இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு - இனியும் நீடிக்குமா?

காணொளிக் குறிப்பு, தங்கம் தொடர்ந்து சரிவை சந்திப்பது ஏன்?
இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு - இனியும் நீடிக்குமா?
பிரசுரிக்கப்பட்டது

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வந்த தங்கம், தற்போது சரிவது ஏன்? வரும் நாட்களில் தங்கம் விலையின் போக்கு எப்படி இருக்கும்? சுருக்கமாக பார்க்கலாம்.

பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணர் கே. பிரபாகர் தங்கத்தின் விலை சரிவதற்கான காரணத்தை விளக்கினார்.

அதேபோல, கச்சா எண்ணெய் விலை குறைந்தால் தங்கத்தின் விலை மீதான அழுத்தம் தணியக்கூடும். அதே நேரம், விநியோகச் சங்கிலியில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டு பணவீக்க அழுத்தம் அதிகரித்தாலோ அல்லது அக்டோபர் மாதத்துக்கான அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்தாலோ, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற சந்தை எதிர்பார்ப்பு வலுப்பெறலாம். இத்தகைய சூழல் தங்கத்தின் விலையில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

அக்டோபர் 30ஆம் தேதி, அமெரிக்காவின் கோமெக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்குக் குறைந்தது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 டாலர் என்ற அளவுக்கும் கீழே சரிந்தது. மேலும், விலை சரிவைத் தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட $3,900 என்ற ஆதரவு நிலையையும் தாண்டி கீழே சென்றது. இது தங்கத்தின் விலை மேலும் பலவீனமடைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

இந்தாண்டு ஜனவரியில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,595 டாலர் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன்பிறகு தங்கத்தின் விலை 30 சதவீதம் சரிந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் முகமை வெளியிட்ட செய்தியில், "வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு அதிகமாகவே இருக்கும் என்ற அச்சமே இதற்குக் காரணம். தற்போது ஆசியாவில் தேவை குறைந்திருப்பதும் தங்கத்தின் விலைக்கு அழுத்தம் கொடுக்கிறது. எனினும், தங்கத்தின் விலை 4,000 டாலருக்குக் கீழே குறையும் போதெல்லாம் மத்திய வங்கிகள் வழக்கமாக தங்கம் வாங்குவதை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் தங்கத்தின் விலை மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதாக நிதி ஆய்வு நிறுவனமான சஹியின் (Sahi) ஆய்வு பிரிவுத் தலைவர் கௌரவ் அரோரா லைவ் மிண்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய வங்கி அக்டோபர் மாதத்தில் வட்டி விகிதங்களை 3.75 முதல் 4 சதவீதம் என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருந்தது. ஆனால், அதன் கொள்கைக் குழு உறுப்பினர்களில் இருவர் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், டிசம்பர் மாதத்தில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என சந்தை எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளதாக கௌரவ் அரோரா கூறுகிறார்.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்பவர்களுக்கு வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கக்கூடும் என எஸ்எம்சி குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் Commodity Research பிரிவுத் தலைவர் வந்தனா பார்தி கருதுகிறார்.

பணத் தேவைக்காக முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துகளை விற்பனை செய்ததால் சந்தையில் சரிவு ஏற்பட்ட முந்தைய நிகழ்வுகளையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

2008ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடியின்போது, பணம் திரட்டுவதற்காக முதலீட்டாளர்கள் தங்கள் சொத்துகளை விற்க வேண்டியிருந்தது. அப்போது தங்கத்தின் விலை தொடக்கத்தில் ஒரு அவுன்ஸ் சுமார் 700 டாலராகக் குறைந்தது. ஆனால், அதன்பிறகு மீண்டு, 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,917 டாலரை எட்டியது. கொரோனா பெருந்தொற்றின்போது, 2020 மார்ச் மாதத்தில் சந்தை சரிந்தபோதும் இதேபோன்ற போக்கு காணப்பட்டது.

பணப்புழக்க நெருக்கடியின் அழுத்தம் குறையத் தொடங்கும்போது, விலைமதிப்புள்ள உலோகங்களை நீண்ட கால நோக்கில் வாங்குபவர்கள் சந்தையில் தீவிரமாக செயல்படக்கூடும் என்பதை இந்த உதாரணங்கள் காட்டுவதாக வந்தனா பார்தி கூறுகிறார். தங்கத்தின் விலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவை, முதலீட்டாளர்கள் படிப்படியாக தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக அவர் பார்க்கிறார். தற்போது இந்திய உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.38 லட்சம் ரூபாயாக உள்ளது.

மத்திய வங்கிகளின் தங்கக் கொள்முதல், மாற்று விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பாக தங்கம் கருதப்படுவது ஆகிய காரணங்களால், 2027ஆம் ஆண்டுக்குள் இந்திய உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,65,000 முதல் 1,80,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று அவர் கணிக்கிறார். இது அவரது தனிப்பட்ட கணிப்பு மட்டுமே. உறுதியான விலை உத்தரவாதம் அல்ல. எந்தவொரு முதலீடு செய்யும் முன்னும் உங்கள் தனிப்பட்ட நிதி ஆலோசகரிடம் பரிந்துரை கேட்டு செயல்படுவதே பாதுகாப்பானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு