உண்மையான சாகசத்தை என்னை அனுபவிக்க விடாமல் அது தடுப்பது போல் இருந்தது," என்கிறார் அமோரெட்டி.

இத்தாலியில் உள்ள வீட்டில் பெரும் கலக்கம் நிலவியது. அவர்கள் இறந்துவிட்டதாக நண்பர்களும் குடும்பத்தினரும் நினைத்தனர்.

மார்கோ அமோரெட்டியின் தாய் செரெனெல்லா வியனெல்லோ மிகவும் கவலையடைந்தார். ஆனால் ஜியோர்ஜியோ கோபத்துடன் சந்தேகப்படுவதை நிறுத்துமாறு அவரிடம் கூறினார்.

"நீயும் மற்றவர்களைப் போலத்தான். இந்தக் காரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது மிதக்கும் என்று எனக்குத் தெரியும்," என்று நோய்வாய்பட்டிருந்த அவர் படுக்கையிலிருந்து கத்தினார்.

"ஜியோர்ஜியோவுடன் இருக்கும்போது, நீங்கள் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அவரிடம் தோல்வியடைய வேண்டும்" என்று கூறும் செரெனெல்லா, "அதனால் நான் நம்பிக்கை வைத்திருக்க வேண்டியிருந்தது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை நான் ஏற்றுக்கொண்டேன்." என்கிறார்.

கடலில் இருந்த இருவருக்கும் அது ஒரு விடுதலை உணர்வைக் கொடுத்தது. "தினசரி வீட்டைத் தொடர்பு கொண்டு பேசும் அந்த அழைப்பு ஒரு தடையாகவே இருந்தது. தொழில்நுட்பம் வருவதற்கு முன்பு மக்கள் சாகசம் செய்தது போல், உண்மையான சாகசத்தை என்னை அனுபவிக்க விடாமல் அது தடுப்பது போல் இருந்தது" என்கிறார் அமோரெட்டி.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, சூரிய ஆற்றலில் இயங்கும் செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அந்த சாகச வீரர்கள் தங்கள் வீட்டினருடன் தொடர்பில் இருந்தனர். ஆனால், அந்தத் தொலைபேசி பழுதடைந்ததும் அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதற்கிடையில், செரெனெல்லாவின் சிக்கல்கள் மேலும் அதிகரித்தன. சில பத்திரிகையாளர்கள் இந்தச் சம்பவம் முழுவதும் ஒரு பொய்யான நாடகம் என்று சந்தேகித்தனர். மேலும் சிலர், எந்தவித ஆதரவோ பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் அவர்கள் இருவரையும் கடலுக்கு அனுப்பியதற்காக அவர்களது குடும்பத்தை கடுமையாக விமர்சித்தனர்.

இறந்த தந்தை

போன் வேலை செய்வதை நிறுத்திய மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜியோர்ஜியோ இறந்துவிட்டார்.

"இது ஒரு விசித்திரமான, தற்செயலாக நடந்த நிகழ்வு" என்று கூறும் செரெனெல்லா, "ஜியோர்ஜியோவின் இறப்புடன், அவருடனான தொடர்பு இனி தேவைப்படாமல் போனது போல இருந்தது." என்கிறார்.

கடலில் இருந்த அமோரெட்டியும், கேண்டியாவும், தண்ணீரின் காரணமாகப் போனின் சோலார் பேட்டரி பழுதாகியிருப்பதை அறிந்தனர்.

சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே நீந்திச் சென்று, மற்றொரு காரில் இருந்த போனை அவர்களால் இணைக்க முடிந்தது. ஆனால் அதைச் சரிசெய்ய பல வாரங்கள் தேவைப்பட்டன.

அப்போது, அவர்கள் கடந்து செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கூச்சலிட்டும், ஒளிரும் சிக்னல்களைப் பயன்படுத்தியும் அவர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால் எந்தப் பயனும் இல்லை. ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவர்களால் வீட்டைத் தொடர்பு கொள்ள முடிந்தது.

செரெனெல்லா போனை எடுத்துத் தனது மகனின் குரலைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆனால் ஜியோர்ஜியோ இறந்துவிட்ட செய்தியை அவர் மார்கோவிடம் சொல்லவில்லை. ஏனெனில் அவர் மனமுடைந்து பயணத்தைக் கைவிட்டுவிடுவார் என செரெனெல்லா அஞ்சினார். மார்கோ ஏதோ தவறாக இருக்கிறது என்று சந்தேகித்தார், ஆனால் அதற்கான பதில்களைக் கேட்டு அவர் வற்புறுத்தவில்லை.

