சூரிய குடும்பத்தின் 9வது கோள் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் எவ்வளவு தூரம் நெருங்கியுள்ளனர்?

பட மூலாதாரம், Caltech/R Hurt (IPAC)
- எழுதியவர், ஃபெர்னாண்டோ டுவார்டே
- பதவி, பிபிசி உலக சேவை
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கடந்த 2006இல் புளூட்டோவானது கோள் என்ற தகுதியை இழந்த பிறகு, சூரிய குடும்பத்தில் எட்டு கோள்களே இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது உண்மையில் ஒன்பதாவது கோள் ஒன்று இருக்கக்கூடும் என்றும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு புதிய தொலைநோக்கியின் உதவியுடன் நாம் அதை விரைவில் கண்டுபிடிக்கக்கூடும் எனவும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இந்தத் தொலைநோக்கி, வடக்கு சிலியில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ள வேரா ரூபின் வானியல் ஆய்வகத்தில் உள்ளது. இது ஜூன் 2025இல் தனது பணியை மேற்கொண்டது. மேலும் இது பிரபஞ்சத்தை நாம் காணும் முறையையே மாற்றும் நோக்கத்தைக் கொண்டது. சூரிய குடும்பத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும், மறைந்திருக்கும் ஒன்பதாவது கோளைக் கண்டுபிடிப்பதும் இதன் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.
ஒன்பதாவது கோள் பற்றிய கருத்து 2016 முதல் விஞ்ஞானிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டில், கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்டின் பாட்டிகின், மைக்கேல் பிரவுன் ஆகிய இரண்டு வானியலாளர்கள் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில், பூமியைவிட சுமார் 10 மடங்கு அதிக எடையுள்ள ஒரு கோள் தொலைவில் இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
டிரான்ஸ்-நெப்டியூனியன் ஆப்ஜக்ட்ஸ் என்றழைக்கப்படும் நெப்டியூனுக்கு அப்பாலுள்ள ஆறு வான்பொருட்களின் விசித்திரமான நடத்தைகளின் அடிப்படையில் அவர்கள் இந்தக் கருதுகோளை உருவாக்கினர். இவை, குயிப்பர் பெல்ட் (kuiper belt) எனப்படும் பகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் சூரியனைச் சுற்றி வரும் பனியால் ஆன வான்பொருட்களாகும். இவை, சாய்ந்தும் நீண்டும் காணப்படும் அசாதாரணமான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன. இது, கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரிய கோள் தனது ஈர்ப்பு விசையால் அவற்றை ஈர்க்கக்கூடும் என்பதைக் காட்டுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
"ஒன்பதாவது கோள் என ஒன்று இல்லையெனில், சூரிய குடும்பத்தில் நிகழும் பல விசித்திரமான நிகழ்வுகளுக்கு நம்மிடம் வேறு விளக்கம் எதையும் கூற இயலாது," என்று மைக்கேல் பிரவுன் பிபிசியிடம் கூறினார்.
அதாவது, இந்த மறைந்திருக்கும் கோள் இல்லாமல் போனால், அந்தத் தொலைதூர வான்பொருட்கள் ஏன் இவ்வளவு விசித்திரமான முறையில் நகர்கின்றன என்பதை விஞ்ஞானிகளால் விளக்க முடியாது என்பதே அவரது கருத்து.

இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றுண்டு. தற்போது ஒரு புதிய ஒன்பதாவது கோள் என்ற கருத்தை ஆதரிக்கும் விஞ்ஞானியான மைக்கேல் பிரவுன்தான், பழைய ஒன்பதாவது கோளான புளூட்டோவை கோள்கள் பட்டியலில் இருந்து நீக்கியதற்கும் காரணமாக இருந்தார்.
கடந்த 1930-இல் கண்டுபிடிக்கப்பதில் இருந்து, புளூட்டோ நமது சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய மற்றும் தொலைதூரக் கோளாகக் கருதப்பட்டது. ஆனால், 2005-இல் பிரவுன் மற்றும் அவரது சகாக்கள் எரிஸ் என்ற மற்றொரு வான்பொருளைக் கண்டுபிடித்தனர். புளூட்டோவை போன்ற அளவிலேயே அது, நெப்டியூனுக்கு அப்பால் அமைந்திருந்தது.
