மணி பிளான்ட், ஸ்னேக் பிளான்ட் வளர்த்தால் வீட்டுக்குள் காற்று தூய்மையாகுமா?

வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய தாவரங்கள், வீட்டுச் சூழலில் உள்ள மாசுபாட்டை எதிர்கொள்வதில் ஓரளவிற்குப் பயனளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
படக்குறிப்பு, வீட்டிற்குள் வளர்க்கக்கூடிய தாவரங்கள், வீட்டுச் சூழலில் உள்ள மாசுபாட்டை எதிர்கொள்வதில் ஓரளவிற்குப் பயனளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    • எழுதியவர், அர்மான் ஆலம்
    • பதவி, பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வீட்டுக்குள் காற்றைத் தூய்மையாக வைத்திருக்க வீட்டில் வளர்க்கக்கூடிய சில வகை செடிகள் உண்மையிலேயே உதவுகின்றனவா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர்கள் உமேஷ் சந்திர குல்ஷ்ரேஷ்டா, அருண் குமார் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஐஐடி டெல்லியின் சிவில் பொறியியல் துறையின் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியர் எமரிட்டஸ் முகேஷ் கரே ஆகியோரிடம் பேசினோம்.

முதலில், வீட்டுக்குள் காற்று மாசுபாடு எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

வீட்டிற்குள் எவ்வாறு மாசுபாடு ஏற்படுகிறது?
படக்குறிப்பு, வீட்டிற்குள் எவ்வாறு மாசுபாடு ஏற்படுகிறது?

வீட்டுக்குள் காற்று மாசுபாடு எவ்வாறு ஏற்படுகிறது?

நம்முடைய நாளின் பெரும்பகுதியை வீடுகளிலோ அலுவலகங்களிலோ செலவிடுகிறோம். பல்வேறு காரணங்களால், காற்று மாசுபாடு இந்த மூடப்பட்ட இடங்களிலும் நிலவுகிறது.

முன்பெல்லாம் வீடுகளின் சுவர்களுக்குச் சுண்ணாம்பு அடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது பிளாஸ்டிக் பெயிண்ட், டிஸ்டெம்பர் மற்றும் பளபளப்பான வண்ணப்பூச்சுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்கிறார் பேராசிரியர் அருண் குமார் ஸ்ரீவஸ்தவா.

''இந்த வண்ணப்பூச்சுகளுக்குப் பளபளப்பு உள்ளிட்ட தன்மைகளை வழங்குவதற்காகப் பல்வேறு ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, இந்த வண்ணப்பூச்சுகளில் உள்ள சில ரசாயனங்கள் ஆவியாகி காற்றில் கலக்கக்கூடும். இதனால் வீட்டுக்குள் காற்று மாசுபாடு அதிகரிக்கலாம்.'' என்கிறார் அவர்.

நவீன கால மரச்சாமான்கள், தரை அமைப்புகள் மற்றும் உள் அலங்காரப் பொருள்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் வீட்டுக்குள் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் முகேஷ் கரே.

"இந்தப் பொருள்களைத் தயாரிக்கவும் ஒன்றோடொன்று இணைக்கவும் பயன்படுத்தப்படும் பசைகள், ஆவியாகும் கரிமச் சேர்மங்களை வெளியிடுகின்றன. இவை காற்றில் கலக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளின் முடிகளும் தோலின் நுண்ணிய துகள்களும் தொடர்ந்து உதிர்கின்றன. இந்தத் துகள்கள் காற்றில் கலந்து ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, இந்தத் துகள்கள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களையும் சுமந்து செல்லக்கூடும்," என்றும் அவர் கூறுகிறார்.

ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம் ஆகியவற்றை எரிப்பதும், கொசுவர்த்திச் சுருள்களைப் பயன்படுத்துவதும் வீட்டுக்குள் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்கிறார் பேராசிரியர் உமேஷ் சந்திர குல்ஷ்ரேஷ்டா.

வீட்டுச் செடிகளும் காற்று சுத்திகரிப்பான்களும் எந்த அளவுக்குப் பயனளிக்கின்றன?

காற்று சுத்திகரிப்பான்களும் வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளும் முற்றிலும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன என்கிறார் பேராசிரியர் கரே.

''காற்று சுத்திகரிப்பான்கள், பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 போன்ற நுண்துகள்களை வடிகட்டி காற்றிலிருந்து நீக்குகின்றன. ஆனால், வாயு வடிவிலான மாசுபடுத்திகளை நீக்குவதில் அவற்றின் திறன் குறைவானது.''

காற்றுச் சுத்திகரிப்பான்
படக்குறிப்பு, காற்றுச் சுத்திகரிப்பான்

காற்று சுத்திகரிப்பான்கள் தற்காலிகத் தீர்வாக மட்டுமே செயல்படுகின்றன. எனவே, வீட்டுக்குள் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வாக அவற்றைக் கருத முடியாது என்கிறார் கரே.

