காணொளி: புதுக்கோட்டையில் பேருந்தில் இருந்து பழங்குடி மாணவிகள் தள்ளிவிடப்பட்டனரா? என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் இரங்கம்மா சத்திரம் பகுதியில் கீரனூர் வழியாக புதுக்கோட்டை நகருக்குச் சென்ற அரசுப் பேருந்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை பள்ளி மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நொடிகளில் தானியங்கி கதவு திறந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் படிக்கட்டில் நின்றிருந்த மாணவிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவிகளும் பொதுமக்களும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர்ந்து பழங்குடி சமூக மாணவிகள் பேருந்துகளில் அலட்சியப்படுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கூட்ட நெரிசலில் பேருந்துக்குள் இருந்த யாரோ ஒருவர் அவசரக் கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவில், "பழங்குடியின மாணவிகள், அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டு, படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இச்சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமுமின்றி உடனடியாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். " எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்தின் ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துநர் மணிகண்டன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது 2 பிரிவுகளில் வெள்ளனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