கடலில் இருந்த அமோரெட்டியும் டி கேண்டியாவும், தண்ணீரின் காரணமாகப் போனின் சோலார் பேட்டரி பழுதாகியிருப்பதை அறிந்தனர். சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே நீந்திச் சென்று, மற்றொரு காரில் இருந்த போனை அவர்களால் இணைக்க முடிந்தது. ஆனால் அதைச் சரிசெய்ய பல வாரங்கள் தேவைப்பட்டன.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, எமிலி புயல் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அடிவானத்தில் கருமேகங்கள் சுவர்போல் உயர்ந்து காணப்பட்டன.

ஆகஸ்ட் மாதத்துக்குள், கரீபியன் கடற்கரை அருகில் வந்தது. ஆனால் ஒரு புயலும் நெருங்கிக் கொண்டிருந்தது.

புயல் காலத்துக்கு முன்பே சென்று சேர வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர்களின் கணக்கீடு தவறாகிவிட்டது. 40 நாட்களில் முடியும் என்று அவர்கள் நினைத்த பயணம் முடிவடைவதற்கு நான்கு மாதங்கள் ஆனது .

அருகில் உள்ள மார்ட்டினிக் தீவின் கடலோரக் காவல் படையினர், அவர்கள் பயணத்தைக் கைவிட வேண்டும் என்று கூறினர். ஆனால் ஆட்டோனாட்டிகளான அவர்கள் இருவரும் அதற்கு மறுத்துவிட்டனர்.

"நாங்கள் கடலில் அனுபவம் வாய்ந்த வீரர்களைப் போல உணர்ந்தோம், மீட்கப்படுவதை மறுத்துவிட்டோம்," என்கிறார் அமோரெட்டி.

புயல் தாக்கியபோது, கனமழை பொழிந்தது. காற்று எல்லாவற்றையும் கிழித்தெறிந்தது. ஆனால் சேதமடைந்த கார்கள் நீரில் மூழ்காமல் மிதந்தன.

"வெப்பமண்டலப் புயல்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நாங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருந்தோம் எனத் தோன்றுகிறது," என்கிறார் அமோரெட்டி.

புயல் தாக்கியபோது, கனமழை பொழிந்தது. காற்று எல்லாவற்றையும் கிழித்தெறிந்தது. ஆனால் சேதமடைந்த கார்கள் நீரில் மூழ்காமல் மிதந்தன.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, படகாக மாற்றப்பட்ட இரண்டு கார்களும் கயிறுகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்தக் கயிறுகளை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பயணம் முடிவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பு, ஜியோர்ஜியோ இறந்துவிட்ட தகவலை செரெனெல்லா தனது மகனிடம் கூறினார்.

அன்றைய தினம், கடல் விசித்திரமான முறையில் அமைதியானது என்கிறார் கேண்டியா. "ஒருபோதும் ஓயாமல் அசைந்துகொண்டிருந்த கடல், அன்று மட்டும் அமைதியாக இருக்க முடிவு செய்தது. பயணத்தைக் கைவிடுவதா அல்லது தொடர்வதா என்ற தேர்வு எங்களுக்குக் கொடுக்கப்பட்டது போல் இருந்தது." என்று கூறுகிறார் கேண்டியா.

"என் நண்பனே, நீ உறுதியாக இரு. துன்பக் கடலில் மூழ்கிவிடாதே. அந்த ஆழம் இருண்டது, குளிரானது, அமைதியால் நிரம்பியது. மேலே இரு. நாம் இருவரும் சேர்ந்து ஒரு கனவை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்," என கேண்டியா தனது டைரியில் எழுதினார்.

சிறிது நேரத்திலேயே, அவர்கள் அடிவானத்தில் மார்டினிக் என்ற நிலப்பரப்பைக் கண்டனர்.

"அங்குள்ள தெளிவான பச்சை நிறத்தைக் கண்டதும் நான் மிகவும் வியப்படைந்தேன், அது ஏறக்குறைய பிரகாசமான பச்சை நிறமாக இருந்தது" என்று கூறும் டி கேண்டியா, "அங்கு உயிர் இருக்கிறது என்பதை அது உண்மையிலேயே உணர்த்தியது." என்கிறார்.

அடுத்த பகலும் இரவும், மந்தமாக நகர்ந்த அந்தப் பயணத்தில், கவலையும் பதற்றமும் அவர்களை ஆட்கொண்டிருந்தன. அவர்கள் இருவரும் தூங்க முடியாமல் தவித்தனர்.