இந்தக் கண்டுபிடிப்பின் விளைவாக, சர்வதேச வானியல் ஒன்றியம் 2006-இல் கோள் என்பதற்கான வரையறையை மாற்ற முடிவு செய்தது. அதன் காரணமாக, புளூட்டோ கோள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, எரிஸுடன் சேர்த்து ஒரு குள்ளக் கோளாக மறுவகைப்படுத்தப்பட்டது.
எளிதாகக் கூறுவதெனில், எரிஸ் என்ற குள்ளக்கோளின் கண்டுபிடிப்பு, ஒரு கோள் என்றால் என்ன என்பதை விஞ்ஞானிகள் மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தியது. இதனால்தான் இன்று புளூட்டோ ஒரு கோளாகக் கருதப்படுவதில்லை.

பட மூலாதாரம், NASA
விசித்திரமான, மங்கலான வான்பொருள்
ஒன்பதாவது கோள் என்ற கருதுகோளில் உள்ள ஒரு பெரிய சிக்கல், இதுவரை யாரும் அதை அதிகாரபூர்வமாக உண்மையில் பார்த்தது இல்லை என்பதுதான். கான்ஸ்டன்டின் பாட்டிகின், மைக்கேல் பிரவுன் போன்ற விஞ்ஞானிகள், நேரடிக் கண்காணிப்பின் மூலமன்றி, கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி தங்கள் கூற்றை முன்வைத்தனர்.
இதற்கான முக்கியக் காரணம், ஒன்பதாவது கோள் இருக்குமானால், அது மிக மிகத் தொலைவில் இருக்கும். கலிஃபோர்னியா தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அது நெப்டியூனைவிட சூரியனில் இருந்து சுமார் 20 மடங்கு அதிக தொலைவில் இருக்கலாம். இவ்வளவு தொலைவு காரணமாக, சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 20,000 புவி ஆண்டுகள் வரை ஆகக்கூடும்.
அது மிகவும் தொலைவில் இருப்பதால், மிகக் குறைந்த சூரிய ஒளியையே பிரதிபலிக்கிறது. இதனால் அது மிகவும் மங்கலாகவும், தொலைநோக்கிகள் மூலம் அவதானிப்பதற்குக் கடினமாகவும் உள்ளது.
இதை இன்னும் சிக்கலாக்கும் விதமாக, அதன் சுற்றுப்பாதை இயல்பானதாக இல்லையென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏறக்குறைய வட்டமான மற்றும் தட்டையான பாதைகளில் பயணிக்கும் எட்டு கோள்களைப் போலன்றி, ஒன்பதாவது கோள் ஒரு நீண்ட, நீள்வட்டமான, சாய்வான பாதையில் பயணிக்கக்கூடும்.
இருப்பினும், இந்தச் சிக்கலான சூழ்நிலை விரைவில் மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி போன்ற பழைய சக்திவாய்ந்த தொலைநோக்கிகள், விண்வெளியின் ஆழத்தில் உள்ள குறிப்பிட்ட வான்பொருட்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் வேரா ரூபின் ஆய்வகம் வித்தியாசமாகச் செயல்படுகிறது. அது ஒவ்வொரு சில இரவுகளுக்கும் தெற்கு வானம் முழுவதையும் ஆய்வு செய்து, அசாதாரணமான நிகழ்வுகளைத் தேடுகிறது.

