இலங்கை வீரருடன் வைபவ் சூர்யவன்ஷி மோதலால் சர்ச்சை - தவறு யாருடையது?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தற்போது விரும்பத்தகாத ஒரு காரணத்திற்காகச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
திங்கட்கிழமை நடைபெற்ற 'சூப்பர் ஓவர்' (Super Over) சுற்றில் 'இந்தியா ஏ' (India A) அணி 'இலங்கை ஏ' (Sri Lanka A) அணியிடம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, களத்தில் இலங்கை வீரருடன் அவருக்குக் கடுமையான வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது.
தம்புல்லாவில் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், வைபவ் சூர்யவன்ஷிக்கும் இலங்கையின் விஷென் ஹலம்பகேவுக்கும் (Vishen Halambage) இடையே களத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் உருவானது.
'இலங்கை ஏ' அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா (Niroshan Dickwella) தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானப்படுத்தினார்.
இப்போது அனைவரின் பார்வையும் போட்டி நடுவர் (match referee) பிரதீப் ஜெயப்பிரகாஷ் மீது திரும்பியுள்ளது. அவர் இவ்விரு வீரர்கள் மீதும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுப்பாரா அல்லது வெறும் எச்சரிக்கையுடன் முடித்துக்கொள்வாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.12-ன் படி, சர்வதேசப் போட்டியின் போது அணி உதவியாளர்கள், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபர் (பார்வையாளர் உட்பட) மீதும் ஒரு வீரர் முறையற்ற வகையில் உடல் ரீதியான (physical contact) தவறான நடத்தை ஏற்படுத்துவது விதியை மீறும் செயலாகும்.
"கிரிக்கெட்டில் முறையற்ற எந்த வகையான உடல்ரீதியான நடவடிக்கையும் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு வீரர் வேண்டுமென்றே, பொறுப்பற்ற முறையில் அல்லது கவனக்குறைவாக மற்றொரு வீரர் அல்லது நடுவர் மீது மோதினாலோ, ஓடிச் சென்று அவர்கள் மீது இடித்தாலோ அல்லது தோள்பட்டையால் முட்டினாலோ, அது விதிமீறலாகக் கருதப்படும்." என்று விதிகள் கூறுகின்றன.
விதிமீறலின் தீவிரத்தை தீர்மானிக்கும்போது பின்வரும் காரணிகள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அந்த விதி கூறுகிறது:
- அந்தத் தொடர்பு வேண்டுமென்றே செய்யப்பட்டதா, கவனக்குறைவாகவோ அல்லது தவிர்க்கக்கூடிய வகையிலோ இருந்ததா என்பது உள்ளிட்ட சம்பவத்தின் முழுச் சூழல்.
- அந்தத் தொடர்பின் வேகம் அல்லது விசை (force).
- அத்தொடர்பு எதிர் தரப்பு நபருக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்தியதா என்பது.
- பாதிப்புக்கு இலக்கான நபர் யார் என்பது.

பட மூலாதாரம், Reuters
விறுவிறுப்பான ஆட்டத்தில் 'இந்தியா ஏ' தோல்வி
தம்புல்லாவில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த 'இந்தியா ஏ' அணி 49.2 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த 'இலங்கை ஏ' அணியும் 50 ஓவர்களில் 265 ரன்களை எடுத்தது.
'சூப்பர் ஓவர்' ஓவரில் 'இலங்கை ஏ' அணி 16 ரன்கள் எடுத்தது; ஆனால் இந்திய ஏ அணியால் பதிலுக்கு 9 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது. அறிமுக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் மிகச்சிறப்பாகப் பந்துவீசி, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கே ஆகியோருக்குப் பெரிய ஷாட்களை அடிக்கும் வாய்ப்பை அளிக்காமல் திணறடித்து, இலங்கை 'ஏ' அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
முன்னதாக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய 'ஏ' அணி சிறப்பாக மீண்டு வந்தது.
அணி 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் விப்ராஜ் நிகம் ஆகியோர் 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்து அணியை இக்கட்டில் இருந்து மீட்டனர். இந்த ஜோடியின் ஆட்டமே இந்தியா 'ஏ' அணி தனது ஸகோரை 265 ரன்கள் வரை கொண்டு செல்ல உதவியது.
இதனை சேஸ் செய்த இலங்கை 'ஏ' அணிக்காக சமரவிக்ரமா நிதானமாக ஆடி 93 ரன் சேர்த்தார்; இதன் மூலம் இலங்கை அணியின் சேஸிங்கிற்கு அவர் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.
இருப்பினும், அர்ஷத் கானின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 'ஏ' அணி மீண்டு வந்தது. அவர் கடைசி ஓவரில் அபாரமாகப் பந்துவீசி ஆட்டத்தை விறுவிறுப்பான நிலைக்குக் கொண்டு சென்றதுடன், இலங்கை அணியைத் தோல்வியின் விளிம்புக்கும் தள்ளினார்.
இதன்பிறகு, களத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. வீரர்களிடையே கோபம் வெளிப்படையாகத் தெரிந்ததுடன், சூழலும் அனல் பறப்பதாக மாறியது. இறுதியில், 'சூப்பர் ஓவர்' (Super Over) முறையில் வெற்றி பெற்ற இலங்கை 'ஏ' அணி இரண்டு புள்ளிகளைக் கைப்பற்றியது; இறுதிப் போட்டிக்கான இடம் இலங்கை ஏ அணிக்கு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
3 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் இந்திய 'ஏ' அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இது இரண்டாவது தோல்வியாகும். முன்னதாக, மழை பாதித்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் 'டிஎல்எஸ்' (DLS) முறைப்படி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்திருந்தது.
திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது.

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆட்டத்திற்குப் பிறகு, வைபவ் சூர்யவன்ஷி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் நிபுணர்களும் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஐபிஎல் (IPL) போட்டிகளில் நாம் பார்ப்பது போன்ற அதிக எண்ணிக்கையிலான கேமராக்கள் இந்தப் போட்டிகளில் இல்லை. சூப்பர் ஓவரில் வழங்கப்பட்ட 'நோ-பால்' (no-ball) தீர்ப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தது; சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய இலங்கை அணி களத்திற்கு வருவதில் தாமதம் ஏற்படுத்தியது இந்தியா 'ஏ' அணியினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது." என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்திய அணியின் கோபம் புரிந்துகொள்ளக் கூடியதே; அதே சமயம், இலங்கை அணி செய்தது எதிரணியினர் மீது மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு உத்தி (மனதளவில் ஆதிக்கம் செலுத்தும் விளையாட்டு) மட்டுமே."
மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"சச்சினை விட வைபவ் மிகவும் இளையவர்; சிறந்த வீரரிடமிருந்து அவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஆடுகளத்தில் கோபப்படக் கூடாது; அதனால் ஒரு நபர் தனது நிதானத்தை இழக்க நேரிடும்."
"இன்றைய சம்பவத்திலிருந்து அவர் கற்றுக்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நம் எல்லோரிடமும் தவறுகள் இருக்கின்றன, அவரும் அதற்கு விதிவிலக்கல்ல. கற்றுக்கொண்டு முன்னேறுவதே சரியான வழி."
மூத்த பத்திரிகையாளர் குஷன் சர்க்கார் தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில்,"வைபவுக்கு வயது வெறும் 15 தான். தனது பயணத்தில் அவர் கற்றுக்கொள்வார். அந்தச் சிறுவனுக்கு நாம் சிறிது அவகாசம் அளிக்க வேண்டும். வைபவ் அங்கிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, இலங்கை பந்துவீச்சாளர் அவரைத் தூண்டினார் என்பதை மறந்துவிடாதீர்கள்; ஏதோ சொல்லப்பட்டதால்தான் அவர் மீண்டும் திரும்பினார்." என்று தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























