உணவு, தின்பண்டங்களை பகிர்வதால் யாருக்கு ஆபத்து? கிருமி பரவல் உள்பட 8 முக்கிய விஷயங்கள்

உணவு, தின்பண்டங்களை பகிர்ந்து உண்பது யாருக்கு ஆபத்து?
    • எழுதியவர், சோஃபி விட்பிரெட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சிப்ஸை இரண்டு முறை ஒரே டிப்பில் தொட்டு சாப்பிடுவது முதல் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது வரை, பொதுவாக நாம் மேற்கொள்ளும் சில உணவுப் பகிர்வு பழக்கங்களால் எவ்வளவு கிருமிகள் பரவுகின்றன என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

இதன் முடிவுகள், நீங்கள் மற்றவர்களுடன் சிற்றுண்டியைப் பகிர்ந்து கொள்வதைப் பற்றி சிந்திக்கும் விதத்தையே மாற்றக்கூடும்.

1. உணவைப் பகிர்வதால் உடல்நலக்குறைவு ஏற்படுமா?

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், உணவைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் பரவக்கூடும். ஆனால், பெரும்பாலான ஆரோக்கியமானவர்களுக்கு அவ்வப்போது உணவைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது.

எனினும், அனைவரும் சேர்ந்து பயன்படுத்தும் டிப்பில் உணவைத் தொட்டு சாப்பிடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.

ஒவ்வாமை: ஒவ்வாமை உள்ள ஒருவருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது, அவர்களுக்கு எதிர்பாராத வகையில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் உடலில் செல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம். எனவே, மாசுபடும் அபாயத்தைக் குறைக்க உணவைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நோய்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி: நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், உணவு மற்றும் பானங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தொற்றுநோய்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

2. உணவைப் பகிர்வதன் பின்னுள்ள ஆச்சரியமூட்டும் தகவல்கள்

  • சிப்ஸை ஒரே டிப்பில் இரண்டு முறை தொட்டு சாப்பிடுவது, அந்த டிப்பில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை ஐந்து மடங்கு அதிகரிக்கலாம்.
  • மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது, கேக்கின் மேற்பகுதியில் உள்ள பாக்டீரியாக்களின் அளவை 14 மடங்கு அதிகரிக்கலாம்.
  • ஐந்து விநாடி விதி என்பது உண்மையில் ஒரு விதி அல்ல.
  • ஒட்டும் தன்மை கொண்ட உணவுகளில் பாக்டீரியாக்கள் மிக எளிதாக ஒட்டிக்கொள்கின்றன.
  • வழுவழுப்பான தரைத்தளங்களைவிட கம்பளங்களில் பாக்டீரியாக்கள் குறைவாகவே பரவுகின்றன.

3. ஒரு சிப்ஸை ஒரே டிப்பில் இரண்டு முறை தொட்டு சாப்பிடுவது உண்மையிலேயே அவ்வளவு சுகாதாரமற்றதா?

1990-களில், அமெரிக்க சிட்காம் தொடரான '​​'செய்ன்ஃபீல்ட்'-ல் இடம்பெற்ற ஒரு காட்சி மிகவும் பிரபலமானதாக இருந்தது. அது 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றளவும் டிக்டாக்கில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

"நீ ஒரு கடி எடுத்தாய்... அதன்பிறகு மீண்டும் அதே டிப்பில் தொட்டாய்! அது உன் முழு வாயையும் டிப்புக்குள் வைத்ததற்கு சமம்" என்று ஒரு கதாபாத்திரம் கூறுகிறது.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால், ஒரு சிப்ஸை ஒரே டிப்பில் இரண்டு முறை தொட்டு சாப்பிடுவது உண்மையில் அருவருப்பானதா அல்லது வெறும் மோசமான பழக்கமா?

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிளெம்சன் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் பேராசிரியர் பால் டாசன், இதே விஷயத்தை ஆய்வு செய்தார்.

இரண்டு முறை உணவைத் தொட்ட டிப் மாதிரிகளில், அவ்வாறு தொட்டிராத டிப் மாதிரிகளைவிட ஐந்து மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருந்ததை அவர் கண்டறிந்தார்.

இது கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை என்றாலும், காலப்போக்கில் அந்த பாக்டீரியாக்களின் அளவு குறைந்துவிட்டது. பெரும்பாலான ஆரோக்கியமானவர்களுக்கு இது பெரிய ஆபத்தை ஏற்படுத்தாது.