"ஒருவேளை எல்லாமே முடிந்துவிட்டது என்பதால் இருக்கலாம்" என்று கூறும் அமோரெட்டி, "இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும், இவ்வளவு காலம் விடாமுயற்சியுடன் போராடிய பிறகும், அந்தப் பெருங்கனவு நிறைவேறியிருந்தது." என்கிறார்.

வெற்றிகரமாக திரும்பினர்

துறைமுகத்தில் ஊடகங்களிடம் பேசியபோது, படகின் முன்புறத்தில் மார்கோ அமோரெட்டி (இடது) மற்றும் கித்தார் வாசித்துக்கொண்டிருந்த மார்கோ டி கந்தியா (வலது) அமர்ந்திருந்தனர்.

பட மூலாதாரம், Autonauti

படக்குறிப்பு, மார்டினிக் தீவை வந்தடைந்தபோது, ஊடகத்தினரும் ஆர்வத்துடன் திரண்டிருந்த பொதுமக்களும் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

119 நாட்கள் கடற்பயணத்துக்குப் பிறகு, 1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி அன்று, அவர்கள் மார்ட்டினிக்கின் கிழக்குக் கரையில் உள்ள டார்டேன் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

ஆர்வம் கொண்ட மக்கள், செய்தியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் இத்தாலியிலிருந்து விமானத்தில் வந்திருந்த மார்கோ அமோரெட்டியின் சகோதரர்கள் அவர்களை வரவேற்றனர்.

"மீண்டும் மனிதர்களைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு அதிர்ச்சியாக இருந்தது," என்கிறார் கேண்டியா.

மேலும், கடலில் கழித்த மாதங்கள் அவர்களை மாற்றியிருந்தன.

"நாங்கள் நீண்ட தாடி, அடர்ந்த மாநிறம் மற்றும் குச்சி போன்ற கால்களுடன் இருந்தோம். நாங்கள் பார்க்க ஏலியன்களைப் போல இருந்தோம்," என்று அவர் கூறுகிறார்.

சில வாரங்கள் கரீபியன் உபசரிப்பு மற்றும் ஊடக நேர்காணல்களுக்குப் பிறகு, அமோரெட்டியும் கேண்டியாவும் கார்களை மார்ட்டினிக்கிலேயே விட்டுவிட்டு இத்தாலிக்குத் திரும்பினர்.

அவர்கள் மீண்டும் திரும்பி வந்து கார்களை நியூயார்க் வரை ஓட்டிச் செல்ல விரும்பினர், ஆனால் அது நடக்கவில்லை.

இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புவது எளிதாக இல்லை . கடலில் தனியாக இருக்கும் அந்த உணர்வை மீண்டும் பெறுவதற்கு கேண்டியா நீண்ட காலம் முயற்சி செய்தார்.

"அங்கே எங்களிடம் எதுவும் இல்லை, ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்" என்று கூறும் கேண்டியா, "நாங்கள் ஒரு ஆழமான அமைதியையும், ஆழ்ந்த விழிப்புணர்வையும் அடைந்திருந்தோம். அதனால் நான் தியானம் செய்யக் கற்றுக்கொண்டேன், அந்த அமைதியை மீண்டும் அடைவதற்கான வழியைக் கண்டறிய என்னால் முடிந்ததைச் செய்தேன்" என்கிறார்.

மார்கோ அமோரெட்டி இந்தக் கடற்பயணத்தின் நாட்குறிப்புகளைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். யாராவது இந்த சாகசத்தைப் படமாக எடுப்பார்கள் என்றும் நம்புகிறார்.

அவரது தாய் செரெனெல்லா, இந்த ஆட்டோனாட்டிகளைப் நினைத்துப் பெருமைப்படுகிறார்.

"அவர்கள் இருவரும் சிறப்புமிக்கவர்கள். மனிதர்கள், அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் எப்போதும் நினைப்பேன். அவர்கள் வேறு ஒரு உலகத்துக்காகப் படைக்கப்பட்டவர்கள்" என்கிறார்.

மார்கோ அமோரெட்டி, அவரது தாய் செரெனெல்லா வியானெல்லோ மற்றும் மார்கோ டி கேண்டியா ஆகியோர் பிபிசி உலக சேவையின் 'அவுட்லுக்' நிகழ்ச்சியில் ஜோ ஃபிட்ஜெனிடம் பேசினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு