தேனி சிறை கைதிகள் தப்பிக்கத் திட்டம் போட்டது ஏன்? - டிஎஸ்பி விஷ்ணுபிரியா பேட்டி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பிய சம்பவம் தொடர்பாக ஆண்டிபட்டி டிஎஸ்பி விஷ்ணுபிரியா வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
தப்பியோடிய 17 பேரும் கொள்ளை, கொலை, திருட்டு போன்ற தீவிர மற்றும் முக்கியமான வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்றும் இவர்களில் 5 பேர் ஏற்கெனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.
தப்பியோடும் திட்டத்தை லிங்க பிரசாத் என்பவர்தான் மூளையாக இருந்து செயல்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தெரிவித்தார்.
தப்பியோடி பிடிபட்ட 17 பேரும் தீவிர விசாரணைக்குப் பின் மீண்டும் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி இவர்களில் சிலரை பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், கடலூர் மற்றும் சேலம் சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