மேலும், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய டிஜிட்டல் கேமராவை இது கொண்டுள்ளது. அதன் 10 ஆண்டுக்கால திட்டத்தின்போது, நெப்டியூனுக்கு அப்பாலுள்ள 40,000க்கும் மேற்பட்ட புதிய வான்பொருட்கள் உள்பட, கோடிக்கணக்கான வான்பொருட்களை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆய்வகத்தில் உள்ள வானியலாளரான சாரா கிரீன்ஸ்ட்ரீட், "நாம் இதுவரை பார்க்க முடிந்ததைவிட மங்கலாகவும், தொலைவிலும் உள்ள ஏராளமான வான்பொருட்களை வேரா ரூபினால் கண்டறிய முடியும்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "ஒன்பதாவது கோள், விஞ்ஞானிகளின் கருதுகோள்படி அளவிடப்பட்ட இடத்திலும் அளவிலும் இருந்தால், ரூபின் ஆய்வகம் அதைக் கண்டுபிடித்துவிடும்," என்று கூறினார்.
சுருக்கமாகக் கூறுவதெனில், ஒன்பதாவது கோள் என்ற ஒன்று உண்மையிலேயே அந்த இடத்தில் இருந்தால், அதை இறுதியாகக் கண்டுபிடிக்கும் அளவுக்கு இந்தப் புதிய தொலைநோக்கி சக்தி வாய்ந்தது என்கிறார் அவர்.

'ஒன்பதாவது கோள் ஏற்கெனவே காணப்பட்டிருக்கலாம்'
வேரா ரூபின் வானியல் ஆய்வகம் ஒன்பதாவது கோளை நேரடியாகக் கண்டுபிடிக்கும் அல்லது அது இருக்கிறதா இல்லையா என்பதற்கு மிக வலுவான ஆதாரத்தை வழங்கும் என்று மைக்கேல் பிரவுன் நம்புகிறார். ஒன்பதாவது கோள் உண்மையிலேயே இருந்தால், அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், அது அறிவியலில் ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
மேலும் அவர், "அப்படி கண்டுபிடிக்கப்படும் ஒன்பதாவது கோள் நமது சூரிய குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கோளாகவும், 180 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாகவும் இருக்கும்," என்றும் குறிப்பிட்டார்.
பிரவுன் 1846-இல் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்துப் பேசுகிறார். யுரேனஸின் சுற்றுப்பாதையில் விசித்திரமான அசைவுகளைக் கண்டதால், விஞ்ஞானிகள் முதலில் நெப்டியூன் இருப்பதாக யூகித்தனர். கணக்கீடுகளைப் பயன்படுத்தி, ஜெர்மானிய வானியலாளர் ஜோஹான் காட்ஃப்ரைட் கேல் வானில் நெப்டியூனை கண்டறிந்தார்.

பட மூலாதாரம், Corbis via Getty Images
ஆனால், சுவாரஸ்யமாக, நெப்டியூன் உண்மையில் 1612-இல் கலிலியோ கலிலியால் முன்னரே காணப்பட்டிருந்தது. இருப்பினும், அது மிகவும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்ததால், அதுவொரு கோள் என்பதை அவர் அடையாளம் காணவில்லை. அந்தக் காலகட்டத்தில் அதன் இயக்கத்தைத் தெளிவாக அவதானிக்கும் அளவுக்குத் தொலைநோக்கிகள் மேம்பட்டு இருக்கவில்லை.
ஆகையால், அது காணப்பட்ட போதிலும், அது என்னவென்பது மக்களுக்குப் புரியவில்லை.
அதைப் போலவே, ஒன்பதாவது கோளுக்கும் அத்தகைய ஒரு நிகழ்வு ஏற்கெனவே நடந்திருக்க வாய்ப்புள்ளதா என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மலேனா ரைஸ், இது சாத்தியம் எனக் கருதுகிறார். "ஒன்பதாவது கோள் ஏற்கெனவே நம் தரவுகளில் இல்லை என்பதை நான் நம்பவில்லை. நாம் அதை இன்னும் கவனமாக ஆராய வேண்டும்," என்கிறார் அவர்.
எளிதாகக் கூறுவதெனில், ஒன்பதாவது கோள் ஏற்கெனவே பழைய தரவுகளிலோ அல்லது படங்களிலோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம், ஆனால், விஞ்ஞானிகள் அதை இன்னும் அடையாளம் காணாமல் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். அதோடு, அவர்கள் அந்தத் தரவுகளை இன்னும் கவனமாக ஆராய வேண்டும் என்கிறார்.