உணவை ஒருமுறை கடித்த பக்கத்தைத் தொடாமல், மற்றொரு பக்கத்தை மட்டும் டிப்பில் தொட்டு சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம் என்று நீங்கள் நினைத்தால், மீண்டும் யோசிக்க வேண்டியிருக்கலாம்.

டாசன் எங்களிடம் கூறுகையில், "ஒரு சிப்ஸை மீண்டும் டிப்பில் வைப்பதற்கு முன்பு, அதை உங்கள் கைகள் மற்றும் விரல்களால் தொடுவதும் இதே அளவுக்கு ஆட்சேபனைக்குரியதாக இருக்கலாம்.

"உணவைத் தொடும் நபரின் சுகாதாரத்தைப் பொறுத்தே இது அமையும். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்"என்றார்.

இரண்டு முறை டிப்பில் தொட்டு சாப்பிடுவது ஒவ்வாமை ஏற்படும் அபாயத்தையும் உருவாக்கலாம். ஏனெனில், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் அடங்கிய மற்றொரு சாஸால் மாசுபட்ட டிப்பை ஒருவர் சாப்பிட நேரிடலாம்.

சிப்ஸை இரண்டு முறை ஒரே டிப்பில் தொட்டு சாப்பிடுவது முதல் பிறந்தநாள் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பது வரை, பொதுவாக நாம் மேற்கொள்ளும் சில உணவுப் பகிர்வு பழக்கங்களால் எவ்வளவு கிருமிகள் பரவுகின்றன என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

4. ஐஸ்கிரீம் கோனைப் பகிர்ந்துகொள்வது ஆபத்தானதா?

19-ஆம் நூற்றாண்டில், பிரிட்டனில் சிறிய கண்ணாடிக் கோப்பையில் ஐஸ்க்ரீம் விற்பனை செய்யப்பட்டது. அது 'பென்னி லிக்' என்று அழைக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் அதை நக்கி சுத்தம் செய்த பிறகு மீண்டும் விற்பனையாளரிடம் கொடுப்பார்கள்.

அந்தக் கோப்பையில் மீண்டும் ஐஸ்க்ரீம் நிரப்பப்பட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு வழங்கப்படும். இதனால் காசநோய் மற்றும் காலரா பரவியதாக நம்பப்படுகிறது.

எதிர்பார்த்ததைப் போலவே, 1898-ஆம் ஆண்டு 'பென்னி லிக்' முறைக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், இன்றைக்கு ஐஸ்க்ரீம் கோனைப் பகிர்ந்து சாப்பிடுவதும் இதே அளவுக்கு ஆபத்தானதா?

ஒரே டப்பாவில் இருந்து இரண்டு ஸ்பூன்களைப் பயன்படுத்தி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதும் அடிப்படையில் ஒரு சிப்ஸை இரண்டு முறை சாஸில் தொட்டு சாப்பிடுவதன் மற்றொரு வடிவம்தான். அதேபோல், ஒரே ஐஸ்க்ரீம் கோனை நக்கிப் பகிர்ந்து சாப்பிடுவதும் அப்படித்தான். (ஆம், நீங்கள் உங்கள் நாயுடன் பகிர்ந்து சாப்பிட்டால் அதுவும் இதில் அடங்கும்.)

எனவே, இரண்டு முறை டிப்பில் தொட்டு சாப்பிடப்பட்ட சிப்ஸுக்கு நீங்கள் 'வேண்டாம்' என்று சொல்கிறீர்கள் என்றால், இதற்கும் பெரும்பாலும் 'வேண்டாம்' என்றுதான் சொல்ல விரும்புவீர்கள்.

5. பாப்கார்னை பகிர்வதால் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதா ?

திரையரங்கில் பாப்கார்ன் பெட்டியைப் பகிர்ந்து சாப்பிடுவது பொதுவான நடைமுறை. ஆனால், அது உண்மையில் பிரச்னையா?

கிளெம்சன் பல்கலைக்கழகத்தின் மற்றொரு ஆய்வில், பாப்கார்னை கைகளால் கையாளும்போது ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலான பாக்டீரியாக்களே அதற்குப் பரவுவதாகக் கண்டறியப்பட்டது.

ஆனால், இது ஒவ்வொருவருக்கும் கணிசமாக மாறுபடுகிறது. உங்கள் வீட்டில் உள்ள சோபாவைவிட திரையரங்கில் அதிக அளவிலான பாக்டீரியாக்கள் பரவக்கூடும்.

பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், கர்ப்பிணிகள் அல்லது உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்தச் சிற்றுண்டியைப் பகிர்ந்து சாப்பிடுவதைத் தவிர்க்க விரும்பலாம்.

6. மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பதால் கிருமிகள் பரவுமா?

