'முதல்வர் வருவார், வரதட்சணை கிடைக்கும்' - திருமணத்துக்கு குவிந்த 42 மணமகன்கள், பெண்கள் எங்கே?

பட மூலாதாரம், SAMEER KHAN
- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி, பிபிசி மற்றும் சமீர் கான், பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸில் உள்ள மாதா டெக்ரி கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24) காலை சில இளைஞர்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் உறவினர்களின் வருகைக்காக காத்திருந்தனர். அவர்களில் சிலர் கழுத்தில் மாலை அணிந்திருந்தனர், சிலர் உறவினர்களுடன் வந்திருந்தனர். பல மணமகன்கள் வாடகை கார்களில் திருமண ஊர்வலத்துடன் வந்து சேர்ந்தனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும் என்று அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இரவு வரை அங்கு மணப்பெண்கள் வராததால், யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை.
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் நடந்த இந்த கூட்டுத் திருமண மோசடி தொடர்பாக, நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பலரிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை இருவரை நாங்கள் கைது செய்துள்ளோம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று தேவாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெய்வீர் சிங் பதூரியா தெரிவித்தார்.
காவல்துறையினரின் தகவல்படி, திருமணம் செய்து வைப்பதாகக் கூறி பல இளைஞர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து வைப்பதாக அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மோசடி வலையமைப்பு எவ்வாறு இயங்கியது?
காவல்துறையும் பாதிக்கப்பட்டவர்களும் இந்த மோசடி வலையமைப்பு எவ்வாறு செயல்பட்டது என்பதை விளக்கினர். முதலில், திருமணத்திற்காகப் பெண் தேடும் இளைஞர்களுடன் மோசடி கும்பல் தொடர்புகொள்ளும். இந்தூரில் உள்ள காப்பகம் ஒன்றில் வசிக்கும் பெண்கள் திருமணத்திற்குத் தயாராக இருப்பதாக அவர்களுக்குக் கூறப்படும்.
இதன்பிறகு, பதிவு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் ஆவணங்களும் பெறப்பட்டன.
இந்த வழக்கிலும், மணமகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மொபைல் போன் மூலம் பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டன. பின்னர், அந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்று பாதிக்கப்பட்ட சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களை நம்ப வைப்பதற்காக முதலமைச்சரின் பெயரும் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத பாதிக்கப்பட்ட ஒருவர் பிபிசி இந்திக்கு அளித்த பேட்டியில், "பெண்கள் நல்லவர்கள், திருமணம் நடக்கும் என்று கனவுகளைக் காட்டினார்கள். முதலமைச்சரே நேரில் வருவார் என்றும், 51,000 ரூபாய்க்கான காசோலையை வழங்குவார் என்றும் எங்களிடம் கூறப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்த கும்பல், பாதிக்கப்பட்ட இளைஞரை ஒரு தூரத்து உறவினர் மூலம் அணுகியது.
அவர் மேலும் கூறுகையில், "முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தப்பட்டது, கூட்டுத் திருமணத்தைப் பற்றிப் பேசினார்கள், பெண்களின் புகைப்படங்களையும் காட்டினார்கள். அதனால் நாங்கள் முழுமையாக நம்பினோம்" என்றார்.
22 வயது இளைஞரான இவர், திருமணத்திற்கு முன்பு பெண்களை நேரில் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, பெண்கள் காப்பகத்தில் இருப்பவர்கள் என்பதால் அது சாத்தியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
"மே 24-ஆம் தேதி ஆண்களையும் பெண்களையும் நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும், அப்போது பேச முழு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகு மே 25-ஆம் தேதி கூட்டுத் திருமண விழாவில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது" என்றார் அந்த இளைஞர்.
திருமணத்தின் போது வரதட்சணைப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் சில குடும்பங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
திருமணத்திற்கு முன்பு சடங்குகளைச் செய்ய வேண்டாம் என்று சிலருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில், முழு திருமணச் சடங்குகளும் தேவாஸிலேயே நடத்தப்படும் என்று கூறப்பட்டது.
மணமகன்கள் வந்தனர், மணப்பெண்களைக் காணவில்லை

பட மூலாதாரம், SAMEER KHAN
தங்களது உறவினர்களுடன் ஒன்பது பேர் கொண்ட குழுவாக மணமகன் ஊர்வலத்துடன் தேவாஸிற்கு வந்ததாக புகார்தாரர் ஒருவர் கூறினார்.
அவர் மேலும், "எங்களை மாதா டெக்ரி கோவிலுக்கு வருமாறு அழைத்தனர். மே 24-ஆம் தேதி காலை 8 மணிக்கே வந்துவிட வேண்டும் என்று எங்களிடம் கூறப்பட்டது" என்றார்.
அவர் அளித்த தகவலின்படி, அவர் வந்தபோது அங்கு மணமகன்கள் மட்டுமே சுமார் 42 பேர் காத்திருந்தனர்.
"அவர்களில் பலருக்கு 40 வயதிற்கு மேல் இருந்தது. 60 வயதுடைய மணமகன்களும் இருந்தனர். அப்போதுதான் எங்களுக்குச் சிறிய சந்தேகம் எழுந்தது" என்று அவர் கூறினார்.
விகாஸ் மீனா என்பவரும் திருமண ஆசை காட்டப்பட்டு அங்கு வரவழைக்கப்பட்டார். இந்தத் திருமணத்திற்காக அவர் 25,000 ரூபாயை வழங்கியிருந்தார்.
"பதிவு என்ற பெயரில் எங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இந்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறினார்கள். நாங்கள் புகைப்படம் கேட்டபோது, மொபைல் போனில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பினர். அவை அனைத்தும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை என்று பின்னர்தான் தெரிந்தது" என்கிறார் அவர்
விகாஸின் கூற்றுப்படி, மே 24-ஆம் தேதி தேவாஸிற்கு வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர், மறுநாள் கூட்டுத் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்தத் திருமண வலையில் சிக்கிய மக்கள், தலைநகர் போபாலிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாஸிற்கு வந்திருந்தனர்.
மணமகன்களில் ஒருவரான ஓம்பிரகாஷ் பிரஜாபதி, மொபைல் போனில் அனுப்பப்பட்ட புகைப்படங்களை வைத்து தான் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்தார்.
"தேவாஸில் உள்ள மாதா டெக்ரியில் திருமணம் நடைபெறும் என்று எங்களிடம் கூறப்பட்டது. நாங்கள் குடும்பத்துடன் இங்கு வந்தோம்" என்று அவர் கூறினார்.
தன்னிடமிருந்து 12,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக ஓம்பிரகாஷ் தெரிவித்தார்.
மேலும் அவர், "சாதாரண உடைகளிலேயே வருமாறு எங்களை அறிவுறுத்தினர். மணமகன் உடை மற்றும் பிற சடங்குகள் அனைத்தும் இங்கேயே நடைபெறும் என்று சொல்லப்பட்டிருந்தது" என்றார்.
திருமண நம்பிக்கையில் குடும்பத்தினர் இரவு முழுவதும் காத்திருப்பு
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கும் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் இருந்த முகேஷ் பைராகி மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோரை அவர்கள் சந்தித்தனர்.
முகேஷ் பைராகி மற்றும் சுனிதா ஆகிய இருவரும்தான் பல மணமகன்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் நேரடியாகப் பேசியிருந்தனர். திருமணத்திற்காகப் பதிவு செய்து, அதற்கான பணத்தையும் இவர்களே வசூலித்திருந்தனர்.
மணப்பெண்கள் இந்தூரிலிருந்து கிளம்பிவிட்டனர், சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்று ஞாயிற்றுக்கிழமை காலை முழுவதும் முகேஷும் அவரது மனைவி சுனிதாவும் குடும்பத்தினரிடம் கூறிக்கொண்டே இருந்தனர்.
புகார்தாரர்களின் கூற்றுப்படி, நாள் முழுவதும் பல்வேறு காரணங்களை அவர்கள் கூறிவந்தனர்.
ஆனால், இரவு வரை யாரும் வரவில்லை. அதன் பிறகு, அங்கு கூடியிருந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர். இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனது சகோதரர் ரோஹித்தின் திருமணத்திற்காக அங்கு வந்திருந்த ராஜகுமாரி என்ற பெண், "நாங்கள் ஆன்லைன் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தோம். ஆனால், நள்ளிரவு 12 மணி வரை யாரும் வரவில்லை" என்று தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, மணமகன்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்களுக்கு ஏதோ மோசடி நடந்துள்ளதாகச் சந்தேகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு, இந்த ஒட்டுமொத்த விவகாரத்தில் தானும் ஏமாற்றப்பட்டுவிட்டதாக முகேஷ் கூறினார்.
"தினேஷ் பைராகி என்னுடைய அண்ணன். அவர்தான் என்னிடம் காப்பகத்தில் உள்ள பெண்களைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினார். அதனால் நாங்கள் மக்களிடம் பேசி, அவர்களிடம் பணத்தைப் பெற்றோம். எனக்கு வந்த பணத்தை நான் அவரிடம் அனுப்பி வைத்தேன். நானும் ஏமாற்றப்பட்டுவிட்டேன்" என்றார் முகேஷ்.
"இந்தச் சம்பவத்தால் சமூகத்தில் எங்கள் பெயர் கெட்டுவிட்டது, மக்கள் இப்போது எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார் ராஜகுமாரி.
தேவாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெய்வீர் சிங் பதூரியா செய்தியாளர்களிடம், "திருமணம் செய்து வைப்பதாகக் கூறி சிலர் ஒன்றாகக் கூடியிருப்பதாகவும், அங்கு மோசடி நடப்பதாகச் சந்தேகிப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களின் புகாரின் அடிப்படையில், மோசடி மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
காவல் துறையினரின் தகவல்படி, இந்த வழக்கில் முகேஷ் பைராகி, சுனிதா பைராகி, தினேஷ் பைராகி மற்றும் மற்றொரு நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"திருமணம் செய்து வைப்பதாக ஆசை காட்டி மக்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. புகைப்படங்களைக் காட்டியும், வாக்குறுதிகள் அளித்தும் அவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முக்கிய நபரான முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார் ஜெய்வீர் சிங் பதூரியா.
"இதுவரை முகேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது அண்ணன் தினேஷ் பைராகிதான் இவை அனைத்தையும் செய்ததாகக் கூறியுள்ளார். மணமகன் வீட்டார் தொடர்பானவர்களின் தொலைபேசி எண்களை தினேஷ் பைராகிதான் வழங்கினார், அவர்தான் இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியின் திட்டமிடலிலும் ஈடுபட்டிருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
22 வயதான புகார்தாரர், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மற்ற மணமகன்களைப் போலவே தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.
அவர் கூறுகையில், "இந்தத் தகவல் தெரிந்தவர்களிடம், இதை வெளியே சொல்ல வேண்டாம் என்று கைகூப்பிக் கேட்டுக்கொண்டேன். ஒருவேளை இந்தத் தகவல் வெளியே தெரிந்தால், எனது எதிர்கால வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும்" என்றார்.
அவர் மேலும், "இருந்தாலும், இந்த நபர்களை நான் சும்மா விடப்போவதில்லை. நான் புகார் அளித்துவிட்டேன், அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவதற்காக சட்டப் போராட்டத்தையும் முன்னெடுப்பேன்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