'பிற நட்சத்திர மண்டலங்களில் பொதுவானது'
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தைவான், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்தத் தேடலில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்திருக்கக்கூடும். 1983 மற்றும் 2006-இல் ஏவப்பட்ட இரண்டு அகச்சிவப்பு விண்வெளித் தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த தரவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்தப் பழைய தரவுகளைச் சரிபார்க்கையில், வானியல் புகைப்படங்களில் மிகவும் மங்கலான இரண்டு புள்ளிகளை அவர்கள் கண்டறிந்தனர். இந்தப் புள்ளிகள் இரண்டு தரவுத் தொகுப்புகளிலும் காணப்பட்டன. மேலும், அவை 23 ஆண்டுகள் காலப்பகுதியில் நகர்ந்ததாகத் தோன்றியது. இது, விண்வெளியில் நகரும் ஓர் அறியப்படாத கோளைக் காட்டுவதாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அதாவது, பல ஆண்டுகளாக மிகவும் மெதுவாக நகரும் சிறிய மற்றும் மங்கலான ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு புதிய கோளாக இருக்கக்கூடும்.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
இருப்பினும், பல வானியலாளர்கள் இன்னும் முழுமையாக இதை நம்பவில்லை. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்கூட தங்கள் கூற்று குறித்து மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
தைவானின் நேஷனல் சிங் ஹுவா பல்கலைக்கழகத்தின் முதன்மை ஆய்வாளரான டெர்ரி ஃபான், "எங்கள் ஆய்வு, இப்போது இதை ஒன்பதாவது கோள் கண்டுபிடிப்பு எனக் கூறுவதற்கு இன்னும் மிகவும் ஆரம்ப நிலைதான்," என்றார்.
மாறாக, "இதுவொரு கோளாக இருப்பதற்கான சாத்தியங்கள்" மட்டுமே இருப்பதாக அவர் கூறுகிறார்.
அதேநேரம், மலேனா ரைஸ் போன்ற விஞ்ஞானிகளுக்கு, ஒன்பதாவது கோள் பற்றிய கருத்து ஆச்சர்யம் அளிக்கக்கூடியதாக இல்லை.
இந்தச் சாத்தியமான கோள் பூமியைவிடப் பெரியதகாவும், நெப்டியூனை விடச் சிறியதாகவும் இருக்குமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ரைஸின் கூற்றுப்படி, இந்த அளவிலான கோள்கள் உண்மையில் பிற சூரிய குடும்பங்களில் மிகவும் பொதுவானவை.
"பிற நட்சத்திரங்களில் ஏறக்குறைய பாதி நட்சத்திரங்களைச் சுற்றி இந்த அளவிலான கோள்களை நாம் காண்கிறோம். ஆனால் நம் சூரிய குடும்பத்துக்குள் அப்படி ஒன்று காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார்.
எளிதாகக் கூறுவதெனில், பல நட்சத்திர மண்டலங்களில் மிகவும் பொதுவாகக் காணப்படும் கோள் அளவு இது. ஆனால், நமது சூரிய குடும்பத்தில் அப்படியொன்று இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஒன்பதாவது கோளைக் கண்டுபிடிப்பது உண்மையில் நமது சூரிய குடும்பத்தை மேலும் "இயல்பானதாக" மாற்றும் என்பதே ரைஸின் கருத்தாக உள்ளது.

அது கோள் இல்லையெனில், வேறு என்ன?
இருப்பினும், விஞ்ஞானிகள் அனைவருமே ஒன்பதாவது கோள் என்ற கருதுகோளை ஏற்றுக்கொள்வதில்லை. பல நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். கான்ஸ்டன்டின் பாட்டிகின், மைக்கேல் பிரவுன் ஆகியோரின் அவதானிப்புகள் மற்றும் கணக்கீடுகளில் தவறுகள் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில், விஞ்ஞானிகள் 'பிளானெட் எக்ஸ்' என்ற மற்றொரு மறைந்திருக்கும் கோள் இருக்கலாம் என நம்பியிருந்தனர் என்றும், அது யுரேனஸை ஈர்ப்பதாகக் கருதப்பட்டதாகவும் மற்றவர்கள் நினைவூட்டுகின்றனர். ஆனால் பின்னர், இந்தக் கருத்து தவறானது என்று நிரூபிக்கப்பட்டது.
