ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் - விசிக முடிவு என்ன? நேரலை

3வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய் -விசிக முடிவு என்ன? நேரலை

பட மூலாதாரம், DIPR

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். விஜய் ஆளுநரை சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

ஆளுநரை சந்தித்த பிறகு, தவெக தலைவர் விஜய் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தலைவர்களை சந்தித்தார்.

முன்னதாக தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிதாக அமையும் சட்டப்பேரவைக்கு ராமச்சந்திரன், மாரிமுத்து ஆகிய 2 பேர் தேர்வாகியுள்ளனர். அதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்லசாமி தவெகவு-க்கு ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

"இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆளுநர் மேற்கொள்ளக்கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர்" என அக்கட்சியின் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தவெக ஆட்சி அமைந்தால் அதற்கு ஆதரவை அக்கட்சி வழங்கும்.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து தவெக ஆட்சியமைக்க 116 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

ஆளுநரை சந்தித்த பிறகு தவெக தலைவர் விஜய்

பட மூலாதாரம், CPIM

தவெக வென்ற தொகுதிகள் 108. இரு தொகுதிகளில் வென்றுள்ள விஜய், ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தவெகவின் பலம் 107 ஆகும். அப்போது, அவையின் பலம் 233 ஆக குறையும் என்பதால் பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்தநிலையில் 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள விசிகவிடமும் தவெக ஆதரவு கோரியுள்ளது.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

ஸ்டாலின் கூறியது என்ன?

இதற்கிடையே, "அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என திமுக தலைவர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

''தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி'' என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,

விஜய்க்கு ஆதரவு ஏன்? சிபிஐ, சிபிஎம் விளக்கம்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

சென்னையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், "தமிழ்நாட்டில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. 10ஆம் தேதிக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமையவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி அமையக்கூடும். இதைத் தடுக்கவே தவெகவை இடதுசாரிகள் ஆதரித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில், "அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கமாட்டோம். வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு செய்துள்ளோம்" என்றும் அவர்கள் கூறினர்.

"இடதுசாரிகள் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக விசிக தலைவர் தெரிவித்துள்ளார். விசிக கூட்டம் நடைபெற்றதால் அவரால் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை" என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

"தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ள அதே நேரத்தில், மாநில நலனை காக்கும் பிரச்னைகளில் ஒத்த கருத்துடன் திமுகவுடன் இணைந்து செயல்படுவோம்" என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக டெல்லியில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தவெகவுக்கு அக்கட்சியின் ஆதரவை அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு அமைக்க தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆதரவு அறிவிப்புக்கு முன்பு சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாலை 3.30 மணியளவில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அங்கு சென்றார்.

தவெக

பட மூலாதாரம், Getty Images

'3 கட்சிகளும் ஆதரிக்கும்' - பேபி

முன்னதாக, விசிக மற்றும் இடது சாரிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்த நிலையில், அக்கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கக் கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி முன்னதாக சூசகமாகத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பேபி, "புதிய கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சிக்கு பெரும்பான்மைக்கு சில தொகுதிகளே தேவைப்படுகின்றன. அக்கட்சியை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். மர்மமான காரணங்களால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவரை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் அழைக்கவில்லை. அக்கட்சியை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும். தனிப்பெரும் கட்சியின் தலைவரை ஆளுநர் சந்தித்திருக்கிறார். ஆனால், 'யார் உங்களுக்கு ஆதரவு தருவார்? பெரும்பான்மையை எவ்வாறு காட்டுவீர்கள்?' என்று ஆளுநர் கேட்டிருக்கிறார். அது ஆளுநரின் பொறுப்பு அல்ல.

பதின்மூன்று நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வாஜ்பேயி அரசு அமைந்த போது, அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போதுமான பலம் உள்ளதா என்று குடியரசுத் தலைவர் கேட்கவில்லை. பிறகு வாஜ்பேயிக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இங்கே, தவெக தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் மட்டுமே அவகாசம் கேட்டிருக்கிறார். மத்தியிலும் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்ட மரபை ஆளுநர் கடைபிடிக்காதது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் கூறினார்.

தவெக, விஜய், தமிழ்நாடு, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி

மேலும் தொடர்ந்த அவர், "விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் நான் என மூவரும் கலந்தாலோசித்தோம். இதுதொடர்பாக ஆலோசித்து அடுத்தகட்ட பொருத்தமான முடிவை எடுக்குமாறு மாநில கட்சி நிர்வாகங்களிடம் அறிவுறுத்தியிருந்தோம்.

ஆகவே, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தவெக-வால் ஆளுநர் முன்னிலையிலும்கூட அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அப்போது தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு தெரிவுகள் இருக்காது'' என்று தெரிவித்தார்.

பேபியின் பேட்டி மூலம் விசிக-வும் தனது ஆதரவை உறுதிப்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு