போர் 'விரைவில் முடியும்' என கூறும் டிரம்ப் - இரான் நிலைப்பாடு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கேத்ரின் ஆம்ஸ்ட்ராங்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
இரான் மீதான போர் "விரைவில் முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார், மேலும் இரானின் அணுசக்தி திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் தனது இலக்கை பெரும்பாலான மக்கள் "புரிந்துகொள்கிறார்கள்" என்றும் கூறுகிறார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு "இன்னும் பரிசீலனையில் உள்ளது" என்று இரான் கூறியதைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ், இரானுடன் 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக வெள்ளை மாளிகை நம்புவதாகவும், இது இன்னும் விரிவான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு கட்டமைப்பை அமைக்கக்கூடும் என்றும் தெரிவித்தது.
இரானிய நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளார். அதே நேரத்தில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்க முன்மொழிவு குறித்த தனது கருத்துகளை இரான் பாகிஸ்தான் மத்தியஸ்தர்களுடன் பகிர்ந்து கொள்ளும் என்று கூறினார்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் தனது நாடு "இந்த போர்நிறுத்தத்தை இந்தப் போரின் நிரந்தர முடிவாக மாற்ற முயற்சி செய்து வருகிறது" என்றார்.
14 அம்ச பட்டியலில் இரானிய அணுசக்தி செறிவூட்டலை நிறுத்தி வைப்பது, தடைகளை நீக்குவது மற்றும் ஹோர்மூஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்தை மீட்டெடுப்பது ஆகியவை அடங்கும்.
இந்த தகவல், அமெரிக்க அதிகாரிகள் இருவர் மற்றும் இந்த விவகாரம் குறித்து அறிந்துள்ள மேலும் இரு நபர்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டால் மட்டுமே, அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் நடைமுறைக்கு வரும் என்று அந்த நபர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மத்தியஸ்த பேச்சுவார்த்தை குறித்து தகவல் அறிந்த இரு நபர்கள், ஆக்சியோஸ் முதலில் வெளியிட்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த முன்மொழிவின் முழு விவரங்கள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை
புதன்கிழமை இரவு ஜார்ஜியாவில் உள்ள குடியரசுக் கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற இணையவழி பிரசார நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்
இரான் அணு ஆயுதத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதில் தான் சரியாக இருப்பதாக பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதே நாளில் முன்னதாக பேசிய டிரம்ப், "கடந்த 24 மணி நேரத்தில் இரானுடன் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஒப்பந்தம் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது," என்று தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விலை உயர்வால் அமெரிக்கர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தற்காலிகமானவை மட்டுமே என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இரான் கூறியது என்ன?
முன்னதாக, இரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனத்திடம், "அமெரிக்க முன்மொழிவு இன்னும் இரானால் மறுபரிசீலனை செய்யப்படுகிறது, முடிவு செய்த பிறகு, அது தனது கருத்தைப் பாகிஸ்தான் தரப்பிற்குத் தெரிவிக்கும்."என்றார்
ஆக்சியோஸ் செய்தி குறித்து கருத்து தெரிவித்த இரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ரெசாயி, எக்ஸ் தளத்தில், "நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் பெறாத எதையும் தோற்றுக்கொண்டிருக்கும் ஒரு போரில் அமெரிக்கர்கள் பெறப்போவதில்லை." என கூறியுள்ளார்.
மேலும்,''இரான் தாக்கத் தயாராக உள்ளது. தேவையான சலுகைகளை வழங்கி அமெரிக்கா பின்வாங்கவில்லை என்றால், இரான் கடுமையான பதிலை அளிக்கும்" என்றும் அவர் எச்சரித்தார்.
இரான் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால், "மீண்டும் குண்டுவீச்சு தொடங்கும். அது முந்தையதை விட அதிக தீவிரத்திலும் கடுமையிலும் இருக்கும்," என்று டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எச்சரித்துள்ளார்.
"இரான் இனி அணு ஆயுதம் வைத்திருக்காது" என்ற உறுதி உட்பட பல விஷயங்களில் இரான் ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் கூற்றை இரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இரானின் அணு திட்டமே இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய முரண்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
"இரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் நல்ல பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்பு அதிகம்," என்று டிரம்ப் கூறியதுடன், "நாங்கள் வெற்றி பெற்றோம் என நினைக்கிறேன்," என்றும் தெரிவித்தார்.
மேலும், சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' நடவடிக்கையை இடைநிறுத்துவதாகவும் அவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக சிக்கித் தவித்த கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றி, எண்ணெய் போக்குவரத்தையும் உலக பொருளாதாரத்தையும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காகவே அந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த இடைநிறுத்தம் குறித்து இரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை. ஆனால், "தாக்குதல் அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வந்தால்" ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என இரான் புரட்சிகர காவல் படை சுட்டிக்காட்டியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நெதன்யாகு கூறியது என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை, இரான் விவகாரத்தில் தமக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையே "முழுமையான ஒருங்கிணைப்பு" இருப்பதாகக் கூறினார்.
"ஆச்சரியங்கள் எதுவும் இல்லை. நாங்கள் பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறோம், மேலும் இரானில் இருந்து செறிவூட்டப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அகற்றுவதும், இரானின் செறிவூட்டல் திறன்களை அழிப்பதும் மிக முக்கியமான நோக்கமாகும்," என்று அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தனது முதல் தாக்குதலை நடத்திய பின்னர் அவரது இந்தக் கருத்துக்கள் வந்தன.
"இஸ்ரேலிய குடியிருப்புகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதற்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்குதீங்கு விளைவித்ததற்கும் காரணமான" ஒரு மூத்த ஹெஸ்பொலா தளபதியைப் படைகள் இலக்கு வைத்துள்ளதாக நெதன்யாகு சமூக ஊடகங்களில் எழுதினார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் ஒருவரையொருவர் போர் நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தித் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