மற்றொரு ஆய்வில், கேக்கில் உள்ள மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்த பிறகு, ஊதி அணைக்கப்படாத மெழுகுவர்த்திகள் கொண்ட கேக்குடன் ஒப்பிடும்போது, கேக்கின் மேற்புறத்தில் உள்ள ஐசிங்கில் பாக்டீரியாக்களின் அளவு 14 மடங்கு அதிகமாக இருந்ததை டாசன் கண்டறிந்தார்.

மெழுகுவர்த்தியை ஊதிய நபர் மற்றும் அவர் எந்த அளவுக்கு தீவிரமாக ஊதினார் என்பதைப் பொறுத்து பாக்டீரியாக்களின் அளவு மாறுபட்டது.

அப்படியானால், இது முக்கியமா? ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து கேக்கில் உள்ள மெழுகுவர்த்திகளை ஊதியிருந்தால், அந்தக் கேக்கைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீங்கள் பெரும்பாலும் கவலைப்படத் தேவையில்லை.

7. ஐந்து வினாடி விதி உண்மையிலேயே நடைமுறையில் செயல்படுமா ?

தரையில் விழுந்த உணவை விரைவாக எடுத்துவிட்டால், தரையில் இருக்கும் பாக்டீரியாக்களால் அது மாசுபடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஐந்து விநாடி விதி'யை பலர் ஒரு சட்டம் போலக் கருதுகின்றனர்.

நீங்கள் கீழே போட்ட உணவின் வகை மற்றும் அது விழுந்த மேற்பரப்பின் வகையைப் பொறுத்தே இது அமையும் என்று கூறுகிறார் உணவுப் பாதுகாப்பு நிபுணர் பேராசிரியர் அந்தோனி ஹில்டன்.

கார்பெட் போன்ற சொரசொரப்பான மேற்பரப்புகளில் விழுந்த உணவைச் சாப்பிடுவதைவிட, மரத்தால் ஆன தரை போன்ற வழுவழுப்பான மேற்பரப்புகளில் விழுந்த உணவைச் சாப்பிடுவது பொதுவாக அதிக ஆபத்தானது என்று அவர் கூறுகிறார்.

வழுவழுப்பான, சமமான மேற்பரப்புகள் உணவுக்கும் மாசுபட்ட பகுதிக்கும் இடையே நேரடியான தொடர்பை அதிகமாக ஏற்படுத்துவதால், பாக்டீரியாக்கள் எளிதில் பரவுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

வெண்ணெய், ஜாம் மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற ஒட்டும் தன்மை கொண்ட உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதில் ஒட்டிக்கொள்ளும்.

டாக்டர் ரொனால்ட் கட்லரும் ஐந்து விநாடி விதியை ஆய்வு செய்துள்ளார். உணவு தரையில் கிடக்கும் நேரத்தில் பாதுகாப்பான கால அளவு என்று எதுவும் இல்லை என அவர் கூறுகிறார்.

நீங்கள் எவ்வளவு விரைவாக உணவை எடுத்தாலும், அதில் பாக்டீரியாக்கள் பரவியிருக்கும் என்றும், இதில் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும் இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஐந்து விநாடி விதியைப் பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து நிபுணர்களிடையே முழுமையான ஒருமித்த கருத்து இல்லை. ஆனால், பாக்டீரியாக்கள் உடனடியாகப் பரவுகின்றன. எனவே, அந்த உணவை சாப்பிடும் அளவுக்கு அது உங்களுக்கு முக்கியமானதா, அதற்காக நீங்கள் அந்த ஆபத்தை ஏற்க விரும்புகிறீர்களா?

8. நாம் அதிகமாகக் கவலைப்படுகிறோமா?

அனைத்து பாக்டீரியாக்களும் தீங்கு விளைவிப்பவை அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் பாக்டீரியாக்களுக்கு ஆளாகும் பெரும்பாலான சந்தர்ப்பங்கள் நோயை ஏற்படுத்துவதில்லை.

ஆபத்து என்பது எந்த வகையான கிருமி, அதன் அளவு மற்றும் அந்தக் கிருமிக்கு ஆளாகும் நபரின் உடல்நிலை போன்ற காரணிகளைப் பொறுத்தது.

டாசன் கூறுகையில், "இந்த ஆய்வுகள் உணவுப் பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய பிரச்னைகள் அல்ல. ஆனால், அவை சுவாரஸ்யமானவை மற்றும் வேடிக்கையானவை. நல்ல சுகாதாரத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். ஆனால், இதுகுறித்து யாரும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதை நான் விரும்பவில்லை" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு