பிரதமர் மோதி நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது ஏன்? விளக்கும் அரசியல் ஆய்வாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இஷாத்ரிதா லஹிரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
புதன்கிழமை இரவு 11.52 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோதி நாடு தழுவிய இளைஞர் போராட்டங்கள் தொடர்பான பிரச்னை குறித்துப் பேசுவதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பிரதமர் வழக்கமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றும் முறையில் இருந்து இது பல வழிகளில் மாறுபட்டதாக இருந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிப்பு முதல், கோவிட் பேரிடர் காலத்தில் ஆற்றிய உரைகள் வரை, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து நாட்டுக்கு ஆற்றிய உரை வரை, பிரதமர் நரேந்திர மோதி முக்கிய நேரத்தில் மேடையில் நின்று உரையாற்றுவதையும், அதை அரசின் யூடியூப் சேனல்களும் தொலைக்காட்சி சேனல்களும் நேரலையாக ஒளிபரப்புவதையும் இந்திய மக்கள் வழக்கமாகப் பார்த்து வருகின்றனர்.
இருப்பினும், புதன்கிழமை அன்று, நள்ளிரவுக்கு சற்று முன்னதாக, செல்ஃபி கேமரா மூலம் செங்குத்தாகப் படம் பிடிக்கப்பட்ட வீடியோ வடிவில் அவர் பேசிய செய்தி இன்ஸ்டாகிராமில் வெளியானது.
வழக்கமாக பிரதமர் மோதி பயன்படுத்தும் ஹிந்தி சொல்லான "மித்ரோன்" என்பதற்குப் பதிலாக, "நண்பர்களே" என்று பார்வையாளர்களை அழைத்துத் தனது செய்தியைத் தொடங்கினார்.
அந்தச் செய்தி, அது சென்றடைய வேண்டிய பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு இந்த முறையில் வடிவமைக்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Narinder NANU/AFP via Getty Images
"மாணவர்களின் தளமாக இருப்பதால்தான் அவர் இன்ஸ்டாகிராமை தேர்வு செய்தார் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது" என்கிறார் மூத்த அரசியல் பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரி.
"இந்தத் தளம் போராட்டக்காரர்களால் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களாலும் பயன்படுத்தப்படுவதாக" அவர் கூறினார்.
"கடுமையான" நடவடிக்கை மற்றும் வினாத்தாள் கசிவு குறித்த வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து குறிப்பிட்டதன் மூலம், மாணவர்கள் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்பதை "பிரதமர் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்பினார்" என்று சௌத்ரி சுட்டிக்காட்டினார்.
"எனவே, அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் ஒரு தளத்தை அவர் தேர்வு செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர் சந்திரசூட் சிங், பிரதமர் மாணவர்களிடம் நேரடியாகப் பேசுவது போலக் காட்சிளிப்பது முக்கியம் என்றார்.
மேலும், "அவரது நேரடிப் பங்கேற்பு முக்கியமானது. அவரது நேரடித் தலையீடு இந்தத் தீயைத் தணிக்கும் என்று அரசாங்கம் நினைக்கக்கூடும்" என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இன்ஸ்டாகிராம் மூலம் ஜென்ஸி இளைஞர்கள் போராட்டம்
பிரதமரின் இன்ஸ்டாகிராம் உரை, இந்தப் போராட்டத்தின் ஒரு பெரிய அம்சத்தையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, செல்போன்கள், மலிவு விலை மைக்ரோஃபோன்கள் மற்றும் செல்ஃபி ஸ்டிக்குகளை பயன்படுத்தி, இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தின் மூலம் தங்களது குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் முதன்மை ஊடகங்களால் தங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று ஜென்ஸி தலைமுறை கருதுவதாகக் கூறுகிறார் டெல்லி பல்கலைக்கழக மாணவி சகி.
"எங்களுக்குப் போதுமான ஊடக கவனம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தோம். நாங்கள் வெளிப்படுத்த விரும்பியதை உடனடியாக வெளியிட முடியவில்லை. அதனால்மக்கள் இன்ஸ்டாகிராமை நாடினார்கள். ஊடகங்கள் எங்களைப் புறக்கணித்தாலும், எங்களுக்கென ஒரு தளம் இருந்தது. காக்ரோச் ஜனதா கட்சியும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே மக்களைச் சென்றடைந்தது" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
ஜூலை 20 அன்று நடந்த போராட்டத்தின்போது, தான் கண்ட காட்சிகளுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது ஒரு மன அழுத்த விடுதலையாக உணர்ந்ததாக சகி கூறுகிறார். அன்று, மத்திய டெல்லியின் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இறங்கியபோது, காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுகளைப் பயன்படுத்தும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாயின. பல போராட்டக்காரர்கள் "காவல்துறையின் கொடூரமான செயல்கள் குறித்து" குற்றம் சாட்டினர்.
"நான் என் நண்பர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டேன். என் கண்ணாடி தொலைந்துவிட்டது. என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. என் நண்பர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்தேன். என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் திரும்பி வந்து பதிவிட்டேன்" என்று கூறும் சகி, "காவல்துறை என்ன செய்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென விரும்பினேன். காவல்துறை கொடூரமாக நடந்து கொண்டதற்கான சான்றுகளை அவர்களுக்குக் காட்ட விரும்பினேன்" என்கிறார்.
