கிரிக்கெட் உலகில் மீண்டும் பேசப்படும் 'உப்புத்தாள்' சர்ச்சை
2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சாண்ட்பேப்பரைக் கொண்டு கிரிக்கெட் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட், சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது நேரடி ஒளிபரப்பில் பதிவாகின.
இதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த உஸ்மான் கவாஜா தனது சுயசரிதையில் இந்த விவகாரம் குறித்து புதிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் அனைவருக்கும் சாண்ட்பேப்பரைக் கொண்டு பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் தெரிந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவாஜாவின் இந்தக் கருத்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஒட்டுமொத்த அணிக்கும் இது தெரிந்திருந்ததாகக் கூறுவது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உஸ்மான் கவாஜா கூறியிருப்பது "100 சதவீதம் உண்மை" என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நடத்திய விசாரணை அவசரகதியிலும், முறையான திட்டமிடல் இல்லாமலும் நடத்தப்பட்டதாகவும் வார்னர் விமர்சித்துள்ளார்.
இதனால், சாண்ட்பேப்பர் விவகாரத்தில், அப்போது தண்டிக்கப்பட்ட மூவரைத் தவிர வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