எனவே, "நாங்கள் இதற்கு முன்பும் இதேபோன்ற யூகங்களைச் செய்துள்ளோம். அவை தவறானவை என்று பின்னர் நிரூபிக்கப்பட்டன," என்று அவர்கள் கூறுகின்றனர்.
சந்தேகம் எழுப்பப்படுவதற்கான மற்றொரு காரணம் 2023-இல் வந்தது. அப்போது விஞ்ஞானிகள் அம்மோனைட் என்ற புதிய பொருளைக் கண்டுபிடித்தனர். இந்தப் பொருள், நெப்டியூனுக்கு அப்பாலுள்ள வான்பொருட்கள் எனப்படும் தொலைதூர வான்பொருள் குழுவின் ஒரு பகுதியாகும். ஆனால், அதன் சுற்றுப்பாதை, பாட்டிகின் மற்றும் பிரவுன் முன்பு ஆய்வு செய்த ஆறு வான்பொருட்களின் சுற்றுப்பாதை முறையுடன் பொருந்தவில்லை.
அதாவது, இந்தப் புதிய கண்டுபிடிப்பு ஒன்பதாவது கோள் என்ற கோட்பாட்டுடன் பொருந்தவில்லை. எனவே அது இந்தக் கருத்தை பலவீனப்படுத்துவதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Nasa, Esa and M Brown (Caltech)
மற்றுமொரு வேறுபட்ட விளக்கமும் உள்ளது. ஜெர்மனியில் உள்ள ஃபோர்ஷங்ஸ்சென்ட்ரம் ஜூலிச்சில் உள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு வேறு ஒன்றைப் பரிந்துரைத்தது. 2025-இல் அவர்கள் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் நமது சூரிய குடும்பத்துக்கு அருகில் கடந்து சென்றிருக்கலாம் என்று கூறினர். இந்த நெருங்கிய கடந்து செல்லல், வலுவான ஈர்ப்பு விசைக் குழப்பத்தை ஏற்படுத்தி, இந்தத் தொலைதூர வான்பொருட்களின் சுற்றுப்பாதைகளை மாற்றியிருக்கலாம்.
இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சுசான் ஃபால்ஸ்னர், "ஒன்பதாவது கோள் இருக்கவே முடியாது என்று நான் கூற மாட்டேன், ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு," என்றார்.
சமீபத்திய ஆண்டுகளில் ஒன்பதாவது கோளுக்கான சான்றுகள் வலுவிழந்து வருவதாக சாரா கிரீன்ஸ்ட்ரீட்டும் கூறுகிறார்.
ஆனால், வேரா ரூபின் ஆய்வகம் ஒன்பதாவது கோளைக் கண்டுபிடிக்காவிட்டாலும், அவர் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார். "வெளி சூரிய மண்டலத்தில் இன்னும் பெருமளவில் ஆராயப்படாத ஒரு பரந்த பகுதி உள்ளது. அங்கே வேறு என்னவெல்லாம் மறைந்து இருக்கக்கூடும் என்று யாருக்குத் தெரியும்" என்கிறார் அவர்.
மேலும் அவர், "நமக்குப் பதில் கிடைக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அடுத்ததாக, புதிய கேள்விகள் எப்போதும் எழுகின்றன" என்றும் குறிப்பிட்டார்.
அதாவது, ஒன்பதாவது கோள் என்ற ஒன்று இருப்பதாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், விண்வெளியில் நாம் இன்னும் பல புதிய, அறியப்படாத விஷயங்களை கண்டறியக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனெனில், நமது சூரிய குடும்பத்தின் பெரும் பகுதி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