அன்று சகி பதிவிட்ட மூன்று காணொளிகள் வைரலாகின. அவற்றில் ஒரு வீடியோவை 35.6 மில்லியன் பேர் பார்வையிட்டனர். அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000இல் இருந்து கிட்டத்தட்ட 70,000 ஆக உயர்ந்துள்ளது.
சமூக ஊடக ஆராய்ச்சி மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் கணக்குகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை 18-30 வயதுக்குட்பட்ட பயனர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வயதினரிடையே இந்தத் தளம் ஏன் பெருமளவில் பிரபலமாக உள்ளது என்பதை சகி விளக்குகிறார்.
"ஃபேஸ்புக் எங்கள் பெற்றோரின் தலைமுறைக்கானது, வாட்ஸ்ஆப் எங்களுக்கு முந்தைய தலைமுறைக்கானது, ஆனால் இன்ஸ்டாகிராம் தான் ஜென்ஸி தலைமுறைக்கான தளம்" என்று கூறிய அவர், "குறிப்பாக டிக்டோக் போன்ற குறுகிய வடிவ உள்ளடக்க செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு, எங்களுக்கு மிகவும் பிடித்த வடிவத்தில் உள்ளடக்கத்தை ரசிப்பதற்கு ஏற்ற இடமாக இன்ஸ்டாகிராமே உள்ளது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அரசு தனது தகவல் தொடர்பு உத்தியை மறுபரிசீலனை செய்கிறதா?
கடந்த 2014இல் மோதி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பாரதிய ஜனதா கட்சியும் பிரதமரும் இந்திய அரசியலில் டிஜிட்டல் பிரசாரம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் முன்னோடிகளாகக் கருதப்பட்டனர்.
ஆனால், ஜென்ஸி தலைமுறையினர் வேறுபட்ட சமூக ஊடக சூழலில் வளர்ந்திருப்பதால், பாஜகவும் அரசாங்கமும் தங்கள் டிஜிட்டல் உத்தியை மீண்டும் பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் கோட்பாட்டாளர் ரத்தன் ஷர்தா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், போராட்டங்களுக்கு எதிராக மாற்றுக் கருத்துகளை உருவாக்கத் தவறியதற்காக பாஜகவின் சமூக ஊடக அமைப்பைக் குற்றம் சாட்டினார்.
"பாஜக ஊடகப் பிரிவுக்கு களத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை, பின்னூட்ட பொறிமுறையும் இல்லை, மேலும் பல மாதங்களாகக் கட்டமைக்கப்பட்ட இளைஞர்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஆளும் கட்சியின் சமூக ஊடக உத்தி, மீம்கள் மற்றும் மடைமாற்றும் பதில்களைத் தாண்டிச் செல்லவில்லை" என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா, பரவலாக அறியப்படும் வாட்ஸ்ஆப் தலைமுறைக்கும் இன்ஸ்டாகிராம் தலைமுறைக்கும் இடையில் ஒரு தெளிவான வேறுபாட்டுக் கோட்டை வரைவது சரியல்ல என்று கூறுகிறார்.
"இந்தப் போராட்டத்தில் பெரும் பகுதியாக இருக்கும் இளைஞர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பாஜகவின் வாக்காளர்களாக இருந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். எனவே, பாஜகவுக்கு அவர்களை எப்படிச் சென்றடைவது என்று தெரியாது எனச் சொல்வது சரியாக இருக்காது" என்கிறார் வர்மா.
ஆனால் மோதி அரசுக்கு எதிரான முந்தைய போராட்டங்களில் இருந்து தற்போதைய போராட்டங்கள் எவ்வாறு தனித்துவமானவையாக உள்ளன என்பதை வர்மா சுட்டிக்காட்டுகிறார்.
"குறிப்பிட்ட கொள்கைப் பிரச்னைகள் தொடர்பாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அல்லது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களைப் போலன்றி, இந்தப் போராட்டம் நிர்வாகத் தோல்விகளால் உருவானது. எனவே, அரசிடம் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பிரதமர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியதற்குக் காரணம், அதுதான் ஜென்ஸி தலைமுறை பயன்படுத்தும் தளம், மேலும் அரசாங்கம் இம்முறை தங்கள் செய்தியைக் கொண்டு சேர்க்க கிடைக்கக் கூடிய அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தும்" என விளக்குகிறார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஜென்ஸி தலைமுறையினரின் கசப்பான உணர்வையும், அதைச் சமாளிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளையும் டிஜிட்டல் தளங்களின் கண்ணோட்டத்தில் மட்டும் பார்ப்பது துல்லியமாக இருக்காது என்று பேராசிரியர் சந்திரசூட் சிங் கூறுகிறார்.
"இளைஞர்களின் ஏமாற்றம் டிஜிட்டல் முறையீடுகளால் மட்டும் நிர்வகிக்க முடியாத அளவுக்கு ஆழமானது, பரந்தது மற்றும் தீவிரமானது" என்று கூறிய அவர், "ஜென்ஸி 2014க்கு பிறகு வாக்களிக்கத் தொடங்கியது என்பதால், ஒருவித சோர்வும் மெல்ல உருவாகத் தொடங்கியிருக்கலாம். பாஜக சமூக ஊடகப் பிரிவைப் பொறுத்தவரை, இந்தியாவின் இளைஞர்களின் ஆற்றலையோ அல்லது உறுதியையோ யாராலும் வெல்ல முடியாது" என்றார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