இருப்பினும், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சும் சில செடிகள் உள்ளன. அவற்றை வீட்டுக்குள் வளர்க்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வீட்டில் எந்தெந்தச் செடிகளை வளர்க்கலாம்?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்அப் விளம்பரம் - படம்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

காற்று மாசுபாடு மற்றும் வீட்டுக்குள் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் உமேஷ் சந்திர குல்ஷ்ரேஷ்டா, வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய பல செடிகளைப் பரிந்துரைக்கிறார்.

இந்தச் செடிகள் வளிமண்டலத்தில் உள்ள சில நச்சு மற்றும் மாசுபடுத்தும் வாயுக்களை உறிஞ்ச உதவுகின்றன என்கிறார் அவர்.

''வெளிப்புறக் காற்று அதிகம் உள்ளே வராத அறைகளில் இந்தச் செடிகள் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்படக்கூடும். ஏனெனில், ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்தால், வெளிப்புறக் காற்றுடன் மாசுபடுத்தும் துகள்களும் நச்சு வாயுக்களும் அறைக்குள் நுழையக்கூடும்.''

வீட்டில் வளர்க்கப்படும் செடிகள் எந்த அளவுக்குக் காற்றைத் தூய்மைப்படுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்தச் செடிகளே சில ஆவியாகும் கரிமச் சேர்மங்களை (VOCs) வெளியிடுகின்றன. மேலும், இன்று ஒரு செடியை நட்டுவிட்டால் அது உடனடியாகக் காற்றை தூய்மைப்படுத்தத் தொடங்கிவிடும் என்றும் சொல்ல முடியாது. இந்தச் செடிகள் காற்றை 100 சதவீதம் தூய்மைப்படுத்துகின்றன என்று நம்மால் கூற முடியாது. ஆனால், காற்றின் தரத்தை ஓரளவுக்கு மேம்படுத்துவதில் அவை நிச்சயமாகப் பங்களிக்கக்கூடும்."

''இந்தச் செடிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளன. சில செடிகள் குறைந்த வெளிச்சத்திலும் நீண்ட காலம் எளிதாக வளரக்கூடியவை. வேறு சில செடிகளுக்கு மிகக் குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.'' என்கிறார் அவர்.

வீட்டிற்குள் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது.
படக்குறிப்பு, வீட்டிற்குள் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுகிறது.

பாம்புச் செடி (Snake Plant)

பென்சீன், ஃபார்மால்டிஹைடு மற்றும் சைலீன் போன்ற மாசுபடுத்திகளை வடிகட்ட இந்தச் செடி உதவுகிறது. இரவிலும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. குறைந்த வெளிச்சத்திலும் எளிதாக வளரக்கூடியது. இதற்கு மிகக் குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படும்.

பாக்குச் செடி (Areca Palm)

ஃபார்மால்டிஹைடு மற்றும் டொலுயீன் போன்ற மாசுபடுத்திகளைக் குறைக்க இது உதவுகிறது. மேலும், இயற்கையான ஈரப்பதமூட்டியாகச் செயல்பட்டு காற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

பீஸ் லில்லி (Peace Lily)

அம்மோனியா, பென்சீன், ஃபார்மால்டிஹைடு மற்றும் டிரைகுளோரோஎத்திலீன் போன்ற மாசுபடுத்திகளை உறிஞ்ச இந்தச் செடி உதவுகிறது. எனினும், செல்லப்பிராணிகள் இதைச் சாப்பிட்டால் அவற்றுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

சிலந்தி செடி (Spider Plant)

எளிதில் வளர்க்கக்கூடிய இந்தச் செடி, ஃபார்மால்டிஹைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் சைலீன் போன்ற மாசுபடுத்திகளைக் குறைக்க உதவுகிறது.

மணி பிளான்ட் (Money Plant)

இது வேகமாக வளரும் கொடிவகைச் செடியாகும். வெவ்வேறு அளவிலான வெளிச்சம் உள்ள பல இடங்களிலும் எளிதாக வளரக்கூடியது. ஃபார்மால்டிஹைடு, பென்சீன் மற்றும் சைலீன் போன்ற மாசுபடுத்திகளைக் குறைக்க உதவுகிறது.

இந்தச் செடிகளை எவ்வாறு பராமரிப்பது?

  • மண்ணின் ஈரப்பதத்தைச் சரிபார்த்து, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றவும்.
  • குறைந்த வெளிச்சம் அல்லது நேரடியாகச் சூரிய ஒளி படாத மறைமுக வெளிச்சம் உள்ள இடங்களில் இந்தச் செடிகளை வைக்கவும்.
  • இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஈரமான துணியால் இலைகளைத் துடைத்துச் சுத்தம் செய்யவும்.
  • தொட்டிகளில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு