காணொளி: பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட 'போஷ்' சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
போஷ் சட்டம் உருவானதன் பின்னணியில் ஒரு பெண்ணின் வலியும், நீண்ட சட்டப் போராட்டமும் இருந்துள்ளது.
1992-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் 50 வயதான சமூக ஆர்வலர் பன்வாரி தேவி குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் முயற்சியில ஈடுபட்டார். அப்போது, அந்த முயற்சிக்கு எதிர்ப்பு எழும்பியது.
அதன் விளைவாக கும்ஹார் (குயவர்) சமூகத்தை சேர்ந்த பன்வாரி தேவி, தன்னுடைய கணவரின் கண் முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
1995-இல் விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது மிகப்பெரிய சட்டப் போராட்டமாக மாறியது.
விஷாகா உள்ளிட்ட பெண்கள் அமைப்புகள், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1997-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்குச்சு.
அதுதான் விசாகா வழிகாட்டுதல்கள். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கும், அது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கும் இந்த வழிகாட்டுதல்கள் அடிப்படையாக அமைந்தன.
ஆனால் பிறகு, இந்த வழிகாட்டுதல்கள் மட்டுமே போதாது. இதற்கென ஒரு தனிச் சட்டம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது.
அதன் விளைவாகதான், 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.
அப்படித்தான் உருவானது போஷ் எனப்படும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம். இது, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம்.
இந்தச் சட்டம் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்புகளை வழங்கும்?
பணியிடத்தில் ஒரு பெண்ணிடம் தேவையற்ற உடல் ரீதியான அணுகுமுறை, பாலியல் ரீதியிலான கருத்துகள், பாலியல் சலுகைகள் கோருவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது உள்ளிட்டவை பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படலாம்.
இதுமாதிரியான புகார்களை விசாரிக்க, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ள பணியிடங்கள்ல புகார் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண்தான் இருக்கவேண்டும். அதோட இந்த குழுவுல குறைந்தது பாதிப் பேர் பெண்களாகதான் இருக்கணும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் அச்சமின்றிப் பணியாற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வதும்தான் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



